ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று (அக்டோபர் 15 ) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலரின் கடந்த கால வாழ்க்கையை மையமாகக் கொண்டு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற முதல் பாகத்தைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்துடன் எஸ்.ஜே. சூர்யா, மம்மூட்டி, என பல முன்னணி நட்சத்திரங்களின் இணைப்பும், அனிருத்தின் இசையும் இப்படத்துக்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. இன்று வெளியான ஜெயிலர்-2 திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் படம் பற்றி பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டவற்றை இங்கே பார்க்கலாம்.
சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலரிடம் படத்தை பற்றிய கருத்துக்களை கேட்டபோது, "தலைவரின் அதிரடி தொடங்கிவிட்டது, 50 ஆண்டுகளாக இந்த குதிரை ஓடிக்கொண்டே இருக்கிறது தற்போது இன்னும் வேகமாக ஓடுகிறது." என்றார் ரசிகை ஒருவர்.
அதேநேரத்தில் வெளிநாட்டில் இருந்து ரஜினிகாந்த் படத்தின் முதல் காட்சி பார்க்கவே தமிழ்நாடு வந்திருப்பதாக கூறிய ரசிகை ஒருவர், " முதல் முறையாக முதல் காட்சி படம் பார்க்கிறேன் மிகவும் நன்றாக உள்ளது, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கும் வகையில் திரைப்படம் அமைந்துள்ளது, அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்." என்றார்.
"ஜெயிலர்- 1 திரைப்படம் பார்த்தது போலவே இருந்தது, இரண்டாம் பாகம் 'டாக்டர்' படத்தை நினைவூட்டியது" என்று கூறிய ரசிகர் ஒருவர், இந்த படம் முழுமையாக 'நெல்சன் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்தான்' " என்றார்.
"படத்தில் சிறப்புத்தோற்றத்தில் அதிகமானோர் வருகின்றனர் அதில் 'ஹிருத்திக் ரோஷன்' வரும் காட்சிகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் அப்படி இருந்திருந்தால் பாலிவுட்டிலும் இந்தப் படம் பெரிய அளவில் வருவாய் ஈட்டியிருக்கும்." என்று அவர் கூறினார்.
இந்தப் படத்தின் அடுத்தடுத்த படைப்புகள் வேண்டாம் என்று கூறிய ரசிகர் ஒருவர், "இயக்குநர் நெல்சன் ஜெயிலர்-2 உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும், ஜெயிலர்-2 திரைப்படம் ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களுக்கும் டிரீட்டாக அமைந்துள்ளது." என்றார்.
"படத்தின் முதல் பாதி நகைச்சுவையாகவும், இராண்டாம் பாதி மாஸாக ரஜினிகாந்தை எப்படி பார்க்க வேண்டும் என்று நினைத்தோமோ அப்படி இருக்கிறது." என்ற ரசிகை ஒருவர் இந்தப்படம் ரஜினிகாந்தின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்." என்றார்.
படத்தை பார்த்துவிட்டு பிபிசி தமிழிடம் பேசிய ரசிகர் ஒருவர், "கண்ணில் தண்ணீர் வர அளவுக்கு படம் சிறப்பாக உள்ளது, நான் மட்டுமல்ல படம் பார்க்க வந்த அனைவரும் அவர்களின் இருக்கையிலேயே இல்லை, தியேட்டரே அதிர்ந்தது, இயக்குநர் படத்தை சிறப்பாக எடுத்துள்ளார்." என்றார்.
மற்றொரு ரசிகர் பேசுகையில், "ஜெயிலர் -1 திரைப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்புடன் சென்றோம் அதனை படம் பூர்த்தி செய்தது, ஜெயிலர்-2 படத்துக்கு அதே அளவிலான எதிர்பார்ப்புடன் சென்றோம். எங்கள் எதிர்பார்ப்பை விட படம் சிறப்பாக உள்ளது. இந்த படத்தை குடும்ப ஆடியன்ஸ் மிகவும் மகிழ்ச்சியோடு பார்ப்பார்கள்." என்றார்.
" திரைத்துறையில் தனது சாதனையை ரஜினிகாந்த் தற்போது வரை தக்கவைத்துள்ளார். இந்தப்படத்தில் எதிர்பாராத சில காட்சிகளும் இருக்கின்றன, அவை சிறப்பாக வந்துள்ளது." என்றார் மற்றொரு ரசிகர்.
" அந்த ஏழு நாட்கள் படம் திரைக்கதைக்காக எப்படி பேசப்பட்டதோ, அதேபோல நெல்சன் இந்தப்படத்துக்காக பேசப்படுவார்" என்றார் படத்தை பார்த்த மற்றொரு ரசிகர்.
75 வயதான ஒரு நடிகராக அவர் இருந்தாலும், படத்தில் அவரது அசைவுகள் ஒவ்வொன்றும் பேசப்படும்" என்றார் சென்னை ரசிகர் ஒருவர்.
"படத்தில் அதிக அளவு சிறப்புத் தோற்றங்கள் வருகின்றன, ஆனால் அவர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நெல்சன் சிறப்பாக கையாண்டுள்ளார்." என்று அவர் கூறினார்.
சென்னையை போல இலங்கையை சேர்ந்த ரசிகர்களும் ஜெயிலர்-2 தொடர்பான கருத்துக்களை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.
"அனைத்து காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன, கிளைமாக்ஸ் காட்சிகள் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளன" என்றார் இலங்கை ரசிகர் ஒருவர்.
" இந்தப்படம் நிச்சயம் வெற்றிப்படமாக மாறும் குடும்பத்துடன் அனைவரும் பார்க்கக்கூடிய படம்" என்றார் மற்றொரு ரசிகர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு