அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் முக்கிய நிர்வாக மாற்றங்களைச் செய்து, தனது நெருங்கிய உதவியாளரான ஸ்டீபன் மில்லரை புதிய தலைமைப் பணியாளராக நியமித்துள்ளார். திங்கள் கிழமை முதல் மில்லர் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
வெள்ளிக்கிழமை தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் இந்த நியமனத்தை டிரம்ப் அறிவித்தார். இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, தற்போதைய தலைமைப் பணியாளர் சூசி வைல்ஸ் தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.
டிரம்பின் நம்பிக்கைக்குரிய உதவியாளராகக் கருதப்படும் மில்லர், அமெரிக்காவின் கடுமையான குடியேற்றக் கொள்கையை வடிவமைத்ததில் மூளையாகச் செயல்பட்டவராக அறியப்படுகிறார். டிரம்பின் முதல் ஆட்சிக் காலம் முதல் தற்போதைய இரண்டாவது ஆட்சிக் காலம் வரை, நிர்வாகத்தின் முக்கிய முடிவுகளில் அவர் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளார்.
இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் குடியேற்ற நடைமுறைகள் குறித்து மில்லர் ஏற்கெனவே விமர்சித்துப் பேசியிருப்பதால், அவரது நியமனம் இந்தியாவை பொறுத்தவரையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.
மில்லர் நியமனம் மூலம் டிரம்ப் கூற விரும்பும் செய்தி என்ன?
டிரம்ப் நிர்வாகத்தில், 41 வயதான மில்லர் துணைத் தலைமைப் பணியாளராகப் பணியாற்றியவர். டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்திலும் அவர் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முதல் நாளில் பிறப்பிக்கப்பட்ட நிர்வாக உத்தரவுகளில், பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவது, அமெரிக்காவின் தெற்கு எல்லையில் தேசிய அவசர நிலையை அறிவிப்பது ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்த உத்தரவுகளில் மில்லரின் கையொப்பமும் இடம்பெற்றிருந்தது. நிர்வாகத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் இது உணர்த்துகிறது.
இடைக்காலத் தேர்தலில் வாக்களித்தவர்களில் 18 முதல் 19 சதவிகிதத்தினருக்கு குடியேற்றப் பிரச்னை முக்கியமானதாக இருந்தது என்கிறார் சர்வதேச விவகார நிபுணர் முனைவர் ஷைலேந்திர தேவ்லாங்கர்.
இந்த விவகாரத்தை டிரம்ப் தனக்குச் சாதகமாக எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் மில்லரின் நியமனத்தில் மிக முக்கியமான அம்சம் அதன் மூலம் வெளிப்படுத்தப்படும் குறியீட்டுச் செய்திதான் என்றும் அவர் கூறுகிறார்.
தேர்தல் தோல்வியைச் சந்தித்தாலும் தனது கொள்கைகளில் எந்தத் தளர்வும் இருக்காது என்பதை அமெரிக்க மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் டிரம்ப் உணர்த்த விரும்புவதாக அவர் தெரிவிக்கிறார்.
தேவ்லாங்கர் கூறுகையில், "மில்லரின் நியமனம் குறியீட்டுத் தன்மை கொண்டது. பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட ஒருவரை இந்தப் பதவியில் நியமிப்பதன் மூலம் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் மிகவும் வலுவான, ஆக்ரோஷமான அணுகுமுறையைப் பின்பற்றப் போவதாக டிரம்ப் தெரிவிக்க விரும்புகிறார்" என்றார்.
இந்தியாவின் வர்த்தகம், எண்ணெய்க் கொள்கைகள் குறித்து விமர்சித்த மில்லர்
இந்தியாவின் வர்த்தகம் மற்றும் குடியேற்றக் கொள்கைகளை ஸ்டீபன் மில்லர் ஏற்கெனவே விமர்சித்துள்ளார். 2025 ஆகஸ்ட் மாதம், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
"ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் சீனாவை போலவே இந்தியாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யா - யுக்ரேன் போருக்கு பொருளாதார ரீதியாக உதவி கிடைக்கிறது" என்று அவர் கூறியிருந்தார்.
இந்தியாவின் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. ஆனால், அதேநேரத்தில் தன்னை அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகக் கூறிக் கொள்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் மில்லர் கூறுகையில், "உலகிலேயே எங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒன்றாக இந்தியா தன்னைக் கூறிக் கொள்கிறது. ஆனால், எங்கள் பொருள்களை அது ஏற்றுக் கொள்வதில்லை; எங்கள் மீது அதிக வரிகளை விதிக்கிறது. குடியேற்றக் கொள்கையிலும் இந்தியா கணிசமான மோசடிகளில் ஈடுபடுகிறது என்பது எங்களுக்குத் தெரியும்" என்றார்.
மில்லரின் நியமனத்தால் இந்தியா மீதான அமெரிக்க அழுத்தம் அதிகரிக்குமா?
மில்லர் ஏற்கெனவே தெரிவித்துள்ள விமர்சனங்களால், அவரது புதிய பொறுப்பு இந்தியா - அமெரிக்க உறவுகளின் பார்வையிலும் கவனம் பெற்றுள்ளது. எனினும், இந்த நியமனத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா உடனடியாகப் பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தேவை இருப்பதாகக் கூறுகிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் பள்ளிப் பேராசிரியர் ராஜன் குமார். பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசிய அவர், "அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தேவை இருக்கிறது. குறிப்பாக, எரிசக்தித் துறையில் இரு நாடுகளின் நலன்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை" என்றார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியா மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்ந்து கடுமையாக இருக்கலாம். ஆனால், தற்போதைய சூழலில் உடனடியாகத் தடைகள் விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது அவரது கருத்து. அதேநேரத்தில், மில்லரின் நியமனத்துக்குப் பிறகு அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் தளர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையலாம் என்றும் ராஜன் குமார் கூறுகிறார்.
குடியரசுக் கட்சியின் பல தலைவர்களும் ஜனநாயகக் கட்சியின் சில தலைவர்களும்கூட எல்லைப் பாதுகாப்பு மற்றும் எல்லைச் சுவர் அமைப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றனர். எனவே, டிரம்ப் நிர்வாகம் தற்போதைய குடியேற்றக் கொள்கையை மேலும் கடுமையாகத் தொடர முயலலாம் என்கிறார் அவர்.
மில்லரின் நியமனம் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, ஹெச்-1பி விசா தொடர்பாக இந்திய தொழில்முறை வல்லுநர்களின் கவலைகள் அதிகரிக்கலாம். எனினும், ஹெச்-1பி விசா நடைமுறையில் பெரிய அளவிலான கொள்கை மாற்றங்களைச் செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என்கிறார் ஷைலேந்திர தேவ்லாங்கர். நிர்வாக உத்தரவுகள் மூலம் மட்டும் அதிபர் தனது விருப்பப்படி இந்த விசா நடைமுறையில் பெரிய மாற்றங்களைச் செய்ய முடியாது என்றும் அவர் விளக்குகிறார்.
மில்லரின் வருகையால் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் கடுமையான அணுகுமுறை தொடர்ந்து நீடிக்கலாம். ஆனால், அதற்காக ஹெச்-1பி விசா நடைமுறையில் அவர் விரும்பிய மாற்றங்களையெல்லாம் செய்துவிட முடியும் என்று அர்த்தமல்ல என்கிறார் அவர்.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் என்ன தாக்கம் ஏற்படும்?
அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா தனது சந்தையைத் திறந்துவிடுவதில்லை என்றும், அதிக வரிகளை விதிக்கிறது என்றும் மில்லர் ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், அவருக்குப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு பதிலளித்த ஷைலேந்திர தேவ்லாங்கர், வர்த்தக ஒப்பந்தம் ஏற்கெனவே இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதால், அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவாக இருக்கலாம் என்கிறார்.
அவர் கூறுகையில், "மில்லரின் நியமனத்தை இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது. வரும் காலத்தில் தெற்காசியா மீதான தனது கவனத்தை டிரம்ப் ஓரளவு குறைத்துக் கொள்ளலாம். ரஷ்யா - யுக்ரேன் போர், இரான் போன்ற விவகாரங்களில் அவர் அதிக கவனம் செலுத்தக்கூடும்" என்றார்.
அமெரிக்காவே தற்போது ரஷ்யாவிடம் இருந்து டீசல் வாங்குவதால், இந்தியா மீது மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலையில் அது இல்லை என்று பேராசிரியர் ராஜன் குமாரும் கருதுகிறார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான உத்தேச வர்த்தக ஒப்பந்தத்தில் இதுவரை அதிகாரபூர்வமாகக் கையெழுத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், 2026 பிப்ரவரியில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பு குறித்து இரு நாடுகளும் உடன்பாடு தெரிவித்திருந்தன.
யார் இந்த ஸ்டீபன் மில்லர்?
டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்திலேயே அவரது நிர்வாகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக ஸ்டீபன் மில்லர் திகழ்ந்தார். 1985ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சான்டா மோனிகாவில் பிறந்த மில்லர், 2007ஆம் ஆண்டு டியூக் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். அதன் பிறகு குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பணியாற்றத் தொடங்கினார்.
கடந்த 2016ஆம் ஆண்டு டிரம்பின் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் இணைந்தார். அப்போது கொள்கை ஆலோசகராகவும், உரைகளை எழுதும் பொறுப்பிலும் அவர் செயல்பட்டார். டிரம்பின் தேசியவாத மற்றும் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளை வடிவமைப்பதில் மில்லருக்கு முக்கியப் பங்கு இருந்ததாகக் கருதப்படுகிறது.
டிரம்பின் 2017ஆம் ஆண்டு பதவியேற்பு உரை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பயணத் தடை, ஆவணங்களின்றி அமெரிக்காவுக்கு வந்த குடியேறிகளின் குடும்பங்களைப் பிரித்தல் உள்ளிட்ட கொள்கைகளிலும் மில்லரின் செல்வாக்கு வெளிப்பட்டது.
பொலிட்டிகோ ஊடகத்தின் தகவல்படி, தனிப்பட்ட சந்திப்புகளில்கூட அதிபர் டிரம்பின் முடிவுகளை எதிர்ப்பதை மில்லர் தவிர்த்து வருகிறார். டிரம்பின் முடிவுகளுக்கு ஏற்ப தன்னை விரைவாக மாற்றிக் கொள்கிறார்.
இதனால்தான், டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதும், குடியரசுக் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதும் தனது செல்வாக்கைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள மில்லரால் முடிந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு