Skip to main content

Advertisement

தாமிரபரணி ஆற்றில் தங்க கட்டி மூட்டை கிடைத்ததா? சுவிஸ் முத்திரைகள், சிபிசிஐடி விசாரணை - தெரியவந்தது என்ன?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள இந்தப் பகுதியில் கருப்பசாமி என்பவரிடம் இருந்து சுமார் 430 கிராம் அளவிலான தங்க நகைகளைக் காவல்துறை மீட்டுள்ளது.
SPECIAL ARRANGEMENTS
பிடிபட்ட தங்க நகைகள்

தாமிரபரணி ஆற்றில் தங்கக் கட்டிகள் அடங்கிய மூட்டை கிடைத்ததாகப் கூறப்படும் வழக்கில் சந்தேக வளையத்தில் உள்ள ஆறு பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்திவருகிறது.

"பிடிபட்ட 24 தங்கக் கட்டிகளில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த முத்திரைகள் இடம்பெற்றுள்ளதால் கடத்தலுக்காக இவை கொண்டு வரப்பட்டிருக்கலாம்" எனக் கூறுகிறார், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர்.

திருட்டு மற்றும் திருடிய பொருட்களை தவறாகப் பயன்படுத்தியது என இரண்டு பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸ் வழக்குப் பதிவுசெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 24) சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள இந்தப் பகுதியில் கருப்பசாமி என்பவரிடம் இருந்து சுமார் 430 கிராம் அளவிலான தங்க நகைகளைக் காவல்துறை மீட்டுள்ளது. ஆனால், ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ஆத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் பிரபாகரனிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் கேட்டபோது, "ராமநாதபுரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகள் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை." எனக் கூறுகிறார்.

'தங்கக் கட்டியில் சுவிஸ் முத்திரை'

சிபிசிஐடி விசாரணைக்கு தொடக்கமாக, கடந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சம்பவம் அமைந்தது.

அங்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிலர் பிடிபட்டுள்ளனர்.

இவர்களில் குட்டி என்கிற சரவணன் மற்றும் அவரது உறவினர்களிடம் இருந்து சுமார் 33 தங்கக் கட்டிகள், 28 சவரன் நகைகள் மற்றும் 12 லட்ச ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

"தங்கக் கட்டிகளை தாமிரபரணி ஆற்றில் கண்டெடுத்ததாக பிடிபட்ட நபர் கூறி வருகிறார். அவர், தூத்துக்குடியில் வசிக்கும் காட்டு நாயக்கர் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்" என, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செப்டம்பர் மாதம் அளித்த பேட்டியில் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளராக இருந்த சந்தீஷ் கூறியுள்ளார்.

"சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வல்காம்பி சுவிஷ் மற்றும் ஏர்கர் ஆகிய முத்திரைகளைக் கொண்ட 24 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மற்ற தங்கக் கட்டிகள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தங்கம் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்தவை," என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கேணிக்கரை காவல் நிலைய எல்லையில் பிடிபட்ட ஐந்து பேரும் உறவினர்கள் என்றும் இவர்களில் மூன்று பேர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

தங்கம் தொடர்பான முறையான ஆவணங்கள் எதையும் பிடிபட்ட நபர்கள் சமர்ப்பிக்கவில்லை. இவற்றுக்கு உரிமைகோரி யாரும் முன்வராததால் வழக்குப் பதிவு செய்து தங்கத்தைக் காவல்துறை பறிமுதல் செய்தது.

தங்கக் கட்டிகளை மாவட்ட கருவூல அதிகாரியின் பாதுகாப்பில் வைக்குமாறு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

X/Ramanathapuram District Police
ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளராக இருந்த சந்தீஷ்

சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்

தங்கக் கட்டிகள் பிடிபட்டது தொடர்பாக கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

"சுவிஸ் நாட்டு முத்திரை கொண்ட 24 தங்கக் கட்டிகள் உள்ளதால் இவை சட்டவிரோத வழியில் கொண்டு வரப்பட்டிருக்கலாம்,' என்ற சந்தேகம் சுங்கத்துறைக்கு உள்ளது. இதனால் சுங்கத்துறை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது" என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராமநாதபுரம் எஸ்.பி கூறியுள்ளார்.

தொடர்ந்து, "தங்கத்தைப் பறிமுதல் செய்த பிறகு இ-சாக்சியா செயலியைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்தோம். நீதிமன்றம் மூலமாக தங்கக் கட்டிகளை சுங்கத்துறையிடம் ஒப்படைப்போம்" என அவர் தெரிவித்துள்ளார்.

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களை ஆடியோ, வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு இ-சாக்சியா செயலி உதவுகிறது.

ராமநாதபுரத்தில் 33 தங்கக் கட்டிகள் பிடிபட்டதாக ஊடக செய்திகள் தெரிவித்த நிலையில், இவற்றின் அளவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக காவல்துறை மீது சந்தேகம் வலுத்ததால், கடந்த அக்டோபர் மாதம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

தாமிரபரணி ஆற்றில் அடித்து வரப்பட்டதா?

செவ்வாய்க்கிழமையன்று சிபிசிஐடி டி.எஸ்.பி அஜய் தங்கம் தலைமையிலான குழுவினர், ஆத்தூரில் சோதனை நடத்தினர்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், "தங்களுக்குக் கிடைத்த தங்கக் கட்டிகளை நகைகளாகவும் மாற்றியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், சந்தேக வளையத்தில் ஆறு பேர் உள்ளனர்" எனக் கூறுகிறார்.

விசாரணை தொடக்க நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "தாமிரபரணி ஆற்றில் தங்கக் கட்டி மூட்டை அடித்து வரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. வேறு எங்காவது எடுத்துவிட்டு இங்கு எடுத்தது போல காட்டுகிறார்களா என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம்" என்கிறார்.

"கடத்தல் மூலமாக வந்திருக்க வாய்ப்புள்ளதா என்பதைக் கண்டறிய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மூலமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

தங்கக் கட்டிகள் கிடைத்த பிறகு அவற்றின் மூலம் வீடு மற்றும் நிலங்களை வாங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கேட்டபோது "நிலங்களை வாங்கியது தொடர்பாக பத்திரப்பதிவுத் துறையிடம் சில விவரங்களைக் கேட்டுள்ளோம்" என்று மட்டும் பதில் அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சி என்பது தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தங்கக் கட்டிகள் பிடிபட்டது தொடர்பாக காட்டு நாயக்கன் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் கேட்டபோது, அவர் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

பன்றி வளர்ப்பு என்பது இவர்களின் பிரதான தொழிலாக உள்ளதாகக் கூறுகிறார், ஆத்தூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சதீஷ்குமார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஆற்றில் மீன் பிடிக்கப் போகும்போது சாக்கு மூட்டையில் தங்கக் கட்டிகள் கிடைத்ததாகக் கூறுகின்றனர்" எனக் கூறுகிறார்.

தாமிரபரணி ஆற்றில் கிடைத்ததா அல்லது தூத்துக்குடி கடல் வழியாக தங்கக் கட்டிகள் கடத்திக் கொண்டுவரப்பட்டதா என சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

"கடந்த செப்டம்பர் மாதமும் ராமநாதபுரத்தில் இருந்து காவலர்கள் இங்கு வந்து ஆட்களைப் பிடித்துச் சென்றனர். இந்தத் தங்கக் கட்டிகள் தாமிரபரணி ஆற்றில் அடித்து வரப்பட்டதா என்பது குறித்து உறுதியாக எந்தத் தகவலும் இல்லை" என்கிறார் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!