தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு இடையிலான வணிகப் பரிமாற்றத்தில் உங்கள் பகுதியின் கண்காணிப்பு உள்கட்டமைப்பின் பரப்பளவை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். அதைத் தெரிந்துகொள்ள இப்போது எளிய வழிகள் உள்ளன.
கண்காணிப்புத் தொழில்நுட்ப மேற்பார்வைத் திட்டத்தின் (Surveillance Technology Oversight Project) நிர்வாக இயக்குநரான மிஷெல் டாலை நான் சந்திக்கப்போவது பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை.
ஆனால், நியூயார்க்கின் புரூக்ளினில் நான் அவரைச் சந்தித்து வாழ்த்துவதற்குள், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்பதை அந்த அமைப்பு அறிந்துகொண்டது.
"நீங்கள் கூர்ந்து கவனிக்காவிட்டால், இது உங்கள் கண்ணுக்குத் தெரியாது" என்று ஒரு விளக்குக் கம்பத்தை நோக்கிக் கை காட்டுகிறார் டால். அங்குள்ள கருப்பு பிளாஸ்டிக் டூம்களுக்குள் நியூயார்க் நகரக் காவல் துறை (NYPD) என்ற லேபிளுடன் இரு சிறு கேமராக்கள் மறைந்துள்ளன.
அவை நியூயார்க் நகரக் காவல் துறையின் பிரமாண்டமான ஏஐ கண்காணிப்பு தளமான 'டொமைன் அவேர்னஸ் சிஸ்டத்தின்' (Domain Awareness System - DAS) ஒரு பகுதி.
"நகரத்திலுள்ள ஒவ்வொரு காவல் அதிகாரியும் தங்கள் மொபைல் மூலமாகவே இதை அணுக முடியும். சாலையில் நடந்துசெல்லும் எவரைப் பற்றிய அடிப்படைத் தகவலையும் பெற முடியும்," என்கிறார் டால்.
இந்தத் தளம் 80,000-க்கும் மேற்பட்ட கேமராக்களை டிரோன்கள், சமூக ஊடகத் தரவுகள் மற்றும் நீங்கள் வேறு மாகாணத்துக்குச் செல்லும்போது காரைப் பின்தொடரும் அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் நான் யாரையெல்லாம் சந்தித்தேன், எங்கெல்லாம் சென்றேன் என்பதை இது வெளிப்படுத்தக்கூடும் என்கிறார், டால். என் வாழ்நாளே கண்காணிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும், அமெரிக்கா முழுவதும், பலரும் உணராத வகையில் மிகவும் ஆழமாக ஊடுருவியுள்ள இந்த வெகுஜனக் கண்காணிப்பு அமைப்பினால் உங்களுடைய வாழ்க்கையும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
'ஃப்ளாக் சேஃப்டி' (Flock Safety) என்ற அமெரிக்கக் கண்காணிப்பு நிறுவனத்தைச் சுற்றியிருந்த சர்ச்சைகள் சமீபத்திய மாதங்களில் வெடித்தன. ஆனால் அது இந்த மாபெரும் துறையில் ஒரு சிறிய பங்கு மட்டுமே.
தனியுரிமைக்கும் பாதுகாப்புக்கும் இடையே ஒரு சமரசத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஃப்ளாக் மற்றும் பிற ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த சமரசம் செய்யத் தகுதியானதுதானா என்பதை நீங்களே தீர்மானிக்க, இந்தக் கண்காணிப்பு எந்த அளவுக்கு விரிவானது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. அதனால் என் சொந்தப் பகுதியிலேயே கேமராக்களைத் தேடத் தொடங்கினேன். நீங்களும் தேடலாம், அதற்கு நீங்கள் உங்கள் சோஃபாவை விட்டுக்கூட எழ வேண்டியதில்லை.
''எங்கும் வியாபித்திருக்கும் கண்காணிப்பு கேமராக்கள்''
கண்காணிப்பைப் பற்றிக் கவலைப்படுபவர்களில் சிலர், ஃப்ளாக் நிறுவனம் மட்டுமே முழுப் பிரசனை என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல என்பதை நியூயார்க் நகரம் நிரூபிக்கிறது.
அந்த நிறுவனம் இங்குச் செயல்படவில்லை என்றபோதிலும் நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
டால் என்னை பிபிசியின் மேன்ஹேட்டன் அலுவலகத்துக்கு ஒரு கண்காணிப்புச் சுற்றுப்பயணமாக அழைத்துச் செல்கிறார்.
வழியிலுள்ள கேமராக்களையும் பிற சாதனங்களையும் சுட்டிக்காட்டுகிறார். நான் 10 ஆண்டுகளாகத் தனியுரிமைத் துறையைப் பற்றி செய்தி சேகரித்திருக்கிறேன், ஆனால் எங்கள் ஒவ்வொரு அசைவையும் பின்தொடரும் இந்த உள்கட்டமைப்பைப் பார்த்து நானே அதிர்ந்துபோனேன்.
சில அடிகள் நடந்த பிறகு, நாங்கள் நின்று சுற்றிலும் பார்க்கிறோம். நான் 16 வெவ்வேறான கேமராக்களை எண்ணுகிறேன்.
"இவை வணிக நிறுவனங்கள், கட்டடங்கள் மற்றும் வாடகைக்குக் குடியிருப்பவர்களால் நிறுவப்பட்டவை என்று நினைக்கிறேன்," என்கிறார் டால்.
இவை நகர நிர்வாகத்தால் இயக்கப்படும் கேமராக்களுக்குக் கூடுதலானவை.
"ஆனால் நியூயார்க் நகர காவல்துறை இவற்றை எளிதாக அணுகும் வசதி உள்ளது. விசாரணை ஏதேனும் இருந்தால் அவர்கள் கட்டட உரிமையாளர்களிடம் கேட்பார்கள், மக்களும் அந்த வீடியோ காட்சிகளைக் கொடுத்துவிடுவார்கள்."
அமேசானின் 'ரிங்' போன்ற சில கேமரா விற்பனையாளர்கள், காவல்துறையினர் பயனர்களிடம் இருந்து நேரடியாக வீடியோ காட்சிகளைக் கோரிப் பெறுவதை எளிதாக்கத் தானியங்கி அமைப்புகளைக்கூட வைத்துள்ளனர்.
பொது இடங்களில் கேமராக்கள் இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டதால், நான் அவற்றைக் கவனிப்பதே இல்லை. ஆனால் டாலின் உதவியுடன், என் பார்வை மாறுகிறது.
கடைகளுக்கு முன்னால் தொங்கும் சிறு மாத்திரை வடிவக் கேமராக்கள், கட்டடங்களின் மூலைகளில் உள்ள பழைய சாம்பல் நிறச் சாதனங்கள், மற்றும் சந்தேகத்துக்குரிய நபர்களைத் துல்லியமாகக் கண்காணிக்கப் பான் (pan), டில்ட் (tilt), ஜூம் (zoom) செய்யும் நகர நிர்வாகத்தின் மேம்பட்ட இரட்டைக் கேமரா அமைப்புகள் ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது.
நடந்துகொண்டே எண்ண முயல்கிறேன், ஆனால் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஒரே நேரத்தில் எண்ணிக்கொண்டே உரையாடலைத் தொடர்வது சாத்தியமில்லாமல் போகிறது.
"நீங்கள் எந்த அளவுக்குப் பார்க்கத் தொடங்குகிறீர்களோ, அந்த அளவுக்குக் காண்பீர்கள்," என்கிறார் டால்.
ஃப்ளாக் நிறுவனத்துக்கு எதிர்ப்பு ஏன்?
இந்த அமைப்புகள் உங்களின் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்து சேமிக்க முடியும். கண்காணிப்புத் துறையின் பிரதான முகமாக ஃப்ளாக் மாறியுள்ளது.
சமீபத்திய மாதங்களில், அந்நிறுவனத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் இருதரப்பு ஆதரவோடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
ஃப்ளாக் நிறுவனத்தின் வியக்கத்தக்க அதிகாரமே அதற்கு ஒரு காரணம். 6,000 அமெரிக்கச் சமூகங்களில் பரவியுள்ள 1,00,000-க்கும் மேற்பட்ட கேமராக்களைத் தாம் இயக்குவதாக அந்நிறுவனம் கூறுகிறது.
வாகன ஓட்டிகளைக் கண்காணிக்கும் தன் கருவிகளுக்காக இது மிகவும் பிரபலமானது. ஃப்ளாக் கூற்றுப்படி, இது மாதத்துக்கு 20 பில்லியன் முறை கார்களை ஸ்கேன் செய்கிறது. ஆனால், இது உங்கள் உடலைக் கண்காணிக்க முக அங்கீகாரக் கருவிகளையும் தயாரிக்கிறது.
இத்தகைய தொழில்நுட்பம், சட்ட அமைப்புகள் தங்கள் அதிகார வரம்பையும் தாண்டிப் பார்க்க அனுமதிக்கிறது. டெக்சாஸ் ஷெரிஃப் (சட்ட அமலாக்க அதிகாரி) ஒருவர், கருக்கலைப்பு வழக்கில் தொடர்புடைய ஒரு பெண்ணைத் தேடுவதற்காக அமெரிக்கா முழுவதும் உள்ள 83,000-க்கும் மேற்பட்ட ஃப்ளாக் கேமராக்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக உள்ள மாகாணங்களிலும் கூட இது நடந்துள்ளது.
தங்களின் கருவிகள் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும், தீர்க்கப்படாமல் போகக்கூடிய குற்றங்களைத் தீர்க்க இது தினமும் உதவுவதாகவும் ஃப்ளாக் கூறுகிறது. இருப்பினும், குறைந்தபட்சம் 46 வழக்குகளிலாவது, காவல் அதிகாரிகள் ஃப்ளாக் அமைப்புகளை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் தங்களின் கூட்டாளிகள், முன்னாள் காதலர்கள் மற்றும் அந்நியர்களை உளவு பார்ப்பதும் அடங்கும்.
பல மாத மோசமான விமர்சனங்களுக்குப் பிறகு, துஷ்பிரயோகத்தைக் கண்டறிந்து களைய ஃப்ளாக் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது.
ஃப்ளாக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்தத் துஷ்பிரயோகம் "கருவியின் நோக்கத்துக்கே துரோகம் செய்வது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும், அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.
ஃப்ளாக் கேமராக்களை மக்கள் சேதப்படுத்துவது, அவற்றின் மீது சிறுநீர் கழிப்பது போன்ற தொடர் எதிர்ப்புகளும் இதில் அடங்கும். இந்த ஆண்டில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட நகரங்கள் ஃப்ளாக் உடனான தொடர்பைத் துண்டித்துள்ளன.
ஆனால் மீண்டும் சொல்கிறேன், ஃப்ளாக் நிறுவனம் எல்லா இடங்களிலும் செயல்படவில்லை, அந்தத் துறையில் அது மட்டுமே ஒரே நிறுவனமும் இல்லை. ஃப்ளாக் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்த சில நகரங்கள், அமைதியாகப் பிற கண்காணிப்பு நிறுவனங்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டன.
"எங்களை விட்டு விலகும் நகரங்களை விட, ஃப்ளாக் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் சமூகங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது," என்று ஃப்ளாக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.
"வாடிக்கையாளர்கள் விலகும் விகிதத்தை விட தோராயமாக 10 மடங்கு அதிக விகிதத்தில் புதிய வாடிக்கையாளர்களை நாங்கள் சேர்த்து வருகிறோம்." என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்புக்கானதா அல்லது கூடுதல் கண்காணிப்புக்கு வழிவகுக்குமா?
வளர்ந்து வரும் கண்காணிப்பு உள்கட்டமைப்பின் பின்னணியில், காவல் துறையை எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்த பரந்த விவாதம் உள்ளது.
"காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிப்பது முதல் கொலைகள், வன்முறைக் குற்றங்களைத் தீர்ப்பது மற்றும் திருடப்பட்ட வாகனங்களை மீட்பது வரை தினமும் ஃப்ளாக் நிறுவனம் பல குற்றங்களைத் தீர்க்க உதவுகிறது," என்கிறார் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்.
சட்ட அமைப்புகள் இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதில் ஃப்ளாக் மட்டுமே முடிவு செய்பவராக இருக்கக் கூடாது என்பதற்காக, "தெளிவான மாகாண மற்றும் உள்ளூர் ஒழுங்குமுறைகளை ஃப்ளாக் தீவிரமாகக் கேட்டு வருகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
நியூயார்க் காவல்துறையும் இதே போன்ற கருத்துக்களைத் தெரிவிக்கிறது. தங்களது கண்காணிப்பு அமைப்புகள் நகரத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் தனது கருவிகள் குறித்த வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார்.
"தொழில்நுட்பத்தைக் கவனத்துடனும் துல்லியத்துடனும் பயன்படுத்தவும், எங்கள் பயன்பாடு சட்டத்துக்கு உட்பட்டதாக இருப்பதை உறுதிசெய்யவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்று செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
எனினும், குற்றங்களைத் தீர்க்கும் அணுகுமுறையை விளம்பரம் செய்ய ஃப்ளாக் மற்றும் பிற நிறுவனங்கள் பயன்படுத்தும் தரவு மற்றும் முறைகளை நிபுணர்கள் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள்.
"கண்காணிப்பு நம்மைப் பாதுகாப்பானதாக மாற்றுகிறது என்ற யோசனை ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது," என்கிறார் மின்னணு எல்லைக் கழகத்தின் (Electronic Frontier Foundation - EFF) அரசு விவகாரங்களின் இணை இயக்குநர் ரிண்டாலா அலாஜாஜி. உண்மையில், இந்தத் தொழில்நுட்பம் உலகை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறது என்கிறார் அவர்.
"கண்காணிப்பானது சாதாரண பார்வையாளர்களைக் குற்றவாளிகளாக மாற்றப் பயன்படுத்தப்படுகிறது. உரிமத் தகட்டை தவறாகப் படித்ததால், நிரபராதிகள் காரை ஓட்டும்போது மறிக்கப்பட்டுத் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்ட சம்பவங்கள் உள்ளன," என்கிறார் அலாஜாஜி.
இது அமெரிக்கப் பிரச்னை மட்டுமல்ல. முக அங்கீகார அமைப்புகள் பிரிட்டனிலும் விரிவடைந்து வருகின்றன. காவல் துறையினர் இதற்கு ஆயிரக்கணக்கான கைதுகளைப் பெருமையோடு சுட்டிக்காட்டும் வேளையில், விமர்சகர்கள் இதை ஓர் அச்சுறுத்தலான மற்றும் "கண்காணிப்பு அரசின் குறிப்பிடத்தக்க விரிவாக்கம்" என்று விவரிக்கிறார்கள். உலகம் முழுவதிலும் கேமராக்கள் பரவி வருகின்றன.
டாலும் நானும் கிட்டத்தட்ட ஒரு மைல் நடந்து சுரங்கப்பாதையில் ஏறுகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் கேமராக்கள் எங்களை உற்றுப் பார்க்கின்றன, வெளியேறும்போது எங்களைப் பதிவு செய்கின்றன. மிட்டவுன் மேன்ஹேட்டனில் நாங்கள் தெருவுக்கு வரும்போது, எங்களை வரவேற்பது, நீங்கள் ஊகித்தது போலவே இன்னும் அதிகமான கேமராக்கள் தான்.
"மக்கள் எங்கு உற்றுப் பார்க்கப்படுகிறீர்கள், கண்காணிக்கப்படுகிறீர்கள் என்பதைக் கவனிக்க ஒரு நிமிடம் ஒதுக்குங்கள், தரவு எங்குச் செல்கிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். மக்களுக்கு விழிப்புணர்வு அதிகரிக்கும்போது, சட்டமியற்றும் அமைப்புகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சிகளில் நீங்கள் இணையலாம்." என்கிறார் டால்.
உதாரணமாக, சில சமூகங்கள் ஃப்ளாக் ஒப்பந்தங்களை ரத்து செய்ததற்கு ஒரு காரணம் நகர சபை கூட்டங்களில் மக்கள் தலைவர்களுக்குக் கொடுத்த அழுத்தமே ஆகும்.
டாலும் நானும் ஒன்றாக இருந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது, நாங்கள் கண்காணிக்கப்படாத ஒரு கணம்கூட கடக்கவில்லை. நான் விடைபெற்று பிபிசி அலுவலகத்தை நோக்கி நடக்கிறேன்.
நான் கட்டடத்துக்குள் நுழைந்து மின்தூக்கிக்கான (elevator) பொத்தானை அழுத்துகிறேன். 'டிங்' என்ற சத்தத்துடன் கதவுகள் திறக்கின்றன, அங்கு என் முகத்துக்கு நேராக மின்னும் ஒரு கருப்பு கேமரா நிற்கிறது.
மற்ற எல்லா இடங்களையும் போலவே, இங்கேயும் யாரோ ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு