வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு தீவிர புயல் அதே வீரியத்துடன் தீவிர புயலாகவே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் தீவிரப் புயலான முரசு, இன்று (நவம்பர் 2) இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் - நரசாபுரம் இடையே, ஓங்கோலுக்குத் தெற்கே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி, புயல் நெல்லூருக்கு கிழக்கு - வடகிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், சென்னை நுங்கம்பாக்கத்திற்கு வடக்கு - வடகிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
கடந்த ஆறு மணிநேரத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், தொடர்ந்து அதே திசையில் மெதுவாக நகரக்கூடும்.
புயலின் மையப்பகுதியில் தற்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. இடையிடையே 120 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும்.
புயல் கரையைக் கடக்கும்போது தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயமும் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, மச்சிலிப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள டாப்ளர் வானிலை ரேடார்கள் மூலம் 'முரசு' தீவிரப் புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது."
கனமழை எச்சரிக்கை
கடலோர ஆந்திரப் பிரதேசம்:
- நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 4ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வட தமிழ்நாடு:
- நவம்பர் 2ஆம் தேதி பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 3ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நவம்பர் 2ஆம் தேதி பிற்பகல் முதல் நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை வரை மணிக்கு 60–70 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
- வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
காற்றுக்கான எச்சரிக்கை
ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகள் மற்றும் கடலுக்கு அப்பால் உள்ள பகுதிகள்:
- கிருஷ்ணா, பாபட்லா, பிரகாசம், எஸ்.பி.எஸ்.ஆர். நெல்லூர், குண்டூர், ஏலூர், என்.டி.ஆர்., பல்நாடு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும், கடலுக்கு அப்பால் உள்ள பகுதிகளிலும் தற்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் காற்று வீசி வருகிறது.
- நவம்பர் 2ஆம் தேதி பிற்பகல் முதல் காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 100 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
- நவம்பர் 2ஆம் தேதி இரவு முதல் நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை வரை மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
- புயல் கரையைக் கடந்த பிறகு, நவம்பர் 3ஆம் தேதி காலை மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
- நவம்பர் 3ஆம் தேதி மாலை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் மேலும் குறையும்.
வட தமிழ்நாடு – புதுச்சேரி கடலோரப் பகுதிகள்:
- திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரி கடலோரப் பகுதிகளிலும் தற்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசி வருகிறது.
- நவம்பர் 2ஆம் தேதி பிற்பகல் முதல் நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
- நவம்பர் 3ஆம் தேதி மாலை வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் மேலும் குறையும்.
கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கை
ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகள்:
- நவம்பர் 2ஆம் தேதி காலை முதல் நவம்பர் 3ஆம் தேதி காலை வரை கடல் அதிகம் முதல் மிகவும் கொந்தளிப்பான நிலை வரை காணப்படும்.
- அதன்பிறகு கடல் சீற்றம் படிப்படியாகக் குறைந்து, நவம்பர் 4ஆம் தேதி காலை மிகவும் கொந்தளிப்பான நிலையிலிருந்து கொந்தளிப்பான நிலைக்கு மாறும்.
வட தமிழ்நாடு – புதுச்சேரி கடலோரப் பகுதிகள்:
- நவம்பர் 4ஆம் தேதி காலை வரை கடல் கொந்தளிப்பானது முதல் மிகவும் கொந்தளிப்பானது வரை காணப்படும். அதன்பிறகு கடல் சீற்றம் படிப்படியாகக் குறையும்.
கடல் அலை உயரம் பற்றிய எச்சரிக்கை
- இன்று (நவம்பர் 2) மாலை முதல் நாளை (நவம்பர் 3) காலை வரை தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகளில் வானியல் அலையுயரத்தைக் காட்டிலும் 0.5 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் கடல் அலைகள் எழுந்து தாழ்வான பகுதிகளை மூழ்கடிக்கக்கூடும்.
- இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை கடல் அலைகள் வானியல் அலையுயரத்தைக் காட்டிலும் 1.0 முதல் 1.5 மீட்டர் வரை உயரக்கூடும்.
- பாபட்லா, கிருஷ்ணா மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் அதிகபட்ச அலை உயரம் பதிவாக வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்:
- நவம்பர் 2ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு.
- நவம்பர் 4ஆம் தேதி காலை வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு.
- நவம்பர் 4ஆம் தேதி பிற்பகல் வரை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு.
- நவம்பர் 2ஆம் தேதி காலை முதல் நவம்பர் 4ஆம் தேதி பிற்பகல் வரை ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகளுக்கு.
- நவம்பர் 4ஆம் தேதி காலை வரை வட தமிழ்நாடு – புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கு.
- நவம்பர் 2ஆம் தேதி மாலை முதல் நவம்பர் 4ஆம் தேதி பிற்பகல் வரை வடமேற்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதிகள் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு.
மீன்வளத் துறையினர் மற்றும் மீன்பிடித் துறைமுக அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அடுத்தடுத்த கடல்சார் எச்சரிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்.
நவம்பர் 3ஆம் தேதி வரை வெளியிடப்படும் சமீபத்திய பகுதி சார்ந்த அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப மீனவர்கள் தங்களது நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும்.
மீன்பிடி, கப்பல் போக்குவரத்து, துறைமுகம் மற்றும் கடல்சார் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளின் அளவு மற்றும் காலத்தை நவம்பர் 3ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிடும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.
புயல் கரையைக் கடந்த பின்னரான வானிலை முன்னறிவிப்பு
கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் உள்மாவட்டங்கள், ராயலசீமா, தெற்கு ஒடிசா, தெலங்கானா மற்றும் தெற்கு சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளுக்கான முன்னறிவிப்பு:
- 'முரசு' தீவிரப் புயல் கரையைக் கடந்த பிறகு மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை வரை தீவிரப் புயலாகவே நீடிக்க வாய்ப்புள்ளது.
- அதன்பிறகு நவம்பர் 3ஆம் தேதி காலை புயலாக வலுவிழக்கக்கூடும்.
- கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் உள்மாவட்டங்கள், ராயலசீமா மற்றும் தெலங்கானா பகுதிகளில் நவம்பர் 3ஆம் தேதி நண்பகல் வரை மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
- அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து, நவம்பர் 3ஆம் தேதி மாலையில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
- நவம்பர் 4ஆம் தேதி அதிகாலையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
(இந்திய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பின் அடிப்படையில் மேற்கண்ட தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.)
அவசர உதவி எண்கள்
புயல் தொடர்பான அவசர உதவி தேவைப்படுவோர் மாநில அவசர உதவி எண்ணான 1070 அல்லது மாவட்ட அவசர உதவி எண்ணான 1077 ஆகியவற்றைத் தொடர்புகொள்ளலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.
புயலின் நகர்வு, காற்றின் வேகம், மழை எச்சரிக்கை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் வெளியிடும் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
'இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்க வாய்ப்பு'
வங்கக்கடலில் நிலவும் தீவிரப் புயலான முரசு, இன்று (நவம்பர் 2) இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் - நரசாபுரம் இடையே, ஓங்கோலுக்குத் தெற்கே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி, புயல் நெல்லூருக்கு கிழக்கு - வடகிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், சென்னை நுங்கம்பாக்கத்திற்கு வடக்கு - வடகிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
கடந்த ஆறு மணிநேரத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், தொடர்ந்து அதே திசையில் மெதுவாக நகரக்கூடும்.
புயலின் மையப்பகுதியில் தற்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. இடையிடையே 120 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும்.
புயல் கரையைக் கடக்கும்போது தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயமும் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு