அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
புதன்கிழமை, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அவர் பார்வையிட்டார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உலகிலேயே மிகப்பெரியது. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள இந்த ஆலை, ரஷ்யா, வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயைப் பெற்று, உலக சந்தைகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளாக மாற்றுகிறது. இதன் மூலம், மத்திய கிழக்கில் நெருக்கடிகள் ஏற்படும்போதும் எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ந்து பராமரிக்க உதவுகிறது.
உலக சந்தையில் அதிகரித்து வரும் டீசல் விலையைக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது. இரான் போர் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள முடக்கத்தால் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் ரூபியோவின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, இது முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
"அமெரிக்காவுக்கு டீசல் தேவைப்படுகிறது, அதுவும் விரைவாகத் தேவைப்படுகிறது. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களால் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்" என்று எஸ் அண்ட் பி நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி உத்திப் பிரிவு இயக்குநர் ராஜீவ் லாலா, பிரிட்டிஷ் நாளிதழான ஃபைனான்ஷியல் டைம்ஸிடம் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரூபியோ, இந்தியா "எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் வல்லரசு" என்றும், சந்தையில் நிலவும் அழுத்தத்தைக் குறைக்க இந்தியாவால் உதவ முடியும் என்றும் கூறினார்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தலைவரைச் சந்திக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் செல்வது ஏன் என்று கேட்கப்பட்டபோது, "மிகப் பெரிய அளவில் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் கொண்ட ஒரு நிறுவனம் உங்களிடம் உள்ளது. நான் அங்கு சென்று அவர்களிடம் பேச வேண்டுமென்று நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாம்நகருக்கு வருகை தந்திருந்தார். அதேபோல, அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முன்னதாக 2024ஆம் ஆண்டு ஜாம்நகரில் நடந்த மூன்று நாள் பிரமாண்டக் கொண்டாட்டங்களில் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னரும் பங்கேற்றனர்.
ஃபைனான்ஷியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், "இந்தியா கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இருந்தாலும், அதன் தனியார் துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், குறிப்பாக ரிலையன்ஸ், தற்போது டீசலை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் லாபம் ஈட்டி வருகின்றன. உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவுகளை வழங்கும் கெப்லர் நிறுவனத்தின் தலைமை எண்ணெய் சுத்திகரிப்புத் துறை ஆய்வாளரான சுமித் ரிடோலியா இதுகுறித்துப் பேசியபோது, டீசலின் 'கிராக் ஸ்பிரெட்' எனப்படும் மொத்த விற்பனை விலைக்கும், அதை உற்பத்தி செய்யத் தேவையான கச்சா எண்ணெயின் விலைக்கும் இடையிலான வேறுபாடு, தற்போது ஒரு பேரலுக்கு சுமார் 63 டாலராக உள்ளது. இது போருக்கு முந்தைய அளவைவிட மூன்று மடங்கு அதிகம்.
டீசல் உற்பத்தியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிடோலியாவின் கூற்றுப்படி, இந்தியாவின் டீசல் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 7.3 லட்சம் பேரல்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 6.53 லட்சம் பேரல்களாக இருந்தது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு நாளொன்றுக்கு சுமார் 5.5 லட்சம் பேரல்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
"ரூபியோவின் வருகைக்குப் பிறகு ஜாம்நகரில் டீசல் உற்பத்தி இரட்டிப்பாகவோ அல்லது நான்கு மடங்காகவோ அதிகரிக்கப் போவதில்லை. ஜாம்நகர் ஏற்கெனவே தனது அதிகபட்ச உற்பத்தித் திறனில் இயங்கி வருகிறது. இவ்வளவு அதிக லாபம் கிடைக்கும்போது, யார்தான் உற்பத்தி செய்ய விரும்ப மாட்டார்கள்?" என்று அவர் கூறினார்.
கடந்த வாரம், இந்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு மேலும் ஒரு சலுகையை வழங்கியது. டீசல் ஏற்றுமதிக்கான வரியை லிட்டருக்கு ரூ.16இல் இருந்து (0.16 டாலர்) ரூ.8.50 ஆகக் கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்தது.
ஜாம்நகர் சுற்றுப் பயணத்தின் நோக்கம் என்ன?
ஜாம்நகரில் ரூபியோவின் செயல்திட்டம் என்ன?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், சிஎன்என் நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில், "ரிலையன்ஸ் மிக முக்கியமான நிறுவனம். எரிசக்தியைச் சுத்திகரிப்பதில் மிகப்பெரிய திறனைக் கொண்டுள்ளது. பெட்ரோலியத்தை பயன்படுத்தக் கூடிய பொருளாகச் சுத்திகரிக்காவிட்டால், அதனால் எந்தப் பயனும் இல்லை" என்று கூறினார்.
"இந்தியா தனது விநியோகச் சங்கிலியையும் எரிசக்தி விநியோகத்தையும் பன்முகப்படுத்த ரிலையன்ஸ் மேலும் உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். உதாரணமாக, வெனிசுவேலா தனது எரிசக்தி உற்பத்தியை அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் சில வகை கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதில் இந்தியாவுக்கு விரிவான அனுபவம் உள்ளது. ஆனால், அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் முதலீடு செய்துள்ள மிகச் சில நிறுவனங்களில் ரிலையன்ஸும் ஒன்று. அமெரிக்காவுக்குள் சுத்திகரிப்புத் திறனை விரிவுபடுத்துவதிலும் அந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது" என்று ரூபியோ கூறினார்.
எனவே, "நாங்கள் அந்தப் பகுதிக்கு அருகில் இருந்ததால், அவர்களின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு, அவர்களுடன் சிறிது நேரம் செலவிட்டு, இன்னும் சிறப்பாக இணைந்து எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து விவாதிப்பது பொருத்தமானதாக இருக்கும்" என்று கருதியதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் வெனிசுவேலாவின் இடைக்கால அரசு, அந்நாட்டின் நலிவடைந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்க முயன்று வருகிறது. ஜனவரி மாதம் அமெரிக்க கமாண்டோ படையினர் நடத்திய நடவடிக்கையின்போது, புரட்சிகர சோஷலிச தலைவர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
கெப்லர் நிறுவனத்தைச் சேர்ந்த சுமித் ரிடோலியா, ஃபைனான்ஷியல் டைம்ஸிடம் கூறுகையில், வெனிசுவேலாவின் கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடாக அமெரிக்கா உள்ளதாகவும், இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய மாதங்களில், இந்தியா வெனிசுவேலாவில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 290,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. அதில் 90% ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்தது. இந்த மாதம், ரஷ்யாவின் டீசலை உலக சந்தையில் அறிமுகப்படுத்த அனுமதிக்கும் ஒப்பந்தத்தை டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, கடந்த வாரம் ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த 100% வரையிலான வரிகளை டிரம்ப் ரத்து செய்தார்.
மாஸ்கோவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த வரிகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நடவடிக்கை, ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கும் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியது.
அட்லான்டிக் கவுன்சில் என்ற ஆய்வு அமைப்பின் தெற்காசிய பிரிவின் மூத்த ஆய்வாளரான மைக்கேல் குகெல்மேன், தனது எக்ஸ் பக்கத்தில், "ரூபியோவின் முந்தைய இந்திய பயணம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும் நல்லெண்ணத்தை வளர்க்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே பெரும்பாலும் இருந்தது. ஆனால், அடிப்படைக் கருத்து வேறுபாடுகளைக் களைய அது தவறிவிட்டது. அவரது தற்போதைய பயணம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது. பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் முதலீடு போன்ற விவகாரங்களில் நேரடியாக ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், இந்தத் துறைகளில் இரு நாடுகளுக்கும் நீண்டகால ஒத்துழைப்பு வரலாறும் உள்ளது" என்று எழுதியுள்ளார்.
அமெரிக்காவின் மாறி வரும் நிலைப்பாடு
"இந்தியாவின் எண்ணெய் விநியோக ஆதாரங்களும், குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணெய் வாங்கும் விவகாரமும், டிரம்பின் உலக அரசியல் உத்தி தொடர்பான சவால்களின் மையமாக ஏற்கெனவே இருந்துள்ளன" என்று அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, யுக்ரேன் போர் தொடர்பாக ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்க நிர்வாகம் முயன்றபோது, ரஷ்ய எண்ணெயைச் சார்ந்திருப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்தையும் அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானியையும் அமெரிக்க அதிகாரிகள் மறைமுகமாகக் குறிவைத்தனர்.
ஓராண்டுக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவும் இந்தியாவும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு நெருக்கமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் ரூபியோவின் பயணம் அமைந்துள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 20% அமெரிக்காவுக்கு செல்கிறது.
செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள், ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேட்டபோது, "அவர்கள் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறார்கள். நாங்கள் ஒப்பந்தம் செய்துகொள்வோம். ஆம், நாங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
இது "மிகவும் வித்தியாசமான வகையிலான ஒப்பந்தமாக" இருக்கலாம் என்றும் அதிபர் தெரிவித்தார். ஆனால், அது குறித்து அவர் விரிவாக விளக்கவில்லை.
இந்த ஆண்டும் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோக நாடாக ரஷ்யா தொடர்கிறது. ப்ளூம்பெர்க் தகவலின்படி, ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் எண்ணெய் விநியோகம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து, நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 20 லட்சம் பேரல்களை எட்டியுள்ளது.
இது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 40%. 2022ஆம் ஆண்டு ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு முன்பு, இந்தப் பங்கு வெறும் 2 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியில், "இந்தியாவுக்கான வெனிசுவேலாவின் எண்ணெய் விநியோகமும் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், அதன் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. நாளொன்றுக்கு சுமார் 1,87,000 பேரல்கள் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன. இதற்கிடையில், இந்தியாவுக்கான அமெரிக்க எண்ணெய் விநியோகம் நாளொன்றுக்கு 1,65,000 பேரல்களாக கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது. சரக்குப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதால், அமெரிக்க எண்ணெயின் போட்டித்தன்மை குறைந்ததே இதற்குக் காரணம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜாம்நகர் பயணம் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூபியோ சென்றிருப்பது இந்தியாவின் எரிசக்தித் திறனுக்கான அங்கீகாரமாகக் கருதப்பட்டாலும், இது விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச உறவுகள் நிபுணர் சி. ராஜமோகன், இந்திய–அமெரிக்க உறவுகள் குறித்த பொதுவான விவாதத்தைவிட இந்தப் பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதியுள்ளார்.
"சமீப காலமாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இரானுடனான இந்தியாவின் உறவுகளை வடிவமைத்துள்ள இந்தியாவின் சிக்கலான எரிசக்தி அரசியலைப் புரிந்துகொள்வதற்கு ஜாம்நகர் ஒரு வாய்ப்பை வழங்குவதாக" அவர் எழுதியுள்ளார்.
"மும்பையில் டாடா மற்றும் அதானி குழுமங்களின் பிரதிநிதிகளுடன் ரூபியோ நடத்திய சந்திப்புகளும், ஜாம்நகரில் முகேஷ் அம்பானியுடன் அவர் நடத்திய உரையாடலும், இந்திய தொழில்துறையினருக்கும் நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையிலான தொடர்பு அதிகரித்து வருவதையும் எடுத்துக்காட்டுகின்றன. இந்திய நிறுவனங்களின் பொருளாதாரச் செல்வாக்கும் உலகளாவிய செயல்பாடுகளும் விரிவடையும் நிலையில், அவை இந்தியாவின் தூதரக உறவுகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறி வருகின்றன."
இருப்பினும், இதற்குப் பதிலளிக்கும் வகையில், இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலரும் முன்னாள் தூதருமான கன்வல் சிபல், "இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்கள் நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியப் பங்காற்ற முடியும் என்று அந்தக் கட்டுரை சரியாகக் குறிப்பிடுகிறது" என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதுடன், "ஆனால், இந்தத் தொழில் நிறுவனங்கள் அரசியலையும் அரசாங்கக் கொள்கைகளையும் கட்டுப்படுத்தத் தொடங்கும் அளவுக்கு அதிகாரம் மிக்கவையாக மாற அனுமதிக்கக் கூடாது. அமெரிக்காவில் ராணுவம் மற்றும் தொழில்துறைக்கு இடையிலான கூட்டணியின் விவகாரத்தில் இதைக் காண முடிகிறது" என்றும் தனது பதிவில் கூறியுள்ளார்.
"ரஷ்ய டீசல் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ள முடிவு, 60 நாட்களுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்யப்படும். ரூபியோவின் அறிக்கை ஓரளவு நிவாரணம் அளித்தாலும், எதிர்கால நிலவரம் குறித்த நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது."
"அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட மூலோபாய முடிவு இது. தற்போதைய அமெரிக்க நிர்வாகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக்கூடும் என்பதைப் பலமுறை வெளிப்படுத்தியுள்ளது."
கடந்த வெள்ளிக்கிழமை, புகழ்பெற்ற கட்டுரையாளரான பிரதாப் பானு மேத்தாவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், "இந்தியாவுடனான உறவு என்பது வெறுமனே பெருநிறுவன நலன்களின் கலவையாக மட்டுமே மாறிவிட்டது" என்று எழுதியிருந்தார்.
ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்
ரஷ்யாவின் யூரல் வகை கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் முதல் மூன்று நிறுவனங்களில் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் ஒன்று. உலகின் மிகப்பெரிய ஒற்றை வளாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான இந்த ஆலை 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2008ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்டது. ஏற்றுமதிச் சந்தை மற்றும் உள்நாட்டுச் சந்தை ஆகியவற்றுக்காகத் தனித்தனியாக இரண்டு சுத்திகரிப்புப் பிரிவுகள் இங்கு செயல்படுகின்றன.
கிளிக் ஆயில் அண்ட் கேஸ் (Click Oil & Gas) இணையதளத்தின்படி, இந்தச் சுத்திகரிப்பு வளாகம் அதன் உற்பத்தித் திறனில் மட்டுமின்றி, பரப்பளவிலும் தனித்துவம் வாய்ந்தது. 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இது, பிரேசிலில் உள்ள நடுத்தர அளவிலான நகரத்தைவிடப் பெரியது.
சுற்றுச்சூழல் அமைப்பான கிளைமேட் டிரேஸின்படி, "ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு வளாகம் 7,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது. நாளொன்றுக்கு 14 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் இதன் திறன், வட அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான டெக்சாஸில் உள்ள கால்வெஸ்டன் பே சுத்திகரிப்பு நிலையத்தின் திறனைவிட இரண்டு மடங்குக்கும் அதிகம்."
கிளைமேட் டிரேஸ் அமைப்பின்படி, ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்டின் (RPL) ஜாம்நகர் வளாகம், லண்டனின் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி மாவட்டமான சிட்டி ஆஃப் லண்டனைவிட 10 மடங்குக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது.
"தற்போது, ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்டின் (RPL) ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG), புரோப்பிலீன், நாப்தா, பெட்ரோல், ஜெட் அல்லது விமான டர்பைன் எரிபொருள், உயர்தர மண்ணெண்ணெய், அதிவேக டீசல், கந்தகம், பெட்ரோலியக் கோக் ஆகியவை சுத்திகரிக்கப்பட்டு, பல்வேறு பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன."
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் (RIL) இணையதளத்தின்படி, "ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தின் பிரிவுகள், உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் 216க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான கச்சா எண்ணெயை சுத்திகரித்துள்ளன. உலகிலேயே இத்தகைய சாதனையைப் படைத்துள்ள ஒரே சுத்திகரிப்பு நிலையமாக இது இருக்கக்கூடும்."
"இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டமைப்பும், 21.1 என்ற சிக்கல்திறன் குறியீடும், உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் கிட்டத்தட்ட அனைத்து வகையான கச்சா எண்ணெயையும் சுத்திகரிக்க உதவுகின்றன. இதன் மூலம், உலக சந்தைகளில் பல்வேறு வகையான பெட்ரோலிய பொருட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதுடன், தொடர்ந்து அதிகரித்து வரும் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு