கடந்த வாரம், ஆல்பர்ட்டா மாகாணத்தின் கால்கரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனடா பிரதமர் மார்க் கார்னி உரையாற்றினார். சிவப்பு, வெள்ளை நிறங்களில் 'என்றென்றும் கனடியர்' (Forever Canadian) என்ற பதாகைகள் பின்னணியில் இடம்பெற்றிருந்த மேடையில் நின்று, உற்சாகமாகக் கூடியிருந்த மக்களிடம், "கனடாவுக்கு இது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அவரது வேண்டுகோளுக்கு வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. முதற்கட்ட முடிவுகளின்படி, ஆல்பர்ட்டா மாகாண வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர், கனடாவின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கனடாவின் கூட்டமைப்பின் எதிர்காலம், அதன் வளமிக்க மாகாணமான ஆல்பர்ட்டாவுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது.
கனடாவின் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புகளில் பெரும்பகுதியைக் கொண்டுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில், ஏராளமான இயற்கை எரிவாயு மற்றும் கனிம வளங்களும் உள்ளன. அமெரிக்காவுடனான கடுமையான வர்த்தகப் போரின் பாதிப்புகளில் இருந்து கனடா மீண்டு வருவதற்கான முயற்சியில் இந்த மாகாணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வர்த்தகத்தைப் பல்வகைப்படுத்துவது, பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, உலகின் மறுபுறத்தில் உள்ள நாடுகளுடன் புதிய கூட்டணிகளை உருவாக்குவது ஆகியவை இந்த முயற்சியின் முக்கிய அம்சங்களாகும்.
ஆல்பர்ட்டா மாகாணத்தில் வளர்ந்தவரும், முன்பு மத்திய வங்கியின் தலைவராகப் பணியாற்றியவருமான கார்னி, இப்போது கனடாவை மறுகட்டமைக்கும் முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ளார். நாட்டுக்குள்ளும் சர்வதேச அளவிலும் கனடாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பாகத் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், பிரிவினைக்கு எதிரான தரப்பின் வெற்றி எந்த அளவுக்குப் பெரியது என்பது தெளிவானதும், கார்னி வெளியிட்ட முதல் அறிக்கையில் அவர் வலியுறுத்திய கருத்துகளைக் கவனியுங்கள்.
"ஒன்றுபட்டு நிற்கவும், இணைந்து நாட்டைக் கட்டமைக்கவும், ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளவும் அவர்கள் தேர்வு செய்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
கனடாவுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆல்பர்ட்டா மக்கள் பெரும்பான்மையாக ஆதரவளித்திருப்பது, கார்னிக்கு அரசியல் ரீதியாகவும் வலுவான அடித்தளத்தை அளிக்கிறது.
"கனடாவுடன் மோத வேண்டாம்," என மாகாணத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாமஸ் லுகாஷுக் எச்சரித்தார்.
இந்த வாக்கெடுப்பின் முடிவில் முக்கியப் பங்கு வகித்த அவரது 'என்றென்றும் கனடியர்' பிரசார இயக்கம், ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தது.
மாகாணத் தலைநகரான எட்மண்டனில் திரண்டிருந்த உற்சாகமான ஆதரவாளர்களிடம் பேசிய லுகாஷுக், கனடாவுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவான வாக்குகள் அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில், இந்த வாக்கெடுப்பு "உலகின் மற்ற நாடுகளுக்கு மிகவும் வலுவான செய்தியை அனுப்பும்" என்று கூறினார்.
அவர் குறிப்பிடுவது, கனடாவின் தெற்கே அமைந்துள்ள அதன் சர்ச்சைக்குரிய அண்டை நாடான அமெரிக்காவைத்தான் என்பது தெளிவாகிறது. குறிப்பாக, கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாற்றப்போவதாகத் தொடர்ந்து மிரட்டிவரும் அந்நாட்டின் அதிபரையே அவர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.
ஆல்பர்ட்டா மக்கள் கனடாவுடன் தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக வாக்களித்த அதே நாளில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக, கன்சாஸில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டிரம்பும் வடக்கு நோக்கி ஒரு செய்தியை அனுப்பினார்.
"நீங்கள் ஐஸ் ஹாக்கியைத் தொடர்ந்து விளையாட அனுமதிப்பேன். உங்கள் தேசிய கீதமான 'ஓ கனடா'வையும் தொடர்ந்து வைத்திருக்க அனுமதிப்பேன்" என்று உறுதியளித்த அவர், பின்னர், "நாங்கள் சும்மா விளையாடுகிறோம்" என்று கூறினார்.
ஆனால், கனடியர்களுக்கு இது சிரிப்பதற்கான விஷயமல்ல.
இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக, கார்னி அடிக்கடி வலியுறுத்தி வந்த ஓர் எச்சரிக்கையை மீண்டும் தெரிவித்தார்.
"நமது எல்லைகளுக்கு வெளியே சிலர் நம்மைப் பிளவுபடுத்தி, நம்மைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர்." இருப்பினும், 'அவர்கள்' என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை வெளிப்படையாகக் கூறவில்லை.
அதை அவர் கூற வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.
பிரிவினையை ஆதரிக்கும் தரப்பினருக்கு இது ஒரு முக்கியமான தருணமாக அமைந்துள்ள நிலையில், அவர்களில் சிலர் தங்களது நோக்கத்தை மறைக்கவில்லை.
அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் சிலர், கடந்த ஆண்டு மூன்று முறை வாஷிங்டனுக்குச் சென்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளைச் சந்தித்ததையும், சுதந்திரமான ஆல்பர்ட்டா அமெரிக்காவுக்கு என்ன வழங்க முடியும் என்பதை விளக்கியதையும் ஒப்புக்கொண்டனர்.
அமெரிக்கா வழியாகப் பசிபிக் பெருங்கடல் வரை எண்ணெய்க் குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறும் இதில் அடங்கும்.
இருப்பினும், கனடாவைப் பொறுத்தவரை வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வாக்கெடுப்பு, நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை பல்வேறு விவாதங்களையும் கவலைகளையும் ஏற்படுத்தியிருந்தாலும், உலகின் பிற பகுதிகள் இந்தச் செய்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காமல் போகலாம்.
"பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறாத வரை, அமெரிக்காவைத் தவிர பெரும்பாலான வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு கனடாவின் உள்நாட்டு அரசியலில் அதிக ஆர்வம் இல்லை" என்று டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மங்க் சர்வதேச விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கைப் பள்ளியின் நிறுவன இயக்குநரான பேராசிரியர் ஜானிஸ் ஸ்டெய்ன் கூறுகிறார்.
"வெளிநாட்டு முதலீட்டாளர்கள், முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவு செய்ய எவ்வளவு காலம் ஆகும், முதலீட்டுக்குக் கிடைக்கும் வருவாய் மற்றும் கணிக்கக்கூடிய ஒழுங்குமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர்" என்று அவர் விளக்குகிறார்.
பொருளாதார வளர்ச்சியை இறுதியில் விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டத் திட்டங்களின் நீண்ட பட்டியலைக் கார்னி முன்வைத்துள்ள நிலையில், ஸ்டெய்னின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் அதிக செலவு கொண்டவை; அவற்றில் பலவற்றைக் கட்டி முடிக்கப் பல ஆண்டுகள் ஆகும்.
ஆசியச் சந்தைகளுக்கு ஆல்பர்ட்டாவின் எண்ணெயைக் கொண்டு செல்லும் வாய்ப்புகளைத் திறக்கும் வகையில், பசிபிக் கடற்கரை வரை எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டமும் இந்த லட்சியத் திட்ட வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது.
சுற்றுச்சூழல் விதிமுறைகள் உள்ளிட்ட ஃபெடரல் அரசின் கொள்கைகளால் தங்களது பொருளாதார வளர்ச்சி முடக்கப்பட்டுள்ளதாக ஆல்பர்ட்டா நீண்டகாலமாகக் கூறிவரும் குற்றச்சாட்டுக்கும் இந்த நடவடிக்கை தீர்வாக அமைகிறது.
கடந்த வாரம் ஆல்பர்ட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அந்த எண்ணெய்க் குழாய் திட்டம் "நாம் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும்" என்று கார்னி கூறியபோது, அன்றைய இரவில் மிக அதிக நேரம் நீடித்த உரத்த கைதட்டல் எழுந்தது.
திங்கள்கிழமை வாக்கெடுப்புக்குப் பிறகு, காலநிலை நடவடிக்கை மற்றும் நிதிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிறப்புத் தூதரான கார்னி, "ஆல்பர்ட்டாவை மையமாகக் கொண்டு, உலகளாவிய எரிசக்தி வல்லரசாக நமது முழுத் திறனையும் வெளிக்கொணர்வது" குறித்து வலியுறுத்தினார்.
தற்போது அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவருக்கு இருந்த நற்பெயரைக் காட்டிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், அரசியலில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத நிலையில் கார்னி முதன்முறையாக அரசியலில் நுழைந்ததிலிருந்து, "வலிமையான கனடாவைக் கட்டமைப்போம்" (Build Canada Strong) என்பதே அவரது தாரக மந்திரமாக இருந்து வருகிறது.
உள்நாட்டில், வாக்கெடுப்பில் இடம்பெற்ற மற்ற ஒன்பது கேள்விகளின் இறுதி முடிவுகளும் பரவலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது, குடியேற்றத்துக்கான செலவுகள் மற்றும் அரசியலமைப்பில் சாத்தியமான மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அந்தக் கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
இந்த முடிவுகள் பல்வேறு விவாதங்களைத் தூண்டுவது உறுதி. கனடாவின் மற்ற ஒன்பது மாகாணங்களையும் மூன்று பிரதேசங்களையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகள், உடன்பாடுகள் மட்டுமின்றி, சில ஒப்பந்தங்கள் முறிவதற்கும் அவை வழிவகுக்கலாம். ஏனெனில், ஒவ்வொரு மாகாணத்துக்கும் பிரதேசத்துக்கும் தனித்தனி குறைகளும் கோரிக்கைகளும் உள்ளன.
புதிய அரசியல் கூட்டணிகளையும் வர்த்தகக் கூட்டாண்மைகளையும் உருவாக்குவதற்காக, கார்னி வெளிநாட்டுப் பயணங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகிறாரா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேச வேண்டியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடாவுக்கு இணை உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது குறித்த முன்னெப்போதும் இல்லாத, இன்னும் உறுதியாகாத முன்மொழிவும் இதில் அடங்கும்.
"இரண்டையும் என்னால் செய்ய முடியும்; இரண்டையும் நான் செய்தாக வேண்டும்," என்று அண்மையில் தனது வழக்கமான நேரடிப் பாணியில் பதிலளித்தார் கார்னி. தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 16-க்கும் மேற்பட்ட மசோதாக்களை அவர் பட்டியலிட்டார். முக்கிய வரி மாற்றங்கள், பொதுப் பாதுகாப்பு, எரிபொருள் விலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை அந்த மசோதாக்கள் கையாண்டன.
தற்போதைக்கு, கருத்துக் கணிப்புகளில் கார்னியின் செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்தே காணப்படுகிறது. பாரம்பரியமாக அவரது லிபரல் கட்சிக்கு அதிக ஆதரவு இல்லாத ஆல்பர்ட்டாவில்கூட அவருக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. நீண்டகாலமாக நீடித்துவரும் இந்த அரசியல் 'தேனிலவுக் காலம்', நெருக்கடிகளைச் சந்தித்துவரும் பிற அரசியல்வாதிகள் பொறாமைப்படும் அளவுக்கு அமைந்துள்ளது.
டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு கார்னி உறுதியுடனும் நிதானமாகவும் பதிலளித்துள்ளார். பதிலடியாக வரிகளை விதித்ததும் இதில் அடங்கும். இதனால், சர்வதேச அரங்கில் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் உயர்மட்டக் கூட்டங்களில் பெரும்பாலும் இடம்பெறாமல் இருந்த கனடாவுக்கு இது எதிர்பாராத திருப்பமாகும். சில நேரங்களில் 'சலிப்பூட்டும் நாடு' என்று ஒதுக்கப்பட்ட கனடா, இப்போது உலக அரங்கில் கவனம் பெறுகிறது.
கனடாவுக்கு மிக முக்கியமான இந்த வாரத்தில், 'தி எகனாமிஸ்ட்' இதழ் தனது அட்டைப்படத்தில் கார்னியை இடம்பெறச் செய்தது. அவரது பற்களுக்கு இடையே சிவப்பு நிற மேப்பிள் இலை ஒன்று கச்சிதமாகப் பொருத்தப்பட்டிருந்தது.
"ஆபத்துகள் நிறைந்த உலகை எவ்வாறு கையாள்வது என்பதை நடுத்தர வல்லரசுகளுக்கு மார்க் கார்னி காட்டுகிறார்" என்பது அந்த இதழின் தலைப்புகளில் ஒன்றாகும்.
எனினும், கனடாவின் பலவீனங்களையும் அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. அவற்றில் ஆல்பர்ட்டாவில் நடைபெற்ற வாக்கெடுப்பும் ஒன்று.
"இந்த வாக்கெடுப்பின் ஒட்டுமொத்த முடிவு, கனடாவின் ஒற்றுமை வலுவாக இருப்பதைக் காட்டுவதாக இருக்கலாம்" என்கிறார் அரசியல் அறிவியலாளர் டேவிட் மாஸ்க்ரோப். விரைவில் வெளியாகவுள்ள 'ஆன் நேஷனலிசம்' (On Nationalism) நூலின் ஆசிரியருமான டேவிட் மாஸ்க்ரோப் கூறுகிறார்.
அவர், தொடர்ந்து ஒரு கேள்வியையும் எழுப்புகிறார்: "டொனால்ட் டிரம்ப் பதவியில் இல்லாதபோது என்ன நடக்கும்? கனடியர்கள் தங்கள் தேசியக் கொடியைச் சுற்றி ஒன்றிணையத் தூண்டும் ஒரே இலக்காக, ஆவேசமாகவும் உரத்த குரலிலும் பேசும் ஒரு தலைவர் இல்லாமல் போனால் என்னவாகும்?"
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலிருந்து அண்மையில் விலகிக்கொள்ள கார்னி எடுத்த முடிவு, கனடியர்களிடையே பெருமையையும் தேசப்பற்றையும் மேலும் அதிகரித்துள்ளது.
ஆனால், கனடாவின் ஏற்றுமதியில் பாரம்பரியமாக சுமார் 70 சதவீதத்தைப் பெற்றுவரும் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் நீடித்தால், கனடியர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் இன்னும் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
இருப்பினும், இப்போதைக்கு மேப்பிள் இலை பொறிக்கப்பட்ட தேசியக் கொடியை உற்சாகமாக அசைத்துக் கொண்டாடும் தருணமாக இது அமைந்துள்ளது.
"இது கனடாவுக்கும், அதன் மீண்டெழும் திறனுக்கும் கிடைத்த வெற்றி," என்று நாட்டின் பல்வேறு கட்டமைப்புச் சிக்கல்கள் குறித்த செய்தித் தொகுப்பின்போது, கனடாவின் பொதுத் தொலைக்காட்சி நிறுவனமான சிபிசியின் செய்தியாளர் ஜானிஸ் மெக்ரிகோர் கருத்துத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு