Skip to main content

Advertisement

நாகை: 'ரூ.100 கோடி' போதைப்பொருளை பறிமுதல் செய்தது எப்படி? வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தகவல்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
நாகையில் 137 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
PIB Chennai

நாகை மாவட்ட கடற்கரையில் உளவுத்துறை தகவலின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வுப் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டப்படும் தவெக நிர்வாகி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த நிலையில், யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது?

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கூறுவது என்ன?

நாகை மாவட்ட கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் செய்திக்குறிப்பு ஒன்றை இன்று (18.10.2026) வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் தடைசெய்யப்பட்ட செயற்கை போதைப்பொருளான கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைனை (மொத்தம் 137 கிலோ) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அதன்படி, "நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு கடற்கரைப் பகுதிக்கு, போதைப்பொருள் அடங்கிய தொகுப்பு ஒன்று கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த துல்லியமான உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், வெள்ளி நிறத் தாள்களால் சுற்றப்பட்ட 27 பொட்டலங்கள் அடங்கிய ஆறு பைகள் கண்டெடுக்கப்பட்டன.

அந்தப் பொட்டலங்களுக்குள், அதிகத் தூய்மை கொண்ட மெத்தாம்பெட்டமைன் என்று சந்தேகிக்கப்படும் வெண்ணிறப் படிகப் பொருள் இருந்தது. போதைப்பொருள் மற்றும் மனோவியல் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் சட்டத்தின் (என்டிபிஎஸ் சட்டம் -1985) கீழ், இந்தப் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் என்று சந்தேகிக்கப்பட்டவரின் இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டதாகவும் ​​போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாகக் கருதப்படும் 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் செய்திக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்திக் குறிப்பின்படி, போதைப்பொருட்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி, கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களின் மதிப்பு, சட்டவிரோத போதைப்பொருள் சந்தையில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் செய்திக்குறிப்பில் கைது செய்யப்பட்ட நால்வரின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும், நாகை மாவட்டத்தில் போதைப்பொருள் பறிமுதல் குறித்த செய்தி வெளியான கடந்த வெள்ளிக்கிழமையே (16.10.2026), தவெக நிர்வாகியான பூபாலன் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்தது.

தவெக நாகை மாவட்டச் செயலாளர் எம். சுகுமாரன் வெளியிட்டிருந்த அறிக்கையில், போதைப்பொருள் வழக்கில் கைதான வழக்கறிஞர் பூபாலன் உடனடியாக நீக்கப்படுவதாக அறிவித்தார்.

"நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த திருப்பூண்டியை சேர்ந்த வழக்கறிஞர் பூபாலன் மீது உயர் ரக போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் அவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு உளவுத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் நற்பெயருக்கு முற்றிலும் முரணாக செயல்பட்டதன் காரணமாக பூபாலனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். இனி பூபாலனுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கட்சி நிர்வாகிகள் அவருடன் கட்சி ரீதியாகத் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது" என்று தனது அறிக்கையில் தவெக நாகை மாவட்டச் செயலாளர் எம். சுகுமாரன் தெரிவித்திருந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலின்போது தவெகவின் தேர்தல் பொறுப்பாளராக பூபாலன் செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுக விமர்சனம்

நாகையில் 137 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
Facebook/MK Stalin
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தவெகவை விமர்சித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

தவெகவை "கெட்ட கட்சி" என்று விமர்சித்துள்ள அவர், தற்போது அது "கெட்ட கட்சி மட்டுமல்ல, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கட்சியாகவும்" மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே சோதனையில் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து ஒட்டுமொத்த வலையமைப்பையும் விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே தவெக மீது இத்தகைய விமர்சனங்கள் எழுந்திருப்பதாகவும் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நாகையில் 137 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
X/ADMK
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)

போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டது குறித்து அதிமுக விமர்சித்துள்ளது.

அதிமுக ஐடி விங் எக்ஸ் பதிவில், தேர்தலுக்கு முன் போதைப்பொருள் ஒழிப்பு அண்ணனோட கேரண்டி என்று முதலமைச்சர் கூறினார், ஆட்சிக்கு வந்ததும் நாகை தவெக மாவட்ட நிர்வாகி பூபாலன் வீட்டில் 135 கிலோ மெத் போதைப்பொருள் பறிமுதல் என செய்தி. போதைப்பொருள் ஒழித்த மாதிரி தெரியலவில்லை, அதனை உங்க கட்சி நிர்வாகி வீட்டுல ஒளித்து வைத்த மாதிரி தான் தெரிகிறது" என்று குறிப்பிட்டிருந்தது.

யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை- நிர்மல் குமார்

நாகையில் 137 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
X/CTR.Nirmalkumar
மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் (கோப்புப் படம்)

இந்த விவகாரம் குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

"யாராவது ஒருவர் இதுபோன்ற தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

தவெகவில் யாரேனும் தவறான செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது கட்சி ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். யார் மீதான குற்றச்சாட்டாக இருந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் நிர்மல் குமார் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

RAAGA Aaha Siranta Isai!