Skip to main content

Advertisement

கோடீஸ்வரர் விவேக் ராமசாமியை வீழ்த்திய ஏமி ஆக்டன் - டிரம்ப் ஆதரித்த 'சர்ச்சை' பிரசாரத்தை மீறி வெற்றி

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
விவேக் ராமசாமி
Bloomberg via Getty Images

குடியரசுக் கட்சியின் விவேக் ராமசாமியைத் தோற்கடித்து, ஓஹியோ ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஏமி ஆக்டன் வெற்றி பெற்றுள்ளார். கடும் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் ஏமி ஆக்டன் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த இரண்டு தசாப்தங்களில் ஓஹியோ ஆளுநர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் ஜனநாயகக் கட்சியினராகவும், இந்தப் பதவியைப் பெறும் முதல் பெண்ணாகவும் ஆக்டன் மாறுகிறார்.

ஓஹியோ, கடந்த மூன்று அதிபர் தேர்தல்களிலும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்புக்கு வாக்களித்துள்ளது.

பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு குறித்த வாக்காளர்களின் அதிருப்தி போன்றவை முக்கிய விவாதமாக இந்த ஆளுநர் தேர்தலில் இருந்தது.

ஆனால், ராமசாமியின் பிரசாரக் குழு, ஆக்டன் மீதான மிகவும் தனிப்பட்ட தாக்குதல் விளம்பரத்தை வெளியிட்டதையடுத்து இந்த தேர்தல் எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது. ஆக்டனின் பிரிந்துவாழும் தாய் இந்த விளம்பரத்தில் இடம்பெற்று ஆக்டனுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

அந்த விளம்பரத்தில், ஆக்டனின் தாயார் டோனா ஆர்தர், தனது மகள் "வாழ்நாள் முழுவதும் பொய் சொல்லியிருக்கிறார்" என்று கூறினார்.

ஆனால், ஆக்டன் சிறுமியாக இருந்தபோது அவரைப் பாலியல் வல்லுறவு செய்ததாக ஆர்தரின் கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறித்து விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை.

தேர்தலுக்கு முந்தைய கடைசி சில வாரங்களில் இந்தச் சர்ச்சைக்குரிய விளம்பரம் முக்கிய விவாதமாக இருந்தது. தெற்கு கரோலினாவின் முன்னாள் ஆளுநரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹேலி இதை விமர்சித்தார்.

ஓஹியோவின் தற்போதைய குடியரசுக் கட்சி ஆளுநர் மைக் டிவைனும் இந்த விளம்பரம் "ஆழ்ந்த கவலை அளிப்பதாக" கூறினார்.

இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட சிலர் இந்த விளம்பரத்தை ஆதரித்தனர்.

இந்த விளம்பரம் "வலிமையானது" என்று வர்ணித்த டிரம்ப், அதைத் தொடர்ந்து ஒளிபரப்புமாறு ராமசாமியை ஊக்குவித்தார்.

ஓஹியோவின் முன்னாள் செனட்டரான வான்ஸ், இந்த விளம்பரத்தை விமர்சிக்கும் சக குடியரசுக் கட்சியினர் "புலம்புவதை" நிறுத்த வேண்டும் என்று கூறினார்

மேலும், தனது சொந்தக் கட்சியினரின் விமர்சனங்கள் குறித்து "கொஞ்சம் வெறுப்படைந்ததாகவும்" அவர் தெரிவித்தார்.

ஏமி ஆக்டன்
Getty Images
ஏமி ஆக்டன்

இந்த விளம்பரத்தை மாநிலம் முழுவதும் ஒளிபரப்புவதற்காகத் தனது பிரசாரக் குழு 40 லட்சம் டாலர் செலவிடும் என்று ராமசாமி தெரிவித்தார்.

இந்த விளம்பரம் ஒளிபரப்பத் தொடங்கிய பிறகு, ஓஹியோவின் உள்ளூர் செய்தி நிறுவனமான கொலம்பஸ் டிஸ்பாட்ச் நாளிதழின் ஆசிரியர் குழு ஆக்டனுக்கு ஆதரவாக நின்றது. இந்த விளம்பரம் "அருவருப்பானது, மன அமைதியைக் குலைப்பது" என்று அந்த நாளிதழ் கூறியது.

கோடீஸ்வரரான உயிரித் தொழில்நுட்பத் தொழில்முனைவோர் ராமசாமி, 2024-ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வில் டிரம்புக்கு எதிராகப் போட்டியிட்டார்

பின்னர், ஓஹியோ ஆளுநர் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது அரசியல் பாதையை மாற்றிக்கொண்டார். டிரம்பைப் போலவே தானும் அரசியல் அமைப்புக்கு வெளியே இருந்து வந்தவர் என்று கூறிக்கொண்ட அவர், அதிபரின் "அமெரிக்காவுக்கு முன்னுரிமை" கொள்கையை முன்னெடுத்துச் செல்லப்போவதாகத் தெரிவித்தார்.

தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆற்றிய உரையில், ஓஹியோ மாகாணத்துக்கும் ஆக்டனுக்கும் தனது ஆதரவு இருப்பதாக ராமசாமி தெரிவித்தார்.

ஆக்டன் ஒரு மருத்துவர் மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரி. வாழ்க்கைச் செலவைக் குறைப்பது குறித்துப் பிரசாரம் செய்தபோது, சிறுவயதில் வீடின்றித் தவித்த தனது அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

செவ்வாய்க்கிழமை வெற்றியை ஏற்றுக்கொண்டு ஆற்றிய உரையில், "குணமடைவதற்கான பயணம் இன்று தொடங்குகிறது" என்று அவர் கூறினார்.

"எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் நான் அளிக்கும் வாக்குறுதி இதுதான்: ஓஹியோ மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக யாருடனும், அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன். இதைத்தான் நான் எப்போதும் செய்து வந்திருக்கிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

பதவிக்கால வரம்பு காரணமாக மீண்டும் போட்டியிட முடியாத குடியரசுக் கட்சியின் ஆளுநர் மைக் டிவைனுக்குப் பிறகு ஆக்டன் அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

2024 அதிபர் தேர்தலில் டிரம்புக்கு வாக்களித்த ஓஹியோ, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இடையே மாறி வாக்களிக்கும் மாகாணமாகும். ஆனால், தற்போது நாடு முழுவதும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சியின் ஷெராட் பிரவுன்

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஷெராட் பிரவுன், குடியரசுக் கட்சியின் ஜான் ஹஸ்டட்டைத் தோற்கடித்து, தனது செனட் பதவியை மீண்டும் கைப்பற்றியுள்ளார். இந்தத் தேர்தல் சுழற்சியில் அதிக செலவு செய்யப்பட்ட போட்டிகளில் இதுவும் ஒன்று.

2025-ஆம் ஆண்டு, ஓஹியோவின் குடியரசுக் கட்சி ஆளுநரால் ஹஸ்டட் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். ஜே.டி. வான்ஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்பதற்காக செனட் பதவியை விட்டு விலகியதைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டது.

தற்போது அந்தப் பதவியை ஜனநாயகக் கட்சியின் பிரவுன் கைப்பற்றியுள்ளார்.

அவர் ஜனவரி மாதம் மீண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் திரும்புவார். 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதியாக இருந்த அவர், 2024-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்பும் குடியரசுக் கட்சியினரும் ஓஹியோவில் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற நிலையில், செனட் தேர்தலில் தோல்வியடைந்தார்

ஆனால், டிரம்பின் செல்வாக்கு மதிப்பீடு சரிந்ததுடன், பொருளாதாரம் குறித்த வாக்காளர்களின் அதிருப்தியும் அதிகரித்தது. இதையடுத்து, பிரவுனின் நீண்டகால அரசியல் அனுபவத்தையும் அவரை வாக்காளர்கள் நன்கு அறிந்திருப்பதையும் நம்பி ஜனநாயகக் கட்சியினர் அவரைக் களமிறக்கினர்.

கடந்த 30 ஆண்டுகளில் ஓஹியோவில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியினரில் மிகவும் வெற்றிகரமானவர் 73 வயதான பிரவுன் என்று என்.பி.சி. நியூஸ் தெரிவித்துள்ளது.

"இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. நன்றி, ஓஹியோ," என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!