ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வீட்டிலேயே குறைப்பிரசவமாகப் பிறந்த பெண் குழந்தை மண்ணில் புதைக்கப்பட்டது தொடர்பாக, குழந்தையின் தந்தை, தாத்தா, அத்தை ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிரசவத்துக்குப் பிறகு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகநந்தினியின் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருப்பதுடன், தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு குடும்பத்தினரிடம் கெஞ்சியதாகவும், ஆனால் அவர்கள் குழந்தையை வீட்டிற்குள் எடுத்துச் சென்று பின்னர் புதைத்துவிட்டதாகவும் குழந்தையின் தாய் லோகநந்தினி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தை உயிருடன் இருந்தபோது புதைக்கப்பட்டதா அல்லது ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் புதைக்கப்பட்டதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே இறப்புக்கான காரணம் குறித்து உறுதியாகத் தெரிவிக்க முடியும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். என்ன நடந்தது?
'வீட்டிலேயே பிரசவம்' - தாய் கூறியது என்ன?
ராமேஸ்வரம் அருகேயுள்ள சம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகபாண்டி (30). கட்டடத் தொழிலாளியான இவருக்கும் லோகநந்தினி (24) என்பவருக்கும் 2023ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், லோகநந்தினி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். அவர் சுமார் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்ததாக மருத்துவத்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோகநந்தினியை நவம்பர் 19ஆம் தேதி பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது.
அப்போது அவர், நவம்பர் 17ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் தனக்குத் திடீரென வயிற்றிலும் முதுகிலும் கடுமையான வலி ஏற்பட்டதாக கூறினார். இதையடுத்து, தனது கணவர் நாகபாண்டியை எழுப்பி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டதாகவும், முதலில் கணவர் எழுந்திருக்காத நிலையில் இரண்டாவது முறையாக எழுப்பிய போது வலி மேலும் அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
குடும்பத்தினர் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தயாரான போது, தனது மாமனார் கிருஷ்ணன், அவருடைய மகள் முனீஸ்வரியை (36) அழைத்ததாக லோகநந்தினி கூறினார்.
பிரசவ வலி மேலும் அதிகரித்ததால் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பாகவே வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்ததாக லோகநந்தினி தெரிவித்துள்ளார். பிரசவத்தின் போது முனீஸ்வரி உதவி செய்ததாகவும், குழந்தையின் தொப்புள் கொடியைக் கத்தரிக்கோலால் வெட்டியதாகவும் அவர் கூறினார்.
பிரசவத்தின் போது தனது கணவர் நாகபாண்டி, மாமனார் கிருஷ்ணன், கணவரின் சகோதரி முனீஸ்வரி ஆகிய மூவரும் உடனிருந்ததாகவும் லோகநந்தினி தெரிவித்தார்.
'குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டேன்'
குழந்தை பிறந்த பிறகு என்ன நடந்தது என்பது குறித்தும் லோகநந்தினி பிபிசி தமிழிடம் விளக்கினார்.
குறைப்பிரசவமாகப் பிறந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குடும்பத்தினரிடம் தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முதலில் மறுத்ததாக லோகநந்தினி குற்றம்சாட்டினார். தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், தன்னை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.
குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மீண்டும் கேட்ட போது, மாமனார் கிருஷ்ணனும் நாத்தனார் முனீஸ்வரியும் குழந்தையை வீட்டிற்குள் எடுத்துச் சென்றதாக லோகநந்தினி தெரிவித்தார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு முனீஸ்வரி மட்டும் வெளியே வந்ததாகவும், குழந்தையைத் தன்னிடம் காட்டவில்லை என்றும் அவர் கூறினார்.
மருத்துவர்கள் எழுப்பிய கேள்வியால் வெளிவந்த தகவல்
இதற்கிடையே, பிரசவத்துக்குப் பிறகு லோகநந்தினிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் அவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே லோகநந்தினியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குப் பிரசவம் நடந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். பிறந்த குழந்தை எங்கே என்று மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கும் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
மருத்துவமனைக்கு வந்த ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீசார் லோகநந்தினியினடம் நடத்திய விசாரணையில் குழந்தை குறித்த விவரம் தெரியவந்துள்ளது.
குழந்தையின் உடல் எப்படி மீட்கப்பட்டது?
குழந்தை எங்கே உள்ளது என்று விசாரித்த போது, குழந்தை மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார். அதன் பிறகு குழநதையின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
குழந்தை புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து உடலை எடுத்து முனீஸ்வரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடலில் மண் படிந்திருந்ததும், தொப்புள் கொடி தனியாகப் புதைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
பின்னர் குழந்தையின் உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். இதையடுத்து, உடற்கூறாய்வுக்காக குழந்தையின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக காவல் ஆய்வாளர் கார்த்திக் ராஜா தெரிவித்தார்.
குழந்தையின் தந்தை, தாத்தா, அத்தை கைது - தாயின் மீதும் வழக்கு
இந்த வழக்கில் குழந்தையின் தந்தை நாகபாண்டி, தாத்தா கிருஷ்ணன், அத்தை முனீஸ்வரி மற்றும் தாய் லோகநந்தினி ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நாகபாண்டி, கிருஷ்ணன், முனீஸ்வரி ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
பிரசவத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கு காரணமாக லோகநந்தினி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும், காவல்துறை கண்காணிப்பில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் ஆய்வாளர் கார்த்திக் ராஜா தெரிவித்தார்.
மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் லோகநந்தினியின் உடல்நிலையைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதா?
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் நடராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், லோகநந்தினி தனது கர்ப்பத்தைப் பதிவு செய்யவில்லை என்றும், கர்ப்பகால மருத்துவ ஆலோசனையோ பரிசோதனைகளோ மேற்கொள்ளவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறினார்.
பிறந்தது பெண் குழந்தை என்பதை உறுதிப்படுத்திய நடராஜன், குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
குழந்தை பிறந்தபோதே உயிரிழந்ததா அல்லது பிறந்த பிறகு உயிரிழந்ததா என்பது உடற்கூறாய்வு முடிவுகளுக்குப் பின்னரே தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் குழந்தை பிறந்தபோது உயிருடன் இருந்ததா, மண்ணில் புதைக்கப்படுவதற்கு முன்பே உயிரிழந்துவிட்டதா அல்லது புதைக்கப்பட்ட பிறகு உயிரிழந்ததா என்பவை முக்கியமான கேள்விகளாக உள்ளன.
இந்த கேள்விகளுக்கான பதில்களை அறிவதற்காக குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் ஆய்வாளர் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.
பிரசவத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த லோகநந்தினியிடம் மட்டுமே பேச முடிந்தது. குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்ற மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களை அணுக முடியவில்லை. அவர்கள் தரப்பில் தகவல்கள் தரப்படும் பட்சத்தில் அவை இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு