Skip to main content

Advertisement

கடைகள் சூறை, கட்டடங்கள் தீக்கிரை: பிரான்ஸை உலுக்கும் மாணவர் போராட்டம்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
பிளேஸ் டி லா ரெபப்ளிக் அருகே நடைபெற்ற பேரணியின் போது, போராட்டக்காரர் ஒருவர் காவல்துறையினரால் மறிக்கப்படுகிறார்
Carl Court/Getty Images

பிரான்ஸில் பள்ளிகளில் நிலவும் பிரச்னைகள் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.

சுமார் 5.5 லட்சம் பேர் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பிரான்ஸ் அரசு விவரித்தபடி, "வன்முறை அதிகரித்ததை" தொடர்ந்து குறைந்தது 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாரிஸில், மாலை நேரம் வரையிலும் கலவரத் தடுப்புப் போலீஸாருடன் கடுமையான மோதல்கள் நீடித்தன. கூட்டத்தினரைக் கலைக்க போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களையும் பயன்படுத்தினர்.

தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. லிமோஜ் நகரில் உள்ள நகராட்சி மன்றக் கட்டடத்தில் ஏற்பட்ட பெரும் தீயால், கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

பல நகரங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. நகராட்சி மன்றக் கட்டடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்கள் குறிவைத்து சேதப்படுத்தும் செயல்களும் பரவலாகப் பதிவாகின.

இந்த வன்முறைச் சம்பவங்களில் 150 போலீஸார் காயமடைந்ததாகப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்தார்.

பிரான்ஸ் தலைநகரில், பிற்பகலில் நடைபெற்ற முக்கியப் பேரணி பெரும்பாலும் அமைதியாகவே நடந்ததாகத் தெரிந்தது. அப்போது பிபிசியிடம் பேசிய ஒரு இளைஞர்கள் குழு, தாங்கள் "அஹிம்சையைப் பின்பற்றுபவர்கள்" என்றும், "மாற்றத்தைக் கொண்டுவரவே முயற்சிக்கிறோம்; ஆனால் எதுவும் நகர்வதாகத் தெரியவில்லை" என்றும் கூறியது.

லிமோஜ் நகரில் உள்ள நகராட்சி மன்றக் கட்டடத்தில் ஏற்பட்ட பெரும் தீ
Elise Cabane / Hans Lucas / AFP via Getty Images

ஆனால், நேரம் செல்லச்செல்ல சில குழுவினர் சாலைகளில் தீ மூட்டினர்; வாகனங்களுக்கும் தீ வைத்தனர். பாரிஸின் நகர மையத்தில் உள்ள பிளாஸ் டி லா ரெபுப்ளிக் போன்ற புகழ்பெற்ற இடங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்தன.

கடைகள் சூறையாடப்பட்டன. குறைந்தது ஒரு உணவகம் தீயில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. சில குழுக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்ததையும் பிபிசி நேரில் கண்டது.

மத்திய பாரிஸில் ஒரு கூட்டத்தை நோக்கிக் கலவரத் தடுப்புப் போலீஸார் பாய்ந்து சென்றதுடன், பலரைத் தடிகளால் தாக்கியதையும் காண முடிந்தது.

லியோன் நகரில் உள்ள சுற்றுலா தகவல் மையம் தீக்கிரையானதை "ஒரு துயரச் சம்பவம்" என்று அந்த நகரின் மேயர் கிரெகோரி டூசெட் குறிப்பிட்டார். "அது மிகவும் புகழ்பெற்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம். அது தீக்கிரையானது எங்கள் மனதை நொறுக்குகிறது" என்று அவர் பிஎஃப்எம் டிவி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட முடியாதபடி "விரோதப் போக்குடன் செயல்பட்ட நபர்கள்" தடுத்ததாக உள்ளூர் போலீஸார் தெரிவித்தனர்.

லிமோஜ் நகராட்சி மன்றக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயையும் தீயணைப்புப் படையினர் போராடி அணைத்தனர். அந்தத் தீயால் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக உள்ளூர் நிர்வாகப் பிரிவு தெரிவித்தது.

பாரிஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தின்போது, ‘லா பாரிக்’ (La Barrique) மதுக்கடை தீபிடித்து எரிவரை எழுவதை ஒருவர் காணொளியாகப் பதிவு செய்கிறார்.
Getty Images
பாரிஸில் உள்ள லா பாரிக் மதுக்கடைக்குத் தீ வைக்கப்பட்டது.

தென்கிழக்கு பிரான்ஸின் செயின்ட்-எத்தியென் நகரில், சிறிய வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஓர் இளைஞரின் "கை சிதறிப் போனது" என்று அந்த நகரின் மேயர் ரெஜிஸ் ஜுவானிகோ சமூக ஊடகத்தில் தெரிவித்தார். "இத்தகைய துயரச் சம்பவம் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

15 முதல் 18 வயதுடைய மாணவர்கள் படிக்கும் பிரான்ஸின் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் சிதிலமடைந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கண்டித்து, கடந்த சில வாரங்களாக லட்சக்கணக்கான மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிற்சங்க உறுப்பினர்களும் பிற போராட்டக் குழுக்களும் இந்தப் போராட்டங்களில் இணைந்ததால், போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தக் குழுக்களில், 'கிலே ஜோன்' அல்லது 'மஞ்சள் அங்கி' இயக்கத்தினரும் இடம்பெற்றுள்ளனர். 2018-ஆம் ஆண்டு முதல் ஓராண்டுக்கும் மேலாக வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு எதிராகப் போராடிய இந்த இயக்கம், பிரான்ஸ் வரலாற்றில் நீண்டகாலம் நீடித்த போராட்ட இயக்கங்களில் ஒன்றாக மாறியது.

சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களின்போது, தலைநகரின் சில பகுதிகள், மார்செய், ரென், துலூஸ் மற்றும் ஆங்கர் உள்ளிட்ட இடங்களில் "முகத்தை மூடிய நபர்கள்" குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து வன்முறையில் ஈடுபட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

கிரெனோபிள், அவின்யோன், போ, மான்பெலியே மற்றும் வலான்ஸ் உட்பட பிரான்ஸின் பல்வேறு நகரங்களிலும் கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

பாரிஸில் துணிக்கடைகளும் உணவுப் பொருள் கடைகளும் சூறையாடப்பட்டன. லில்லி நகரில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் கடைக்குள் புகுந்தவர்கள், அங்கிருந்த பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

கிரெனோபிள் நகரின் மையத்தில் உள்ள குறுகிய தெரு ஒன்றில், முகமூடி அணிந்த நபர்கள் சுற்றுலா ரயில் ஒன்றை ஓட்டிச் செல்வதையும், அதன் எதிரே குறைந்தது மூன்று கலவரத் தடுப்புப் போலீஸார் நிற்பதையும் காட்டும் காணொளி உண்மையானது என்பதை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியது.

பாரிஸில் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தின்போது, பிளாஸ் டி லா ரெபுப்ளிக் பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் பிரெஞ்சு போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கார் ஒன்று தீப்பற்றி எரிகிறது.
Reuters
பாரிஸில் உள்ள பிளாஸ் டி லா ரெபுப்ளிக் பகுதியில் கார் ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டது.

பிரான்ஸில் போராட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் புதிதல்ல என்றாலும், நாடு ஆழ்ந்த அரசியல் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ளத் தயாராகி வரும் சூழலில் இந்த சுற்று போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் அடுத்த ஆண்டு பதவியிலிருந்து விலக உள்ளார். ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தேசியப் பேரணி கட்சியின் தலைவர் மரின் லெ பென்னுக்கும் தீவிர இடதுசாரிக் கட்சியான லா பிரான்ஸ் இன்சூமிஸ் கட்சியின் தலைவர் ஜான்-லுக் மெலன்சோனுக்கும் இடையே போட்டி நிலவக்கூடும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் நடைபெற்ற போராட்டங்களில் மெலன்சோன் பங்கேற்றார். பின்னர், போலீஸார் போராட்டக்காரர்கள் மீது "ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டனர்" என்று குற்றம்சாட்டிய அவர், அதேவேளையில் கொள்ளை மற்றும் தீவைப்புச் சம்பவங்களையும் கண்டித்தார்.

அவரது கருத்துகள் "ஆபத்தானவை, அவநம்பிக்கை ஊட்டக்கூடியவை" என்று லெகோர்னு தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, போலீஸார் "மிகத் தீவிரமான வன்முறையை" எதிர்கொண்டதாக லெகோர்னு கூறியிருந்தார். சில குழுக்கள் அதிபர் தேர்தலுக்கான "முன்னோட்டமாக" இந்தப் போராட்டங்களைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். "வன்முறையின் மூலம் யாரும் தங்களது அரசியல் திட்டங்களை திணிக்க அனுமதிக்க முடியாது" என்றும் அவர் கூறினார்.

போராட்டக்காரர்கள் முன்வைத்த "நியாயமான கோரிக்கைகளை" தீவிர இடதுசாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டதாக மரின் லெ பென் குற்றம்சாட்டினார். வன்முறையை மெலன்சோன் தூண்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அக்டோபர் 17 அன்று நடைபெற்ற போராட்டங்களின்போது, எரியும் தடுப்பரண் ஒன்றைக் கடந்து செல்லும் பிரெஞ்சு கலவரத் தடுப்புப் போலீஸார்.
Reuters

"மாகாண நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை உடைத்து, தாக்கியவர்கள்; நமது நகராட்சி மன்றங்களைக்கூடச் சூறையாடியவர்கள் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டு, தண்டனை வழங்கப்படும்" என மக்ரோங் கூறினார்.

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் முயற்சிகளை அரசாங்கம் வெளிப்படையாக மேற்கொண்டுள்ளது. அக்டோபர் 8 அன்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய கல்வி அமைச்சர் எட்வார் ஜெஃப்ரே, கூடுதலாக 3,000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

இருப்பினும், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதுடன், அவற்றின் தீவிரமும் அதிகரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!