மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் அவரது ஓட்டுநர் காயமடைந்தார்.
பிபிசி நியூஸ் மராத்தியின் தகவல்படி, மும்பை ஜூஹூ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. மும்பை மேற்கு மண்டலம் 2-ன் காவல் துணை ஆணையர் மோஹித் கார்க், டைகர் ஷெராஃப் சம்பந்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
மும்பை காவல்துறையின் தகவல்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் டைகர் ஷெராஃபின் ஓட்டுநர் ஃபிர்தௌஸும் ஒருவர்; அவரது இடது கையில் குண்டு பாய்ந்துள்ளது.
காவல் துணை ஆணையர் மோஹித் கார்க் கூறுகையில், "டைகர் ஷெராஃப் பாதுகாப்பாக இருக்கிறார். அவர் மீது குண்டு பாயவில்லை, அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்தச் சம்பவம் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. ஆரம்பகட்ட தகவல்களின்படி, அவர் தனிப்பட்ட வேலைக்காக அங்கு வந்திருந்தார். வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகள், மாநில முதலமைச்சர் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
ஏஐஎம்ஐஎம் தலைவர் வாரிஸ் பதான், இதை "சட்டம்-ஒழுங்கின் முழுமையான தோல்வி" என்று வர்ணித்தார்.
காவல்துறை கூறுவது என்ன?
மும்பை காவல் துணை ஆணையர் மோஹித் கார்க் செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பை காவல்துறை பல குழுக்களை அமைத்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "டைகர் ஷெராஃப் தனது காரில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது. அவர் மீது குண்டு பாயவில்லை, அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார்" என்றார்.
"தடயவியல் நிபுணர்கள் குழு ஆரம்பக்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. தற்போது சுமார் 15 குழுக்கள் இந்த வழக்கில் ஈடுபட்டுள்ளன. கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது அவை பகிரப்படும்."
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "எத்தனை ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதை இப்போதே தெரிவிப்பது சரியாக இருக்காது" என்று கூறினார்.
தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறியவும், அவர்கள் தப்பிச் சென்ற பாதையைக் கண்டறியவும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக மும்பை காவல்துறை தெரிவித்ததாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மூத்த காவல் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் சூழலை ஆய்வு செய்தனர்.
'பிரபலங்களின் பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்படும்'
ஜாக்கி ஷெராஃப் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோரிடம் தான் பேசியதாக மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
"டைகரிடம் கவலைப்பட வேண்டாம் என்று கூறினேன். அரசு அவருடன் இருக்கிறது, அவர் அச்சப்படத் தேவையில்லை. அனைத்துப் பிரபலங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நாங்கள் மறுஆய்வு செய்வோம்; அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது" என்று அவர் கூறினார்.
"யாராவது மற்றவர்களை அச்சுறுத்தவோ அல்லது மிரட்டவோ முயன்றால், காவல்துறையும் அரசும் அவர்களைச் சும்மா விடாது." என்றார் அவர்.
எதிர்க்கட்சிகள் கேள்வி
காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மும்பையில் என்னதான் நடக்கிறது?" என்று பதிவிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "பாபா சித்திக்கின் படுகொலை, சல்மான் கானின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு, பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் என மும்பையில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. இங்கே சட்டத்தின் ஆட்சி இல்லை, அராஜகமே நிலவுகிறது. முதலமைச்சர் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "மும்பையில் சட்டம்-ஒழுங்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு நபர் காயமடைந்ததாகத் தகவல்கள் வருகின்றன. குற்றவாளிகளுக்குச் சட்டத்தைப் பற்றிய பயமே இல்லையா? மும்பை மக்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கமும் உள்துறை அமைச்சகமும் பதில் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் பிரிவு) ரோஹித் பவார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மும்பையில் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ஷ்டவசமாக, டைகர் ஷெராஃப் பாதுகாப்பாக உள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
"ஆனால், இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: மாநிலத்தின் முக்கிய நபர்களே பாதுகாப்பாக இல்லை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு எங்கே போனது? மாநிலத்தின்தலைநகரிலேயே ரவுடிகளின் அச்சம் இவ்வளவு அதிகமாக இருந்தால், எந்தத் தொழிலதிபர் இங்கே முதலீடு செய்வார்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், "அரசாங்கம் முதலில் மாநிலத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும்; அது இயலவில்லை என்றால், உள்துறை அமைச்சகத்தை திறமையான ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறினார்.
தாக்குதலுக்கு உள்ளான பாலிவுட் பிரபலங்கள்
சமீபகாலமாக, திரைப்படத் துறையைச் சேர்ந்த பல கலைஞர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர் அல்லது குறிவைக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 2024-ல், மும்பையில் உள்ள சல்மான் கானின் வீட்டின் முன்பும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில், நடிகர் சயீப் அலிகான் அவரது இல்லத்தில் இரவு நேரத்தில் கத்தியால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவர், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதற்கு முந்தைய ஆண்டு, அதாவது 2024-ல், 'கிரைம் பேட்ரல்' தொலைக்காட்சித் தொடரில் நடித்த நடிகர் ராகவ் திவாரியும், சாலைத் தகராறு ஒன்றின் போது தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு