Skip to main content

Advertisement

தேவா மறைவு பற்றி ரஜினி, கமல், ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது என்ன?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தேவாவின் உடலுக்கு திரைத்துறையினரும் அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ungaldevaoffl/X
தேவாவின் உடலுக்கு திரைத்துறையினரும் அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த இசையமைப்பாளர் தேவாவின் மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவாவின் உடலுக்கு அரசியல் தலைவர்களும் திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

"ஐந்து தம்பிகள் உடன் இணைந்து தெருத்தெருவாக கச்சேரி செய்த தேவா வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்" என்று ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

"சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பு கொண்டவர் தேவா" என்று நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த தேவாவின் மெல்லிசை, பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன." என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

தேவா உடல் நாளை அவரது சொந்த ஊரான ஆற்காட்டில் அடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில், அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் இரங்கல்

”சொக்கத்தங்கம் தேவா” நினைவுகளைப் பகிர்ந்த ரஜினிகாந்த்
The British Broadcasting Corporation

தேவா மறைவுச் செய்தி வெளியானதுமே சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று நடிகர் ரஜினி காந்த் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தேவா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

"எனது அருமை நண்பர் தேவாவின் மறைவு அதிர்ச்சியையும் வேதைனையும் அளிக்கிறது. அவர் எனது அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் படங்களுக்கு இசையமைத்தார். அம்மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றிபெற்றன." என்று அதில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

"படையப்பா படம் தொடங்கிய போது, ரஹ்மானை இசையமைப்பாளராக நியமிக்கலாம் என எனது நண்பர்கள் யோசனை தெரிவித்தனர். நானும் அரை மனதுடன் தேவாவிடம் சென்று இந்த விஷயத்தை சொன்னேன். அப்போது எழுந்து நின்று என் கையை பிடித்து 'தாராளமாக செய்யுங்க ரஜினி சார்' என்றார் தேவா" என ரஜினிகாந்த் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "நீங்க தப்பா நினைத்துக்கொள்ளக் கூடாது என்று நான் சொன்னேன். அதற்கு, 'சார் உங்க கூட மூன்று படம் செய்ததே பெரிய பாக்கியம்'என்று கூறினார். அப்படிப்பட்ட கள்ளம் கபடம் இல்லாத நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர் தேவா" என்றார்.

"வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் தேவா. ஆரம்ப காலத்தில் ஐந்து தம்பிகள் உடன் இணைந்து தெருத்தெருவாக கச்சேரி செய்தார். திரையுலகில் பெரிய இசையமைப்பாளராக வந்த பின்பும் தம்பிகளை கூடவே வைத்துக் கொண்டார். அந்தளவுக்கு அவர் ஒரு அருமையான குடும்பஸ்தர் தேவா" என்று அவர் கூறினார்.

"இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிபெற்றவர் தேவா. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் என்னை சந்தித்து கான்சர்ட் பண்ணலாம் என்றிருக்கிறேன், நீங்கள்தான் தொடங்கி வைக்க வேண்டும் என்றார். நானும் மகிழ்ச்சியுடன் தொடங்கி வைத்தேன். அவருடைய கான்சர்ட் மிகப்பெரிய வெற்றி பெற்றது."

"சமீபத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு என்னை சந்தித்தார். அப்போது 'இளைஞர்களின் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது சார். இன்னும் 10-15 வருடங்கள் வாழ்ந்துவிட்டு சென்றுவிடுகிறேன்' என்று சொன்னார். ஆனால், ஆண்டவன் 'நீ ரொம்ப நல்லவன்பா சந்தோசமாக இருக்கும் போது வந்துவிடு என்று அவரை அழைத்துக்கொண்டார். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் இரங்கல்

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ungaldevaoffl/X
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னையில் தேவாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி நடிகர் கமல்ஹாசன் "அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது" என்று தன்னுடைய எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "உற்சாகமும் துறுதுறுப்பும், சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது. அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும். " என்று கமல் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் என்ன கூறினார்?

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தேவா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
arrahman/X
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தேவா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

"நமது அன்பிற்குரிய 'தேனிசைத் தென்றல்' தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது" என்று இசையமைப்பாளர் ஏ. ஆர் ரஹ்மான தெரிவித்துள்ளார்.

அவரது எக்ஸ் பதிவில், " தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும் " என்று குறிப்பிட்டுள்ளார்.

பாட்ஷாவில் தேவாவுடன் பணிபுரிந்தது பற்றி சுரேஷ் கிருஷ்ணா பேட்டி

ரஜினியின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்த பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, தேவாவின் உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாட்ஷா படத்தில் தேவா போட்ட பாட்ஷா...பாட்ஷா.. பிஜிஎம் இசையை எப்போதும் மறக்க முடியாது. படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு ஸ்பாட்டில் அமைத்த இசை அது. நான் ஐடியாவை கொடுத்ததும் நடந்துவரும் புட் ஸ்டெப்பை தீமாக மாற்றினார். இன்றைக்கும் புட் ஸ்டெப்ஸை கேட்கும் போது தேவா ஞாபகம்தான் வரும். பாட்ஷா படத்தின் வெற்றிக்கு தேவாவுக்கு முக்கியப் பங்குள்ளது." என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "சமீபத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு காரில் பயணிக்கும் போது என்னுடைய டிரைவர் பெண் புறா பாட்டை ஒலிக்கவிட்டார். உடனே தேவாவுக்கு கால் செய்து, "சார் பெண் புறா ஓடுது கேட்கிறீங்களா?' என்றேன். பிரமாதமான பாட்டு அது" என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!