எனது குழந்தைப் பருவம் முழுவதும் எனக்குப் பல சிறந்த நட்புகள் இருந்தன. ஆனால், ஒரு நண்பர்கள் குழு மட்டும் என் நினைவில் ஆழமாகப் பதிந்துவிட்டது. காபின், மியா, ஹன்னா ஆகியோர் சிறு வயதில் இருந்தே எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர்.
அவர்களுடன் கழித்த மகிழ்ச்சியான தருணங்கள் ஏராளமாக என் நினைவில் உள்ளன. வெப்பமான கோடை நாட்களில், மணிக்கணக்கில் பூக்களை இணைத்து மாலைகள் செய்வோம், வித்தியாசமான வடிவங்களைக் கொண்ட மேகங்களை அடையாளம் காண்போம், தலைகீழாக நிற்பது மற்றும் குட்டிக்கரணம் அடிப்பது போன்றவற்றைப் பயிற்சி செய்வோம்.
நாங்கள் நால்வரும் பிரிக்க முடியாத நண்பர்களாக இருந்தோம். ஆனால், எங்கள் நட்பு வழக்கமான ஒன்றாக இருக்கவில்லை. ஏனெனில், காபின், மியா, ஹன்னா ஆகிய மூவரும் எனது கற்பனையில் மட்டுமே உருவானவர்கள்.
நான் தனிமையாக இருந்ததாலோ, கூச்ச சுபாவம் கொண்டிருந்ததாலோ அல்லது நிஜ வாழ்க்கையில் நண்பர்கள் இல்லாததாலோ அவர்களை உருவாக்கவில்லை. உண்மையில், இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், ஏன் என் கற்பனையில் தோன்றினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
எனது கற்பனை நண்பர்கள் எங்கிருந்து வந்திருந்தாலும், அவர்களைப் பெற்றதற்காக நான் அதிர்ஷ்டசாலி என்று கற்பனை நண்பர்கள் குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நட்பான பால் அட்டைப் பெட்டி
அமெரிக்காவின் ஓரிகான் மாகாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் நவோமி அகுயார், மார்ஜோரி டெய்லர் ஆகியோரின் ஆய்வுப்படி, ஏழு வயதை எட்டுவதற்குள் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளுக்குக் கற்பனை நண்பர்கள் இருந்துள்ளனர். அதாவது, குழந்தைகளே உருவாக்கி, அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் அல்லது அவர்களைப் பற்றிப் பேசும் கற்பனைக் கதாபாத்திரங்கள் இவை.
"கற்பனை நண்பர்கள் இல்லாத குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்தக் குழந்தைகளுக்கு நண்பர்கள் குறைவாக இருப்பதில்லை. மற்ற குழந்தைகளைப் போலவே இவர்களுக்கும் பரஸ்பர நட்புறவுகள் உள்ளன. பெரும்பாலான அம்சங்களில் மற்ற குழந்தைகளைப் போலவே இவர்களும் இருக்கிறார்கள் என்று தரவுகள் காட்டுகின்றன," என்கிறார் உளவியலாளரும், 'கற்பனை நண்பர்களும் அவர்களை உருவாக்கும் மக்களும்' என்ற நூலின் ஆசிரியருமான அகுயார்.
"பல குழந்தைகள் கற்பனை நண்பர்களை உருவாக்குவதற்குக் காரணம், அது அவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதுடன், சமூக உறவுகளில் ஈடுபடுவதை அவர்கள் மிகவும் விரும்புவதும்தான்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இந்தக் கற்பனை நண்பர்கள் வெறும் துணையாக இருப்பதைத் தாண்டியும் பல நன்மைகளை அளிக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கற்பனை நண்பர்களைக் கொண்ட குழந்தைகள் படைப்பாற்றலுடன் கதைகளைச் சொல்வதில் சிறந்து விளங்கக்கூடும். அவர்களிடம் கூச்ச சுபாவம் குறைவாக இருக்கலாம். கற்பனை உலகில் அதிக ஆர்வம் கொண்டிருக்கலாம்.
கவனத்தைச் சிறப்பாக ஒருமுகப்படுத்தும் திறனையும் பெற்றிருக்கலாம். திரை சாதனங்களைப் பயன்படுத்துவதும் குறைவாக இருக்கலாம். மேலும், கற்பனை நண்பர்கள் இல்லாத குழந்தைகளுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு மனதில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்தும் திறன் இருக்கக்கூடும்.
ஒவ்வொரு கற்பனை நண்பரும் அந்தக் குழந்தையின் தனிப்பட்ட கற்பனைக்கு ஏற்ப உருவாக்கப்படுகிறார்கள். குழந்தைப் பருவம் முழுவதும் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் அவர்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப இந்தக் கற்பனை நண்பர்களின் குணாதிசயங்களும் வடிவமைக்கப்படுகின்றன என்று அகுயார் விளக்குகிறார்.
அவருக்குப் பிடித்தமான ஓர் உதாரணம் என்னவென்றால், கண்ணுக்குத் தெரியாத பால் அட்டைப் பெட்டியைத் தனது நண்பராகக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் கதை. அந்தப் பால் அட்டைப் பெட்டி மனிதராக இல்லாமல் இருப்பது எப்படி இருக்கும் என்பதைச் சிறுமிக்குக் கற்றுக் கொடுத்தது. அதேவேளையில், மனிதராக இருப்பது எப்படி இருக்கும் என்பதை அந்தப் பால் அட்டைப் பெட்டிக்கு சிறுமி கற்றுக் கொடுத்தார் என்று அகுயார் கூறுகிறார்.
எனது கற்பனை நண்பர்கள் நான் சுமார் மூன்று வயதாக இருந்தபோது தோன்றினர். ஹன்னாவும் மியாவும் ஒரு பாலே நடனத் திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு சிறுமிகளின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானவர்கள். அவர்கள் ஒருபோதும் நடக்க மாட்டார்கள். தொடர்ந்து பாலே நடன அசைவுகளைப் போலக் குதிப்பது, தாவுவது, சுழல்வது என இருந்தனர். இருவரும் ஒரே மாதிரியான இளஞ்சிவப்பு நிற உடலோடு ஒட்டிய நடன உடைகள், டுட்டு பாவாடைகள் மற்றும் பாலே நடனக் காலணிகளை அணிந்திருந்தனர். ஆனால், காபின் எங்கிருந்து வந்தார் என்பது குறித்து எனக்குத் தெரியாது.
எங்கள் மூவரையும்விட அவர் வயதில் மூத்தவர். அவரிடம் ஒரு தனித்துவமான நாகரிகமும் கண்ணியமும் இருந்தன. அது அவரைப் பின்தொடர்ந்து வந்த சாம்பல் நிறப் புகைமூட்டம் போன்ற மேகத்தில் வெளிப்பட்டது. அவர் பெரும்பாலும் சற்று ஒதுங்கியே இருப்பார், தேவைப்படும்போது சிந்தனைமிக்க ஆலோசனைகளை வழங்குவார்.
மற்றவர்களின் மனங்களைப் பற்றி அறிந்து கொள்வது
"என்னைப் பொறுத்தவரை, கற்பனை நண்பர் ஒருவரின் மிக முக்கியமான அம்சம், ஒரு கற்பனை மனதை உருவாக்கி, அந்த மனதுடன் தொடர்புகொள்வதுதான்" என்கிறார், பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சி உளவியல் மற்றும் உளவியல் நோயியல் துறையின் இணைப் பேராசிரியர் பேஜ் டேவிஸ்.
சில கற்பனை நண்பர்கள் நிஜ வாழ்க்கையில் உள்ள நபர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றனர். சில உயிரற்ற பொருட்களுக்கு மனித பண்புகள் வழங்கப்படுகின்றன. இன்னும் சில விலங்குகள் அல்லது கற்பனை உயிரினங்களின் வடிவில் தோன்றுகின்றன.
ஸ்பெயினில் உள்ள வலென்சியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மார்டா கிமெனெஸ்-தாசி மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், நான்கு முதல் ஆறு வயதுடைய கற்பனை நண்பர்களைக் கொண்ட குழந்தைகள், கற்பனை நண்பர்கள் இல்லாத குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, பிறரின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் திறன், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றை மதிப்பிடும் ஆய்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்றது கண்டறியப்பட்டது.
அதாவது, மற்றவர்களின் நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் நோக்கங்கள் தங்களுடையவற்றில் இருந்து வேறுபட்டிருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளும் திறன் அவர்களுக்கு இருந்தது.
கற்பனை நண்பர்களை உருவாக்கி அவர்களுடன் தொடர்புகொள்வதன் விளைவாக இந்த உணர்வுபூர்வமான புரிதல் ஏற்படுகிறதா அல்லது இதற்கு நேர்மாறாக மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்வதில் ஆர்வமுள்ள குழந்தைகளே கற்பனை நண்பர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
நட்பைப் பயிற்சி செய்தல்
கற்பனை நண்பர்களைக் கொண்டிருப்பதால் கிடைக்கும் நன்மைகள், நரம்பியல் ரீதியாகப் பொதுவான வளர்ச்சியைக் கொண்ட குழந்தைகளுக்கு (Neurotypical Children) மட்டும்தான் கிடைக்கின்றனவா என்பதை டேவிஸும் அவரது சக ஆய்வாளர்களும் ஆய்வு செய்தனர்.
ஆட்டிசம் கொண்ட குழந்தைகளாலும் வெற்றிகரமான நட்புறவுகளை உருவாக்கி, அவற்றைப் பராமரிக்க முடியும். இருப்பினும், அவர்களின் தொடர்புகொள்ளும் முறை, சமூகப் புரிதல், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவை நரம்பியல் ரீதியாகப் பொதுவான வளர்ச்சியைக் கொண்ட குழந்தைகளிடம் இருந்து பெரும்பாலும் வேறுபடுகின்றன. இது அவர்களின் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று டேவிஸ் கூறுகிறார்.
மேலும், அவர்கள் கற்பனை விளையாட்டுகளில் ஈடுபடும் விதமும் சற்று வித்தியாசமாக இருக்கும். பொதுவாக, கற்பனையான விளையாட்டுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக ஓவியம் வரைவது போன்ற செயல்களில் அவர்கள் அதிகம் ஈடுபடுவார்கள் என்று டேவிஸ் தெரிவிக்கிறார்.
இவை அனைத்தையும் பார்க்கும்போது, அவர்கள் கற்பனை நண்பர்களை உருவாக்குவதில் குறைந்த ஆர்வம் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும், ஆட்டிசம் கொண்ட 124 குழந்தைகளின் பெற்றோரிடம் டேவிஸ் நேர்காணல் நடத்தியபோது, அவர்களில் 49% பேர் தங்களது குழந்தை ஒன்று முதல் 11 வயதுக்குள் கற்பனை நண்பரை உருவாக்கியதாகத் தெரிவித்தனர்.
இந்தக் கற்பனை நட்புறவுகள் மூலம், சவாலாகக் கருதக்கூடிய சமூகத் தொடர்புகளைப் பயிற்சி செய்வதற்கான வாய்ப்பை ஆட்டிசம் கொண்ட குழந்தைகள் உருவாக்கிக் கொள்கின்றனர் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
"கற்பனை நண்பரை உருவாக்குவது, எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல் பல்வேறு விஷயங்களை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கக்கூடும்" என்று அமெரிக்காவில் உள்ள வெல்லஸ்லி கல்லூரியின் உளவியல் பேராசிரியர் ட்ரேசி க்ளீசன் கூறுகிறார்.
"கற்பனை நண்பரை உருவாக்கிய ஆட்டிசம் கொண்ட குழந்தைகளின் பெற்றோர், அத்தகைய நண்பர் இல்லாத குழந்தைகளின் பெற்றோருடன் ஒப்பிடும்போது, தங்களது குழந்தைக்கு மற்றவர்களின் நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் நோக்கங்களைப் புரிந்துகொள்ளும் திறன் அதிகமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், மற்றவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதிலும் புதிய நண்பர்களை உருவாக்குவதிலும் அந்தக் குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிக ஆர்வம் இருந்தது" என்று டேவிஸ் கூறுகிறார்.
கற்பனை நட்புறவுகள் குழந்தைகள் தங்களுக்கான எல்லைகளை உருவாக்கிக் கொள்ளவும், எதில் தங்களுக்கு வசதியாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், கடினமான உரையாடல்களை எவ்வாறு கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளவும், ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான பொதுவான புரிதலை உருவாக்கிக் கொள்ளவும் உதவக்கூடும்.
இதற்கு அகுயார் ஓர் உதாரணத்தைக் கூறுகிறார். பள்ளியில் இருக்கும் ஒரு குழந்தை, சக மாணவர் ஒருவர் தனது செல்ல பொம்மை லாரியை அடிக்கடி திருடுவதாகக் கூறலாம். அதேபோல, கற்பனையான தனது நண்பனும் எப்போதும் அந்த லாரியை திருடுவதாக அந்தக் குழந்தை கூறலாம் என்கிறார் அவர்.
கற்பனை நண்பருடன் விளையாடுவதன் மூலம், அந்தக் குழந்தையால் கோபமாகக் கத்தவும், பின்னர் மன்னிப்பு கேட்கவும், அதன் பிறகு இருவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் உடன்பாட்டுக்கு வரவும் முடியும்.
"பிரச்னைக்குத் தீர்வு காணும் செயல்முறையை அந்தக் குழந்தையே வழிநடத்துவதால், இது அதன் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது" என்று அகுயார் கூறுகிறார்.
வாழ்நாள் நண்பர்களா?
"கற்பனை நட்புறவுகள் என்பவை ஆரம்பக்கட்ட குழந்தைப் பருவத்துடன் மட்டுமே தொடர்புடையவை என்றும், வளர்ச்சியின் மற்ற கட்டங்களில் அவற்றுக்கு இடமில்லை என்றும் பலரும் கருதுகிறார்கள். ஆனால், இளமைப் பருவத்திலும் வயது வந்த பருவத்திலும்கூட இத்தகைய நட்புறவுகள் ஏற்படுகின்றன," என்று க்ளீசன் கூறுகிறார்.
சக ஆய்வாளர்களின் மதிப்பாய்வு இன்னும் நிறைவடையாத சமீபத்திய ஆய்வு ஒன்றில், பல வயது வந்தவர்களுக்கும் கற்பனை நண்பர்கள் இருப்பதை க்ளீசன் கண்டறிந்தார்.
கற்பனை நண்பர் இருப்பதாகத் தெரிவித்த 56 ஆய்வுப் பங்கேற்பாளர்களில் 68% பேர், தங்களது 20 வயதுக்கு முன்பே அந்தக் கற்பனை நண்பரை உருவாக்கியிருந்தனர். சுமார் 30% பேர் தங்களது வயது வந்த பருவத்தில் கற்பனை நண்பரை உருவாக்கியதாகத் தெரிவித்தனர்.
துணையாக இருப்பது, சமூக ரீதியான ஆதரவை வழங்குவது, அறிவுசார் ஒத்திகை, உந்துதல், அன்பு, உணர்வுபூர்வமான நெருக்கம், ஆலோசனை, தார்மீக ரீதியிலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது எனப் பல்வேறு காரணங்களுக்காகப் பெரியவர்கள் கற்பனை நட்புறவுகளை உருவாக்குகின்றனர்.
வயது வந்த பருவத்தில் அன்றாடம் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பதற்காகவும் அவர்கள் இத்தகைய நட்புறவுகளை உருவாக்குகின்றனர் என்று க்ளீசன் கூறுகிறார்.
"சமூகத்தில் எவ்வாறு செயல்படுவது, ஒரு குழுவின் அங்கமாக இருப்பது, பணியில் சிறந்து விளங்குவது போன்ற விஷயங்களுடன் இது ஓரளவுக்குத் தொடர்புடையது," என்று கூறும் க்ளீசன், பணியிடத்தில் ஏற்படும் சூழல்களைப் பயிற்சி செய்து பார்ப்பதற்கும் இந்தக் கற்பனை நண்பர்கள் பெரியவர்களுக்கு உதவக்கூடும் என்கிறார். "வளர்ச்சி மற்றும் மாற்றங்களைச் சந்திப்பதற்கும், நீங்கள் விரும்பும் நபராக மாறுவதற்கும், அத்தகைய வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கும் இவை உதவுகின்றன," என்றும் அவர் கூறுகிறார்.
குழந்தைப் பருவத்தின் முடிவில் சில கற்பனை நண்பர்கள் விடைபெற்றுச் சென்றுவிடுகிறார்கள். ஆனால், மற்ற சிலர் தொடர்ந்து உடனிருந்து, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உதவிக்கரம் நீட்டுகின்றனர்.
காபின், மியா மற்றும் ஹன்னா எனக்கு மிகச் சிறந்த துணையாக இருந்தனர். அப்போது என்னாலேயே உணரப்படாத, ஆனால் பதில்கள் தேவைப்பட்ட எனது வளர்ச்சி தொடர்பான கேள்விகளை நான் உணர்ந்துகொள்ளவும் அவர்கள் உதவியிருக்கக்கூடும். ஆனால், எனக்கு சுமார் ஒன்பது வயதானபோது, இளமைப் பருவம் நெருங்கிய நிலையில், காபின், மியா, ஹன்னா ஆகிய மூவரும் மறைந்து, எல்லாவற்றையும் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் என்னை விட்டுச் சென்றனர்.
இப்போது நாங்கள் நால்வரும் தோட்டத்தில் ஒன்றாக அமர்ந்து, ஒன்றையொன்று சுற்றி அசைந்துகொண்டிருக்கும் மேகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதை மனக் கண்ணில் காட்சிப்படுத்தும்போது, என் நெஞ்சில் ஒரு கதகதப்பான உணர்வு நிறைகிறது.
ஹன்னா, மியா இருவரின் அற்புதமான சுழற்சி நடன அசைவுகள் கடந்த காலத்துக்கு உரியவை என்பது எனக்குத் தெரியும். காபினை பொறுத்தவரை, அவர் மீண்டும் வருவாரா என்பதைச் சொல்வது கடினம். எதிர்காலத்தில் ஏதாவது ஒரு தருணத்தில் எனக்கு அவரது வழிகாட்டுதல் தேவைப்படலாம். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், தனது ஞானம் நிறைந்த சாம்பல் நிற மேகத்தைப் பின்தொடரச் செய்தபடி, அவர் நிச்சயமாக எனக்குத் துணையாக இருப்பார் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு