அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள பெண்ட் நகரில், வியாழக்கிழமை தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றவரை அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் "ஹீரோ" என்று பாராட்டியுள்ளனர்.
ஜான் ஜே. கிரிஃபின் II என்ற 16 வயது சிறுவன் நடத்திய இந்த தாக்குதலில், 5, 8 மற்றும் 11 வயதுடைய மூன்று குழந்தைகளும் ஆசிரியை ஒருவரும் உயிரிழந்தனர்.
கெய்லுப் ஜியாமான்கோவின் நடவடிக்கைகள் மேலும் பல உயிரிழப்புகளைத் தடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், தலையிட்டு செய்ய வேண்டியதைச் செய்த ஒரு மகத்தான ஹீரோ நம்மிடம் இருந்தார். இது ஒரு பயங்கரமான சம்பவம். ஆனால், துப்பாக்கி வைத்திருந்ததுடன் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் அறிந்த ஒருவர் அங்கு இருந்தது நல்ல விஷயம்," என்று வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தெரிவித்தார்.
ஒரேகான் ஆளுநர் டினா கோடெக்கும், "வீரமிக்க தலையீடு" என்று குறிப்பிட்டு அவரைப் பாராட்டி செய்தி ஒன்றை வெளியிட்டார்.
"உங்கள் செயல்கள் மிகப் பெரிய மன அழுத்தத்தையும் உணர்ச்சி சுமையையும் ஏற்படுத்தியிருக்கும். என் எண்ணங்களும் உங்களுடனே இருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்," என்றார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவரை வகுப்பறைக்குள் எதிர்கொண்டு தடுத்த ஒரு ஆசிரியையும், "தன் மாணவர்களுக்காக போராடத் தயாராக இருந்தவர்" எனப் பாராட்டப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு ஜியாமாங்கோ பொதுவெளியில் தோன்றவில்லை என்றாலும், அவர் தாக்குதல் நடத்தியவரை எவ்வாறு தடுத்து நிறுத்தினார் என்பது தொடர்பான விவரங்கள் மெதுவாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
'அவரை துரத்தி சுட்டுக் கொன்றார்'
பெண்ட் நகர போலீஸார் தெரிவித்த தகவலின்படி, அங்குள்ள சில்வர் ரெயில் தொடக்கப் பள்ளியில் பிற்பகல் சுமார் 1 மணியளவில் துப்பாக்கிச் சூடு தொடங்கியது.
அதே பள்ளியின் முன்னாள் மாணவரான 16 வயது ஜான் ஜே. கிரிஃபின் II, நீளமான துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்தார். மூடப்பட்டிருந்த கதவுகளை நோக்கி அவர் சுடத் தொடங்கியதாக காவல் துறைத் தலைவர் மைக் கிரான்ட்ஸ் தெரிவித்தார்.
என்பிசி தொலைக்காட்சி தகவலின்படி, 36 வயதான கெய்லுப் ஜியாமாங்கோ, மதிய உணவிற்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சத்தம் கேட்டது. தனது இரண்டு மகள்கள் படிக்கும் தொடக்கப் பள்ளிக்குள் ஆயுதம் ஏந்திய ஒருவர் நுழைவதையும் அவர் கண்டார்.
உடனே, தனது வாகனத்தில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவர் பள்ளிக்குள் ஓடினார்.
நேரடியாக அவரின் பெயரைச் சொல்லாமல், ஜியாமாங்கோ சட்டப்பூர்வமாக வைத்திருந்த துப்பாக்கியை ஏந்தியிருந்தார் என்று காவல்துறைத் தலைவர் மைக் கிரான்ட்ஸ் கூறினார்.
தாக்குதல் நடத்தியவர் உடைத்து நுழைந்த கதவுகள் வழியாக பள்ளிக்குள் சென்ற ஜியாமாங்கோ, துப்பாக்கிச்சூடு சத்தங்களைக் கேட்டார். பின்னர், ஒரு ஆசிரியையுடன் மோதிக் கொண்டிருந்த சந்தேக நபரை அவர் கண்டுபிடித்தார்.
"பின்னர் அந்த மோதல் நடந்துகொண்டிருந்த வகுப்பறைக்குச் சென்று அவர் தனது ஆயுதத்தால் சுட்டார். சந்தேக நபர் மீது பல தோட்டாக்கள் பாய்ந்தன," என்று கிரான்ட்ஸ் விளக்கினார்.
அந்த ஆசிரியையும் "உண்மையான வீரர்" எனப் பாராட்டப்பட்டார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த ஆசிரியை முதலில் தனது கைப்பேசியை தாக்குதல் நடத்தியவர் மீது எறிந்தார். அதன் பிறகு அவர் மீது பாய்ந்து, அவரது துப்பாக்கியை பறிக்க முயன்று போராடினார்.
"அவர் அங்கீகாரத்தை நாடவில்லை"
"அவர் எந்த அங்கீகாரத்தையும் நாடவில்லை. மாறாக, அவசர உதவிக் குழுக்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் சமூகத்தினரின் அன்புக்கும் ஆதரவுக்கும் தனது நன்றியைத் தெரிவிக்கவே விரும்புகிறார்," என வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜியாமாங்கோ குடும்பத்தினர் கூறினர்.
"சில்வர் ரெயில் தொடக்கப் பள்ளியில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், பெண்ட் சமூகத்தை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது," என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கெய்லுப்பின் சகோதரரான கைல் ஜியாமாங்கோ, என்பிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், கெய்லுப் தற்பொழுது பொதுவெளியில் பேசும் நிலையில் இல்லை என்றும், உயிரிழந்தவர்களைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக அவர் வருந்துவதால், தன்னை ஒரு ஹீரோவாகக் கருதவில்லை என்றும் கைல் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களைத் தவிர, ஒரு மாணவரும் ஒரு ஆசிரியரும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜான் கிரிஃபின் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அவரது தாயார் வாங்கியிருந்தார் என்று காவல்துறை வட்டாரங்கள் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு