Skip to main content

Advertisement

மொஹட்டா அரண்மனை: இந்து தொழிலதிபர் தன் மனைவிக்காக கட்டிய 'கராச்சியின் தாஜ்மஹால்' பற்றிய சுவாரஸ்ய வரலாறு

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
 மொஹட்டா அரண்மனை
Farzaan Rasheed
கராச்சியில் உள்ள மொஹட்டா அரண்மனையின் புகைப்படம்

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மக்கள் கிளிஃப்டன் கடற்கரைக்குச் செல்லும்போது, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கற்களால் கட்டப்பட்ட பழமையான கட்டடம் ஒன்றை காண முடியும். அந்தக் கட்டடத்தின் மீது பார்வையைப் பதிக்காமல் அதைக் கடந்து செல்வது கடினம்.

கராச்சியில் உள்ள இந்தக் கட்டடம் மொஹட்டா அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனையைப் பார்க்கும்போது, கடலின் ஆர்ப்பரிக்கும் அலைகள் கிளிஃப்டன் கடற்கரையில் மோதிய காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

அந்தக் காலகட்டத்தில்தான், சிவ் ரத்தன் சந்திர மொஹட்டா என்ற இந்து மார்வாரி தொழிலதிபர் கடலுக்கு அருகில் இந்தக் கட்டடத்தைக் கட்டும் யோசனையை முன்வைத்தார். அவர் தனது மனைவிக்காக இந்த அரண்மனையைக் கட்டினார்.

இந்த அரண்மனையின் கட்டுமானத்தில் ஜோத்பூரி இளஞ்சிவப்பு நிறக் கற்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரயில் தண்டவாளங்களும் அமைக்கப்பட்டன.

கராச்சி குறித்து ஆய்வு செய்த மறைந்த பத்திரிகையாளர் அக்தர் பலூச், ஆய்வாளர் இக்பால் ஏ. ரஹ்மான் மண்டாவியா மற்றும் வரலாற்றாசிரியர் உஸ்மான் தாமூஹி ஆகியோர் மொஹட்டா அரண்மனை குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இக்பால் ஏ. ரஹ்மான் மண்டாவியா தனது புத்தகத்தில், "சிவ் ரத்தன் மொஹட்டா கராச்சியில் இரும்புத் தொழிற்சாலையை நிறுவினார். சிந்துவில் காத்ரோவுக்கு அருகிலும் அவர் ஒரு சர்க்கரை ஆலையை நிறுவினார்.

சர்க்கரையை அருகிலுள்ள ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்வதை எளிதாக்குவதற்காக, அவர் ரயில் பாதையையும் அமைத்தார். இது 1939-ம் ஆண்டு நடைபெற்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவ் ரத்தன் மொஹட்டாவின் இளைய சகோதரரான கோபால் கோர்தன் தாஸ் மொஹட்டா, கராச்சியில் இந்து ஜிம்கானாவைக் கட்டினார்.

இவ்வாறு, கராச்சியின் இரண்டு முக்கியமான பழமையான கட்டடங்களுடன் மொஹட்டா குடும்பத்தின் பெயர் எப்போதும் நினைவுகூரப்படுகிறது.

காதலின் சின்னம்

 மொஹட்டா அரண்மனை
Farzaan Rasheed
பல கலைப்பொருட்கள் தற்போது மொஹட்டா அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளன.

மொஹட்டா அரண்மனையைக் கட்டுவதற்குப் பின்னால் சிவ் ரத்தன் மொஹட்டாவுக்கு எந்தவொரு வணிக நோக்கமும் இருக்கவில்லை.

உண்மையில், அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி குணமடைய வேண்டுமானால், தூய்மையான காற்று அவசியம் என்று மருத்துவர்கள் சிவ் ரத்தன் மொஹட்டாவிடம் தெரிவித்தனர். அத்தகைய சூழலில் அவரது மனைவி வாழ்ந்தால், உடல்நிலை மேம்படும் என்றும் கூறினர்.

கராச்சி கடற்கரையின் தூய்மையான காற்றுதான் இந்தப் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு என்பதை சிவ் ரத்தன் மொஹட்டா அறிந்திருந்தார்.

எனவே, அங்கு ஒரு பங்களாவைக் கட்ட அவர் முடிவு செய்தார். இருப்பினும், அந்த பங்களா உண்மையில் ஓர் அரண்மனைக்கு இணையாகவே இருந்தது.

இன்றும்கூட காதல் கதைகளைப் பற்றிப் பேசும்போது, முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் மஹால் இறந்த பிறகு, அவரது நினைவாக தாஜ்மஹாலைக் கட்டினார் என்று கூறப்படுகிறது.

ஆனால், சிவ் ரத்தன் மொஹட்டா தனது மனைவியின் உயிரை நேசித்ததால், அவர் உயிருடன் இருந்தபோதே இந்த அரண்மனையைக் கட்டினார்.

மொஹட்டா அரண்மனையின் அமைப்பு

 மொஹட்டா அரண்மனை
Farzaan Rasheed
1927-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட மொஹட்டா அரண்மனை, முகலாயக் கட்டடக்கலையின் ஓர் அழகிய காட்சியை வழங்குகிறது.

இந்த பிரமாண்டமான கட்டடம், இந்தியத் துணைக்கண்டத்தின் ஆரம்பகால இஸ்லாமிய கட்டடக் கலைஞர்களில் ஒருவரான அகமது ஹுசைன் ஆகாவின் தொழில்முறைத் திறன்களின் விளைவாகவும் உருவானது.

இந்தக் கட்டடத்தின் வரைபடத்தைத் தயாரிக்கும் பொறுப்பு அகமது ஹுசைன் ஆகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக அவர் ஜெய்ப்பூரிலிருந்து பிரத்யேகமாக கராச்சிக்கு அழைத்து வரப்பட்டார்.

கராச்சியில் உள்ள இந்து ஜிம்கானா, வர்த்தக சபை போன்ற கட்டடங்களையும் அவர் வடிவமைத்துள்ளார். இருப்பினும், அவரது கட்டடக்கலைப் பயணத்தில் மொஹட்டா அரண்மனைக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.

1927-ம் ஆண்டு கட்டப்பட்ட மொஹட்டா அரண்மனை, முகலாயக் கட்டடக்கலையின் அழகிய தோற்றத்தை வழங்குகிறது.

அதைப் பார்க்கும்போது, ராஜஸ்தானிய மன்னர்களின் ஆங்கிலோ-முகலாய பாணி அரண்மனைகள் மீண்டும் உருவாக்கப்பட்டதைப் போலத் தோன்றுகிறது.

இதன் கட்டுமானத்தில் ஜோத்பூரின் இளஞ்சிவப்பு நிறக் கற்களும், கிஸ்ரியின் உள்ளூர் மஞ்சள் நிறக் கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மொஹட்டா அரண்மனை மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.

அதன் குவிமாடங்கள் அழகைக் கூட்டுகின்றன. அதேபோல், வளைவுகள், மினாராக்கள் மற்றும் செதுக்கப்பட்ட ஓடுகளும் காண்பதற்கு அழகாக உள்ளன.

இந்தக் கட்டடத்தில் வலிமையான பர்மா தேக்கு மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கற்களில் மயில்கள் மற்றும் மலர் வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சாமந்திப் பூ வடிவங்கள் குறிப்பாகத் தனித்து நிற்கின்றன.

ஒரு காலத்தில், இதன் கூரையில் ஒரு சிறிய கோயில் இருந்தது.

காலப்போக்கில், அந்தப் பகுதியில் உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டதால், மொஹட்டா அரண்மனையின் மொட்டை மாடியிலிருந்து கடலைப் பார்க்கும் காட்சி முன்புபோல் பிரமிக்கத்தக்கதாக இல்லை.

ஒரு காலத்தில், இங்கிருந்து கடலின் மிக அழகான காட்சியைக் காண முடிந்தது.

சுரங்கப்பாதை எங்கே போனது?

மொஹட்டா அரண்மனையின் உள்ளே ஒரு சுரங்கப்பாதை இருந்தது. அது அருகிலிருந்த ஒரு கோயிலுக்குச் சென்றது.

அரண்மனையில் வசித்தவர்கள் இந்தச் சுரங்கப்பாதை வழியாகக் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவார்கள்.

ஆனால், காலப்போக்கில் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், சுரங்கப்பாதை மூடப்பட்டது. இப்போது அது நினைவின் ஒரு பகுதியாக மட்டுமே உள்ளது.

பாகிஸ்தான் உருவான பிறகு என்ன நடந்தது?

மொஹட்டா அரண்மனை
Farzaan Rasheed
மொஹட்டா அரண்மனையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் ஏராளமான ஓவியங்களும் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தான் அரசியல்வாதியான குன்வர் காலித் யூனுஸ், 'டான்' நாளிதழுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், 2004-ம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றபோது வயதான ஒருவரைச் சந்தித்தது குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த முதியவர், அரசாங்க அலுவலகங்கள் கட்டப்படவிருப்பதாகக் கூறி, மொஹட்டா அரண்மனையைக் காலி செய்யுமாறு செத் சிவ் ரத்தன் மொஹட்டாவிடம் செல்வாக்குமிக்க அரசியல் பிரமுகர் ஒருவர் கேட்டுக்கொண்டதாக அவரிடம் தெரிவித்திருந்தார்.

குன்வர் காலித் யூனுஸின் கூற்றுப்படி, இதற்குப் பிறகு சிவ் ரத்தன் மொஹட்டா பாகிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

அரண்மனையின் சாவிகளைத் தனது மேலாளரிடம் ஒப்படைத்த அவர், அந்தச் சாவிகளை அரசியல் பிரமுகரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டு ஒரு குறிப்பையும் வழங்கினார்.

அந்தக் குறிப்பில், தன்னிடம் கேட்டிருந்தால் அரண்மனையை அன்பளிப்பாகவே வழங்கியிருப்பேன் என்றும், அதற்குப் பதிலாக அதைக் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மையில், பாகிஸ்தான் உருவான பிறகு சிவ் ரத்தன் மொஹட்டா கராச்சியிலேயே தங்க விரும்பினார். ஆனால், அவருக்குச் சாதகமற்ற சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டதால், மும்பைக்குச் செல்ல அவர் முடிவு செய்தார்.

இது தொடர்பாக, மூத்த பாகிஸ்தான் அரசு அதிகாரியான சையத் ஹாஷிம் ரஸா தனது 'ஹமாரி மஞ்சில்' என்ற புத்தகத்தின் 96 மற்றும் 97-வது பக்கங்களில் மற்றொரு முக்கியமான தகவலை குறிப்பிட்டுள்ளார்.

"சிவ் ரத்தன் மொஹட்டா மிகவும் செல்வந்தர்களில் ஒருவராக இருந்தார். கராச்சியில் அவருக்குப் பல வீடுகள் இருந்தன. ஆனால், அவர் மொஹட்டா அரண்மனையில் வசிப்பதையே விரும்பினார்."

"வெளியுறவு அமைச்சக அலுவலகத்தை அமைப்பதற்காக இந்தக் கட்டடம் தேர்ந்தெடுக்கப்பட்டது."

"ஆகஸ்ட் 14-ம் தேதி மாலை, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் ஆளுநர் ஜெனரலின் இல்லத்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் சிவ் ரத்தன் மொஹட்டாவும் ஒருவர்."

"அவர் முகமது அலி ஜின்னாவைச் சந்தித்து, பாகிஸ்தானின் ஆளுநர் ஜெனரலாகப் பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். முகமது அலி ஜின்னாவும் அவருடன் அன்புடன் கைகுலுக்கினார்."

"தனது வீடான மொஹட்டா அரண்மனையைத் திரும்பப் பெறுவது குறித்து அரசாங்கத்திடம் பேசுவதற்கு இதுவே சிறந்த வாய்ப்பு என்று சிவ் ரத்தன் மொஹட்டா நினைத்தார்."

"மொஹட்டா அரண்மனை அரசாங்க அலுவலகங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து முகமது அலி ஜின்னாவிடம் தெரிவிக்குமாறு என்னிடம், அதாவது ஹாஷிம் ரஸாவிடம், அவர் கேட்டுக்கொண்டார்."

"ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வைத்திருப்பவர்களின் வீடுகளை மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம் என்று முகமது அலி ஜின்னாவிடம் தெரிவித்தேன்."

"கராச்சியில் மொஹட்டாவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன என்றும், அவர் வேறொரு வீட்டுக்குச் செல்லலாம் என்றும் அவரிடம் கூறினேன்."

"அதற்குப் பதிலளித்த மொஹட்டா, அந்த வீடுகளில் தனக்குப் பிடித்தமான வீடு இதுதான் என்று கூறினார்."

"அவர் முகமது அலி ஜின்னாவிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறிய ஜின்னா, மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்."

"இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களிடம் நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்."

"இதைக் கேட்ட சிவ் ரத்தன் மொஹட்டா அதிர்ச்சியடைந்தார்."

பாகிஸ்தான் உருவான பிறகு, ஆகா ஹிலாலி அங்கு தலைமை நெறிமுறை அதிகாரியாக இருந்தார்.

பாகிஸ்தான் உருவான பிறகு சிவ் ரத்தன் மொஹட்டா கராச்சியிலேயே தங்க விரும்பினார். ஆனால், அவருக்குச் சாதகமற்ற சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டதால், மும்பைக்குச் செல்ல அவர் முடிவு செய்தார்.
Farzaan Rasheed

வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலகங்கள் மொஹட்டா அரண்மனையில் கட்டப்பட்டிருந்தாலும், அது நகரத்திலிருந்து தொலைவில் இருந்ததால், ஊழியர்கள் அங்கு சென்று வருவதில் சிரமங்களை எதிர்கொண்டனர் என்று அவர் எழுதியிருந்தார்.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், சதார் பகுதியில் உள்ள எம்பிரஸ் சந்தையிலிருந்து பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்தப் பேருந்து ஊழியர்களை மொஹட்டா அரண்மனைக்கு ஏற்றிச் சென்று வந்தது.

அந்தக் காலகட்டத்தில் கிளிஃப்டன் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. கடல் நீரும் மணலும் மட்டுமே அங்கு காணப்பட்டன.

கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத்துக்குப் பாகிஸ்தானின் தலைநகர் மாற்றப்பட்ட பிறகு, மொஹட்டா அரண்மனை வெறிச்சோடியது.

ஜின்னாவின் சகோதரி இங்கு வசித்து வந்தார்

மொஹட்டா அரண்மனை
Farzaan Rasheed
மொஹட்டா அரண்மனையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் ஏராளமான ஓவியங்களும் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.

"கிளிஃப்டனுக்குச் செல்லும் வழியில் என் தந்தை பார்த்த இந்த அரண்மனை என்ன என்று அவரிடம் கேட்கும் குழந்தை நான் மட்டுமல்ல."

"பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் சகோதரி ஃபாத்திமா ஜின்னா இங்கு வசித்தார் என்பதுதான் அதற்கான பதில்."

அது எளிமையான, நேரடியான பதிலாக இருந்தது. என்னைப் போன்ற ஒவ்வொரு குழந்தையும் கிளிஃப்டனுக்குச் செல்லும் வழியில் இந்தக் கட்டடம் குறித்து கேட்டபோது இதே பதிலைத்தான் பெற்றிருப்பார்கள்.

பாகிஸ்தானின் நிறுவனரான முகமது அலி ஜின்னாவுக்குச் சொந்தமான மும்பை வீட்டைவிட, ஃபாத்திமா ஜின்னா மொஹட்டா அரண்மனையைத் தேர்ந்தெடுத்தார்.

ஆரம்பத்தில் இந்தக் கட்டடத்தில் அவருக்கு ஆர்வம் இல்லையென்றாலும், பின்னர் அங்கு வசிக்கத் தொடங்கினார்.

இந்தக் கட்டடம் ஃபாத்திமா ஜின்னாவிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அதன் நிலை மிகவும் மோசமாக இருந்தது.

பறவைகளின் கூடுகளையும் சிலந்தி வலைகளையும் அகற்றி, கட்டடம் சுத்தம் செய்யப்பட்டது.

இவ்வாறு, மொஹட்டா அரண்மனை சில காலம் 'கஸ்ர்-இ-ஃபாத்திமா' என்று அழைக்கப்பட்டது.

ஃபாத்திமா ஜின்னாவின் தோழியான பேகம் ஷாயிஸ்தா இக்ரமுல்லா, 'டான்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.

பேகம் ஷாயிஸ்தா இக்ரமுல்லா, மொராக்கோவுக்கான பாகிஸ்தான் தூதராகப் பணியாற்றினார். அவரது மகள் இளவரசி சர்வத், ஜோர்டானின் இளவரசர் ஹசன் பின் தலாலைத் திருமணம் செய்துகொண்டார்.

பேகம் ஷாயிஸ்தா இக்ரமுல்லா, "ஒரு மாலை வேளையில் ஃபாத்திமா ஜின்னா என்னை மொஹட்டா அரண்மனையின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து கடலைப் பார்க்கும் காட்சி மிகவும் அழகாக இருந்தது." என குறிப்பிட்டுள்ளார்.

"ஃபாத்திமா ஜின்னா முதன்முதலில் இந்த அரண்மனையில் வசிக்க வந்தபோது, இந்த இடம் மிகவும் பெரியதாக இருக்கிறதா என்று நான் அவரிடம் கேட்டேன்."

"அதற்கு அவர், 'இல்லை, எனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது' என்று பதிலளித்தார்."

"அது வியாழக்கிழமை மாலை. அவர்கள் அரண்மனையில் இரவு உணவு சாப்பிட்டனர்."

"லேடி ஹிதாயத்துல்லாவின் கூற்றுப்படி, அன்று இரவு அப்துல்லா ஷா காஜியின் தர்காவில் கவ்வாலி நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்கள் இரவு முழுவதும் அங்கேயே அமர்ந்து கவ்வாலியைக் கேட்டுக்கொண்டிருந்தனர்."

அயூப் கானுக்கு எதிரான இயக்கம்

ராணுவ ஆட்சியாளரான அயூப் கானை எதிர்த்து ஃபாத்திமா ஜின்னா அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.

அந்த நேரத்தில், மொஹட்டா அரண்மனை 'கஸ்ர்-இ-ஃபாத்திமா'வாக மாறியிருந்தது. ஃபாத்திமா ஜின்னாவின் தேர்தல் பிரசாரம் மற்றும் இயக்கத்துக்கான முக்கிய மையமாக அது விளங்கியது.

ஃபாத்திமா ஜின்னா மொஹட்டா அரண்மனையில் சுமார் மூன்றரை ஆண்டுகள் வசித்தார். பின்னர் அங்கேயே உயிரிழந்தார்.

அவரது மரணம் இயற்கையான முறையில் நிகழவில்லை என்று இன்றுவரை நம்பப்படுகிறது.

ஃபாத்திமா ஜின்னா உயிருடன் இருந்தவரை, தனது அன்புக்குரிய சகோதரர் முகமது அலி ஜின்னாவின் நினைவு தினத்தைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வந்தார்.

போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறப்புச் சமையல் கலைஞரைக் கொண்டு பிரியாணி தயாரிக்கச் செய்து, மக்களுக்கு அவர் உணவு வழங்குவார்.

மொஹட்டா அரண்மனையில் ஃபாத்திமா ஜின்னா பயன்படுத்திய பல பொருட்களும் இரண்டு கார்களும் தற்போது ஃபிளாக் ஸ்டாஃப் ஹவுஸில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

உரிமைத் தகராறு

மொஹட்டா அரண்மனை
Farzaan Rasheed
மொஹட்டா அரண்மனையில் பெண்களுக்கான மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி ஒன்று திறக்கப்பட வேண்டும் என ஷிரின் ஜின்னா விரும்பினார்.

ஃபாத்திமா ஜின்னாவின் மறைவுக்குப் பிறகு, அவரது சகோதரி ஷிரீன் ஜின்னா மொஹட்டா அரண்மனையில் வசிக்கத் தொடங்கினார்.

1980-ம் ஆண்டு அவர் இறக்கும் வரை அங்கேயே வசித்தார். ஆனால், அதற்கு முன்பே மொஹட்டா அரண்மனையின் உரிமை தொடர்பாகப் பிரச்னை வெடித்தது. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கும் சென்றது.

இந்தப் பிரச்னையின் விளைவாக, நீதிமன்ற உத்தரவின்படி மொஹட்டா அரண்மனைக்கு சீல் வைக்கப்பட்டது.

மொஹட்டா அரண்மனையில் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்று ஷிரீன் ஜின்னா விரும்பினார்.

இதற்காக அவர் ஓர் அறக்கட்டளையையும் உருவாக்கினார். ஆனால், அவரது உறவினர்கள் அந்தக் கட்டடத்தின் மீது உரிமை கோரத் தொடங்கினர்.

2021 ஆம் ஆண்டு அக்டோபரில், சிந்து உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வும் மொஹட்டா அரண்மனையில் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க உத்தரவிட்டது.

ஆனால், சட்டரீதியான சிக்கல்கள் காரணமாக இந்த உத்தரவைச் செயல்படுத்த முடியவில்லை.

1995 ஆம் ஆண்டு, தனது பதவிக் காலத்தில், மொஹட்டா அரண்மனையை வாங்குவதற்காக பெனாசிர் பூட்டோ சிந்து அரசாங்கத்துக்கு பெருந்தொகையை வழங்கினார்.

இதற்குப் பிறகு, அதன் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்காக சமூகத் துறையுடன் தொடர்புடையவர்களைக் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு இன்றும் மொஹட்டா அரண்மனையைப் பண்பாட்டு மரபுச் சின்னமாகப் பராமரித்து வருகிறது.

மொஹட்டா அரண்மனை சிந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது, அது சிதிலமடைந்த நிலையில் இருந்தது.

அதன்பிறகு, சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. அங்கு ஓர் அருங்காட்சியகத்தை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அந்த அருங்காட்சியகம் 1999 ஆம் ஆண்டு பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.

மொஹட்டா அரண்மனை மூடப்பட்டிருந்த காலத்தில், அதைப் பற்றி பல்வேறு கதைகள் பரவின.

இந்த மாளிகையில் பேய்கள் இருப்பதாகவும், ஆவிகளும் பேய்களும் அங்கு வசிப்பதாகவும் கூறப்பட்டது. அந்த வழியாகச் செல்வதற்குக்கூட மக்கள் அஞ்சினர்.

மொஹட்டா அரண்மனை அருங்காட்சியகத்தில் என்ன இருக்கிறது?

மொஹட்டா அரண்மனையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்துக்குள் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க அனுமதி இல்லை.

ஆனால், புகைப்படம் எடுப்பதற்காக பிபிசி இந்திக்கு அருங்காட்சியக நிர்வாகம் சிறப்பு அனுமதி வழங்கியது.

இந்த அருங்காட்சியகம் அரண்மனையின் தரைத்தளத்திலும் முதல் தளத்திலும் அமைந்துள்ளது.

புகைப்படங்கள் மற்றும் அரிய பொருட்கள் மூலம், சிந்து பகுதியின் மட்டுமின்றி ஒட்டுமொத்தப் பிராந்தியத்தின் பல்வேறு பழங்கால நாகரிகங்களைப் பற்றி இது எடுத்துரைக்கிறது.

இங்கு நகைகள், நாணயங்கள், துணி வகைகள் மற்றும் பல்வேறு கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் ஆரம்பகால நாணயத் தாள்களும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. அவை பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் பதிவுகளில்கூட இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

மொஹட்டா அரண்மனையில் உள்ள உலோகம் மற்றும் கற்களால் செய்யப்பட்ட சிற்பங்களும் பார்வையாளர்களைக் கவர்கின்றன. அவற்றில் விக்டோரியா மகாராணியின் சிலையும் ஒன்று.

ஆனால், தற்போது இந்தச் சிலைகள் மூடப்பட்டுள்ளன. சிறப்பு நிகழ்வுகளின்போது மட்டுமே அவை திறக்கப்படுகின்றன.

இந்தச் சிலைகள் முன்பு நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. தற்போது அவை இங்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

மொஹட்டா அரண்மனையில் தற்போது நுண்கலைக் கண்காட்சிகளும் முஷாயிராக்களும் (கவிதை நிகழ்ச்சிகள்) தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இன்று, கிளிஃப்டன் பகுதியில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் புகழ்பெற்ற இல்லமான '70 கிளிஃப்டன்' என்பதும் இங்குதான் அமைந்துள்ளது.

ஆனால், இத்தனை காலம் கடந்த பிறகும், மொஹட்டா அரண்மனையிடம் இருக்கும் வசீகரத்துக்கும் மாயாஜாலத் தன்மைக்கும் இணையாக வேறெந்தக் கட்டடமும் இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!