Skip to main content

Advertisement

டைகர் ஷெராஃப் முதல் சல்மான் கான் வரை - குறிவைக்கப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் யார்?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
 டைகர் ஷெராஃ
Getty Images
டைகர் ஷெராஃப்

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பையில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

மும்பை காவல்துறையினர் வழங்கியுள்ள தகவலின்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டில் டைகர் ஷெராஃபின் ஓட்டுநர் உட்பட இருவர் காயமடைந்தனர். கார் ஓட்டுநரின் இடது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

இதுகுறித்து துணைக் காவல் ஆணையர் மொஹித் கார்க் கூறுகையில், "டைகர் ஷெராஃப் பாதுகாப்பாக இருக்கிறார். அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை. அவருக்குக் காயமும் ஏற்படவில்லை" என்றார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகப் பாலிவுட் பிரபலங்கள் பலர் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், டைகர் ஷெராஃப் மீதான தாக்குதல் முயற்சி, இத்தகைய பிரபலங்களின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் அதிகரித்துள்ளது.

சமீபகாலமாகத் தாக்குதலுக்கு உள்ளான அல்லது தாக்குதலுக்கு இலக்கான திரையுலகக் கலைஞர்களில், நடிகர்கள் சல்மான் கான் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோரின் பெயர்கள் முக்கியமானவை.

சமீப காலங்களில் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள பாலிவுட் பிரபலங்கள் யார்?

ரோஹித் ஷெட்டி

2026 பிப்ரவரி 31 ஆம் தேதி இரவு, மும்பையின் ஜூஹூ பகுதியில் உள்ள திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் வீடு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறிவைக்கப்பட்டது.
Getty Images
ரோஹித் ஷெட்டியின் வீடு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது (கோப்புப் படம்)

2026 ஜனவரி 31-ஆம் தேதி இரவு, மும்பையின் ஜூஹூ பகுதியில் உள்ள திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் வீடு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறிவைக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலை சுபம் லோன்கர் கும்பல் நடத்தியதாகவும், பணம் பறிப்பதற்கும் அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய அதிகாரிகள் பின்னர் பல சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில், உத்தரப் பிரதேச சிறப்புப் படையும் மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவும் இணைந்து, கதா என்றழைக்கப்படும் பிரதீப் குமாரை 2026 அக்டோபரில் ஆக்ராவில் கைது செய்தன.

திஷா பதானி

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக கோல்டி பிரார் மற்றும் ரோஹித் கோதாரா கும்பல்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்தன.
Getty Images
திஷா பதானி (கோப்புப் படம்)

2025-ஆம் ஆண்டு செப்டம்பரில், உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் நடிகை திஷா பதானியின் தந்தை ஜகதீஷ் பதானியின் பூர்வீக வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக கோல்டி பிரார் மற்றும் ரோஹித் கோதாரா கும்பல்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்தன.

ஆன்மிக குருமார்கள் குறித்து திஷாவின் சகோதரி குஷ்பு பதானி தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகளைத் தொடர்ந்து, அவருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு தாக்குதல்தாரிகள் பின்னர் காஜியாபாத்தில் காவல்துறையினருடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர்.

சல்மான் கான்

2024-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பு மான்களைப் புனிதமானதாகக் கருதுகின்றனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இரண்டு கருப்பு மான்களை வேட்டையாடியதாக சல்மான் கான் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால் பிஷ்னோய் கும்பல் ஆத்திரமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ராகேஷ் ரோஷன்

ராகேஷ் ரோஷன்
SUJIT JAISWAL/AFP via Getty Images
'கஹோ நா பியார் ஹை' படத்தின் வெற்றிக்குப் பிறகு ராகேஷ் ரோஷன் தாக்கப்பட்டார் (கோப்பு படம்)

திரைப்பட இயக்குநர் ராகேஷ் ரோஷன், 2000-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி மும்பையில் உள்ள தனது அலுவலகத்துக்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பினார். அவரது கை மற்றும் மார்புப் பகுதியில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தபோதிலும், அவர் உயிர் பிழைத்தார்.

அவரது மகன் ஹிருத்திக் ரோஷன் அறிமுகமான திரைப்படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்தது. பணம் பறிக்கும் நோக்கில் கேட்கப்பட்ட தொகையைச் செலுத்த ராகேஷ் ரோஷன் மறுத்ததால் அவர் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராஜீவ் ராய்

ராஜீவ் ராய்
Getty Images
ராஜீவ் ராயும் தாக்குதல் நடத்தியவர்களால் குறிவைக்கப்பட்டார் (கோப்புப் படம்).

'குப்த்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜீவ் ராய், 1997-ஆம் ஆண்டு மத்திய மும்பையில் அபு சலீம் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐந்து நபர்கள் தன்னைத் தாக்கியபோது ஆபத்தான சூழலை எதிர்கொண்டார்.

ராஜீவ் ராய் தனது அலுவலகத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தபோது, தாக்குதல்தாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஏற்கெனவே அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்திருந்ததால், பாதுகாப்புக்காக பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தலையிட்டு, தாக்குதல்தாரிகளை எதிர்கொண்டு அங்கிருந்து விரட்டியடித்தனர்.

குல்ஷன் குமார்

1997-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி, திரைப்படத் தயாரிப்பாளர் முகேஷ் துக்கல், மும்பை அந்தேரியில் உள்ள தனது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை, திரைத்துறையினரின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியது.

இதையடுத்து, 1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி, மும்பையில் கோவில் ஒன்றுக்கு வெளியே டி-சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாகியான குல்ஷன் குமார் கொலை செய்யப்பட்டார்.

தாதாக்கள் குல்ஷன் குமாரிடம் ஒவ்வொரு மாதமும் மிரட்டிப் பணம் கேட்டதாகவும், ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் அப்போது வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!