ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் வைரலான காணொளியில், மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று பேர் ஆண் சிங்கம் ஒன்றைச் சுற்றி வளைத்து, அதைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காணொளி குஜராத் மாநிலம் கிர் பகுதியில் உள்ள அம்பர்டி சஃபாரி பூங்காவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் எழுந்தன. சிலர் இதைச் சிங்கத்தைத் துன்புறுத்தும் செயல் என்று விமர்சித்தனர். மற்றவர்கள், வனத்துறை ஊழியர்களின் வழக்கமான, ஆபத்தான பணிகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்தனர்.
இந்த விவாதங்களுக்கு மத்தியில், இந்தச் சம்பவம் அம்ரேலி மாவட்டத்தின் தாரி தாலுகாவில் உள்ள அம்பார்டி கிராமத்துக்கு அருகே அமைந்துள்ள அம்பார்டி சஃபாரி பூங்காவில் நடந்ததாக வனத்துறை விளக்கமளித்தது. இந்தப் பூங்கா கிர் (கிழக்கு) வனப்பிரிவின் கீழ் வருகிறது.
காணொளியில் மோட்டார் சைக்கிள்களில் இருந்தவர்கள் பூங்கா ஊழியர்கள் என்றும் வனத்துறை தெரிவித்தது. அவர்களின் நோக்கம் சிங்கத்தைத் துன்புறுத்துவது அல்ல என்றும், வழக்கமாக மாலையில் சிங்கத்தை அதன் இருப்பிடத்துக்குத் திருப்பி அழைத்துச் செல்லும் பணியின் ஒரு பகுதியாகவே அவர்கள் அவ்வாறு செயல்பட்டதாகவும் விளக்கமளித்தது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட மூன்று ஊழியர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குஜராத்தில் சிங்கங்களைக் காண்பதற்கான வசதிகள், கிர் (கிழக்கு) வனப்பிரிவில் உள்ள அம்பர்டி சஃபாரி பூங்காவிலும், கிர் (மேற்கு) வனப்பிரிவில் சாசன் அருகே உள்ள தேவாலியா சஃபாரி பூங்காவிலும் உள்ளன.
இதற்கிடையே, ராஜ்கோட் நகரின் புறநகர்ப் பகுதியில் சிங்க சஃபாரி பூங்கா ஒன்றை மாநகராட்சி அமைத்து வருகிறது. போர்பந்தர் மற்றும் தேவ் பூமி துவாரகா மாவட்டங்களில் பரவியுள்ள பார்டா வனவிலங்கு சரணாலயத்துக்கு அருகிலும் சிங்கச் சஃபாரி பூங்கா அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், அம்பர்டியில் நடைபெற்ற இந்தச் சம்பவம், சஃபாரி பூங்காக்களில் சிங்கங்களைக் கண்காணிப்பதற்கும் அவற்றைக் கையாள்வதற்கும் பின்பற்றப்படும் அன்றாட நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
சஃபாரி பூங்கா, காடு அல்லது விலங்கியல் பூங்காவிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
இந்தியாவில் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக 'வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972' நடைமுறையில் உள்ளது. வனவிலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் நோக்கில், காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள், கடற்கரைப் பகுதிகள் மற்றும் ஈரநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இயற்கைச் சூழல்கள் வனவிலங்கு சரணாலயங்களாகவும் தேசியப் பூங்காக்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மனிதர்களின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகளால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, இத்தகைய சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களுக்குள் பொதுமக்கள் நுழைவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
அதேநேரத்தில், வன வளங்களையும் வன விலங்குகளையும் நீண்டகாலத்திற்குப் பாதுகாப்பதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அவை குறித்த ஆய்வுகளை ஊக்குவிப்பதும் அவசியம். இதைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வனவிலங்குகளைக் காண்பதற்குப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் வனவிலங்குகளைக் காண்பதற்கு மூன்று முக்கிய இடவகைகள் உள்ளன. அவை:
- விலங்கியல் பூங்காக்கள் (மிருகக்காட்சிசாலைகள்)
- சஃபாரி பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள்
- புலிகள் காப்பகங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகள்
வனவிலங்கு சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள் மற்றும் புலிகள் காப்பகங்களில் சில பகுதிகளை வனத்துறை 'சுற்றுலா மண்டலங்களாக' அறிவிக்கிறது. இந்த மண்டலங்களுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலா வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதன் மூலம், வனவிலங்குகள் தங்கள் இயற்கையான வாழ்விடங்களில் சுதந்திரமாக உலாவுவதைப் பார்வையாளர்கள் காண முடியும்.
கிர் தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தின் தலைமையகமான சாசனில் இருந்து சிங்க சஃபாரிகள் தொடங்குகின்றன. இவற்றின் மூலம், கிர் (மேற்கு) வனப்பிரிவின் சுற்றுலா மண்டலத்துக்குள் சிங்கங்கள் சுதந்திரமாக நடமாடுவதையும், அப்பகுதியின் பிற இயற்கை வளங்களையும் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.
இருப்பினும், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களுக்குள் நுழைவதற்கான சுற்றுலா அனுமதிச் சீட்டுகளின் எண்ணிக்கையும், அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் முன்கூட்டியே வரையறுக்கப்படுகின்றன. சுற்றுலா நடவடிக்கைகளால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்காக, ஆண்டுதோறும் சில மாதங்களில் பார்வையாளர்களின் வருகைக்குத் தடை விதிக்கப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் சுற்றுலா நடவடிக்கைகளும் நிறுத்தப்படுகின்றன.
இதற்கு மாறாக, விலங்கியல் பூங்காக்களும் சஃபாரி பூங்காக்களும் பொதுவாக ஆண்டு முழுவதும் பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். அங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கும் பெரும்பாலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை.
விலங்கியல் பூங்காக்களுக்கும் சஃபாரி பூங்காக்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது.
விலங்கியல் பூங்காக்களில் விலங்குகள் பொதுவாகக் கூண்டுகளிலோ அல்லது வேலிகள், அகழிகள் போன்றவற்றால் சூழப்பட்ட அடைப்புகளிலோ வைக்கப்படுகின்றன. பார்வையாளர்கள் அந்த அடைப்புகளைச் சுற்றியுள்ள பாதைகளில் நடந்தோ அல்லது சிறிய வாகனங்களில் சென்றோ விலங்குகளைக் காண்கின்றனர்.
ஆனால், சஃபாரி பூங்காக்களின் செயல்பாட்டு முறை வேறுபட்டது. காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுற்றிச் சுவர்களோ வேலிகளோ அமைத்து, சுற்றுலாவுக்காக ஒதுக்கப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகச் சஃபாரி பூங்கா உருவாக்கப்படுகிறது. இங்கு வனவிலங்குகள் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக உலவுகின்றன. அதேவேளையில், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார்கள் அல்லது பேருந்துகளில் அமர்ந்து பூங்காவின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
சுருக்கமாகச் சொல்வதானால், விலங்கியல் பூங்காக்களில் விலங்குகள் கூண்டுகள் அல்லது தனித்தனி அடைப்புகளில் வைக்கப்படுகின்றன. ஆனால், சஃபாரி பூங்காக்களில் அவை இயற்கையான வாழ்விடங்களிலோ அல்லது இயற்கைச் சூழலை ஒத்த பரந்த பகுதிகளிலோ ஒப்பீட்டளவில் சுதந்திரமாக வாழ்கின்றன.
குஜராத்தில் உள்ள சஃபாரி பூங்காக்களில் சிங்கங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன?
சி. எம். திரிவேதி, 2008-ஆம் ஆண்டு வனச்சரக அலுவலர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். சாசன் வனப்பகுதியில் அவர் பணியாற்றியபோது, பல ஆண்டுகளாக தேவாலியா சஃபாரி பூங்காவின் கண்காணிப்புப் பொறுப்பையும் அவர் கவனித்து வந்தார்.
பிபிசியிடம் பேசிய திரிவேதி, தேவாலியா மற்றும் அம்பர்டி சஃபாரி பூங்காக்களில் புள்ளிமான்கள், சாம்பர் மான்கள், சின்காரா மான்கள், முயல்கள் போன்ற தாவர உண்ணி விலங்குகளும், நரிகள் போன்ற சிறிய வேட்டையாடும் விலங்குகளும் சுதந்திரமாக உலா வருவது வழக்கம் என்றார்.
ஆனால், பூங்காவின் திறந்தவெளிப் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே சிங்கங்கள் வைக்கப்படுகின்றன. இதனால், சஃபாரி பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிங்கங்களை நிச்சயமாகக் காண முடியும். ஆனால், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களில் நடத்தப்படும் வன சஃபாரிகளில் (Jungle Safari) சிங்கங்களைக் காண்பதற்கு இத்தகைய உத்தரவாதம் கிடையாது.
"சஃபாரி பூங்காவில் உள்ள சிங்கங்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சூழலில் பிறந்து வளர்ந்தவை" என்கிறார் திரிவேதி.
அவர் மேலும் கூறுகையில், "சுற்றுலாப் பயணிகளுக்காகப் பூங்காவின் வாயில்கள் திறக்கப்படுவதற்கு முன்பே, பணியாளர்கள் சிங்கங்களை அவற்றின் அடைப்புகளிலிருந்து வெளியேற்றி, பூங்காவில் ஒதுக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். மாலையில், கடைசி சுற்றுலாப் பயணியும் வெளியேறிய பிறகு, சிங்கங்கள் மீண்டும் அவற்றின் அடைப்புகளுக்குள் கொண்டுசெல்லப்படுகின்றன. அங்கு அவற்றுக்குத் தேவையான இறைச்சி உணவாக வழங்கப்படுகிறது.
"மாலைக்குள் சிங்கங்களை அவற்றின் அடைப்புகளுக்குத் திருப்பி அழைத்துச் செல்லாவிட்டால், அவை ஒதுக்கப்பட்ட இடத்தைவிட்டு நகர்ந்து, பூங்காவின் மற்ற பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள விலங்குகளை வேட்டையாடத் தொடங்கக்கூடும். சிங்கங்கள் வேட்டையாடப் பழகிவிட்டால், பூங்காவை நிர்வகிப்பது கடினமாகிவிடும்" என்றார்.
பூங்காவின் திறந்தவெளிப் பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் சிங்கங்கள் கொண்டுவந்து விடப்பட்ட பிறகும், பணியாளர்கள் அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் திரிவேதி கூறினார்.
"பணியாளர்கள் சிங்கங்களுக்கு அருகிலேயே ஜீப்பில் இருந்து அவற்றை கவனிப்பார்கள். சிங்கங்கள் எழுந்தாலோ, வேறு இடத்துக்குச் செல்ல முயன்றாலோ, சைகைகள் மூலமாகவோ குரல் எழுப்பியோ எச்சரிப்பார்கள். இதனால் சிங்கங்கள் மீண்டும் அமர்ந்துவிடும் அல்லது அதே இடத்தில் தொடர்ந்து இருக்கும்" என்று அவர் விளக்கினார்.
அம்பர்டி சஃபாரி பூங்கா பேசுபொருளானதற்கு காரணம் என்ன?
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் திங்கட்கிழமை வெளியான செய்தியில், பிடிஐ செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி, குஜராத் மாநிலத்தின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனவிலங்குப் பிரிவு) ஜெய்பால் சிங்கின் விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, அம்பர்டி சஃபாரி பூங்காவில் சிங்கங்களை 'கரல்' எனப்படும் அவற்றின் அடைப்பிடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது இந்தச் சம்பவம் படம்பிடிக்கப்பட்டது.
