வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்வான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அதிதீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
அதன் அறிக்கைப்படி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 'அக்வான்' எனப் பெயரிடப்பட்ட புயலாக வலுப்பெற்றது.
இன்று (நவம்பர் 16) இந்திய நேரப்படி மாலை 5.30 மணியளவில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயல் மையம் கொண்டிருந்தது.
இது சென்னைக்குக் கிழக்கே சுமார் 610 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் திருகோணமலைக்கு வடகிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
இந்தப் புயல் தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 17ஆம் தேதி மாலை வாக்கில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 19ஆம் தேதி காலை வாக்கில் அதி தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும்.
தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் வாக்கில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில், நெல்லூருக்கும் டூனிக்கும் (Tuni) இடையே கரையைக் கடக்கக்கூடும்.
அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 145 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பு
16.11.2026 மற்றும் 17.11.2026
- தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
18.11.2026 மற்றும் 19.11.2026
- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
- காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
- வட கடலோர தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
- தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
20.11.2026
- வட கடலோர தமிழகத்தின் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
- தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
21.11.2026 மற்றும் 22.11.2026
- வட கடலோர தமிழகத்தின் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
- தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
கனமழை எச்சரிக்கை
18.11.2026 மற்றும் 19.11.2026
- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
- காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை
18.11.2026 முதல் 20.11.2026 வரை
- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு