Skip to main content

Advertisement

ராகுல் காந்தியின் மனு தொடர்பாக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிர மறுஆய்வு நடவடிக்கை, ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உச்ச நீதிமன்றம்
Getty Images

வியாழக்கிழமையன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த மனு தொடர்பாக, இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய சட்ட அமர்வு, இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரியது. மேலும், வாக்காளர் பட்டியலின் 'சிறப்புத் தீவிரத் திருத்தம்' நடைமுறையின் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த மனுவையும் இணைக்குமாறு உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையம் மட்டுமின்றி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இருப்பினும், நோட்டீஸ் பிறப்பித்தபோது, மனுதாரர்களில் ஒருவரின் நடத்தை குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

'லைவ் லா' தகவலின்படி, அடுத்த விசாரணையின்போது மனுதாரர்களில் ஒருவரின் நடத்தை குறித்து விளக்கம் கோரப்படும் என நீதிபதி அமர்வு கூறியுள்ளது. தனது கருத்துக்கள் எந்த மனுதாரரை நோக்கியவை என்பதை நீதிமன்றம் குறிப்பிடவில்லை.

மேலும், ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்புவது என்பது, ஏதேனும் ஒரு விவகாரம் குறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவிப்பதாகப் பொருள்படாது என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த மனுவில் என்ன கோரப்பட்டுள்ளது?

ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அக்டோபர் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுகினர். வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின்போது பெருமளவிலான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர்கள் தங்கள் மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.

செய்தி நிறுவனமான பி.டி.ஐ. தகவலின்படி, சிறப்புத் தீவிரத் திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட பெயர்கள் குறித்து சுயாதீனத் தணிக்கை நடத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இதற்காக, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட தகுதியான நபர்களைக் கொண்ட சுயாதீனக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் உள் பதிவுகள், கோப்புகள், கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள், பெறப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் தொடர்புடைய டிஜிட்டல் பதிவுகள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வாக்குச்சாவடி வாரியாக வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும், ஒவ்வொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வயது மற்றும் பாலினம் வாரியாக வெளியிட வேண்டும் என்றும், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கான திறம்படச் செயல்படும் நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு முறையான நோட்டீஸ் அனுப்பி, தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கப் போதிய வாய்ப்பு வழங்காமல், அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை, பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்த நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிர மறுஆய்வு நடவடிக்கை, ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உச்ச நீதிமன்றம்
ANI
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளார்

ஞானேஷ் குமாரின் முடிவுகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகள்?

தேர்தல் ஆணையத்தின் முடிவெடுக்கும் செயல்முறையும் இந்த சர்ச்சையின் மையமாக உள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற தேர்தல் ஆணையர்களுக்குத் தெரிவிக்காமலும், அவர்களின் ஒப்புதலைப் பெறாமலும், தேர்தல் ஆணையம் கூட்டாகச் செயல்படுத்த வேண்டிய அதிகாரங்களைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் வெளியிட்ட புலனாய்வு அறிக்கையைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

ஆவணங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின்படி, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை, தேர்தல் ஆணையத்தின் பெயரில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் மற்றும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு முறைப்படி ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். புதிய வாக்காளர்களைப் பதிவு செய்தல், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்குதல் மற்றும் மீண்டும் சேர்த்தல், வாக்காளர் தரவுத்தளத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அவர்கள் ஆட்சேபனைகளை எழுப்பியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து, தேர்தல் ஆணையர் டாக்டர் விவேக் ஜோஷி.
Getty Images
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி (கோப்புப்படம்)

சில விவகாரங்களில், தங்களுக்குத் தெரிவிக்காமலேயே முடிவுகள் எடுக்கப்பட்டதாக இரு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்திருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. ஒரு விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையைச் சுக்பீர் சிங் சந்து, "அதிகாரமற்றது மற்றும் சட்டவிரோதமானது" என்று குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தச் சர்ச்சை தொடர்பான சில குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருந்தது. சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதங்கள், பணியிடமாற்றத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரி தொடர்பானவை என்றும், அவற்றுக்கும் தேர்தல் ஆணையத்தின் கொள்கை முடிவுகளுக்கும் அல்லது தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

தேர்தல் முறைகேடுகள் மற்றும் 'வாக்குத் திருட்டு' தொடர்பாக ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையமும் பாஜகவும் ஏற்கெனவே பலமுறை மறுத்துள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், எஸ்ஐஆர், தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி
Getty Images
தேர்தல் முறைகேடுகள் மற்றும் 'வாக்குத் திருட்டு' தொடர்பாக ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர் (கோப்புப்படம்)

மனுதாரர்கள் யார் யார்?

ராகுல் காந்தியைத் தவிர, இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ள மற்ற மனுதாரர்களில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சௌகத் ராய், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம்.ஏ. பேபி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி. ராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த மஹுவா மாஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் சந்திர பவார் பிரிவு) சார்பில் சுப்ரியா சுலே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இ.டி. முகமது பஷீர் ஆகியோரும் மனுதாரர்களாக உள்ளனர்.

'லைவ் லா' செய்தித் தளத்தின்படி, இந்த வழக்கு ராகுல் காந்தி மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடையிலான வழக்கு "ராகுல் காந்தி vs இந்தியத் தேர்தல் ஆணையம்" என்ற பெயரில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிலுவையில் உள்ள பிற சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான மனுக்களுடன் இணைத்து இந்த மனுவும் விசாரிக்கப்படும்.

வியாழக்கிழமையன்று, மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் நடைமுறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவையும் ராகுல் காந்தியின் மனுவுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்து மாநிலங்களின் விவகாரங்களையும் ஒரே பொதுவான வழக்காக விசாரிப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாநிலத்தின் விவகாரத்தையும் தனித்தனியாக ஆராய விரும்புவதாக நீதிமன்றம் வாய்மொழியாகத் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி, தலைமைத் தேர்தல் ஆணையர், ராகுல் காந்தி
Reuters
பேரணியில் ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ்

அக்டோபர் 12 பேரணி குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் அக்டோபர் 12 அன்று பேரணி நடத்தினர். இதன்பின்னரே எதிர்க்கட்சித் தலைவர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தப் பேரணி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு தனி மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நீதிமன்ற வளாகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசியல் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்றும், சில அரசியல் தலைவர்களின் நடத்தை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அன்று இந்தத் தனி வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்ததோடு, அரசியல் போராட்டங்கள் வாயிலாக நீதித்துறையின் மீது அழுத்தம் கொடுக்க முயல்வது குறித்துக் கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தது.

'லைவ் லா' செய்தித் தளத்தின்படி, தலைமை நீதிபதி சூர்ய காந்த், "நீதிமன்றத்தை யாராலும் அழுத்தத்துக்கு உள்ளாக்க முடியாது; அரசியல் தலைவர்கள் வெளியில் என்ன பேசுகிறார்கள், நீதிமன்றத்துக்குள் என்ன பேசுகிறார்கள் என்பது நீதிமன்றத்துக்கு நன்றாகவே தெரியும்" என்று கூறினார்.

இந்த விசாரணையானது, ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் 'எஸ்.ஐ.ஆர்' நடைமுறையை எதிர்த்துத் தாக்கல் செய்த முதன்மை மனுவிலிருந்து மாறுபட்ட தனி வழக்காகும்.

உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி, தலைமைத் தேர்தல் ஆணையர், ராகுல் காந்தி
Reuters
எதிர்க்கட்சிகள் பேரணியில் திரளாக பங்கேற்ற ஆதரவாளர்கள்

டெல்லி போராட்டங்களுக்கு மத்தியில் உச்ச நீதிமன்றத்தை எட்டிய விவகாரம்

வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான விவகாரங்களை முன்வைத்து, கடந்த சில நாட்களாக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்களின்போது போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்டது, மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது, வழக்கறிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்வதில் இடையூறுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 11ஆம் தேதி, இந்த விவகாரங்கள் தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சட்டவிரோதமாகக் காவலில் எடுக்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது.

ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த எஸ்.ஐ.ஆர் தொடர்பான மனு மீது உச்ச நீதிமன்றம் இதுவரை எந்தத் தீர்ப்பையும் வழங்கவில்லை. மாறாக, தேர்தல் ஆணையம் மற்றும் அதன் அதிகாரிகளிடம் பதில் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ள நீதிமன்றம், இந்த மனுவை ஏற்கெனவே நிலுவையில் உள்ள எஸ்.ஐ.ஆர் தொடர்பான பிற மனுக்களுடன் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!