இந்த கலந்துரையாடலில் எக்செல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் ராம்சந்தானி, சன்ஷைன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விபுல் அம்ருத்லால் ஷா, பூஜா பிலிம்ஸ் நிறுவனத்தின் ஜாக்கி பக்னானி, தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
1. தற்போதைய காலகட்டத்தில் திரைப்படத் தயாரிப்பில் உள்ள சவால்கள் அதிகரித்துள்ளனவா?
எக்செல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் ராம்சந்தானி, "திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு இது ஓர் உற்சாகமான காலகட்டம். ஓடிடி தளங்கள் திரையரங்குகளில் இருந்து பார்வையாளர்களைத் திசை திருப்பிவிட்டன என்ற கருத்து பெரும்பாலும் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், "வகைகள், பட்ஜெட்கள், மொழிகள் எனப் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த படங்கள் திரையரங்குகளில் பார்வையாளர்களைக் கண்டுள்ளன. இருப்பினும், இப்போதுள்ள சவால் என்னவென்றால், முன்பை விடவும் கதையின் மீதும் உள்ளடக்கத்தின் மீதும் அதிக நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்."
"முன்பதிவு விற்பனையை மட்டும் நம்பியிருக்க முடியாது. இறுதியில், ஒரு திரைப்படம் பார்க்கத் தகுதியானது என்று பார்வையாளர்கள் கருதினால், அவர்கள் நிச்சயம் அதைப் பார்க்க வருவார்கள்" என்று விஷால் ராம்சந்தானி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, "திரைப்படம் தயாரிப்பது எப்போதுமே கடினமான பணியாக இருந்து வருகிறது. ஏனெனில், பார்வையாளர்களுக்கு எது பிடிக்கும் என்பதைத் தீர்மானிக்க நிலையான சூத்திரம் எதுவும் இல்லை. எனவே, சிறந்த கதைகளைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்க வேண்டும்" என்று நம்புகிறார்.
மேலும், "எங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக சன்ஷைன் பிக்சர்ஸ் நிறுவனத்தில், இந்த சவால் இன்னும் அதிகம். ஏனெனில், நாங்கள் ஒரேயொரு வகையைச் சேர்ந்த திரைப்படங்களைத் தயாரிப்பதில்லை. புதிய கருப்பொருள்கள் மற்றும் பாணிகளில் பணியாற்றி வருகிறோம்" என்று அம்ருத்லால் ஷா கூறினார்.
ஓடிடி தளங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "இந்தத் தளங்களின் வளர்ச்சியால், பார்வையாளர்களுக்கு முன்பை விட அதிகமான பொழுதுபோக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. எனவே, பார்வையாளர்களால் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகின்ற கதைகளை இப்போது கண்டறிய வேண்டியுள்ளது" என்று தெரிவித்தார்.
திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜு கூறுகையில், "திரைப்படம் தயாரிப்பது ஒருபோதும் எளிதானதாக இருந்ததில்லை. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் சவால்கள் மிகவும் அதிகமாக உள்ளன" என்று கூறினார்.
மேலும், "திரைப்படங்களின் பட்ஜெட் அதிகரித்துள்ளது. ஓடிடி உள்ளிட்ட பிற பொழுதுபோக்கு ஊடகங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக மக்களைத் திரையரங்குகளுக்கு வரவழைப்பது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதற்கு, பார்வையாளர்களை திரையரங்குக்கு வரவழைப்பதுடன், கடைசி வரை அவர்களைப் படத்துடன் ஒன்றியிருக்கச் செய்யும் அளவுக்கு வலுவான உள்ளடக்கத்தைத் திரைப்படம் கொண்டிருக்க வேண்டும்" என்றும் தில் ராஜு தெரிவித்தார்.
நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி, "பார்வையாளர்களின் ரசனை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. பட்ஜெட் தொடர்பாகவும் அழுத்தம் உள்ளது. சந்தைப்படுத்தல் செலவுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன" என்று கூறினார்.
மேலும், "ஒரு தயாரிப்பாளராக, நல்ல திரைப்படத்தை உருவாக்குவது மட்டுமே சவால் அல்ல. சரியான கதையைத் தேர்ந்தெடுப்பது, அதைச் சரியான முறையில் வழங்குவது, செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, திரைப்படம் அதன் பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்வது ஆகியவையும் சவால்களாக உள்ளன" என்கிறார் தில் ராஜு.
2. தயாரிப்பு நிறுவனத்தின் வணிக மாதிரியின் அடிப்படைக் கட்டமைப்பு என்ன?
இந்தக் கேள்விக்கு எக்செல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, "உள்ளடக்கத்தை உருவாக்குவதையே அடிப்படையாகக் கொண்டது எங்களது முக்கியத் தொழில்" என்று கூறுகிறார்.
இதில் முழுநீளத் திரைப்படங்கள் மற்றும் நீண்ட வடிவிலான இணையத் தொடர்கள் அடங்கும். "திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு இடையே சமநிலையைப் பேணும் வகையில், ஆண்டுதோறும் சுமார் மூன்று முழுநீளத் திரைப்படங்களையும் இரண்டு தொடர்களையும் தயாரிப்பதே எங்கள் இலக்கு" என்று அவர் விளக்குகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் புதிய துறைகளிலும் விரிவடைந்து வருகிறோம். எங்களுக்கென சொந்த இசை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். அறிவுசார் சொத்துரிமைகள் (IP), வணிகப் பொருட்கள் விற்பனை மற்றும் புதிய ஊடக வாய்ப்புகள் தொடர்பாகப் பணியாற்றி வருகிறோம். சர்வதேசக் கூட்டாண்மைகளுக்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம். வலுவான கதைகளை உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் அவற்றைக் கொண்டு சேர்க்கும் படைப்பாற்றல் மிக்க நிறுவனமாகச் செயல்படுவதே எங்களது நோக்கம். சமீபத்தில் நாங்கள் பெற்ற மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று 'மிர்சாபூர்: தி மூவி' திரைப்படம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த விபுல் ஷா, "திரைப்படத்தைத் தொடங்குவதற்கு முன்பு அவர் அதிக அளவில் தயாரிப்புப் பணிகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்கிறார்" என்று கூறுகிறார். மேலும் அவர், "அனைத்துத் தரவுகளும் திட்டங்களும் சரியாக இருப்பது மிகவும் முக்கியம். பல்வேறு நிதி மாதிரிகளை ஆய்வு செய்கிறோம். அனைத்துத் தரவுகளும் மாதிரிகளும் சரியாக உள்ளன என்பதில் நம்பிக்கை ஏற்பட்ட பிறகே திரைப்படத் தயாரிப்பைத் தொடங்குகிறோம்" என்று தெரிவிக்கிறார்.
இந்த உரையாடலில் விபுல் ஷா மேலும் விளக்குகையில், "திரைப்படம் தயாரிப்பது ஒரு கூட்டு முயற்சி. படப்பிடிப்புத் தள உதவியாளர் முதல் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் மற்றும் எழுத்தாளர் வரை அனைவருக்கும் இதில் முக்கியப் பங்கு உள்ளது. ஒட்டுமொத்தக் குழுவும் ஓர் அணியாகச் செயல்பட்டால் மட்டுமே நல்ல திரைப்படத்தை உருவாக்க முடியும்" என்று கூறுகிறார்.
இதுகுறித்து தில் ராஜு விளக்குகையில், "ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடிப்படைத் தொழில் மாதிரியானது சரியான கதையையும் சரியான இயக்குநரையும் தேர்ந்தெடுப்பது, பட்ஜெட்டை தீவிரமாகக் கட்டுப்படுத்துவது, திரைப்படத்தைச் சிறந்த முறையில் வழங்குவது, முறையான வெளியீட்டை உறுதிப்படுத்துவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதன் பிறகு திரையரங்குகள், ஓடிடி, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள், இசை உரிமைகள் மற்றும் பிற உரிமைகள் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது" என்று தெரிவிக்கிறார்.
"நாங்கள் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்துள்ளோம். திட்டமிடுவதற்குத் தரவுகளும் விரிதாள்களும் (Spreadsheets) உதவினாலும், இறுதி முடிவு எப்போதும் கதையின் 'ஆன்மா', இயக்குநரின் பார்வை, பார்வையாளர்கள் அக்கதையுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது" என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்துப் பேசிய ஜாக்கி பக்னானி, "நல்ல கதைகளை அடையாளம் கண்டு அவற்றைத் திரையில் கொண்டு வருவதுதான் எங்கள் தயாரிப்பு நிறுவனமான பூஜா பிலிம்ஸின் மிகப்பெரிய பலமாக எப்போதும் இருந்து வந்துள்ளது. ஆனால், காலப்போக்கில் திரைப்படத் துறை மாறியுள்ளது. அதனால், தற்போது செயல்படும் முறையும் மாறி வருகிறது" என்று கூறுகிறார்.
மேலும் அவர், "இப்போது தயாரிப்பு நிறுவனங்கள் பட்ஜெட் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன. புதிய திட்டங்களை மிகவும் கவனமாகத் தேர்வு செய்கின்றன. புதிய அறிவுசார் சொத்துரிமைகளை (IP) உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகின்றன" என்று விளக்குகிறார்.
3. திரையரங்கு தவிர ஒரு திரைப்படத்திற்கு வேறு என்ன வருவாய் ஆதாரங்கள் உள்ளன?
இந்தக் கேள்விக்கு எக்செல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் ராம்சந்தானி, "திரையரங்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் தவிர, இன்று திரைப்படங்களின் முக்கிய வருவாய் ஆதாரங்களாக டிஜிட்டல்/ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமைகள், செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் இசை உரிமைகள் உள்ளதாக" தெரிவித்தார்.
மேலும் அவர், "இதுமட்டுமின்றி, வணிகமயமாக்கல், பிராண்ட்களுடனான கூட்டணிகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளைப் பல்வேறு வழிகளில் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. இறுதியில், பல்வேறு தளங்கள், வடிவங்கள் மற்றும் சந்தைகள் மூலம் வருவாய் ஈட்டக்கூடிய அறிவுசார் சொத்துரிமைகளை உருவாக்குவதே இலக்கு" என்று விளக்கினார்.
இதற்கிடையில் விபுல் ஷா, "வருவாய் ஈட்டுவதற்குப் பல வழிகள் உள்ளன. ஆனால், பொதுவாக அவற்றை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்" என்று விளக்கினார்.
- இந்தியாவில் திரையரங்குகள் மூலம் கிடைக்கும் வருவாய்
- வெளிநாட்டுச் சந்தைகளில் திரையரங்குகள் மூலம் கிடைக்கும் வருவாய்
- ஓடிடி உரிமைகள்
- செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமைகள்
- இசை உரிமைகள்
"இவை தவிர, கப்பல்கள், விமான நிறுவனங்கள், கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களில் ஒளிபரப்புவதற்கான உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளும் உள்ளன" என்று விபுல் ஷா விளக்கினார். "தற்போது இவை பொதுவாக ஒரே தொகுப்பாக விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் வணிக மதிப்பும் முன்பைவிடக் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும்" அவர் கூறினார்.
இதுகுறித்து தில் ராஜு விளக்குகையில், "திரையரங்கு மற்றும் டிஜிட்டல்/ஓடிடி உரிமைகள் தவிர, சில நேரங்களில் ஹிந்தி அல்லது பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்வதற்கான உரிமைகள் மூலமாகவும் வருவாய் கிடைக்கிறது" என்று தெரிவித்தார்.
பெரிய திரைப்படங்களைப் பொறுத்தவரை, உணர்வுபூர்வமாகவும் வணிக ரீதியாகவும் திரையரங்குகள் மூலம் கிடைக்கும் வருவாயே மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், படத்தின் தயாரிப்புச் செலவுகளைத் திரும்பப் பெறுவதற்கும் ஒட்டுமொத்த வணிகத்தைச் சமநிலைப்படுத்துவதற்கும் மற்ற வருவாய் ஆதாரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இது தொடர்பாக ஜாக்கி பக்னானி கூறுகையில், "திரைப்படத் துறை இனி திரையரங்குகள் மூலம் கிடைக்கும் வருவாயை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. ஓடிடி, செயற்கைக்கோள் ஒளிபரப்பு மற்றும் பிற உரிமைகள் தவிர, பிராண்ட் ஒருங்கிணைப்பு, வணிக விற்பனை மற்றும் படப்பிடிப்புடன் தொடர்புடைய சலுகைகள் மூலமாகவும் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை திரைப்படம் படமாக்கப்படும் இடம் மற்றும் அங்குள்ள உள்ளூர் கொள்கைகளைப் பொறுத்து அமையும்" என்று கூறினார்.
4. இந்தி திரைப்படத் துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என்னென்ன?
இந்தக் கேள்வி குறித்து விஷால் ராம்சந்தானி கூறுகையில், "ஹிந்தி திரைப்படத் துறை தற்போது பெரிய பிரச்னையை எதிர்கொள்ளவில்லை. மாறாக, ஒரு மாற்றத்தைக் கடந்து வருகிறது. பார்வையாளர்களின் ரசனை மிக வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப திரைப்படத் தயாரிப்புத் துறையும் மாற வேண்டியுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், "பட்ஜெட் விஷயத்தில் நாம் அதிகக் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். கதைகளைப் பொறுத்தவரை அதிக லட்சியத்துடன் இருக்க வேண்டும். ஒரு திரைப்படத்தைத் திரையரங்கில் பார்க்கத் தகுதியானதாக மாற்றுவது எது என்பதையும் சிறப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார்.
இதுகுறித்துப் பேசிய விபுல் ஷா, "திரைப்படத் தயாரிப்பாளர்கள் பல விஷயங்களில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, முதலீட்டுக்கும் கிடைக்கும் வருவாய்க்கும் இடையிலான விகிதத்தை மேம்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் அதன் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது அதிக வருவாய் ஈட்டிய திரைப்படங்களில் ஒன்று. நிச்சயமாக, 'ஹனுமான் அன்ஷ்' திரைப்படம் அதைத் தாண்டினால் இன்னும் சிறப்பாகச் செயல்படும் என்று நான் கருதுகிறேன். ஆனால், 'ஹனுமான் அன்ஷ்' வருவதற்கு முன்பு, முதலீட்டுடன் ஒப்பிடும்போது கிடைத்த வருவாய் அடிப்படையில் 'தி கேரளா ஸ்டோரி'தான் உண்மையில் முதலிடத்தில் இருந்தது" என்று கூறினார்.
தில் ராஜு, "ஹிந்தி திரைப்படத் துறை எதிர்கொள்ளும் பிரச்னைகள், மற்ற திரைப்படத் துறைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுடன் ஓரளவுக்கு ஒத்திருப்பதாக" தெரிவித்தார்.
மேலும் அவர், "எங்களது புரிதலின்படியும், இதற்கு முன்பு 'ஜெர்சி', 'ஹிட்' போன்ற சில ஹிந்தி படங்களை நாங்கள் தயாரித்த அனுபவத்தின் அடிப்படையிலும், ஹிந்தி திரைப்படத் துறையில் உள்ள பிரச்னைகள் மற்ற திரைப்படத் துறைகளில் உள்ள பிரச்னைகளைப் போலவே உள்ளன. ஆனால், இங்கு அவை இன்னும் வெளிப்படையாகத் தெரிகின்றன" என்று கூறினார்.
மேலும், "திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் முன்கூட்டியே வெளியிடப்படுவது, திரையரங்குகளுக்குச் செல்வதில் பார்வையாளர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைக் குறைக்கிறது. மேலும், பல நேரங்களில் திரைப்படங்கள் குடும்பப் பார்வையாளர்கள் அல்லது பரந்த அளவிலான பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதில்லை" என்று தில் ராஜு நம்பிக்கை தெரிவித்தார். அதொடு, "இப்போது படத்தின் உள்ளடக்கமே உண்மையான நட்சத்திரமாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை ஒரு திரைப்படத்திற்குத் திரையரங்குகளில் கூட்டம் வரவில்லை என்றால், நட்சத்திர அந்தஸ்தை மட்டுமே நம்பி அந்தப் படத்தை வெற்றி பெறச் செய்வது கடினம். பார்வையாளர்களின் ரசனையும் மாறிவிட்டது. தங்களது நேரத்திற்கும் பணத்திற்கும் மதிப்பளிக்கும் படங்களையே அவர்கள் இப்போது விரும்புகிறார்கள்" என்றும் அவர் கூறினார்.
இந்தக் கேள்விக்கு ஜாக்கி பக்னானி பதிலளிக்கையில், "ஹிந்தி திரைப்படத் துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், பார்வையாளர்கள் உண்மையில் எதைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளத் தவறுவதுதான். படங்களின் பிரமாண்டம், நட்சத்திரங்களின் செல்வாக்கு, விளம்பரம் ஆகியவற்றில் நாம் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டோம். இதனால், பல நேரங்களில் கதைக்கான முக்கியத்துவம் அளிக்கப்படாமல் போய்விடுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "தற்போது பல்வேறு தளங்களில் ஏராளமான சிறந்த படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்பு பார்வையாளர்களுக்குக் கிடைத்துள்ளது. எனவே, திரையரங்குகளில் எந்தத் திரைப்படத்தைப் பார்ப்பது என்பதை முன்பைவிட மிகவும் கவனமாகத் தீர்மானிக்கின்றனர்" என்று நம்பிக்கை தெரிவித்தார். "திரைப்படத் துறை மீண்டும் வலுவான கதைகள், புதுமைத்தன்மை, பார்வையாளர்கள் உடனான உணர்வுபூர்வமான தொடர்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பட்ஜெட் விஷயத்திலும் அதிகக் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
மேலும், "திரைப்படத் துறை பாக்ஸ் ஆபீஸை மட்டுமே மனதில் வைத்து படங்களை உருவாக்குவதை நிறுத்திவிட்டு, பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருவதற்கான காரணத்தை அளிக்கும் திரைப்படங்களை உருவாக்கத் தொடங்க வேண்டும்" என்று ஜாக்கி பக்னானி தெரிவித்தார்.
5. தயாரிப்பாளர்களின் நிலைமையை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்?
இது தொடர்பாகப் பேசிய விஷால் ராம்சந்தானி, "முதலாவதாக, திரைப்படத் தயாரிப்பாளர்கள் நிறுவனமயமாக்கப்பட்ட நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம், கணக்கிடப்பட்ட படைப்பாற்றல் சார்ந்த அபாயங்களை அவர்கள் சுதந்திரமாக எடுக்க முடியும்" என்று கூறினார்.
"இரண்டாவதாக, நாட்டில் திரையரங்குகளின் எண்ணிக்கையைப் பெருமளவில் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, திரையரங்குகள் பற்றாக்குறையாக உள்ள பகுதிகளில் இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். திரையரங்குகள் மக்களுக்கு எளிதில் அணுகக் கூடியதாக மாறினால், இந்தியாவில் திரையரங்குகளுக்குச் செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன" என்றார்.
மேலும் , "மூன்றாவதாக, திரையரங்குகளை அடிப்படையாகக் கொண்ட வணிக மாதிரி தயாரிப்பாளர்களுக்குக் கூடுதல் நிலைத்தன்மை அளிக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும். இதில் திரைப்பட வெளியீட்டுடன் தொடர்புடைய செலவுகளைச் சீரமைப்பதும் கட்டுப்படுத்துவதும் அடங்கும்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்துப் பேசிய விபுல் ஷா, "தயாரிப்பாளர்களாகிய நாம் ஒன்றிணைந்து, திரைப்படத் துறை தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். முக்கிய முடிவுகளுக்குப் பின்னால் அனைவரின் கூட்டு ஆதரவும் இல்லையென்றால், அது திரைப்படத் துறைக்கு நல்ல சூழலாக இருக்காது. இரண்டாவதாக, திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் கால இடைவெளி நீட்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
மேலும் அவர், "தயாரிப்பாளர்களுக்கான ஓடிடி வெளியீட்டு கால இடைவெளி நீட்டிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள எட்டு வாரங்களுக்குப் பதிலாக, குறைந்தபட்சம் 16 வாரங்களாக அது இருக்க வேண்டும். இது திரைப்படத் துறைக்கு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும். இல்லையெனில், குறைந்த மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்கள் நீண்ட காலத்திற்குத் தாக்குப்பிடிப்பது கடினமாகிவிடும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தில் ராஜு, "திரைப்படங்களின் பட்ஜெட் மற்றும் படப்பிடிப்பு நாட்களைக் கட்டுப்படுத்துவது முக்கியம். சாத்தியமான இடங்களில் லாபப் பகிர்வு மாதிரிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் மற்றும் பட்ஜெட் வீணாவதைத் தீவிரமாகக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம், ஒரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், அது நிதி ரீதியாகத் தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கும்" என்று கூறினார்.
மேலும், "பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்கு வரவழைக்கக் கூடிய கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கூடுதலாக, ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு முன்பு திரைப்படங்கள் திரையரங்குகளில் நீண்ட காலம் ஓடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்" என்று தில் ராஜு தெரிவித்தார்.
இது தொடர்பாகப் பேசிய ஜாக்கி பக்னானி, "அதிக பட்ஜெட் எப்போதும் சிறந்த திரைப்படத்திற்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. ஒரு படத்தின் பிரமாண்டம் அதன் கதைக்கும், அதைப் பார்க்கக்கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். நட்சத்திரத்தைவிட கதைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
மேலும் அவர், "ஒரு நட்சத்திரத்தால் முதல் வார இறுதியில் பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்கு வரவழைக்க முடியும். ஆனால், ஒரு திரைப்படத்தை நீண்ட கால அடிப்படையில் வெற்றி பெறச் செய்வது அதன் உள்ளடக்கமும், அந்தப் படம் குறித்து பார்வையாளர்கள் மத்தியில் உருவாகும் நேர்மறையான வாய்மொழிப் பரிந்துரையும்தான்" என்று தெரிவித்தார்.
"இதுமட்டுமின்றி, ஒரு திரைப்படம் தோல்வியடைந்தால் அதன் முழு சுமையும் தயாரிப்பாளர் மீது மட்டுமே விழாத வகையில், அவர்களுக்கு ஆதரவளிக்கும் சூழலை உருவாக்குவதும் முக்கியம்" என்றும் இந்த உரையாடலில் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு