Skip to main content

Advertisement

காவ்யா மாறனை கரம் பிடிக்கும் அனிருத் திரையிசையில் சாதித்த கதை

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தமிழ் சினிமாவின் இளம் தலைமுறை இசையமைப்பாளர்களில் முக்கியமானவராகத் திகழ்பவர் அனிருத் ரவிச்சந்தர்.
Getty Images
அனிருத் ரவிச்சந்தர்

தமிழ் சினிமாவின் இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரவிச்சந்தர். மிகக் குறைந்த வயதிலேயே வெற்றியை வசப்படுத்திய இவர், இளைஞர்களின் ரசனைக்கேற்ப இசையமைப்பதில் தனித்துவம் பெற்றவர்.

2011ஆம் ஆண்டு வெளியான 'ஒய் திஸ் கொலை வெறி' என்ற பாடல் அதிக கவனம் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள், இளைஞர்களைக் கவரும் பாடல்கள் எனத் தனது இசை பாணியால் இந்தியத் திரையுலகில் இன்று முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார் அனிருத்.

குடும்ப பின்னணி

1990ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பிறந்தவர் அனிருத்.

சென்னையின் கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தார் அனிருத்.

சிறு வயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்டிருந்த அனிருத், பள்ளியில் படித்த காலத்திலேயே 'ஜின்க்ஸ்' (Zinx) என்ற இசைக்குழுவில் இருந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் உறவினராகவே அனிருத்தை பலருக்கும் தெரியும் . ரஜினிகாந்தின் மனைவி லதாவின் சகோதரர் ரவியுடைய மகன் தான் அனிருத்.
Getty Images

நடிகர் ரஜினிகாந்தின் உறவினராகவே அனிருத்தை ரசிகர்கள் பலருக்கும் தெரியும். ரஜினிகாந்தின் மனைவி லதாவின் சகோதரர் ரவியுடைய மகன் தான் அனிருத்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள ரவி, பன்னாட்டு வங்கி ஒன்றில் அதிகாரியாகவும் இருந்தார். அனிருத்தின் அம்மாவும் பாரம்பரிய சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். அவரது அம்மா நடன கலைஞரும் கூட.

அனிருத்தின் ஒரே சகோதரி தற்போது லண்டனில் வசிக்கிறார்.

அனிருத்தின் தாத்தா எஸ்.வி. ரமணன் இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் விளங்கியவர்.

அனிருத்தின் பள்ளி நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யாவும் சவுந்தர்யாவும் இணைந்து பங்கெடுத்துள்ளனர். இன்றும் அனிருத் சிறுவயதில் இசைக்கருவிகள் வாசிக்கும் வீடியோக்களை காணமுடியும்.

லயோலா கல்லூரியில் சேர்ந்த பின்னர், தன் நண்பர்களுடன் இணைந்து ராக் வகை இசையை அனிருத் அதிகம் வாசித்து பழகியிருக்கிறார்.

கர்நாடக இசையைக் கற்றுக்கொண்ட அனிருத்துக்கு கிளாசிக்கல் பியானோவைப் பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. இதற்காக லண்டனில் உள்ள ட்ரினிட்டி இசை கல்லூரி நடத்திய தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றார்.

இசைப் பயணம்

கல்லூரி பருவத்திலேயே அனிருத்துக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது. இதனால் அப்படத்தின் மூலம் பெரிய இசையமைப்பாளர் ஆகிவிட வேண்டும் என்கிற கனவோடு இருந்த அனிருத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
anirudhravichandar/instagram

பள்ளி மற்றும் கல்லூரியில் இசைக்குழுவுடன் இசையமைத்துக் கொண்டிருந்த அனிருத்தை சினிமாவின் பக்கம் திருப்பியது நடிகர் தனுஷ் தான்.

கல்லூரி பருவத்திலேயே அனிருத்துக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது. இதனால் அப்படத்தின் மூலம் பெரிய இசையமைப்பாளர் ஆகிவிட வேண்டும் என்கிற கனவோடு இருந்த அனிருத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அவர் இசையமைக்க இருந்த முதல் படம் பாதியிலேயே நின்று போனது. முதல் படமே இப்படி ஆனதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் அனிருத்.

இதையடுத்து 25 சுயாதீன இசை பாடல்களுக்கு இசையமைத்து பட வாய்ப்புக்காக காத்திருந்த அனிருத்துக்கு குடும்பத்தில் இருந்தே முதல் வாய்ப்பு கிடைத்தது.

உலக அளவில் கவனிக்கப்பட்ட பாடல்

காதல் தோல்வியால் துவண்டு இருக்கும் இளைஞர் பாடும் பாடல் ஒன்றை தனுஷின் குரலில் அனிருத் முதன்முதலில் கம்போஸ் செய்திருக்கிறார்.
அனிருத் ட்யூனை போட அதற்கு ஏற்றார் போல் ஆங்கிலமும் தமிழும் கலந்து பாடல் வரிகளை அடுக்கினார் தனுஷ். வெறும் 20 நிமிடத்திலேயே மொத்த பாடல் கம்போஸிங்கையும் முடித்திருக்கிறார் அனிருத்.
ஆனால் அந்த பாடல் உலகளவில் மெகா ஹிட் அடிக்கும் என்று அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.
Getty Images
3 படத்திற்காக அனிருத் இசையமைத்த முதல் பாடல் இணையத்தில் லீக் ஆனது.

தான் நடித்த 3 திரைப்படத்துக்கு அனிருத்தை இசையமைக்க வைக்கலாம் என தனுஷ் சிபாரிசு செய்ய அதற்கு அப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஓகே சொல்லி இருக்கிறார்.

காதல் தோல்வியால் துவண்டு இருக்கும் இளைஞர் பாடும் பாடல் ஒன்றை தனுஷ் குரலில் அனிருத் முதன்முதலில் கம்போஸ் செய்திருக்கிறார். படக்குழுவினர் அந்த ஒரு பாடலை மட்டும் 'ஒய் திஸ் கொலவெறி' என்கிற பெயரில் வெளியிட்டனர். அதன் மேக்கிங் வீடியோவையும் அவர்கள் இணையத்தில் வெளியிட்டனர்.

வெளியான ஒரு மணி நேரத்திலேயே அதிக பார்வைகளைப் பெற்ற பாடல்களில் ஒன்றாக கவனம் ஈர்த்த இப்பாடல், வெளியிட்ட ஒரே நாளில் ரசிகர்களிடையே பிரபலமானது.

மறுபுறம், பெண்கள் குறித்த சித்தரிப்புக்காக இந்த பாடலுக்கு விமர்சனங்களும் எழுந்தன. இந்த பாடல் மட்டுமல்லாது 3 படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.

வெற்றிகரமான திரைப் பயணம்

'3' திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் அனிருத் தன் பக்கம் திருப்பினார்.
anirudhravichandar/x
இன்று கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளார் அனிருத்.

'3' திரைப்படத்தைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு 'எதிர் நீச்சல்', 'வணக்கம் சென்னை', உள்ளிட்ட திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்தார்.

இந்த தொடக்க காலப் படங்கள் அவரது இசைத் திறனை வெளிப்படுத்தினாலும், 2014ஆம் ஆண்டு வெளியான 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

தனுஷ் நடித்த இந்தத் திரைப்படத்தில் பாடல்கள் மட்டுமின்றி, கதாநாயகனின் அறிமுகக் காட்சிகளிலும் பின்னணி இசை முக்கியத்துவம் பெற்றது.

கானா இசை, கிட்டார் இசை மற்றும் ஈர்க்கக் கூடிய மெட்டுகளை இணைத்த அனிருத்தின் பாணி ரசிகர்களிடையே தனி அடையாளத்தை உருவாக்கத் தொடங்கியது.

அதே ஆண்டு விஜய் நடித்த ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய 'கத்தி' திரைப்படமும் அவரது வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தது. 'செல்பி புள்ள' உள்ளிட்ட பாடல்களும் படத்தின் தீம் மியூசிக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

2015ஆம் ஆண்டு 'மாரி', 'நானும் ரௌடி தான்', 'வேதாளம்', 'தங்க மகன்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் இசையமைத்தார்.

'நானும் ரௌடிதான்' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அவரது இசைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றன.

டேவிட் படத்திற்காக அனிருத் இசையமைத்த கனவே கனவே என்கிற பாடல் அவரை இந்தியிலும் பிரபலமாக்கியது.

தொடர்ச்சியான வெற்றிகளைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன.

இந்தப் படங்களில் பெரும்பாலான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

வேதாளம், பேட்ட, தர்பார், மாஸ்டர், பீஸ்ட், லியோ, ஜெயிலர், ஜவான் என தொடர்ந்து ஹிட் ஆல்பங்களாக கொடுத்து இன்று கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளார் அனிருத்.

தமிழ் சினிமாவை கடந்த பயணம்

இதே காலகட்டத்தில் அவரது இசை தெலுங்குத் திரையுலகிலும் தொடர்ந்து கவனம் பெற்றது. ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவரா: பார்ட் 1' திரைப்படத்திற்கும் இசையமைத்தார்.
Getty Images

2023ஆம் ஆண்டு அனிருத்தின் இசை இந்திய அளவில் மேலும் கவனம் பெற்றது. ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்', விஜய் நடித்த 'லியோ' ஆகிய படங்களுடன், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த இந்தித் திரைப்படமான 'ஜவான்' படத்திற்கும் இசையமைத்தார்.

இதே காலகட்டத்தில் அவரது இசை தெலுங்குத் திரையுலகிலும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவரா: பார்ட் 1' திரைப்படத்திற்கும் இசையமைத்தார்.

2024ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2', ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' ஆகிய படங்களுக்கு அவர் இசையமைத்தார்.

'கூலி', 'ஜெயிலர் 2'

இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் அனிருத் உருவாக்கிய கூட்டணி, தமிழ் சினிமாவில் முக்கியமான இசை - இயக்குநர் கூட்டணிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படத்திற்கும் அவர் இசையமைத்தார்.

2025ஆம் ஆண்டு வெளியான 'கூலி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை தொடர்பாக அனிருத் பல்வேறு நேர்காணல்களில் தனது இசை உருவாக்கப் பணிகளைப் பகிர்ந்துகொண்டார்.

2026ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கும் அவர் இசையமைத்திருந்தார்.

திரைப்பட இசையில் அனிருத் செய்துள்ள பங்களிப்புக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதைப் பெற்ற அவர், 2025 அக்டோபர் 11ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.

தமிழகத்தின் கலை மற்றும் கலாசாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான மாநில அரசு விருதுகளில் கலைமாமணியும் ஒன்றாகும்.

ஏ.ஆர் ரகுமான் - அனிருத்
anirudhravichandar/x

ஏ.ஆர் ரகுமான் மாதிரி அனிருத்தும் இரவுப் பறவை.

இன்று வரை இரவில் தான் இசைப்பணி செய்கிறார். அவருக்கென தனி டீம் உள்ளது. அந்த நண்பர்கள் அவரின் பேண்ட் காலத்தில் இருந்து நண்பர்கள். அவர்கள் உதவியுடன், இசைப்பணி செய்கிறார். அவர்கள் பெயரை ஒவ்வொரு பாடல் வெளியீட்டு விழாவிலும் மறக்காமல் அவர் சொல்வார்.

அனிருத் இசையமைக்கத் தொடங்கிய காலத்தில் இந்தியாவில் யூடியூப் பயன்பாடு அதிகரித்தது. அவரும் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

குறிப்பாக பாடல் மேக்கிங் வீடியோக்களை எடுத்தார். பாடல் வெளியீடு ப்ரோமாக்களை வித்தியாசமாக கொடுத்தார். அது அந்த பாடலுக்கு மட்டுமின்றி படத்தின் வெற்றிக்கும் உதவியது.

அவர் இசை நிகழ்ச்சி சென்னை, பெங்களூரு, அமெரிக்கா என எங்கு நடந்தாலும் கூட்டம் அலைமோதியது.
Getty Images

இசையமைப்பதில் மட்டுமின்றி அனிருத் சிறந்த பாடகரும் கூட. தன் படங்கள் தவிர மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் பாடியுள்ளார்.

அனிருத் சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். அவர் பாடல்களில் வேறு மொழி பாடல்களின் சாயல் இருப்பதாக அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்தன.

திரைப்படங்களுக்கு இசையமைப்பதுடன், சுயாதீன இசை ஆல்பங்களை உருவாக்குவது மற்றும் பாடல்கள் பாடுவது எனப் பல்வேறு பணிகளிலும் அனிருத் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது சன் நெட்வொர்ட் குழும அதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை அனிருத் ரவிச்சந்தர் கரம் பிடிக்க இருப்பது கவனம் பெற்றுள்ளது.

சன் டிவி நெட்​வொர்க்​கின் நிர்​வாக இயக்​குநர்​களுள் ஒரு​வராகவும், சன்ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் ஐபிஎல் கிரிக்கெட் அணி​யின் இணை உரிமையாளர்​களுள் ஒருவராகவும் காவ்யா மாறன் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான பிபிசி செயலியை கூகுள் பிளேயிலிருந்து பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

ஐஃபோன் மற்றும் ஐபேடுக்கான பிபிசி செயலியை ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

கவனிக்கவும்: இந்தச் செயலி பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் கிடைக்காது. இதில் ஆங்கில மொழிப் பதிப்பு இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!