கிர் (கிழக்கு) வனப்பிரிவின் பொறுப்பு உதவி வனப் பாதுகாவலர் அமித் வானியா, சிங்கங்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமித் வானியா, "சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளியில், ஒரு மோட்டார் சைக்கிள் சிங்கத்தை நெருங்கிச் செல்வதும், அதன் அருகே வனத்துறை ஊழியர்கள் இருப்பதும் தெரிகிறது. உண்மை என்னவென்றால், தீபாவளி காலம் என்பதால், தற்போது அம்பர்டி சஃபாரி பூங்காவில் வழக்கத்தைவிட அதிகமான மக்கள் கூட்டம் உள்ளது" என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "வழக்கம்போல மாலையில் சஃபாரி நேரம் முடிந்ததும் சிங்கங்களை அவற்றின் அடைப்பிடங்களுக்குத் திருப்பி அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அன்று அவை அடைப்பிடங்களுக்குச் செல்லாமல் எதிர்த் திசையில் சென்றன. அன்று கூட்ட நெரிசலும் அதிகமாக இருந்த நிலையில், அவற்றை சரியான பாதையில் அழைத்துச் செல்ல வனத்துறை ஊழியர்கள் முயன்றனர். இந்தச் சம்பவத்தில் சிங்கங்கள் துன்புறுத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்." என்றார்.
சனிக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமித் வானியா தெரிவித்தார்.
சஃபாரி பூங்காவில் இத்தகைய சம்பவம் இயல்பானது என கருதலாமா?
2018-ஆம் ஆண்டு, தேவாலியா சஃபாரி பூங்காவில் இரண்டு சிங்கங்கள் ஆக்ரோஷமாகத் தாக்கியதில், பூங்கா ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர் காயமடைந்தனர்.
அம்பர்டி சஃபாரி பூங்காவில் நடந்த சம்பவம் குறித்து கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக, ஜெய்பால் சிங்கைத் தொடர்புகொள்ள பிபிசி முயன்றது. ஆனால், அவரிடமிருந்து உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, சிங்கங்களை அவற்றின் இருப்பிடங்களிலிருந்து பார்வையாளர்கள் காணும் பகுதிக்கு அழைத்துச் செல்லும் போதோ, மீண்டும் இருப்பிடங்களுக்குக் கொண்டுசெல்லும் போதோ ஊழியர்கள் பொதுவாக மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவதில்லை என்று சி. எம். திரிவேதி தெரிவித்தார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், "சஃபாரி பூங்காவில் உள்ள சிங்கங்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டவை. எனவே, எங்கு செல்ல வேண்டும், எப்போது செல்ல வேண்டும் என்பது அவற்றுக்குப் பழக்கமாகியிருக்கும். சிங்கங்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு அழைத்துச் செல்லும்போது, ஊழியர்கள் வழக்கமாக ஜீப்பில் இருந்தபடியே அவற்றைக் கையாள்வார்கள்.
"பல சந்தர்ப்பங்களில், ஊழியர்கள் சில சிங்கங்கள் குட்டிகளாக இருந்தபோதே அவற்றுக்குப் பால் கொடுத்து வளர்த்திருப்பார்கள். இதனால், அந்தச் சிங்கங்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்ளும் என்றும், தங்களைத் தாக்காது என்றும் ஊழியர்கள் நம்புகின்றனர்.
"நீண்டகாலமாகக் குறிப்பிட்ட சில சிங்கங்களைப் பராமரித்து வருவதால், அவற்றின் இயல்பையும் நடத்தையையும் நன்கு அறிந்திருப்பதாக ஊழியர்கள் கருதுகின்றனர். அம்பர்டியில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த முழு விவரங்களும் எனக்குத் தெரியாது. இருப்பினும், ஊழியர்கள் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையுடன் செயல்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இத்தகைய அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.
சிங்கங்களைக் கையாளும் போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் திரிவேதி வலியுறுத்தினார்.
"பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, அவர்கள் உற்சாக மிகுதியால் சத்தம் எழுப்புவது வழக்கம். இது சிங்கங்களுக்கு இடையூறாக அமைகிறது. இதனால், நாள் முடிவில் அவற்றின் நடத்தையில் மாற்றம் ஏற்படலாம். முதிர்ச்சியடைந்த ஆண் சிங்கம், பெண் சிங்கங்களுடன் இணை சேரும் நோக்கத்தில் தனது இருப்பிடத்திலிருந்து வேறு திசையில் செல்ல முயற்சி செய்யலாம். இதுபோன்ற சூழல்களில், சிங்கங்களைக் கையாளும்போது ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு