ஒரு காரின் பின் இருக்கையில் ஆட்டுக்குட்டி சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலையில், அதே காரில் 14,000 பவுண்ட் (நவம்பர் 12, 2026 நிலவரப்படி சுமார் ரூ.17.4 லட்சம்) மதிப்புள்ள போதைப்பொருளுடன் பிடிபட்ட ஒருவர் சிறைத் தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.
56 வயதான ஜான் மெக்நீல், லின்ஸி சாங்ஸ்டரின் வாகனத்தில் பயணம் செய்தார். அந்த வாகனம் 2023 ஏப்ரல் 22 அன்று பிரிட்டனின் கிளாஸ்கோவில் உள்ள எம் 74 நெடுஞ்சாலையில் போலீசாரால் நிறுத்தப்பட்டது.
அந்த காரின் முன்பக்கப் பயணி இருக்கைக்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் மற்றும் கோகைன் போதைப்பொருள் பாக்கெட்டுகளைப் பின்னர் மோப்ப நாய் கண்டுபிடித்தது.
பாப்லோ என்று பெயரிடப்பட்ட அந்த ஆட்டுக்குட்டி குறித்து போலீசார் கேட்டபோது, சாங்ஸ்டரின் துணைவர் மெக்நீல், சாங்ஸ்டர் "பயிற்சி பெறும் மேய்ப்புப் பெண்" என்று கூறியதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன் கோகைன் மற்றும் டயமார்ஃபின் (ஹெராயின்) வைத்திருந்த குற்றத்திற்காக அந்த இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
பாப்லோ எஸ்கோபார் என்ற கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னனின் பெயரை அந்த ஆட்டுக்குட்டிக்கு அவர்கள் சூட்டியிருந்தனர். சாலையின் நடுவில் ஆபத்தான நிலையில் இருந்த அந்த ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றவே தாங்கள் முயன்றதாக இருவரும் கூறினர்.
பாப்லோ என்ற அந்த ஆட்டுக்குட்டி, விவசாயி கிரிஸ்டி மெயருக்குச் சொந்தமான நார்த் லான்ரிக் பண்ணையைச் சேர்ந்தது என்று நீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த ஆட்டுக்குட்டியை அவர்கள் வைத்திருக்க கிரிஸ்டி மெயர் அனுமதி அளிக்கவில்லை என்பதும், இருதரப்பும் ஒப்புக்கொண்ட ஆதாரங்கள் அடங்கிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காவல் அதிகாரி நிக் ட்விக், நெடுஞ்சாலையில் சாங்ஸ்டரின் காரை நிறுத்துவதற்குத் தனக்குக் காரணம் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது காரில் சாங்ஸ்டர், மெக்நீல் மற்றும் மற்றொரு நபர் இருந்தனர்.
முதற்கட்ட சோதனையில், காரின் ஓட்டுநர் இருக்கைப் பக்கக் கதவில் உள்ள பொருள் வைக்கும் பகுதியில், 'கண்ணாடிக் குழாய்' ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மெக்நீல் மற்றும் மற்றொரு நபரிடமிருந்தும் இதுபோன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
"அந்த ஆட்டுக்குட்டி எங்கிருந்து வந்தது என்று சாங்ஸ்டரிடம் கேட்டேன். அதற்கு அவர், 'மெக்நீல் ஒரு பயிற்சி பெறும் மேய்ப்புப் பெண்' என்று கூறினார்" என்றார் நிக் ட்விக்.
இதற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ஜூலியானா கீனன் காவல் அதிகாரியிடம் கேட்டார்.
அதற்கு அவர், "இல்லை. அப்போது அந்த ஆட்டுக்குட்டி பின் இருக்கையில் விடப்பட்டிருந்த சிப்ஸ் பாக்கெட்டிலிருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அங்கு பாட்டில்கள் எதுவும் இல்லை" என்று பதிலளித்தார்.
பில்லி என்ற மோப்ப நாய் பின்னர் காரின் முன்பக்கப் பயணி இருக்கைக்குக் கீழே இரண்டு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களைக் கண்டுபிடித்தது.
இருதரப்பும் ஒப்புக்கொண்ட ஆதாரங்கள் அடங்கிய ஆவணத்தில், அரசு தரப்பு வழக்கறிஞர் கீனன், "கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு தனிப்பட்ட பயன்பாட்டுக்கு அதிகமாக இருந்ததால், அவற்றை விற்பனை செய்யும் நோக்கம் இருந்ததாக இந்தச் சம்பவத்தின் சூழல்கள் காட்டுவதாகக் காவல் அதிகாரிகள் கருதினர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பாப்லோ என்ற ஆட்டுக்குட்டி அயர்ஷையரில் உள்ள ஒரு பண்ணைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு 48 முதல் 72 மணி நேரம் வரை வைக்கப்பட்ட பின்னர், அது மெயரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆட்டுக்குட்டியை திருடியதாக இருந்த குற்றச்சாட்டை, வழக்கு விசாரணையின் இடையிலேயே அரசு தரப்பு கைவிட்டது.
ஏனெனில், அந்த நேரத்தில் ஆட்டுக்குட்டி திருடப்பட்டதாக எந்தப் புகாரும் பதிவாகவில்லை.
மெக்நீல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது, ஓய்வுபெற்ற விவசாய ஒப்பந்ததாரரான தனது தந்தையுடன் முன்பு பணியாற்றிய அனுபவம் இருப்பதால், விலங்குகளைக் கையாளத் தெரியும் என்று தெரிவித்தார். தங்கள் வீட்டுக்குத் காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, சாலையின் நடுவில் பாப்லோவைப் பார்த்ததாக அவர் கூறினார்.
அந்த ஆட்டுக்குட்டி நீர்ச்சத்து குறைந்த நிலையில் இருந்ததாகவும், சில மணி நேரமாக அதற்கு உணவு அளிக்கப்படவில்லை என்று தோன்றியதாகவும் மெக்நீல் தெரிவித்தார்.
பாப்லோவின் காதுகளில் அடையாளக் குறியீடுகள் இருந்ததால், அதை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டதாக அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
காரில் இருந்த போதைப்பொருட்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மெக்நீல் மறுத்தார். சாங்ஸ்டரும் இதேபோல் மறுத்தார்.
காரை ஓட்டிச் சென்றபோது சாங்ஸ்டர் போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாகவும், தனியாக நடைபெற்ற விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு 18 மாதங்கள் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டதுடன், 100 மணி நேரம் ஊதியமின்றி சமூகப் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டது.
மெக்நீலுக்காக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் ப்ரான்வின் மூர், தற்போது தனது கட்சிக்காரர் கட்டுமான நிறுவனத்தில் குழுத் தலைவராகப் பணியாற்றி வருவதாகவும், அவர் கைது செய்யப்பட்டபோது போதைப் பழக்கத்தின் உச்சகட்டத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
வடக்கு அயர்ஷையரின் ஃபேர்லியைச் சேர்ந்த மெக்நீல், தண்டனை அறிவிப்புக்காக மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையானார். ஆனால், கில்பிர்னியைச் சேர்ந்த சாங்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
மெக்நீல் 300 மணி நேரம் ஊதியமின்றி சமூகப் பணியாற்ற வேண்டும் என்று நீதிபதி டோனி கெல்லி உத்தரவிட்டார். மேலும், ஆறு மாதங்களுக்கு அவர் மின்னணு கண்காணிப்புக் கருவி அணிந்திருக்க வேண்டும் என்றும், இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மெக்நீல் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு குறைவு என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார்.
ஆட்டுக்குட்டி மெயரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்ட பின்னர், அது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், புதிய ஆட்டுக்குட்டி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு