அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றி, முக்கியமான வெற்றியைப் பெற்றுள்ளனர். இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சியினரைக் கடுமையாக விமர்சித்ததுடன், ஜனநாயகக் கட்சியினர் "சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்" என்றும் கூறினார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், டெக்சாஸ் ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜினா ஹினோஜோசாவிடம் தோல்வியடைந்த கிரெக் அபாட்டைக் கடுமையாக விமர்சித்தார்.
கடந்த ஆறு மாதங்களாக அவர் "பெயரளவில் மட்டுமே குடியரசுக் கட்சியினராக" மாறாமல் இருந்திருந்தால், இந்தத் தோல்வி ஏற்பட்டிருக்காது என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
தேர்தலில் தானே போட்டியிட்டிருந்தால், குடியரசுக் கட்சியினர் "மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார்கள்" என்றும் டிரம்ப் கூறினார்.
ஆனால், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் முடிவுகளை "நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்றார்.
அந்த நாளிதழிடம் பேசியபோது, ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றத் தான் விரும்புவதாகவும் டிரம்ப் கூறினார்.
"நாம் அனேகமாக ஏதாவது ஒரு உடன்பாட்டுக்கு வருவோம்," என்றும் அவர் தெரிவித்தார்.
இரான் போர் காரணமா?
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த மற்றொரு பேட்டியில், தேர்தல் முடிவுகள் தமக்கு "சற்றே ஆச்சரியமாக இருந்தன" என்று டிரம்ப் கூறினார். குடியரசுக் கட்சி வேட்பாளர்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "அவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நினைத்தேன்" என்றார்.
"ஜனநாயகக் கட்சியினர் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்கள் கடுமையாகப் போராடினர்," என்று அந்தத் தொலைக்காட்சியிடம் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் தமது ஒப்புதலுக்காக "பைத்தியக்காரத்தனமான" சட்ட மசோதாக்களை அனுப்புவார்கள் என்றும், அவற்றைத் நிராகரிப்பேன்(வீட்டோ) என்றும் டிரம்ப் கூறினார்.
"சில மாதங்கள் நான் தொடர்ந்து வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய பிறகு, அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து, 'எப்படிச் செயல்படுத்துவது?' என்று கேட்பார்கள். அப்போது நாம் இணைந்து செயல்படுவோம்," என்றார்.
மேலும், "வீட்டோ அதிகாரம் என்னிடம் இருக்கிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
'ட்ரூத் சோஷியல்' தளத்தில், வழக்கமாக 'மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்' என்ற முழக்கம் பொறிக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிறத் தொப்பியின் படத்தை டிரம்ப் பதிவிட்டார்.
ஆனால், அந்தத் தொப்பியில் 'வீட்டோ' என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களைத் தடுத்து நிறுத்தும் தனது அதிகாரத்தைக் குறிப்பிட்டு அவர் இதைப் பதிவிட்டதாகத் தெரிகிறது.
இரான் உடனான மோதலும் குடியரசுக் கட்சியின் தோல்விக்குக் காரணமாக இருந்ததாக டிரம்ப் ஒப்புக்கொண்டார்.
தேர்தல் முடிவுகளிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் கேட்டபோது, "அதில் ஒரு பகுதி இரான் விவகாரம் என்று நினைக்கிறேன்," என்று அவர் பதிலளித்தார்.
ஆனால், அந்தப் போர் அமெரிக்காவில் எரிபொருள் விலைகளில் ஏற்படுத்திய தாக்கமே வாக்காளர்களைத் தங்கள் கட்சியிலிருந்து விலகச் செய்ததாக அவர் கூறினார்.
"இரான் விவகாரத்தில் நான் எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், எரிபொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய குறுகிய கால விளைவுகளை அவர்கள் ஏற்கத் தயாராக இருக்கவில்லை என்று நினைக்கிறேன். அதை நான் புரிந்துகொள்கிறேன்," என்றார்.
முதலில், டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபாட்டை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். அபாட் தோல்வியடைந்ததன் மூலம், 30 ஆண்டுகளுக்கும் மேலான காலத்துக்குப் பிறகு முதன்முறையாக டெக்சாஸ் ஆளுநர் பதவியை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
"டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபாட், தனது அரசியல் வாழ்க்கையின் கடைசி ஆறு மாதங்களில் பெயரளவில் மட்டுமே குடியரசுக் கட்சியினராக மாறாமல் இருந்திருந்தால், அவர் தோல்வியடைந்திருக்க மாட்டார். அவர் மீண்டும் தனது பழைய அணுகுமுறைக்குத் திரும்பினார். அது சிறப்பாக அமையவில்லை!" என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டார்.
தேர்தலில் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேறு சில வேட்பாளர்களிடமிருந்தும் டிரம்ப் தன்னை விலக்கிக்கொண்டார்.
சிபிஎஸ் நியூஸ் ஊடகத்திடம் பேசிய அவர், "சில இடங்களில் வேட்பாளர்களை வாக்காளர்களுக்குப் பிடிக்கவில்லை. வேறு சில இடங்களில் அந்த வேட்பாளர்கள் எனது நண்பர்களாக இருக்கவில்லை," என்றார்.
'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட பல பதிவுகளில் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தையும் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். ஜனநாயகக் கட்சியினருக்கு அந்தத் தொலைக்காட்சி "அதிக நேரம் ஒதுக்குகிறது" என்று குற்றம்சாட்டிய அவர், அந்த நிறுவனத்தின் பார்வையாளர் மதிப்பீடுகள் சரிந்ததற்கு, "நான் காரணமல்ல; அவர்கள் எனக்கு எதிராக இருப்பதுதான் காரணம்!" என்றார்.
நியூயார்க் நகரின் முன்னாள் மேயர் பில் டி பிளாசியோவை ஃபாக்ஸ் நியூஸ் பேட்டி கண்டதிலும் டிரம்ப் அதிருப்தி தெரிவித்தார். நியூயார்க் நகர வரலாற்றிலேயே "மிக மோசமான மேயர்" என்று அவரை டிரம்ப் விமர்சித்தார்.
"அவர் நகரை அவப்பெயருடன் விட்டுச் சென்றார். அவர் ஏற்படுத்திய பாதிப்புகளை அளவிடவே முடியாது," என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு