ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட்டுக்கு தெற்கே, அதிவேக ரயில் ஒன்று மற்றொரு ரயிலுடன் மோதியதில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்பு எண்ணிக்கை, 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினில் நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்தாக இதை மாற்றியுள்ளது.
கணினி கோளாறு காரணமாக ரயில்கள் முதலில் நிறுத்தப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டு மையம் எடுத்த "விளக்க முடியாத" முடிவே மோதலுக்குக் காரணமாக அமைந்ததாக ஸ்பெயின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தங்களது ரயில் பின்னால் இருந்து ரென்ஃபே ரயிலால் மோதப்பட்டதாக இர்யோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. இரண்டு ரயில்களிலும் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் பேசிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், நாடு துயரத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்குவதே அரசின் முதல் முன்னுரிமை. என்ன நடந்தது, இந்தத் துயரம் ஏன் ஏற்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துவதே அரசின் இரண்டாவது நோக்கம்" என்று அவர் கூறினார்.
"போக்குவரத்து மற்றும் உள்துறை அமைச்சர்கள், இந்தக் கோர விபத்திற்கான மூலக்காரணம் என்ன என்பதைக் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர். இதன் உண்மை நிலையை நாங்கள் முழுமையாக வெளிக்கொணர்வோம். ஏதேனும் அலட்சியம் நிகழ்ந்திருந்தால், அது நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும்" என்றும் அவர் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய 77 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசரக்கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 15 பேர் "படுகாயமடைந்துள்ளனர்" என்று ஸ்பெயினின் சுகாதாரத்துறை அமைச்சர் மோனிகா கார்சியா தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து மருத்துவமனைகளும் தங்களின் அவசரக்காலத் திட்டங்களைச் செயல்படுத்தி, அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளைப் பலப்படுத்தியுள்ளன; மேலும் சிகிச்சை நடவடிக்கைகளையும் மறுசீரமைத்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து, ஸ்பெயினின் பெரும்பாலான முக்கியக் கட்சிகள் பொதுத் தேர்தல் பிரசாரத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
விபத்து நடந்த இடத்தில் நிலவிய காட்சிகள் "மிகவும் கொடூரமானவை" என்று நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர்.
ரயில்களில் ஒன்றில் பயணித்த ஸ்பெயின் செய்தியாளர் ராபர்டோ கோமெஸ், நிலைமை "மிகவும் குழப்பமாகவும் மனவேதனை அளிப்பதாகவும்" இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
மாட்ரிட் நகரிலிருந்து ஸ்பெயின் நாட்டின் தெற்குப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு அதிவேக ரயில், அங்கு நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படும் மற்றொரு ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து நேரிட்டது. இந்த மோதலின் தாக்கத்தால் குறைந்தது இரண்டு ரயில் பெட்டிகள் சரிவான பள்ளத்தில் உருண்டு விழுந்தன.
மாட்ரிட் – செவில்லா வழித்தடத்தில் இயக்கப்படும் இரயோ நிறுவனத்தின் ரயிலுக்கும், ரென்ஃபே நிறுவனத்தின் மற்றொரு ரயிலுக்கும் இடையே இந்த விபத்து நிகழ்ந்ததாக ரயில்வே உள்கட்டமைப்பு நிர்வாக அமைப்பான அடிஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"தற்போது அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று ஸ்பெயின் அவசரகால சேவைகள் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
பல தீயணைப்புப் படைக் குழுக்கள், மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் இரண்டு நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்டவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பயணம் தொடங்கி சுமார் 40 நிமிடங்களான நிலையில் பலத்த அதிர்வுடன் விபத்து நிகழ்ந்ததாக ரயிலில் இருந்த பயணி ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
சமிக்ஞை (சிக்னல்) தொடர்பான மனிதத் தவறே இந்த விபத்துக்கு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என அரசு கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில்களில் பயணித்தவர்களின் உறவினர்களுக்காக, தேசிய ரயில் சேவை நிறுவனமான 'ரென்ஃபே' உதவி எண் ஒன்றை அமைத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம், இதே வழித்தடத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு