Skip to main content

Advertisement

மகாராஜா ரஞ்சித் சிங்: சிற்றரசின் வாரிசாக இருந்து ஆப்கானியர்களின் ஆதிக்கப் பகுதிகளுக்குள்ளேயே ஆட்சியை விரிவுபடுத்திய வரலாறு

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
பஞ்சாப், இந்தியா, மகாராஜா ரஞ்சித் சிங்
Getty Images

1799-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி, தனது 18-வது வயதில் ரஞ்சித் சிங், முக்கியப் பிரமுகர்கள் சிலரின் கடிதங்களை எடுத்துக்கொண்டு லாகூரை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்த இளைஞர் எதிர்காலத்தில் காஷ்மீர் முதல் தார் பாலைவனம் வரையிலும், கைபர் கணவாய் முதல் சட்லஜ் நதி வரையிலும் பரந்து விரிந்த பேரரசின் மன்னராக உயர்வார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. லாகூரைத் தலைநகராகக் கொண்டு அவர் உருவாக்கவிருந்த அந்தப் பேரரசு, பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது.

ரஞ்சித் சிங் 1780-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி, லாகூருக்கு வடக்கே அமைந்துள்ள குஜ்ரன்வாலாவில் பிறந்தார்.

முகலாயப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் மற்றும் பிராந்திய ஆட்சியாளர்களின் அதிகாரம் வளரத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, பஞ்சாப் பகுதியில் 14 சிறிய அரசியல் அதிகார மையங்கள் உருவாகின.

அவற்றில் 12 அரசுகள் சீக்கியத் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவை 'மிஸல்கள்' (Misls - சீக்கிய சிற்றரசுகள்) என்று அழைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றான 'சுக்கர்சக்கியா மிஸல்' (Sukerchakia Misl) அமைப்பைச் சேர்ந்தவர்தான் ரஞ்சித் சிங்கின் தந்தை. குஜ்ரன்வாலா நகரமும் அதனைச் சுற்றியிருந்த கிராமங்களும் சுக்கர்சக்கியா சிற்றரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன.

1792-ஆம் ஆண்டு ரஞ்சித் சிங்குக்கு 12 வயதாக இருந்தபோது அவரது தந்தை மறைந்துவிட்டார். எனவே, இளம் வயதிலேயே குடும்பத்தின் அரசியல் அதிகாரத்தையும் பொறுப்புகளையும் ஏற்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.

அமெரிக்காவின் அலபாமா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் மேத்யூ லாக்வுட், ரஞ்சித் சிங்கின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து குறிப்பிடுகையில், "சுக்கர்சக்கியா வம்சத்தின் இளம் வாரிசான ரஞ்சித் சிங், குட்டையான உடலமைப்பைக் கொண்டிருந்தார். அவரது இடது கண் பாதிக்கப்பட்டிருந்ததுடன், முகம் முழுவதும் பெரியம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகளும் காணப்பட்டன. எதிர்காலத்தில் ஒரு வலிமையான பேரரசை உருவாக்கக்கூடிய ஆற்றல் அவரிடம் இருப்பதாக அப்போது எவராலும் கணித்திருக்க முடியாது." என குறிப்பிட்டுள்ளார்.

'ஹிஸ்டரி எக்ஸ்ட்ரா' இதழில் எழுதியுள்ள மேத்யூ லாக்வுட், ரஞ்சித் சிங் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தி, அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்துவதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துரைக்கிறார்.

தந்தையின் மறைவுக்குப் பிறகு, செல்வாக்கு மிக்க பெண் உறவினர்களின் ஆதரவு அவருக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், குடும்பத்தின் அதிகாரத்தை அவர் தக்கவைத்திருக்க முடியாமல் போயிருக்கலாம் என அவர் குறிப்பிடுகிறார்.

ஆரம்பகாலத்தில், ரஞ்சித் சிங்கின் தாயார் ராஜ் கௌர், அவருக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் செயல்பட்டதுடன், ஆட்சிப் பொறுப்புகளையும் கவனித்து வந்தார். 1796-ஆம் ஆண்டு, கன்ஹையா மிஸலின் தலைவரின் மகளான மஹ்தாப் கௌரை ரஞ்சித் சிங் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னரும் அவரது தாயார் ராஜ் கௌர், அவரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வந்தார்.

1798-ஆம் ஆண்டு தாயார் மறைந்ததைத் தொடர்ந்து, ரஞ்சித் சிங்குக்கு அவரது மாமியாரான ராணி சதா கௌர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். கன்ஹையா மிஸலின் அதிகாரமிக்க தலைவராக விளங்கிய அவர், அரசியல் நுணுக்கமும் ராணுவத் திறனும் கொண்ட வலிமையான பெண்ணாகத் திகழ்ந்தார். ரஞ்சித் சிங்கின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதிலும், அவரது அரசியல் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

இதற்கிடையில், ரஞ்சித் சிங் தனது ராணுவத் திறமையையும் படிப்படியாக நிரூபித்து வந்தார். ஆப்கானிஸ்தானின் துர்ராணி பேரரசை ஆட்சி செய்த ஜமான் ஷாவின் படையெடுப்பை எதிர்கொள்ள, அதற்கு முந்தைய ஆண்டில் அவர் தனது படைகளை வழிநடத்திச் சென்றிருந்தார். 1798-ஆம் ஆண்டு ஆப்கானியப் படைகளுக்கு எதிராகப் பெற்ற வெற்றி, பஞ்சாபில் வளர்ந்து வந்த ஒரு திறமையான ராணுவத் தலைவராக அவரது செல்வாக்கையும் நற்பெயரையும் மேலும் வலுப்படுத்தியது.

லாகூரின் மூன்று ஆட்சியாளர்கள்

பஞ்சாப், இந்தியா, மகாராஜா ரஞ்சித் சிங்
Getty Images

அந்தக் காலகட்டத்தில், லாகூர் நகரம் லஹ்னா சிங், குஜார் சிங், சோபா சிங் ஆகிய மூன்று தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவர்களின் ஆட்சியில் நகர மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர்.

சையத் முஹம்மது லத்தீஃப் தனது 'ஹிஸ்டரி ஆஃப் தி பஞ்சாப்' என்ற நூலில், இந்த மூன்று ஆட்சியாளர்களின் அடக்குமுறை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளால் லாகூர் மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகியிருந்ததாகக் குறிப்பிடுகிறார். இதனால் அதிருப்தியடைந்த நகரின் முக்கியப் பிரமுகர்களும் குடிமக்களும் ஒன்றிணைந்து, ரஞ்சித் சிங்குக்கு ஒரு மனுவை அனுப்ப முடிவு செய்தனர்.

ஹக்கீம் ஹக்கீம் ராய், மியான் ஆஷிக் முஹம்மது, மியான் முஹம்மது தீன், முஹம்மது பாகிர், முஹம்மது தாஹிர், முஃப்தி முஹம்மது முக்கர்ரம், மிர் ஷாதி உள்ளிட்ட நகரின் பல முக்கியப் பிரமுகர்கள் அந்த மனுவில் கையொப்பமிட்டிருந்தனர்.

ரஞ்சித் சிங்குக்கு அனுப்பப்பட்ட அந்த மனுவில், லாகூரை நிர்வகித்து வந்த மூன்று தலைவர்களின் ஆட்சியால் நகரம் நிர்வாகச் சீர்கேட்டிலும், குழப்பத்திலும், அமைதியின்மையிலும் சிக்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அந்த மனுவில் நகரின் அவலநிலை குறித்து பின்வருமாறு விவரிக்கப்பட்டிருந்தது:

"லாகூரைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள் அனைத்தும் முற்றிலும் சீரழிந்து பாழடைந்துவிட்டன. நகரின் மதில் சுவர்களுக்குள் வசித்து வந்த மக்களில்கூட ஏறக்குறைய பாதி பேர் தங்களது வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டனர். இதனால் பல தெருக்களும் குடியிருப்புப் பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன."

மேலும், அந்த மூன்று ஆட்சியாளர்களின் வாழ்க்கை முறை குறித்தும் மனுவில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

"அவர்கள் எப்போதும் மது அருந்துவதிலும், ஆடம்பரமான மற்றும் ஒழுக்கக்கேடான இன்பங்களில் திளைப்பதிலும் காலத்தைக் கழிக்கின்றனர். தங்களுடைய ஆடம்பர வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தைத் திரட்டுவதற்காக, நகர மக்களிடமிருந்து தொடர்ந்து பணத்தையும் செல்வத்தையும் பறித்து வருகின்றனர்" என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

லாகூரின் இந்த அவலநிலையை எடுத்துரைத்த நகரின் முக்கியக் குடிமக்கள், நகரத்தை தற்போதைய ஆட்சியிலிருந்து விடுவித்து, அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்ட ரஞ்சித் சிங் தலையிட வேண்டும் என எதிர்பார்த்தனர். இந்த மனுவே லாகூரை நோக்கி ரஞ்சித் சிங் தனது கவனத்தைத் திருப்புவதற்கும், நகரின் அரசியல் சூழலில் நேரடியாகத் தலையிடுவதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.

லாகூருக்கு வருமாறு ரஞ்சித் சிங்குக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

பஞ்சாப், இந்தியா, மகாராஜா ரஞ்சித் சிங்
Getty Images
அந்த காலத்தைய லாகூர் நகரத்தின் தெருவின் தோற்றம்

சையத் முஹம்மது லத்தீஃபின் பதிவுகளின்படி, லாகூரில் நிலவிய இந்தச் சூழலைத் தொடர்ந்து, நகரின் முக்கியக் குடிமக்கள் சர்தார் ரஞ்சித் சிங்கை லாகூருக்கு வருகை தந்து, அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். இதற்காக, ஒரு தூதுக்குழு ரஞ்சித் சிங் தங்கியிருந்த ரசூல்நகருக்கு (ராம்நகர்) அனுப்பப்பட்டது.

அதேவேளையில், ரஞ்சித் சிங்கின் மாமியாரும், கன்ஹையா மிஸலின் ஆட்சியாளருமான ராணி சதா கௌருக்கும் நகர மக்கள் கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில், லாகூரின் நிர்வாகத்தை மாற்றுவதற்கான தங்களது முயற்சிக்கு அவர் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, ரஞ்சித் சிங் தனது பிரதிநிதியான காஜி அப்துர் ரஹ்மானை லாகூருக்கு அனுப்பினார். அவர் மியான் ஆஷிக் முஹம்மது, மியான் முஹம்மது தீன் உள்ளிட்ட செல்வாக்குமிக்க முஸ்லிம் குடிமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், ரஞ்சித் சிங் நகருக்குள் தடையின்றி நுழைவதற்கு ஏதுவாக, லாகூரின் நுழைவாயில்களில் ஒன்றைத் திறந்து விடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, ரஞ்சித் சிங் தனது படைகளைத் திரட்டிக்கொண்டு பட்டாலாவுக்குச் சென்றார். அங்கு படைகளுடன் வந்திருந்த ராணி சதா கௌருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், இருவரின் தலைமையிலான படைகள் முதலில் அமிர்தசரஸைச் சென்றடைந்து, அங்கிருந்து லாகூரை நோக்கி முன்னேறின. இந்தப் படையில் சுமார் 5,000 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் கணிசமானோர், பிற படைகளிலிருந்து விலகி வந்து ரஞ்சித் சிங்குடன் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சையத் முஹம்மது லத்தீஃப் தனது நூலில் குறிப்பிடுவதன்படி, லாகூரை நோக்கி முன்னேறியபோது, ரஞ்சித் சிங் நவாப் வசீர் கானின் பரதாரியில் தங்கியிருந்தார். தற்போது அந்த இடத்தில்தான் பஞ்சாப் பொது நூலகம் அமைந்துள்ளது.

லாகூரை நோக்கி ரஞ்சித் சிங் படைகளுடன் வருவதை அறிந்த நகரின் மூன்று ஆட்சியாளர்களும் தற்காப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தினர். இதுகுறித்து சையத் முஹம்மது லத்தீஃப் பின்வருமாறு விவரிக்கிறார்:

"ரஞ்சித் சிங் படைகளுடன் வருவதை அறிந்த லாகூரின் மூன்று தலைவர்களும் நகரைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். டெல்லி, லாகூரி, ரோஷ்னாய் ஆகிய மூன்று வாயில்களைத் தவிர, நகரின் மற்ற அனைத்து நுழைவாயில்களும் செங்கற்களால் அடைக்கப்பட்டன.

இதற்கிடையில், மியான் ஆஷிக் முஹம்மது மற்றும் மியான் மஹ்கும்-உத்தீன் ஆகியோர் ரஞ்சித் சிங்குக்கு ஒரு செய்தியை அனுப்பினர். கிஸ்ரி மற்றும் யாக்கி வாயில்களுக்கு இடையிலான நகர மதில் சுவரில் ஒரு பகுதி உடைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த வழியாக அவர் எவ்வித எதிர்ப்புமின்றி நகருக்குள் நுழையலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இந்த ஏற்பாட்டின் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கலாம் என்று சந்தேகித்த ரஞ்சித் சிங், அந்த வழியாக நகருக்குள் நுழைவதைத் தவிர்த்தார். அதற்குப் பதிலாக, நகரின் வழக்கமான நுழைவாயில்களில் ஒன்றின் வழியாகவே லாகூருக்குள் நுழைய முடிவு செய்தார்."

ஆரம்பகட்ட மோதலில், படையினர் சுமார் 200 பேர் தோற்கடிக்கப்பட்டனர்; அவர்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைகளின் மூலம், ரஞ்சித் சிங் நகருக்குள் நுழைவதற்காக லாகூர் வாயிலை காலை 8 மணிக்குத் திறந்து விடுவது என உடன்பாடு எட்டப்பட்டது.

திட்டமிட்டபடி, குறிப்பிட்ட நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 வீரர்களுடன் ரஞ்சித் சிங் அங்கு வந்து சேர்ந்தார். வாயில் திறக்கப்பட்டதும், அவர் தனது படைகளுடன் நகருக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஏனைய படைகளும் லாகூருக்குள் பிரவேசித்தன. விரைவிலேயே, நகரின் மதில் சுவர்களும் முக்கியப் பகுதிகளும் ரஞ்சித் சிங்கின் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

சேத் சிங்கின் சவாலும் கோட்டை முற்றுகையும்

லாகூரை ஆட்சி செய்த மூன்று தலைவர்களில் ஒருவரான சேத் சிங், ஹசூரி பாக் வாயில் பகுதியில் ரஞ்சித் சிங்கின் குதிரைப்படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முயன்றதாக சையத் முஹம்மது லத்தீஃப் தனது நூலில் குறிப்பிடுகிறார். எனினும், ரஞ்சித் சிங்கின் படையினர் வாயிலை மூட முயன்ற காவலர்களைக் கொன்று, கோட்டைக்குள் நுழைந்தனர்.

இதையடுத்து, சேத் சிங் கோட்டைக்குள் சிக்கிக்கொண்டார். லாகூரின் மற்ற ஆட்சியாளர்கள் இருவரும் நகரத்தை விட்டு வெளியேறினர். ரஞ்சித் சிங் கோட்டையை நோக்கிப் பீரங்கித் தாக்குதலைத் தொடங்கினார். இதற்குப் பதிலடியாக, கோட்டைக்குள் இருந்தவர்களும் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த மோதல் சுமார் 20 மணி நேரம் நீடித்தது.

கோட்டையை நீண்டகாலம் முற்றுகையிட்டு, எதிரிகளைப் பணிய வைக்க வேண்டும் என்பதே ரஞ்சித் சிங்கின் ஆரம்பகட்டத் திட்டமாக இருந்தது. ஆனால், கோட்டைக்குள் உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டதாகவும், வெளி உலகத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்குள்ளவர்கள் விரைவில் சரணடைய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ராணி சதா கௌர் அவருக்கு ஆலோசனை வழங்கினார். அவரது கணிப்பு இறுதியில் உண்மையானது.

சையத் முஹம்மது லத்தீஃபின் பதிவுகளின்படி, சேத் சிங் இறுதியில் சில நிபந்தனைகளின் அடிப்படையில் சரணடைய ஒப்புக்கொண்டார். அதன்படி, அவர் பாதுகாப்பாக லாகூரை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுடன், தனது குடும்பத்தின் பராமரிப்புக்காக ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரினார். ரஞ்சித் சிங் அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதோடு, அவருக்கு கணிசமான நிலப்பகுதியை 'ஜாகீர்' (நில மானியம்) ஆக வழங்கினார். மேலும், நகர மக்களிடம் தனது படையினர் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

லாகூரைக் கைப்பற்றிய பிறகு அங்கு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சையத் முஹம்மது லத்தீஃப் பின்வருமாறு பதிவு செய்கிறார்:

"ஆரம்பத்தில், அச்சம் காரணமாக வணிகர்கள் தங்களது கடைகளை மூடிவிட்டனர். ஆனால், ரஞ்சித் சிங் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்த அவர், கைவினைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். கோட்டையில் பயன்பாடின்றிக் கிடந்த ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களைப் பழுதுபார்க்கும் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் விளைவாக, சில நாட்களிலேயே லாகூர் நகரம் மீண்டும் தனது பழைய செழிப்பையும் பொலிவையும் பெறத் தொடங்கியது."

குஷ்வந்த் சிங், 'என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' இதழுக்காக எழுதியுள்ள ஆய்வின்படி, 1799-ஆம் ஆண்டு லாகூரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிய மன்னர் ஜமான் ஷா, ரஞ்சித் சிங்கை லாகூரின் ஆளுநராக நியமித்தார். இருப்பினும், அவர் அந்தப் பதவியுடன் நின்றுவிடவில்லை. 1801-ஆம் ஆண்டு, தன்னைப் பஞ்சாபின் மகாராஜாவாக அறிவித்துக்கொண்டு, தனக்கென ஓர் அரசாட்சியை நிறுவினார். சீக்கிய குருக்களின் பெயரில் நாணயங்களையும் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, 1802-ஆம் ஆண்டு, வட இந்தியாவின் முக்கியமான வணிக மையமாகவும், சீக்கியர்களின் புனிதத் தலமாகவும் விளங்கிய அமிர்தசரஸைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இதன் பின்னர், பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடந்த சிறிய அளவிலான சீக்கிய மற்றும் ஆப்கானிய அரசுகளை ஒன்றன்பின் ஒன்றாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார்.

1807-ஆம் ஆண்டு, தனது பேரரசின் எல்லைகளை வடமேற்கு நோக்கி விரிவுபடுத்திய ரஞ்சித் சிங், அப்பகுதியில் முஸ்லிம் ஆட்சியாளர்களின் முக்கியமான அதிகார மையமாக விளங்கிய கசூரைக் கைப்பற்றினார்.

ஆனால், கிழக்கு நோக்கிய அவரது பேரரசு விரிவாக்கத்துக்கு ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் தடையாக அமைந்தது. இதன் விளைவாக, 1809-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுடன் அமிர்தசரஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட ரஞ்சித் சிங் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, சட்லஜ் நதி அவரது பேரரசின் கிழக்கு எல்லையாக வரையறுக்கப்பட்டது. இதன் மூலம், கிழக்குத் திசையில் அவரது ஆட்சியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன.

பேரரசின் விரிவாக்கம்

பஞ்சாப், இந்தியா, மகாராஜா ரஞ்சித் சிங்
Getty Images

இதனைத் தொடர்ந்து, ரஞ்சித் சிங் தனது கவனத்தைப் பேரரசின் பிற பகுதிகளை நோக்கித் திருப்பி, அதன் எல்லைகளை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கினார்.

பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின் பதிவுகளின்படி, 1809-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இமயமலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த காங்க்ரா பகுதியின் மன்னர் சன்சார் சந்த்-க்கு உதவுவதற்காக ரஞ்சித் சிங் தனது படைகளை அனுப்பினார். கூர்க்கா படைகளைத் தோற்கடித்ததைத் தொடர்ந்து, காங்க்ரா அவரது ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

1813-ஆம் ஆண்டு, காஷ்மீரில் நடைபெற்ற ஆப்கானிய பராக்சாயின் ஆட்சியாளர்களுடனான மோதலில் ரஞ்சித் சிங் தலையிட்டார். காஷ்மீரைத் தங்களது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருப்பதாக அளித்த வாக்குறுதியை பராக்சாயின் ஆட்சியாளர்கள் மீறினர். இதற்குப் பதிலடியாக, பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஆப்கானிய மன்னர் ஜமான் ஷாவின் சகோதரரான ஷா ஷுஜாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கு ரஞ்சித் சிங் முயன்றார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிந்து நதிக்கரையில் அமைந்திருந்த முக்கியத்துவம் வாய்ந்த அட்டாக் கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர், ஷா ஷுஜா லாகூருக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடமிருந்து உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் பெறப்பட்டது.

1818-ஆம் ஆண்டு கோடைக்காலத்தில், ரஞ்சித் சிங்கின் படைகள் முல்தானைக் கைப்பற்றின. இதனைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்குப் பிறகு பெஷாவரும் அவரது படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1819-ஆம் ஆண்டு ஜூலை மாதம், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஆப்கானியர்களை வெளியேற்றி, அந்தப் பகுதியையும் தனது பேரரசுடன் இணைத்துக்கொண்டார். இவ்வாறு, 1820-ஆம் ஆண்டுக்குள் சட்லஜ் மற்றும் சிந்து நதிகளுக்கு இடையே அமைந்திருந்த பஞ்சாபின் பெரும்பாலான பகுதிகள் அவரது ஆட்சியின் கீழ் வந்தன.

ரஞ்சித் சிங் உருவாக்கிய பேரரசின் மற்றொரு தனிச்சிறப்பு அதன் பன்முகத்தன்மையாகும். பட்வந்த் சிங் தனது 'எம்பயர் ஆஃப் தி சீக்ஸ்: தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் மகாராஜா ரஞ்சித் சிங்' என்ற நூலில், ரஞ்சித் சிங் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்ட பேரரசை ஆட்சி செய்ததாகக் குறிப்பிடுகிறார். அவரது நிர்வாகத்தில் மத சகிப்புத்தன்மைக்கும், அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய ஆட்சிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ரஞ்சித் சிங்கின் நிர்வாகத்தில் நிலவிய இந்தப் பன்முகத்தன்மை குறித்து பட்வந்த் சிங் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "அவரது நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புகள் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. பிரதமராக டோக்ரா ராஜபுத்திரரும், நிதியமைச்சராக பிராமணரும், வெளியுறவுத்துறை அமைச்சராக முஸ்லிமும் பணியாற்றினர்."

ரஞ்சித் சிங்கின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 15 உறுப்பினர்களில் ஏழு பேர் மட்டுமே சீக்கியர்கள் என்றும், எஞ்சியவர்கள் இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பட்வந்த் சிங் குறிப்பிடுகிறார். சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமின்றி, சமணர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற மதத்தினருக்கும் அவர்களது தனிப்பட்ட தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் அரசுப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு மதத்துக்குள்ளும் நிலவிய பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் நிர்வாகத்தில் இடமளிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் எழுத்தாளர் சர் லெபெல் கிரிஃபின், தனது 'ரூலர்ஸ் ஆஃப் இந்தியா: ரஞ்சித் சிங்' என்ற நூலில், ரஞ்சித் சிங்கின் ஆட்சிமுறை மற்றும் அவரது அணுகுமுறை குறித்து பதிவு செய்துள்ளார்.

"ரஞ்சித் சிங் கொடூரமானவரோ, ரத்தவெறி கொண்டவரோ அல்ல" என்று குறிப்பிடும் கிரிஃபின், அவரது வெற்றிகளுக்குப் பின்னரும் எதிரிகளிடம் அவர் காட்டிய அணுகுமுறையைப் பின்வருமாறு விவரிக்கிறார்:

"போர்களில் வெற்றி பெற்றபோதும், கோட்டைகளைக் கைப்பற்றியபோதும், எதிரிகள் கடுமையாகப் போரிட்டிருந்தாலும் அவர்களிடம் ரஞ்சித் சிங் மிகுந்த கருணையுடனும் தாராள மனப்பான்மையுடனும் நடந்துகொண்டார். அவரது அரசவையில், முன்பு தங்களது ஜாகீர்களை (நில மானியங்களை) இழந்த பல்வேறு தலைவர்களுக்கும் இடமளிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குத் தகுதியான பதவிகளும் பொறுப்புகளும் வழங்கப்பட்டன."

அலுவல் மொழியாகப் பாரசீகம்

பட்வந்த் சிங்கின் பதிவுகளின்படி, ரஞ்சித் சிங் சிறுவயதிலேயே குருமுகி எழுத்துமுறையைக் கற்றுத் தேர்ந்திருந்தார். சீக்கிய மதத்தின் அடிப்படைக் கொள்கைகள், அறநெறிகள் மற்றும் குருமார்களின் போதனைகள் குறித்தும் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார்.

பஞ்சாபி இலக்கியம் மற்றும் கவிதைகள் மீது தனிப்பட்ட ஆர்வம் கொண்டிருந்தபோதிலும், லாகூர் அரசவையின் அலுவல் மொழியாகப் பாரசீகத்தை அவர் தேர்ந்தெடுத்தார். பாரசீகத்துடன் உருது, காஷ்மீரி, சிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் அவர் ஆர்வம் காட்டினார். இது அவரது பேரரசின் பன்மொழி மற்றும் பன்முகத் தன்மையைப் பிரதிபலித்தது.

குஷ்வந்த் சிங்கின் ஆய்வின்படி, 1831-ஆம் ஆண்டு அக்டோபரில், சிந்து பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து ரஞ்சித் சிங் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பிரிட்டிஷார் சிந்து நதிக்கரையோரமாகத் தங்களது படைகளை முன்னேற்றி, அப்பகுதியில் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்று வந்தனர். இறுதியில், தங்களது திட்டங்களுக்கு ரஞ்சித் சிங்கின் ஒப்புதலைப் பெறுவதிலும் அவர்கள் வெற்றி பெற்றனர்.

இந்தச் சூழல் ரஞ்சித் சிங்குக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடும் குஷ்வந்த் சிங், பிரிட்டிஷாரின் விரிவாக்க முயற்சிகளுக்குப் பதிலாக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் விவரிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தால் நாலாபுறமும் சூழப்பட்ட நிலை ரஞ்சித் சிங்குக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதனால், அவர் ஆப்கானியர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். அதேவேளையில், டோக்ரா தளபதி ஜொராவர் சிங்கின் தலைமையில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதி அளித்தார். இதன் விளைவாக, 1834-ஆம் ஆண்டு லடாக் அவரது பேரரசின் வடக்குப் பகுதியாக இணைக்கப்பட்டது."

1838-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் ஆக்லாந்துடன் ரஞ்சித் சிங் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்படி, ஷா ஷுஜாவை மீண்டும் ஆப்கானிஸ்தானின் காபூல் அரியணையில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் அவர் ஒத்துழைக்க வேண்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் படைகள் தெற்குப் பாதை வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. அதே சமயம், ரஞ்சித் சிங்கின் படைகள் கைபர் கணவாய் வழியாக முன்னேறி, காபூலில் நடைபெற்ற வெற்றி விழாவில் பங்கேற்றன.

இவ்வாறு தனது ஆட்சியைப் பல்வேறு திசைகளிலும் விரிவுபடுத்தி, வலிமையான பேரரசை உருவாக்கிய ரஞ்சித் சிங்கின் வாழ்க்கை இறுதிக்கட்டத்தை எட்டியது. உடல்நலக் குறைவு காரணமாக, 1839-ஆம் ஆண்டு ஜூன் மாதம் லாகூரில் அவர் காலமானார். 1799-ஆம் ஆண்டு லாகூரைக் கைப்பற்றி, தனது அரசியல் எழுச்சியைத் தொடங்கியதிலிருந்து சரியாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

ஆனால், அவர் உருவாக்கிய பேரரசு அவரது மறைவுக்குப் பிறகு நீண்டகாலம் நிலைக்கவில்லை. வெறும் ஆறு ஆண்டுகளுக்குள், வாரிசுரிமைப் போட்டிகள், அதிகாரப் போராட்டங்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே ஏற்பட்ட உள்மோதல்கள் காரணமாகச் சீக்கியப் பேரரசு சிதைவடையத் தொடங்கியது.

ரஞ்சித் சிங்கின் வரலாற்றுச் சாதனைகளை மதிப்பிடும் குஷ்வந்த் சிங், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஆப்கானியர்களின் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்டு வந்த இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அதிகாரச் சமநிலையை மாற்றியமைத்த முதல் இந்திய ஆட்சியாளராக அவரைக் குறிப்பிடுகிறார். ஆப்கானியர்களின் படையெடுப்புகளை எதிர்கொண்டு, அவர்களது ஆதிக்கப் பகுதிகளுக்குள்ளேயே தனது ஆட்சியை விரிவுபடுத்திய அவரது ராணுவ மற்றும் அரசியல் சாதனைகள், இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் அவருக்குத் தனித்துவமான இடத்தைப் பெற்றுத் தந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!