பல தசாப்தங்களாக கணையப் புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றம் இதுவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மிகவும் ஆபத்தானதும் சிகிச்சையளிப்பதற்கு கடினமானதுமான இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளில், தினமும் உட்கொள்ளப்படும் ஒரு மாத்திரை கட்டிகளைச் சுருக்குவதோடு, சிலரிடம் அவற்றை முற்றிலும் நீக்கவும் உதவக்கூடும் என்று தெரிகிறது.
ஆரம்பகட்ட மருத்துவப் பரிசோதனைகளில், கீமோதெரபியுடன் டாராக்சோன்ராசிப் மருந்தையும் உட்கொண்ட 12 நோயாளிகளில் ஒருவருக்கு, ஸ்கேன் பரிசோதனைகளில் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவிய, முற்றிய நிலையில் உள்ள கணையப் புற்றுநோய் அண்மையில் கண்டறியப்பட்ட 61 நோயாளிகளிடம் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் புற்றுநோய்க் கட்டிகளின் வளர்ச்சி நின்றுபோனது.
ஆனால், இந்த மருந்து நோயைக் கட்டுப்பாட்டில் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் என்பது தெளிவாக இல்லை என்றும், இதை முழுமையான குணப்படுத்தும் சிகிச்சையாகக் கருதக் கூடாது என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முடிவுகள்
கணையப் புற்றுநோய் நோயாளிகளுக்காக பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய முன்னேற்றம் இதுதான் என கேன்சர் ரிசர்ச் யுகே அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் மருத்துவர் சாம் காட்ஃப்ரே, இந்த முடிவுகள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துவதாக பிபிசி நியூஸிடம் கூறினார்.
"இதுவரை மருந்துகளால் குறிவைத்து தாக்க முடியாததாகக் கருதப்பட்ட ஒன்றை, இந்த புதிய மருந்து இலக்காகக் கொண்டு செயல்படுவதற்கான வழியை கண்டுபிடித்துள்ளது" என்றார்.
"நீண்ட காலமாக காத்திருந்த கணையப் புற்றுநோய் சிகிச்சையில், இப்போது நாங்கள் முன்னேற்றத்தைக் காணத் தொடங்கியுள்ளோம்." என்றும் குறிப்பிடுகிறார் அவர்.
கணையப் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். பிரிட்டனில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய்களில், இதற்கான உயிர்வாழ்வு விகிதமே மிகக் குறைவு.
கீமோதெரபி சிகிச்சை மூலம் புற்றுநோய்க் கட்டிகளின் அளவை ஓரளவுக்குக் குறைக்க முடிந்தாலும், அவை பெரும்பாலும் மீண்டும் வளரத் தொடங்குகின்றன.
முற்றிய நிலையில் உள்ள கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள், ஆண்டுக்கணக்கில் அல்லாமல் சில மாதங்களே உயிர்வாழ்கின்றனர்.
புதிய சிகிச்சை முறையால் புற்றுநோயை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், நோயாளிகளின் ஆயுளை மேலும் நீட்டிக்க முடியும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.
இந்த ஆய்வில் பங்கேற்ற நோயாளிகள் சராசரியாக ஒன்றரை ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களில் சிலருக்கு இந்தக் காலகட்டத்தில் புற்றுநோய் மீண்டும் ஏற்படவில்லை.
இந்த வகை புற்றுநோய்கள் குணமடைந்த நிலைக்கு அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு செல்லுமா, சென்றால் எவ்வளவு காலம் அந்த நிலை நீடிக்கும் என்பதை அறிய, நீண்டகால ஆய்வுகள் தேவை. முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தவை:
- 90 சதவீத நோயாளிகளிடம் புற்றுநோய்க் கட்டிகளின் வளர்ச்சி நின்றது.
- 60 சதவீதத்துக்கும் சற்று அதிகமான நோயாளிகளிடம் கட்டிகளின் அளவு குறைந்தது அல்லது கட்டிகள் மறைந்தன.
- சுமார் 8 சதவீத நோயாளிகளிடம் (12 பேரில் ஒருவர்) சிடி ஸ்கேன் பரிசோதனையில் புற்றுநோய்க் கட்டிகளைக் கண்டறிய முடியவில்லை.
நீண்டகால உயிர்வாழ்வு
அமெரிக்காவின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தை சேர்ந்தவரும், இந்த பரிசோதனையில் ஈடுபட்டிருப்பவருமான டாக்டர் வுங்க்கி பார்க், இதுவரை கிடைத்துள்ள முடிவுகள் மிகவும் ஊக்கமளிப்பதாகக் கூறினார்.
"புற்றுநோய்க் கட்டிகள் சிகிச்சையால் மாற்றங்களை சந்திக்கும் நோயாளிகளின் விகிதம் அதிகரிப்பதை மட்டுமல்லாமல், சிகிச்சைக்குப் பிறகு கட்டிகளின் அளவு மேலும் குறைவதையும், நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரிப்பதையும் காணத் தொடங்கியுள்ளோம். இது இறுதியில் நோயாளிகள் நீண்டகாலம் உயிர்வாழ வழிவகுக்கலாம்" என்றார் அவர்.
டாராக்சோன்ராசிப் என்பது ஏற்கனவே அமெரிக்காவில் அங்கீகாரம் பெற்றுள்ள, குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செயல்படும் தடுப்பு சிகிச்சை மருந்தாகும்.
கணையப் புற்றுநோய்களில் பெரும்பாலானவற்றில் காணப்படும், கட்டி வளர்ச்சியைத் தூண்டும் ஆர்ஏஎஸ் எனப்படும் மரபணு மாற்றங்களை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தும் வகையில் இது செயல்படுகிறது.
நுரையீரல் மற்றும் கருப்பை உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களிலும் இதேபோன்ற மரபணு மாற்றங்கள் காணப்படுவதால், இந்த மருந்து பல்வேறு வகை புற்றுநோய் நோயாளிகளுக்கும் பயனளிக்கக்கூடும்.
டாக்டர் காட்ஃப்ரே கூறுகையில், "கணையப் புற்றுநோயில் தற்போது காணப்படும் இந்த ஆரம்பகட்ட வெற்றி, மற்ற வகை புற்றுநோய்களுக்கும் விரிவடையும் என்று நான் நம்புகிறேன்."
மேலும் நீண்டகால பரிசோதனைகளும், அவற்றின் முடிவுகளும் மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
"புற்றுநோய் மீண்டும் தோன்றக்கூடும். ஸ்கேன் பரிசோதனைகளில் அதன் அறிகுறிகள் தெரியாவிட்டாலும், காலம் கடந்த பிறகே ஒருவர் உண்மையில் புற்றுநோயிலிருந்து விடுபட்டாரா என்பதை உறுதியாகக் கூற முடியும்."
ஐரோப்பிய புற்றுநோய் மாநாடான EORTC–NCI–AACR Symposium 2026-இன் தலைவரான பேராசிரியர் எலினா கரால்டா, இந்த ஆய்வு முடிவுகள் குறித்து கூறுகையில், "இந்தக் கூட்டு சிகிச்சை நோயாளிகளின் ஒட்டுமொத்த உயிர்வாழும் காலத்தை கணிசமாக அதிகரிப்பதுடன், புற்றுநோய்க் கட்டிகள் மீண்டும் வளரத் தொடங்குவதற்கு முந்தைய காலத்தையும் நீட்டிக்கக்கூடும் என்பதைக் காட்டுவதால் இந்த முடிவுகள் நம்பிக்கையளிக்கின்றன" என்றார்.
அமெரிக்காவில் பதிவாகும் மொத்த புற்றுநோய் பாதிப்புகளில் சுமார் 3% கணையப் புற்றுநோயாகும். ஆனால் புற்றுநோய் காரணமான மொத்த உயிரிழப்புகளில் சுமார் 8% இந்த நோயால் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் 53,000 பேர் இதனால் உயிரிழக்கின்றனர்.
பிரிட்டனில் ஆண்டுதோறும் சுமார் 11,500 பேருக்கு கணையப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. சுமார் 10,200 பேர் இந்த நோயால் உயிரிழக்கின்றனர் என்று கேன்சர் ரிசர்ச் யுகே அமைப்பு தெரிவிக்கிறது.
நடிகர் ஆலன் ரிக்மேன் 2016-ஆம் ஆண்டு கணையப் புற்றுநோயால் உயிரிழந்தார். அவருக்கு நோய் கண்டறியப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவர் காலமானார்.
இந்த நோயின் அறிகுறிகளில் மஞ்சள் காமாலை, தோலில் அரிப்பு, அடர் நிற சிறுநீர், வெளிர் நிற மலம், காரணம் தெரியாத உடல் எடை இழப்பு, சோர்வு மற்றும் அதிக உடல் வெப்பநிலை ஆகியவை அடங்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு