Skip to main content

Advertisement

பவன் கல்யாணை விவாகரத்து செய்த அனா லெஷ்னேவா எந்த நாட்டுப் பெண்? காதல், திருமணம் பற்றிய பின்னணி

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அனா மற்றும் பவன் கல்யாண் 2013-ல் திருமணம் செய்துகொண்டனர் (கோப்புப் படம்)
Pawan Kalyan/Facebook
அனா மற்றும் பவன் கல்யாண் 2013-ல் திருமணம் செய்துகொண்டனர் (கோப்புப் படம்)

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணும் அவரது மனைவி அனா லெஷ்னேவாவும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.

பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் ஊடகக் குழுவில் அடிக்கடி காணப்படும் லட்சுமி வேணுகோபால் என்பவர், திங்கள்கிழமை இரவு 10.46 மணிக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து, இந்தத் தகவல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியாக அனா லெஷ்னேவா அறியப்படுகிறார். அவரது பின்னணி என்ன?

1980ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தவர் அனா லெஷ்னேவா.

மாடலிங் மற்றும் நடிப்புத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

2011ஆம் ஆண்டு ஜெயந்த் சி. பரஞ்சி இயக்கத்தில் வெளியான 'தீன் மார்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பவன் கல்யாணை அவர் முதன்முதலில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அந்தத் திரைப்படத்தில் அனா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட அறிமுகம் பின்னர் காதலாக மாறியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள எர்ரகட்டா சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

அனா லெஷ்னேவா, பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி ஆவார்.

இதற்கு முன்பு, 1997ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நந்தினி என்பவரை பவன் கல்யாண் திருமணம் செய்துகொண்டார். கருத்து வேறுபாடுகள் காரணமாக 2008ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தின் மூலம் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

பின்னர், 'பத்ரி' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரேணு தேசாயுடன் பவன் கல்யாண் சில காலம் சேர்ந்து வாழ்ந்தார். இருவரும் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

2012ஆம் ஆண்டு ரேணு தேசாயை விவாகரத்து செய்த பவன் கல்யாண், அதன் பின்னர் அனா லெஷ்னேவாவை திருமணம் செய்துகொண்டார்.

பவன் கல்யாண் - ரேணு தேசாய் தம்பதிக்கு அகிரா நந்தன் என்ற மகனும் ஆத்யா என்ற மகளும் உள்ளனர்.

பவன் கல்யாண் - அனா லெஷ்னேவா தம்பதிக்கு மார்க் சங்கர் பவனோவிச் என்ற மகனும் போலெனா அஞ்சனா பவனோவா என்ற மகளும் உள்ளனர்.

ஹோட்டல் தொழிலிலும் அனா லெஷ்னேவாவுக்கு ஆர்வம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் அவருக்குப் பல ஹோட்டல்கள் இருப்பதாகவும், ரஷ்யா மற்றும் சிங்கப்பூரில் சுமார் ரூ.1,800 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் 'மணி கன்ட்ரோல்' செய்தி இணையதளம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவன் கல்யாணின் மூத்த சகோதரரும் நடிகருமான சிரஞ்சீவியின் இயற்பெயரை நினைவுகூரும் வகையில், பவன் கல்யாணின் இரண்டாவது மகனுக்கு 'சங்கர்' என்று பெயரிடப்பட்டதாகத் திரைப்படப் பத்திரிகையாளர் சுரேஷ் கொண்டேட்டி தெரிவித்தார்.

இந்த நிலையில், திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு, பரஸ்பர புரிதலுடன் பிரிவதாக பவன் கல்யாணும் அனா லெஷ்னேவாவும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

பவன் கல்யான் 2012-ல் ரேணு தேசாயிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
RenuDesai/FaceBook
பவன் கல்யான் 2012-ல் ரேணு தேசாயிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

பிரிவு குறித்த ஊகங்கள் ஏற்கெனவே பரவின

பவன் கல்யாணும் அனா லெஷ்னேவாவும் பிரியவுள்ளதாக ஏற்கெனவே ஊகங்கள் பரவியிருந்தன.

பவன் கல்யாணின் சகோதரர் நாகபாபுவின் மகன் வருண் தேஜின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும், ராம் சரண் - உபாசனா தம்பதியின் மகளை தொட்டிலில் இடும் நிகழ்ச்சியிலும் அனா லெஷ்னேவா கலந்துகொள்ளவில்லை.

இதையடுத்து, பவன் கல்யாணும் அனாவும் பிரியவுள்ளதாக ஊகங்கள் பரவின.

2024 தேர்தலுக்குப் பிறகு பவன் கல்யாணுடன் அனா அதிகம் தென்பட்டார்

ரஷ்ய மரபுவழி கிறிஸ்தவரான அனா, இந்து மதத்தையும் பின்பற்றுகிறார் (கோப்புப் படம்)
Pawan Kalyan/Facebook
ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவரான அனா, இந்து மதத்தையும் பின்பற்றுகிறார் (கோப்புப் படம்)

ஆனால் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்ற பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் அவருடன் அனா லெஷ்னேவா காணப்பட்டார்.

இதனால், இருவரும் பிரிந்துவிட்டதாகப் பரவிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியானபோது, பவன் கல்யாண் தனது சகோதரர் சிரஞ்சீவியின் வீட்டுக்குச் சென்றார். அன்றைய தினம் பவன் கல்யாண் தனது காலணிகளைக் கையில் வைத்திருந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.

அதன்பிறகு, ஆந்திரப் பிரதேச துணை முதல்வராகப் பவன் கல்யாண் பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற போது அனா லெஷ்னேவா உணர்ச்சிவசப்பட்ட காட்சிகளும் அப்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டன.

பின்னர், பிரதமர் நரேந்திர மோதியை பவன் கல்யாண் சந்தித்தார்.

2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் அனா லெஷ்னேவா முதுகலைப் பட்டம் பெற்றார்.

கடந்த ஆண்டு திருமலையில் மொட்டையடித்த அனா

சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாண் - அனா தம்பதியின் மகன் மார்க் சங்கர் உயிர் தப்பினார்.

இதையடுத்து, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி திருப்பதி திருமலைக்குச் சென்ற அனா லெஷ்னேவா, நேர்த்திக்கடனாக தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினார்.

ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவரான அனா, திருமலை கோயில் விதிகளின்படி உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டு, பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் பங்கேற்றார்.

பவன் கல்யாணைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, அனா பெரும்பாலும் இந்திய பாரம்பரிய உடைகளில் காணப்பட்டார்.

கடந்த ஜூன் மாதத்திலும் பவன் கல்யாண் குறித்து உணர்ச்சிப்பூர்வமான பதிவு

பிரதமர் நரேந்திர மோடியுடன் பவன் கல்யாணின் குடும்பத்தினர் (கோப்புப் படம்)
Pawan Kalyan/Facebook
பிரதமர் நரேந்திர மோடியுடன் பவன் கல்யான் குடும்பத்தினர் (கோப்புப் படம்)

இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, தனது கணவர் பவன் கல்யாண் குறித்து அனா சமூக ஊடகங்களில் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆந்திரப் பிரதேசத்தில் கூட்டணி அரசு அமைந்ததை நினைவுகூரும் வகையில், துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "பவன் கல்யாண் இப்போது ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக இருக்கலாம். ஆனால், இந்த நிலையை அடைவதற்கான அவரது பயணம் எளிதானதாக இருக்கவில்லை. அவர் பல தோல்விகளைச் சந்தித்திருக்கிறார். ஒட்டுமொத்த உலகமும் அவருக்கு எதிராக இருப்பதைப் போல உணர்ந்த நாட்கள் பல இருந்தன. பலரும் அவரை அவமதித்தனர். கேலி செய்தனர். பவன் வெளியே அரசியல் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோது, வீட்டில் குழந்தைகளுக்காக நான் தைரியமாக இருக்க முயன்றேன்.

சில நேரங்களில் தனிமையாக உணர்ந்தேன். பயத்துடன் இருந்த நாட்களும் உண்டு. பவன் கல்யாணின் வெற்றி என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. அவர் பதவியேற்ற நாளில் நான் கண்ணீர் விட்டதை பிரதமர் நரேந்திர மோதி கூட கவனித்தார். அது ஆனந்தக் கண்ணீர்" என்று அனா குறிப்பிட்டிருந்தார்.

2024ஆம் ஆண்டு பவன் கல்யாண் துணை முதல்வராகப் பதவியேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் அந்தப் பதிவுடன் அவர் பகிர்ந்திருந்தார்.

மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் இணைந்த அனா - தற்போது கணக்கு முடக்கம்

தொடக்கத்திலிருந்தே சமூக ஊடகங்களில் இருந்து விலகியிருந்த அனா லெஷ்னேவா, இந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி அதிகாரபூர்வமாக இன்ஸ்டாகிராமில் கணக்கைத் தொடங்கினார்.

அப்போது பவன் கல்யாணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை அனா பகிர்ந்திருந்தார்.

"நீண்ட காலமாகவே இன்ஸ்டாகிராமில் இணைய வேண்டும் என்று விரும்பினேன். அதற்கான சரியான நேரம் இதுதான் என்று தோன்றியது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஆசீர்வாதத்துடனும் பவன் கல்யாணின் ஆதரவுடனும் உங்கள் முன் வருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இணைந்தவுடன் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரையும் அனா பின்தொடரத் தொடங்கினார்.

அவர்களில் நடிகர்கள் மகேஷ் பாபு, நம்ரதா ஷிரோத்கர், சமந்தா, ஆலியா பட் உள்ளிட்டோரும் அடங்குவர்.

தனது மனைவி இன்ஸ்டாகிராமில் இணைந்ததை வரவேற்று பவன் கல்யாணும் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

"அனா லெஷ்னேவாவை இன்ஸ்டாகிராமுக்கு மனதார வரவேற்கிறேன். இந்தத் தளத்தில் இணைந்திருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள். வரும் நாட்களில் இந்தத் தளத்தின் மூலம் உங்களது மதிப்புமிக்க கருத்துகளை எவ்வாறு பகிர்ந்துகொள்ளப் போகிறீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன்" என்று பவன் கல்யாண் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அனா லெஷ்னேவா தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியிருப்பதாகத் தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!