Skip to main content

Advertisement

இதயம், நுரையீரல் முதல் மூளை வரை காற்று மாசுபாடு ஏற்படுத்தும் உடல்நல பாதிப்புகள்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
நுரையீரல் முதல் மூளை வரை காற்று மாசுபாடு உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?
Getty Images

காற்று மாசுபாடு என்பது சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; அது மனிதர்களின் உடல்நலத்தையும் தீவிரமாகப் பாதிக்கக்கூடியது. குறிப்பாக, கடுமையான காற்று மாசுபாட்டுக்கு ஆளாவதால் நுரையீரல், இதயம், மூளை உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படலாம். இதில் நுரையீரல், இதயம் ஆகியவை அதிகம் பாதிக்கப்படக் கூடிய உறுப்புகளாக உள்ளன.

காற்று மாசுபாட்டில் உள்ள PM2.5 துகள்கள் மிகவும் நுண்ணியவை. இந்தத் துகள்கள் நமது மூக்கு மற்றும் மேல் சுவாசப் பாதையில் உள்ள பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி, நுரையீரலின் அல்வியோலை (Alveoli) எனப்படும் காற்றுப் பைகளில் படியக்கூடும்.

இந்த மிக நுண்ணிய துகள்களும் அவற்றிலுள்ள வேதிப் பொருட்களும் உடலின் ரத்த ஓட்டத்தில் கலந்து, பிற உறுப்புகளையும் பாதிக்கலாம். இதுதொடர்பாக நுரையீரல் மருத்துவர் மாளவிகா அளிக்கும் விளக்கங்களை இங்கு பார்க்கலாம்.

நுரையீரல், இதயம், மூளையை பாதிக்கும் காற்று மாசுபாடு

நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள்: காற்று மாசுபாட்டால் நுரையீரலில் கடுமையான சுவாசப் பாதை அழற்சி (Airway Inflammation) ஏற்படலாம். இதனால் மூச்சுக்குழாய் சுருக்கம் (Bronchospasm), மூச்சுத் திணறல், மூச்சு விடும்போது விசில் போன்ற சத்தம் (Wheezing) ஆகியவை ஏற்படலாம். ஏற்கெனவே ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) பாதிப்பு உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் அதிகரிக்கலாம்.

நுரையீரல் முதல் மூளை வரை காற்று மாசுபாடு உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?
Dr Malavika
நுரையீரல் மருத்துவர் மாளவிகா

இதயத்தில் ஏற்படும் பாதிப்புகள்: இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். ரத்த நாளங்களில் அழற்சி மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தம் (Oxidative Stress) அதிகரிக்கலாம். இதன் காரணமாக ரத்தம் உறைதல் (Blood Clot Formation) ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கலாம்.

மூளையில் ஏற்படும் பாதிப்புகள்: கடுமையான காற்று மாசுபாட்டுக்கு ஆளாவதால் உடல் முழுவதும் ஏற்படும் அழற்சி (Systemic Inflammation) மற்றும் ரத்த நாளங்களின் செயல்பாட்டுக் குறைபாடு (Vascular Dysfunction) தூண்டப்படலாம். இதனால் பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கலாம்.

காற்று மாசுபாட்டால் ஏற்படும் உடனடி அறிகுறிகள் என்ன?

காற்று மாசுபாட்டுக்கு முதலில் நமது சுவாச மண்டலம்தான் எதிர்வினையாற்றும் என்கிறார் மருத்துவர் மாளவிகா.

உடனடியாக ஏற்படக்கூடிய அறிகுறிகள்

  • கண் எரிச்சல்
  • தொண்டை எரிச்சல்
  • தொடர் இருமல்
  • மார்பு இறுக்கம்
  • மூச்சு விடும்போது விசில் போன்ற சத்தம்
  • மூச்சுத் திணறல்
  • தலை வலி

”ஏற்கெனவே ஆஸ்துமா உள்ளவர்களுக்கு திடீரென ஆஸ்துமா தாக்குதல் ஏற்படலாம். நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) பாதிப்பு உள்ளவர்களுக்கு இருமல், சளி வெளியேறுதல், மூச்சுத் திணறல் ஆகியவை அதிகரிக்கலாம்” என்கிறார் மருத்துவர் மாளவிகா.

நீண்டகாலம் காற்று மாசுபாட்டுக்கு ஆளானால் என்ன ஆகும்?

நுரையீரல் முதல் மூளை வரை காற்று மாசுபாடு உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?
Getty Images

காற்று மாசுபாடு என்பது சுவாச மண்டலம் மற்றும் இதய ரத்த நாளங்கள் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும் முக்கியமான அபாயக் காரணிகளில் ஒன்று. குறிப்பாக, PM2.5 நுண்துகள்களுக்கு நீண்ட காலம் ஆளாவது நுரையீரலின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும் என்கிறார் நுரையீரல் மருத்துவர் மாளவிகா.

ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு: காற்று மாசுபாட்டால் சுவாசப் பாதையில் ஏற்படும் அழற்சி அதிகரித்து, அடிக்கடி ஆஸ்துமா தாக்குதல்கள் ஏற்படலாம். ஏற்கெனவே உள்ள ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதும் சிரமமாகலாம்.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) பாதிப்பு உள்ளவர்களுக்கு: சிஓபிடி பாதிப்பு உள்ளவர்கள் நீண்ட காலம் காற்று மாசுபாட்டுக்கு ஆளானால், நோயின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கலாம். குறிப்பாக, புகைப்பிடித்தல், உயிரி எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புகை வெளிப்பாடு (Biomass Fuel Exposure), பணியிடங்களில் தூசு மாசுபாட்டுக்கு ஆளாவது (Occupational Dust Exposure) போன்ற காரணிகளும் இருந்தால் அபாயம் மேலும் அதிகரிக்கும். ஏற்கெனவே சிஓபிடி பாதிப்பு உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் அதிகரிப்பதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையும் அதிகரிக்கலாம்.

நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம்: நுரையீரல் புற்றுநோயைப் பொறுத்தவரை, காற்று மாசுபாட்டில் உள்ள PM2.5 நுண்துகள்கள் நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கியமான சுற்றுச்சூழல் அபாயக் காரணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. புகைப் பிடித்தல் மட்டுமே நுரையீரல் புற்றுநோய்க்குக் காரணம் என்று சொல்ல முடியாது. சுற்றுச்சூழல் மாசுபாடும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியமான அபாயக் காரணிகளில் ஒன்றாக உள்ளது.

இதய ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள்: காற்று மாசுபாடு நுரையீரலை மட்டுமின்றி, இதயம் மற்றும் ரத்த நாளங்களையும் பாதிக்கக்கூடும். எனவே, நீண்டகாலம் காற்று மாசுபாட்டுக்கு ஆளாவதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கலாம்.

”ஒருவர் தொடர்ந்து காற்று மாசுபாட்டுக்கு ஆளானால், சளியுடன் கூடிய இருமல், உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பின்போது தாங்கும் திறன் குறைதல், அடிக்கடி சுவாசப் பாதைத் தொற்றுகள் ஏற்படுதல், ஆஸ்துமா கட்டுப்பாட்டை இழந்து தீவிரமடைதல், படிப்படியாக மூச்சுத் திணறல் அதிகரித்தல் போன்ற நீண்டகால அறிகுறிகளும் ஏற்படலாம்” என்று கூறுகிறார் அவர்.

குறுகிய காலம் காற்று மாசுபாட்டுக்கு ஆளானாலே நிரந்தர நுரையீரல் பாதிப்பு ஏற்படுமா?

”குறுகிய காலம் காற்று மாசுபாட்டுக்கு ஆளாவதால் நிரந்தர நுரையீரல் பாதிப்பு கண்டிப்பாக ஏற்படும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலோருக்கு ஏற்படும் லேசான அழற்சி மற்றும் எரிச்சல் தற்காலிகமானதாகவே இருக்கும். காற்று மாசுபாட்டுக்கான வெளிப்பாடு நின்றுவிட்டால், பாதிப்புகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஏற்கெனவே நுரையீரல் நோய்களைக் கொண்டிருப்போருக்கு கடும் நுரையீரல் பாதிப்பும் நிரந்தர சேதமும் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது” என எச்சரிக்கிறார் நுரையீரல் மருத்துவர் மாளவிகா.

காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட நுரையீரல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புமா?

நமது நுரையீரலுக்கு குறிப்பிட்ட அளவிலான மீட்புத் திறன் உள்ளது. காற்று மாசுபாட்டுக்கு ஆளாவதால் ஏற்படும் லேசான அழற்சி, எரிச்சல், தற்காலிக மூச்சுக் குழாய் சுருக்கம் (Temporary Bronchospasm) ஆகியவை பலருக்கு காற்று மாசுபாட்டின் வெளிப்பாட்டைக் குறைத்தால் மேம்படக் கூடும். ஆனால், நுரையீரல் எந்த அளவுக்கு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பது பின்வரும் மூன்று காரணிகளைப் பொறுத்தது:

  • காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு எந்த அளவுக்கு இருந்தது?
  • எவ்வளவு காலம் காற்று மாசுபாட்டுக்கு ஆளாகியிருந்தனர்?
  • அவர்களுக்கு ஏற்கெனவே ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD), இதய நோய் போன்ற பாதிப்புகள் உள்ளனவா?

நுரையீரல் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும்?

மருத்துவர் மாளவிகாவின் கூற்றுப்படி, லேசான எரிச்சல் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தால், அவை பொதுவாக சரிசெய்யக் கூடியவை (Reversible). "தற்காலிக சுவாசப் பாதை அழற்சியும் பல நேரங்களில் மேம்படக்கூடும், ஆஸ்துமா உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் திடீரென அதிகரித்திருந்தால் (Exacerbation), உரிய சிகிச்சை அளித்து அதைக் கட்டுப்படுத்த முடியும்."

அதேநேரம், "கடுமையான நுரையீரல் பாதிப்பு அல்லது நுரையீரல் திசுக்களில் தழும்பு ஏற்படும் நிலை (Fibrosis) உருவாகியிருந்தால், அது மேலதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்” என்கிறார் நுரையீரல் மருத்துவர் மாளவிகா

நுரையீரல் முதல் மூளை வரை காற்று மாசுபாடு உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?
Getty Images

காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படலாம்?

காற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, நோயாளியின் அறிகுறிகள் மற்றும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படலாம்.

மூச்சுக் குழாய் சுருக்கம் ஏற்பட்டிருந்தால் அதை விரிவடையச் செய்யும் மருந்துகள் (Bronchodilators) வழங்கப்படலாம். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்திருந்தால் ஆக்சிஜன் சிகிச்சை (Oxygen Therapy) அளிக்கப்படும்.

நோயின் தீவிரம் அதிகரித்திருந்தால் (Exacerbation) அதற்கேற்ற உரிய சிகிச்சை அளிக்கப்படும். தொடர்ந்து உடல் செயல்பாடுகளில் பாதிப்பு இருப்பவர்களுக்கு நுரையீரல் மறுவாழ்வுப் பயிற்சி (Pulmonary Rehabilitation) வழங்கப்படலாம். இவற்றுடன் தொடர்புடைய இதய பாதிப்புகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

முக்கியமாகக் கவனிக்க வேண்டியது: காற்று மாசுபாட்டுக்கு ஆளாகிவிட்டோம் என்பதற்காக முன்னெச்சரிக்கையாகவே ஆன்டிபயாட்டிக்ஸ் (Antibiotics), ஸ்டிராய்டுகள் (Steroids), நெபுலைசேஷன் (Nebulization) போன்ற சிகிச்சைகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அறிகுறிகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் தேவையான சிகிச்சைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது.

எந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்?

காற்று மாசுபாட்டுக்கு ஆளான பிறகு பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

  • கடுமையான மூச்சுத் திணறல்
  • ஒரு முழுமையான வாக்கியத்தைக்கூட பேச முடியாத அளவுக்கு மூச்சு விடுவதில் சிரமம்
  • நெஞ்சு வலி
  • மயக்கம் அல்லது சுயநினைவு இழக்கும் நிலை
  • கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் விசில் போன்ற சத்தம்
  • மருத்துவர் ஏற்கெனவே பரிந்துரைத்த மருந்துகளைப் பயன்படுத்தியும் அறிகுறிகள் குறையாமல் இருப்பது
  • ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!