தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், விளக்குகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட்டம் எனப் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். இவற்றுடன் பிரிக்க முடியாத ஒன்றாகப் பட்டாசுகளும் மாறிவிட்டன.
தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பது பலருக்கு மகிழ்ச்சியின் அடையாளமாக, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இந்த வழக்கம் எப்போது தொடங்கியது?
பட்டாசுகளின் வரலாறு, நாம் நினைப்பதைவிடப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது. போர், வேட்டை, அரச விழாக்கள், மதச் சடங்குகள் எனப் பல்வேறு சூழல்களில் வெடிபொருள்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதையும், அவை படிப்படியாக தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக மாறியதையும் வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் பார்க்கலாம்.
1. தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது பற்றிப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதா?
புராணங்கள் மற்றும் பண்டைய நூல்களில் இடம்பெற்றுள்ள குறிப்புகளை ஆராய்ந்தால், தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை என்றார் பஞ்சாப் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் ராஜீவ் லோச்சன்.
"பழமையான இலக்கியங்களிலும் புராணங்களிலும் தீபாவளியன்று பட்டாசு வெடித்துக் கொண்டாடியதற்கான தெளிவான குறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை. மாறாக, வீடுகளில் விளக்கேற்றிக் கொண்டாடியதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன."
"வீடுகளின் வாசலில் விளக்கேற்றுவது, நெய் விளக்குகளை ஏற்றுவது போன்ற வழக்கங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால், பட்டாசு வெடிப்பது பற்றிய குறிப்புகள் இல்லை" என்கிறார் அவர்.
2. பட்டாசு வெடிக்கும் வழக்கம் எங்கிருந்து வந்தது?
பட்டாசு வெடித்து ஒலி எழுப்புவது சீன மரபுடன் தொடர்புடையது. பட்டாசுகளின் பெரும் சத்தத்தைக் கேட்டு தீய சக்திகள், தீய எண்ணங்கள், துரதிர்ஷ்டங்கள் ஓடிவிடும் என்றும், அதன் மூலம் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்றும் சீனாவில் நம்பப்பட்டது.
இந்தியாவில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெங்காலி பௌத்த மதகுருவான ஆதிஷ் தீபாங்கர் இந்தக் கருத்தை அறிமுகப்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சீனா, திபெத், கிழக்கு ஆசியப் பகுதிகளில் இருந்து அவர் இந்த நம்பிக்கையைக் கற்றிருக்கலாம்.
இந்தியாவின் ரிக் வேதத்தில் நிர்ரிதி என்ற பெயரில் துரதிர்ஷ்டம் மற்றும் அழிவுடன் தொடர்புடைய தெய்வம் குறிப்பிடப்படுகிறார். பிற்கால இந்து மரபுகளில் அவர் தென்மேற்கு திசையின் காவல் தெய்வமாகவும் கருதப்படுகிறார். ஆனால், பட்டாசு வெடித்து நிர்ரிதியை விரட்டும் வழக்கம் இருந்ததாக பண்டைய நூல்களில் குறிப்பிடப்படவில்லை. மாறாக, 'தேவி, இப்போதே நீ சென்றுவிடு. திரும்பி வராதே' என்று அவரிடம் வேண்டிக் கொள்ளப்படுவதாகவே கூறப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் பழங்காலத்திலேயே பட்டாசு தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்ததா?
ஆம். சிறப்பு ஒளியையும் ஒலியையும் உருவாக்கும் வகையில் வெடிக்கும் கருவிகளைப் பற்றிய அறிவு இந்தியாவில் பழங்காலத்திலேயே இருந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய கருவிகள் இந்திய புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில், வேகமாக எரிந்து வலுவான தீப்பிழம்புகளை உருவாக்கக் கூடிய ஒரு தூள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அந்தத் தூளை ஒரு குழாயில் அடைத்தால், அது பட்டாசாக மாறும் என்று விளக்கப்பட்டுள்ளது.
4. பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட தூள் எவ்வாறு தயாரிக்கப்பட்டது?
வங்காளப் பகுதியில் மழைக் காலம் முடிந்த பிறகு, பல இடங்களில் காய்ந்த நிலப்பரப்பில் உப்புப் படலம் உருவாகும். இந்த உப்பை நன்றாக அரைத்தால், அது விரைவாக எரியக்கூடிய பொடியாக மாறும். அதனுடன் சரியான அளவில் கந்தகத்தையும் நிலக்கரித் தூளையும் கலந்தால், அதன் எரியும் தன்மை மேலும் அதிகரிக்கும்.
இத்தகைய உப்பு இயற்கையாகக் கிடைக்காத பகுதிகளில், நல்ல தரமான மரச்சாம்பலைக் கழுவி இந்த உப்பைத் தயாரித்தனர். மருத்துவர்களும் இந்த உப்பைப் பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தினர்.
இந்தப் பொடியும், இதிலிருந்து தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துப் பொடியும் ஏறக்குறைய இந்தியா முழுவதும் கிடைத்தன. ஆனால், இந்தப் பொடி பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அதாவது, எளிதில் தீப்பற்றக் கூடிய பொடியைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்தபோதிலும், அது தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளில் பட்டாசு வெடிக்கப் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
5. இந்தியாவில் வெடிமருந்துப் பொடி எப்போது பயன்பாட்டுக்கு வந்தது?
வெடிமருந்துப் பொடியைப் பயன்படுத்தும் முறை இந்தியாவில் அறிமுகமானது குறித்து வரலாற்றில் சில முக்கியக் குறிப்புகள் உள்ளன. 1270ஆம் ஆண்டில் சிரியாவை சேர்ந்த வேதியியலாளர் ஹசன் அல்-ரம்மா தனது நூலில் இந்த வகை வெடிமருந்துப் பொடி பற்றிய குறிப்பை முதன்முதலில் எழுதியதாக நம்பப்படுகிறது.
வெடிமருந்துப் பொடியைச் சுடுநீரைப் பயன்படுத்திச் சுத்திகரிப்பதன் மூலம் அதன் வெடிக்கும் திறனை மேலும் அதிகரிக்க முடியும் என்றும் அவர் விளக்கியிருந்தார். அந்தக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துப் பொடி எதிரிகளைக் கொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கவில்லை.
6. முகலாயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் பட்டாசு வெடிக்கும் வழக்கம் தொடங்கியதா?
இந்தக் கருத்து முழுமையானதல்ல என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். 1526ஆம் ஆண்டு காபூலின் சுல்தான் பாபர், முகலாயப் படைகளுடன் டெல்லி சுல்தானிய அரசைத் தாக்கினார். அப்போது பாபரின் படைகள் பயன்படுத்திய துப்பாக்கிகளின் சத்தத்தைக் கேட்டு இந்திய வீரர்கள் அச்சமடைந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவில் கோவில்களிலும் நகரங்களிலும் பட்டாசு வெடிக்கும் வழக்கம் ஏற்கெனவே பரவலாக இருந்திருந்தால், போர்க்களத்தில் இருந்த துணிச்சலான வீரர்கள் இத்தகைய பெரும் சத்தத்தைக் கேட்டு அச்சமடைந்திருக்க மாட்டார்கள் என்பது சிலரது வாதம்.
முகலாயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் பட்டாசுகளும் வாண வேடிக்கைகளும் அறிமுகமாகின என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தக் கருத்து முழுமையான வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
7. முகலாயர்களுக்கு முன்பே இந்தியாவில் பட்டாசுகள் இருந்தனவா?
"ஆம். முகலாயர் காலத்தில் பட்டாசுகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அவர்கள்தான் இந்தியாவுக்கு பட்டாசுகளைக் கொண்டு வந்தார்கள் என்று கூறுவது சரியாக இருக்காது. பட்டாசுகள் அதற்கு முன்பே இந்தியாவில் இருந்துள்ளன" என்கிறார் முகலாய வரலாற்றுப் பேராசிரியர் நஜப் ஹைதர்.
இதற்கான சான்றுகளாகச் சில வரலாற்று ஓவியங்களும் உள்ளன. முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மூத்த மகனான தாரா ஷிகோவின் திருமணத்தைக் காட்டும் ஓவியத்தில், மக்கள் பட்டாசு வெடிப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டாசுகள் முகலாயர்களுக்கு முன்பே இந்தியாவில் இருந்துள்ளன. ஃபெரோஷ் ஷா ஆட்சிக் காலத்தில்கூட வான வேடிக்கைகள் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன.
துப்பாக்கித் தூள் பின்னர்தான் இந்தியாவுக்கு வந்தது. ஆனால், பட்டாசுகள் அதற்கு முன்பே அறிமுகமாகிவிட்டன. வேட்டையாடும்போதும், யானைகளுடன் மோதல்களில் ஈடுபடும்போதும் பட்டாசுகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. யானைகளை அச்சுறுத்தி விரட்டுவதற்காகப் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பின்னர், முகலாயர் காலத்தில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்களிலும் பட்டாசுகளும் வான வேடிக்கைகளும் பயன்படுத்தப்பட்டன.
8. தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது?
இந்தியாவில் பட்டாசுகளின் வரலாறு குறித்து ஆய்வு செய்த பி.கே. கோடே, தனது 'இந்தியாவில் பட்டாசுகளின் வரலாறு' (The History of Fireworks in India) என்ற ஆய்வில், 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு முக்கியமான குறிப்பைச் சுட்டிக்காட்டுகிறார். பேஷ்வா பக்கர் (Peshwa Bakhar) என்ற வரலாற்று ஆவணத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, "ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் தீபாவளி நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டது. அந்த நாள்களில் ஏராளமான விளக்குகள் ஏற்றப்பட்டதுடன், நகருக்கு வெளியே பட்டாசுகளைக் கொண்டு வான வேடிக்கைக் காட்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு 'பஹாரி லங்கா' அல்லது 'லங்கா பட்டாசுக் காட்சி' என்று பெயரிடப்பட்டிருந்தது."
அந்தக் காட்சியில் ராவணனின் உருவம் நடுவில் வைக்கப்பட்டிருந்தது. அரக்கர்கள், குரங்குகள், பெரிய அனுமன் உருவம் ஆகியவையும் வெடிமருந்துகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. அனுமனின் வாலுக்குத் தீ வைக்கப்பட்டதும், அவர் வானில் பறந்து லங்கையில் உள்ள வீடுகளுக்குத் தீ வைப்பது போன்ற காட்சி உருவாக்கப்பட்டதாக அந்த ஆவணம் விவரிக்கிறது. கோட்டா மன்னரின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் பி.கே. கோடே குறிப்பிடுகிறார்.
இந்தக் காட்சி குறித்த செய்தி, பேஷ்வா சவாய் மாதவ ராவுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்காகவும் இதேபோன்ற பட்டாசுக் காட்சியை ஏற்பாடு செய்ய மகாத்ஜி சிந்தியாவுக்கு பேஷ்வா உத்தரவிட்டதாக அந்தக் குறிப்பு கூறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் 15 நாட்களில் செய்யப்பட்டு, புனேவில் பர்வதி மலை அடிவாரத்தில் இரவு நேரத்தில் பட்டாசுக் காட்சி நடத்தப்பட்டது. பேஷ்வாவும் அவரது முக்கிய அதிகாரிகளும் இதைப் பார்வையிட்டதுடன், ஏராளமான பொது மக்களும் அந்த நிகழ்ச்சியைக் கண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் பேஷ்வா பக்கர் நூலில் இடம்பெற்று இருப்பதாகவும், அந்த நூல் பேஷ்வா ஆட்சியின் இறுதிக் காலத்தில் எழுதப்பட்டு, 1925இல் கே.என். சானே என்பவரால் தொகுத்து வெளியிடப்பட்டதாகவும் கோடே தெரிவிக்கிறார்.
இதன் மூலம், குறைந்தது 18ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் தீபாவளியின்போது பட்டாசு வெடிக்கும் வழக்கம் இருந்ததற்கான எழுத்துபூர்வமான சான்று கிடைக்கிறது. எனினும், இதுவே அந்த வழக்கத்தின் தொடக்கம் என்று உறுதியாகக் கூற முடியாது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு