தேனி சிறையிலிருந்து நேற்று இரவு 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், இதுவரை 4 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர்.
தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தப்பியோடிய கைதிகளில் நால்வர் தேடுதல் நடவடிக்கையின்போது காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிடாரி தெரிவித்துள்ளார்.
''தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கத் தமிழ்நாடு காவல்துறையின் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளக் காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகிறோம். கேரளக் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் தேடுதல் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்'' என விஜயேந்திர பிடாரி கூறியுள்ளார்.
சிறை வளாகம் சுற்றியுள்ள கிராமங்களில் டிரோன் மூலம் பறக்கவிட்டு தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தேனி சிறையில் பணியாற்றிய முதலாம் நிலை வார்டன் மற்றும் இரண்டாம் நிலை வார்டன்கள் 8 பேர் என மொத்தம் 9 சிறைத் துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறைச்சாலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
என்ன நடந்தது?
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 26-ஆம் தேதி) இரவு தேக்கம்பட்டி சிறையில் உள்ள 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பித்துள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.
தொடர்ந்து தேக்கம்பட்டி சிறையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் ஆய்வு மேற்கொண்டார். தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி சிறை வளாகத்தில் ஆய்வு செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் கைதிகள் சிறை அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது.
கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிடாரி, உடல்நிலை சரியில்லை என நாடகமாடி கைதிகள் தப்பித்து சென்றதாக கூறினார்.
கைதிகள் 17 பேரும் ஒரே சிறை செல்லில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதை தொடர்ந்து சிறை காவலர் செல்லுக்கு வந்தபோது அவரை தாக்கிவிட்டு இவர்கள் 17 பேரும் தப்பியதாகவும் காவல்துறையை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த இரண்டாம் நிலை சிறைக் காவலர் தங்கபாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் சில காவலர்களுக்கும் காயமடைந்துள்ளனர்.
தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அண்டை மாவட்டமான திண்டுக்கல்லில் 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தச் சாவடிகள் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தப்பி ஓடிய கைதிகள் யார்?
மதுரை மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி (எ) மதன், ராஜ்குமார், திருப்பதி, பொன்முத்துச்செல்வம், மீனாட்சிசுந்தரம், நிசாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக்ராஜா, பிரசாந்த் (எ) லிங்க பிரசாத், ராஜா சிக்கந்தர் மற்றும் சோலைமுகிலீஸ்வரன்,
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தருண்குமார்
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி செல்வம்
சேலம் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரெஜின்
தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன்.
அரசியல் தலைவர்களின் விமர்சனம்
தேனி சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியதைச் சுட்டிக்காட்டிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் குற்றவாளிகளைக் கண்காணிப்பதிலும் சிறைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்டுள்ள நிலையில், இத்தகைய சம்பவம் நிகழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய அவர், தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்துள்ளார்.
வெளியில் உள்ள குற்றவாளிகள் குற்றங்களில் ஈடுபடுவதாகவும், சிறைக்குள் இருப்பவர்களும் தப்பிச் செல்வதாகவும் கூறிய அவர், மக்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தமிழகம் சென்றுவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்துக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு கைதிகள் தப்பியுள்ள நிலையில், சிறைத்துறை எந்த அளவுக்குச் சீர்குலைந்துள்ளது என்ற கேள்வி எழுவதாக அவர் கூறியுள்ளார்.
அண்மையில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குச் சென்ற முதலமைச்சர், அந்த ஆய்வின் அடிப்படையில் என்ன நடவடிக்கைகளை எடுத்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு உத்தரவுகளைப் பிறப்பித்ததா? என்றும் அவர் வினவியுள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளார் கனிமொழி, குற்றவாளிகளைக் கைது செய்யவும் சிறையில் உள்ள கைதிகளைப் பாதுகாக்கவும் அரசால் முடியவில்லை என விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக அரசையும் சிறைத்துறையையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
புழல் சிறையிலிருந்து ஏற்கெனவே இரண்டு கைதிகள் தப்பியோடியபோதே, தமிழகச் சிறைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தப்பியோடிய கைதிகளை உடனடியாகக் கைது செய்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய சம்பவம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிர்வாகத் தோல்வி என தமிழக பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
பல விசாரணைக் கைதிகளை ஒரே அறையில் அடைத்தது, மருத்துவ அவசரநிலை குறித்த தகவலைச் சரிபார்க்காமல் கதவைத் திறந்தது உள்ளிட்டவை சிறைப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளைக் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு