மதுரை, காளவாசல் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள 'தனிஷ்க்' நகைக்கடையில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன், "இன்று (நவம்பர் 12) அதிகாலை மூன்று மணிக்கு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. நகைக்கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மொத்த தங்க நகைகளில் சுமார் 30 சதவீதம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்றுவருகிறது" என்றார்.
"தனிஷ்க் நிறுவனம் சார்பில் முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 கிலோ தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று விசாரணை அதிகாரியான மதுரை மாநகர துணை ஆணையர் இனிகோ திவ்யன் தெரிவித்தார்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த நகைக்கடை திறக்கப்பட்டு 15 நாட்களே ஆகியுள்ள நிலையில், இதுவரை முறையான திறப்பு விழா நடைபெறவில்லை என்றும், கடையின் உள் அலங்காரம் உள்ளிட்ட சில பணிகளும் முழுமையாக நிறைவடையவில்லை என்றும் பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவரா அல்லது பலரா என்பதை கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திருடர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள், எவ்வளவு நேரம் உள்ளே இருந்தார்கள், தப்பிச் செல்லும்போது எந்த வழியைப் பயன்படுத்தினார்கள் என்பதை அறிய, ஷோரூம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் தடயவியல் ஆதாரங்களை சேகரிக்கும் பணியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மதுரை எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு