இஸ்ரேலின் அடுத்த அரசை அமைக்கும் பொறுப்பை காடி ஐசென்கோட்டிடம் ஒப்படைத்த அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சோக்கின் முடிவுக்கு அரபு உலகின் தொலைக்காட்சி சேனல்கள் நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் முக்கியத்துவம் அளித்தன.
ஐசென்கோட் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நாட்டின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் அரபுக் கட்சிகளின் மிக முக்கிய பங்கு ஆகியவற்றில் தொலைக்காட்சி சேனல்கள் கவனம் செலுத்தின.
அதிபர் ஹெர்சோக்கின் இந்த முடிவு குறித்து அரபுத் தொலைக்காட்சி சேனல்கள் விரிவாகச் செய்தி வெளியிட்டன.
ஐசென்கோட்டுக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் 67 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது என முக்கிய அரபு ஊடக நிறுவனங்கள் வலியுறுத்தின.
எனினும், நவம்பர் 8-ஆம் தேதி அவை வெளியிட்ட செய்திகளில், கூட்டணி அமைப்பதில் முன்னாள் ராணுவத் தளபதியான ஐசென்கோட் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரபுக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருக்கும் மைனாரிட்டி அரசு அமையும் சாத்தியம் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இஸ்ரேலில் சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள் கருத்தியல் வேறுபாடுகளைக் கடந்து, நாட்டின் அடுத்த அரசை அமைப்பதில் அரபுக் கட்சிகளின் பங்கைப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்பதற்கான முக்கியச் சோதனையாக வரவிருக்கும் சில வாரங்களை இந்தச் செய்திகள் முன்வைத்தன.
கத்தாரின் அல் ஜசீரா, கூட்டணி அமைக்கும் செயல்முறையில் அரபுக் கட்சிகளின் செல்வாக்கு என்ற கண்ணோட்டத்தில் இந்த நிகழ்வை முன்வைத்தது.
கூட்டணி அமைக்க ஐசென்கோட்டுக்கு 28 நாட்கள் அவகாசம் இருப்பதாகவும், இந்த அவகாசத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க முடியும் என்றும் அந்தச் சேனல் தெரிவித்தது.
அந்தச் சேனலுக்கு அளித்த நேர்காணலில், அரபுக் கட்சிகளின் வெளிப்புற ஆதரவுடன் ஒரு மைனாரிட்டி அரசை அமைக்குமாறு ஜாயின்ட் லிஸ்ட் தலைவர் அகமது திபி, ஐசென்கோட்டுக்கு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தார்.
பெஞ்சமின் நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இதன் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
ஐசென்கோட் எதிர்கொள்ளும் சவால் கடினமானது என்று அகமது திபி குறிப்பிட்டார். ஆனால், இதற்கு "அரசியல் துணிச்சல்" தேவை என்று கூறினார்.
ஐசென்கோட்டுக்கு அரபுக் கட்சிகளின் ஆதரவு
சௌதி அரேபிய அரசின் அல் அரேபியா தொலைக்காட்சி, நெதன்யாகுவுக்கு எதிரான கூட்டணி அரசை அமைக்க உதவ தயாராக இருப்பதாக அரபு அரசியல் கட்சிகள் அளித்த சமிக்ஞைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
மன்சூர் அப்பாஸ் தலைமையிலான யுனைடெட் அரப் லிஸ்ட், முறையான கூட்டணி ஒப்பந்தம் இல்லாமல்கூட ஐசென்கோட் தலைமையிலான அரசை ஆதரிக்கத் தயாராக இருந்ததாக அந்தச் சேனல் தெரிவித்தது.
ஐசென்கோட் மற்றும் மற்றொரு எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லபிட் ஆகியோருடன் அப்பாஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்தச் செய்தி தெரிவித்தது.
அரசியல் மாற்றத்தை விரும்பும் அரபு வாக்காளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுவதே அக்கட்சியின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் விவகாரங்களின் ஆய்வாளரான இஸ்மத் மன்சூரின் கருத்துகளையும் அந்தச் சேனல் இடம்பெறச் செய்தது. மைனாரிட்டி அரசை அமைப்பதே ஐசென்கோட்டுக்கு உள்ள மிகவும் நடைமுறைக்கு ஏற்ற வழி என்று அவர் கூறினார்.
நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதில் ஒன்றிணையும் கட்சிகளைக் கொண்டு அத்தகைய அரசை அமைக்க முடியும் என்று மன்சூர் விளக்கினார்.
விரைவாகக் கூட்டணி அமைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தாமதம் ஏற்பட்டால், அரசியல் வழிமுறைகள் அல்லது பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகள் மூலம் நெதன்யாகு இந்தச் செயல்முறையை முறியடிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த ஸ்கை நியூஸ் அரேபியா, ஐசென்கோட்டுக்கு இருக்கும் பல்வேறு கூட்டணி வாய்ப்புகளை ஆராய்ந்தது.
அரபுக் கட்சிகளுடன் ஒத்துழைப்பது தொடர்பாக நெதன்யாகு எதிர்ப்பு அணிக்குள் நிலவும் பதற்றத்துக்கு அந்தச் சேனல் முக்கியத்துவம் அளித்தது. அரபுக் கட்சிகளின் வாக்குகளைச் சார்ந்திருக்கும் எந்தவொரு அரசையும் இஸ்ரேல் பெய்தெய்னு கட்சியை சேர்ந்த அவிக்டோர் லிபர்மேன் எதிர்ப்பதாக அந்தச் சேனல் தெரிவித்தது.
மற்ற வாய்ப்புகள் குறித்தும் அந்தச் சேனல் விவாதித்தது. தீவிரப் பழமைவாத யூதக் கட்சிகளுடன் உடன்பாடு செய்துகொள்வது அல்லது நெதன்யாகு அணியின் சில பிரிவுகளைச் சேர்த்துக்கொண்டு விரிவான 'தேசிய ஒற்றுமை அரசை' அமைப்பது ஆகிய சாத்தியங்களும் இதில் அடங்கும்.
ஐசென்கோட்டுக்கும் நெதன்யாகுவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள்
இரான் ஆதரவு அரபு ஊடக நிறுவனங்களும் இந்த நிகழ்வு குறித்துச் செய்தி வெளியிட்டன.
நெதன்யாகு "இஸ்ரேலிய சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகிறார்" என்று ஐசென்கோட் குற்றம்சாட்டியதாக பெய்ரூட்டைச் சேர்ந்த அல்-மயாதீன் தொலைக்காட்சி நவம்பர் 7ஆம் தேதி செய்தி வெளியிட்டது.
இஸ்ரேலின் அரபு சமூகம் குறித்து நெதன்யாகு தொடர்ந்து தெரிவித்த கருத்துகளுக்குப் பிறகு ஐசென்கோட்டின் இந்தக் கருத்து வெளியானது.
ஐசென்கோட் தலைமையிலான அரசுக்கு அரபுக் கட்சிகள் அளிக்கும் ஆதரவு, "இஸ்ரேலை உள்ளிருந்து அழித்துவிடும்" என்றும் நெதன்யாகு கூறியிருந்தார்.
நெதன்யாகுவுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியத்தை ஐசென்கோட் "முற்றிலுமாக நிராகரித்துவிட்டார்" என்று இரானின் அல்-ஆலம் தொலைக்காட்சி நவம்பர் 8-ஆம் தேதி செய்தி வெளியிட்டது.
அமெரிக்கா நெதன்யாகுவிடமிருந்து விலகிவிட்டதாகவும், இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சுமார் 4 பில்லியன் டாலர் உதவியை நிறுத்துவதாக அறிவித்துள்ளதாகவும் அந்தச் சேனல் கூறியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு