நாய்கள் மனிதர்களின் விசுவாசமான நண்பர்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், சில சூழ்நிலைகளில் வளர்ப்பு நாய்கள்கூட அவற்றின் உரிமையாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
சமீப காலங்களில் இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.
மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் 21 லட்சத்து 89 ஆயிரத்து 909 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 30 லட்சத்து 52 ஆயிரத்து 521 ஆகவும், 2024ஆம் ஆண்டில் 37 லட்சத்து 15 ஆயிரத்து 713 ஆகவும் அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் (IDSP) இணையதளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன், வெறிநாய்க்கடி நோயால் (ரேபிஸ்) ஏற்படும் உயிரிழப்புகளும் கவலைக்குரிய விஷயமாக உள்ளன.
மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் வெறிநாய்க்கடி நோயால் 21 பேர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 50 ஆகவும், 2024ஆம் ஆண்டில் 54 ஆகவும் இருந்தது.
இரண்டு வளர்ப்பு நாய்கள் தாக்கியதில் உரிமையாளர் உயிரிழப்பு
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் 2017ஆம் ஆண்டு, இரண்டு வளர்ப்பு நாய்கள் தாக்கியதில் 22 வயதான பெத்தனி ஸ்டீபன்ஸ் என்ற பெண் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த நாய்களை அவை சிறிதாக இருந்த காலத்திலிருந்தே அவர் வளர்த்து வந்தபோதிலும் இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்தப் பெண்ணின் மரணத்திற்கு நாய்களே காரணம் என்பதை மக்களுக்கு விளக்குவதற்காக, அவரது மரணம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் விவரங்களைக் காவல்துறையினர் வெளியிட வேண்டியிருந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வளர்ப்பு நாய்களும் தங்களது உரிமையாளர்களைத் தாக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து இன்னும் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், நாய்கள் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களை நாம் அறிந்துகொள்வது அவசியம்.
தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவோ, அசௌகரியமாக இருப்பதாகவோ உணரும் போது நாய்கள் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளக்கூடும்.
எனவே, நாய்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களையும், அவற்றின் உடல் மொழி மூலம் வெளிப்படும் சமிக்ஞைகளையும் புரிந்துகொள்வது முக்கியம்.
பிரிட்டனில் விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் ஷான் வென்ஸ்லி, நாய்கள் கடிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்.
"நாய்கள் கடிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று பயம்" என்கிறார் அவர்.
"வேறு சில காரணங்களும் இருக்கலாம். உதாரணமாக, தங்களுக்குப் பிடித்த பொருள், ஓய்வெடுக்கும் இடம் அல்லது தூங்கும் இடத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் நாய்கள் கடிக்கக்கூடும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
நாய்களின் உடல் மொழி கூறுவது என்ன?
சில நேரங்களில் தங்களது உணவைப் பாதுகாப்பதற்காகவும் நாய்கள் கடிக்கக்கூடும் என்று ஷான் வென்ஸ்லி கூறுகிறார்.
நாய்களின் நடத்தை குறித்து ஆய்வு செய்துவரும் பயிற்சியாளர் கரோலின் மெண்டீத், விடுமுறை நாட்களில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாகக் கூறுகிறார்.
வீட்டிற்கு அதிகமான விருந்தினர்கள் வருவது, குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பது, நாய்களுக்குப் போதுமான உடற்பயிற்சி கிடைக்காதது போன்ற சூழ்நிலைகளால் அவை சலிப்படையவோ அமைதியிழக்கவோ கூடும்.
"மனிதர்களாகிய நம்மால் நமது உணர்வுகளை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த முடியும். நமக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றாலோ, மகிழ்ச்சியாக இல்லை என்றாலோ அதை மற்றவர்களிடம் சொல்ல முடியும். ஆனால், நாய்களால் அவ்வாறு செய்ய முடியாது."
"அவை தங்களது உடல் அசைவுகள் மற்றும் உடல் மொழி மூலம் நமக்குச் சமிக்ஞைகளை வழங்குகின்றன" என்று கரோலின் மெண்டீத் கூறுகிறார்.
"நமது வளர்ப்பு நாய்கள் வெளிப்படுத்தும் அனைத்து சமிக்ஞைகளையும் துல்லியமாகப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். குறிப்பாக, நாம் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது அவற்றின் நடத்தையைக் கவனிப்பதில்லை" என்றும் அவர் கூறுகிறார்.
நாய்களின் அசௌகரியத்திற்கான காரணங்களைக் கண்டறிவது எப்படி?
ஒரு வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாய்கள் இருந்தால், அவை ஒன்றுடன் ஒன்று எவ்வாறு பழகுகின்றன என்பதைக் கவனிப்பது முக்கியம்.
இதுகுறித்து ஷான் வென்ஸ்லி கூறுகையில், "இரண்டு நாய்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட முயன்றால், அவற்றுக்கிடையே கோபமோ பதற்றமோ அதிகரித்து வருவதற்கான அறிகுறியாக அது இருக்கலாம். இதை உரிய நேரத்தில் கவனிக்காவிட்டால், அதன் தாக்கம் உரிமையாளரையும் பாதிக்கக் கூடும்" என்கிறார்.
பொதுவாக நட்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் நாய்கூட, அசௌகரியத்தை உணரும்போது கடிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்.
உதாரணமாக, கதவின் அருகில் இருக்கும் நாயை வலுக்கட்டாயமாக அங்கிருந்து நகர்த்தும் போது, எதிர்பாராதவிதமாக அதற்குக் காயம் ஏற்பட்டால், அந்த நாய் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளக்கூடும்.
நாய்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு மருத்துவக் காரணங்களும் இருக்கலாம்.
கல்லீரல் நோய் அல்லது மூளையில் கட்டி இருப்பது போன்ற பிரச்னைகளால் நாய்களின் நடத்தையில் வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் ஏற்படலாம்.
கல்லீரல் நோய் மூளையையும் பாதிக்கக்கூடும்.
வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் கூடுதல் கவனம் தேவை
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியான ஆய்வின்படி, நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 76 சதவீதம் பேருக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்தன.
குறிப்பாக, உதடுகள், மூக்கு மற்றும் கன்னங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தன.
குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பதால், நாய்களால் அவர்களது முகத்தை எளிதாக எட்ட முடிகிறது.
குறிப்பாக, கழுத்துப் பகுதியில் நாய் கடிப்பது கடுமையான காயத்தை ஏற்படுத்தக்கூடும்.
கழுத்தில் உள்ள கரோடிட் தமனி பாதிக்கப்பட்டால், அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்புகூட நேரிடலாம்.
"நாய்களுக்குச் சிறு குழந்தைகளுடன் பழகிப் பழக்கமில்லை என்றால், குழந்தைகள் அருகில் இருப்பதே அவற்றுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்" என்று ஷான் வென்ஸ்லி கூறுகிறார்.
"சிறு குழந்தைகளின் நடத்தை பெரும்பாலும் கணிக்க முடியாததாக இருக்கும். அவர்கள் கத்தலாம், நாய்களை இறுக்கமாகப் பிடிக்கலாம், அவற்றைத் தூக்க முயலலாம் அல்லது அவற்றின் உடலில் கைகளால் அழுத்தம் கொடுக்கலாம்."
"இதுபோன்ற செயல்கள் நாய்களுக்குப் பயத்தை ஏற்படுத்தக்கூடும்" என்றும் அவர் கூறுகிறார்.
நாய் தனது மேல் உதட்டை நக்கினால் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?
நாய்கள் கடிப்பதற்கு முன்பே பெரும்பாலும் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை வெளிப்படுத்தும் அறிகுறிகளைக் காட்டுகின்றன.
ஆனால், மனிதர்கள் இந்தச் சமிக்ஞைகளைப் பல நேரங்களில் கவனிப்பதில்லை.
ஒரு நாய் தனது நாக்கால் மேல் உதட்டை நக்குவது, உடலைச் சாய்த்துக் கொள்வது, காதுகளைப் பின்னோக்கி இழுத்துக்கொள்வது அல்லது வாலை இரண்டு கால்களுக்கு இடையே வைத்துக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அது அசௌகரியமாகவோ பயத்துடனோ இருக்கலாம்.
சிறு குழந்தைகளுக்கு நாய்களின் இந்த உடல் அசைவுகளுக்கான அர்த்தம் பெரும்பாலும் தெரிவதில்லை.
சில நேரங்களில் நாய் தனது பற்களைக் காட்டினால், அது சிரிப்பதாகவோ மகிழ்ச்சியாக இருப்பதாகவோ குழந்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும்.
இதுகுறித்து கரோலின் மெண்டீத் கூறுகையில், "ஒரு நாய் தனது உரிமையாளரைத் தாக்கும் போது, அதற்கு முன்பு எந்த சமிக்ஞையையும் வெளிப்படுத்தாமல் திடீரென ஆக்ரோஷமாக மாறிவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படியல்ல."
"அந்த நாய் பல மாதங்களாகவே தனக்கு ஏற்படும் அசௌகரியத்தை ஏதோ ஒரு வகையில் தெரிவிக்க முயன்றிருக்கலாம்."
"ஆரம்பத்தில் நாய்களை நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்கிறோம். ஆனால், பின்னர் அவை நம்மிடம் என்ன தெரிவிக்க முயல்கின்றன என்பதைக் கவனிப்பதில்லை" என்று அவர் கூறுகிறார்.
நாய்களுக்குப் பயிற்சி அளிப்பது அவசியம்
அறிமுகமில்லாத குழந்தைகள் மற்றும் பிற மனிதர்கள் அருகில் இருக்கும் போது, நாய்களைச் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது சரியானதா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
- உங்களது வளர்ப்பு நாய்க்குக் குழந்தைகளைப் பிடிக்குமா?
- நீங்கள் அருகில் இல்லாதபோதும் மற்றவர்களிடம் அது சரியான முறையில் நடந்து கொள்ளும் என்று உறுதியாகக் கூற முடியுமா?
இதுபோன்ற கேள்விகளை நாய் உரிமையாளர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து ஷான் வென்ஸ்லி கூறுகையில், "சில நேரங்களில் குட்டி நாய்கள் அன்றாட வாழ்க்கையில் காணும் பல்வேறு விஷயங்களுக்கும் கேட்கும் ஒலிகளுக்கும் பழக்கப்பட்டிருக்காது" என்கிறார்.
"சில நாய்க்குட்டிகள் அதிக நடமாட்டம் இல்லாத இடங்களில் வளர்க்கப்படுகின்றன. அவை நாய்கள் இனப்பெருக்கம் செய்யப்படும் மையத்திலோ அல்லது கிராமப்புறத்திலோ வளர்க்கப்பட்டிருக்கலாம்."
"பின்னர் யாராவது அவற்றை இணையம் மூலமாகவோ, நெடுஞ்சாலை அருகிலுள்ள ஓர் இடத்திலிருந்தோ வாங்கி வீட்டிற்கு அழைத்து வருகின்றனர்."
"இந்தப் புதிய சூழல் அந்த நாய்க்கு முற்றிலும் புதிதாக இருக்கும். ஆனால், இந்தப் புதிய உலகில் நாய் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."
"இதுபோன்ற சூழ்நிலைகளில் நாய்கள் மிகவும் பயந்துபோகவோ பதற்றமடையவோ கூடும். அது யாரையாவது தாக்கும் நிலைக்கும் கூட வழிவகுக்கலாம்" என்று அவர் கூறுகிறார்.
இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க, நாய்கள் குட்டிகளாக இருக்கும்போதே அவற்றுக்குப் பயிற்சி அளிப்பது அவசியம்.
நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது ஒரே மாதிரியான அணுகுமுறையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதும் முக்கியம்.
ஒரு செயலைச் செய்ய உரிமையாளர் ஒருநாள் அனுமதித்துவிட்டு, மற்றொரு நாள் அதே செயலுக்காக நாயைக் கண்டித்தால், அது குழப்பமடையக் கூடும்.
நாய்களின் ஆக்ரோஷமான நடத்தைக்கான காரணங்கள் குறித்து லிங்கன் பல்கலைக்கழகம் மற்றும் பிஷப் பர்டன் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் ஆன் பாஸ்லிங்டன்-டேவிஸ் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
"எங்களது ஆய்வில் கண்டறியப்பட்ட ஆபத்துக் காரணிகளில் ஒன்று, நாய்களுக்குப் பயிற்சி அளிப்பதில் ஒரே மாதிரியான அணுகுமுறை இல்லாதது" என்று அவர் கூறுகிறார்.
"உதாரணமாக, ஒருமுறை சோபாவில் அமர நாய் ஊக்குவிக்கப்படுகிறது. அடுத்த முறை அதே செயலைச் செய்ததற்காக அது கண்டிக்கப்படுகிறது."
"இது நாயின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதனால் விரக்தி ஏற்படலாம். அந்த விரக்தி ஆக்ரோஷமான நடத்தைக்குக் காரணமாகவும் அமையலாம்" என்று அவர் விளக்குகிறார்.
நாய்களின் நடத்தைக்கான மருத்துவ ஆலோசனை மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவராக டாக்ஸ் டிரஸ்ட் அமைப்பில் பணியாற்றும் கிறிஸ் குளோவரும் இதுகுறித்து விளக்குகிறார்.
"ஒரு நாயின் நடத்தை நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அதைத் தண்டித்தால், அது ஏன் அவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நாம் முயல்வதில்லை" என்று அவர் கூறுகிறார்.
"பல நேரங்களில் நமது நாய்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்பதை அவற்றுக்குக் கற்றுக்கொடுப்பதில்லை."
"உதாரணமாக, ஒரு நாய் நம்மீது தாவும் போது, அதைக் கண்டிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அவ்வாறு தாவக்கூடாது என்று அதற்குக் கற்றுக் கொடுத்திருக்கிறோமா என்பதையும் சிந்திக்க வேண்டும்."
"அதற்குப் பதிலாக எந்த நடத்தைக்காக அந்த நாயைப் பாராட்டலாம் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்."
"நாய்களின் நடத்தையைச் சரிசெய்வதற்காக நாம் அவற்றைக் கண்டிக்கும் போதோ உடல் ரீதியாகத் தண்டிக்கும் போதோ, அவற்றிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நாய்கள் புரிந்துகொள்வதில்லை."
"மாறாக, இதுபோன்ற அணுகுமுறைகள் நாய்களின் மன அழுத்தத்தையும் பயத்தையும் அதிகரிக்கக் கூடும். நீண்டகால அடிப்படையில் அவற்றின் நடத்தையில் பிரச்னைகளும் உருவாகலாம்" என்று கிறிஸ் குளோவர் குறிப்பிடுகிறார்.
நாய்களின் ஆக்ரோஷமான நடத்தைக்கு உரிமையாளர்களும் காரணமாக இருக்கலாமா?
ஒரு நாய் ஆக்ரோஷமாக மாறுவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருப்பதில்லை.
அது எவ்வாறு வளர்க்கப்பட்டது, அதற்கு ஏற்பட்ட முந்தைய அனுபவங்கள் மற்றும் அது வாழும் சூழல் ஆகியவையும் அதன் நடத்தையைப் பாதிக்கின்றன.
இதுகுறித்து ஆன் பாஸ்லிங்டன்-டேவிஸ் கூறுகையில், "எந்தவொரு விலங்கின் ஆக்ரோஷமான நடத்தைக்குப் பின்னாலும் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. ஓர் ஆக்ரோஷமான செயலுக்குக் குறிப்பிட்ட ஒரு காரணத்தை மட்டுமே கண்டறிய முயல்வது சரியான அணுகுமுறை அல்ல" என்கிறார்.
"நாய்களின் ஆக்ரோஷமான நடத்தை குறித்து நாம் சிந்திக்கும் போது, பெரும்பாலும் நாயின் மீதே முழுப் பழியையும் சுமத்துகிறோம்."
"ஆனால், அதன் உரிமையாளர், நாய் வாழும் சூழ்நிலை மற்றும் அதற்கு ஏற்பட்ட முந்தைய அனுபவங்கள் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்வது முக்கியம்" என்று அவர் கூறுகிறார்.
நாய்களை நமது குடும்பத்தின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவற்றின் மொழியையும் தேவைகளையும் புரிந்துகொள்வதும் முக்கியமானது.
நாய்களின் நடத்தையில் வெளிப்படும் அசௌகரியத்திற்கான அறிகுறிகளை உரிய நேரத்தில் கண்டறிந்து, அவற்றுக்குச் சரியான பயிற்சியை வழங்குவதன் மூலம், மனிதர்களும் நாய்களும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இணைந்து வாழ முடியும்.
(ரெபேக்கா சீல்ஸ் மற்றும் சூசி லாசன் ஆகியோரின் செய்திப் பங்களிப்புடன்)
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.