இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், மீண்டும் வர்த்தகப் போர் தீவிரமடையும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
உற்பத்தியில் அதிகப்படியான உற்பத்தித் திறன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரிவு 301 (Section 301) விசாரணையைத் தொடர்ந்து, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) இந்த வரிகளை முன்மொழிந்துள்ளது.
இந்தியாவின் முக்கிய உற்பத்தித் திட்டங்களையும் அமெரிக்கா குறிவைத்துள்ளது. இந்த முன்மொழிவின்படி, இந்தியப் பொருட்கள் மீது 25 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படலாம்.
இருப்பினும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டால், இந்த வரி விகிதம் 17 சதவிகிதமாகக் குறைக்கப்படலாம் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் விசாரணையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த அறிவிப்பு தற்போது பரிசீலனையில் உள்ளது. விசாரணையைத் தொடங்குவதற்கான அறிவிப்புக்குப் பதிலளித்தபோதும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற நடவடிக்கைகளின்போதும், இந்தியாவில் எந்தவொரு துறையிலும் கட்டமைப்பு ரீதியாக அதிகப்படியான உற்பத்தித் திறன் இல்லை என்று வர்த்தகத் துறை தெரிவித்திருந்தது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அமைச்சகம், "வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வர்த்தகம் தொடர்பான எந்தவொரு கவலையும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் வரம்புக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், "இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதற்காக அமெரிக்காவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் உற்பத்தித் திட்டங்கள் அந்நாட்டின் தொழில்துறை உற்பத்தித் திறனை அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனை 'நியாயமற்றது' என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, இது தனது பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கருதுகிறது.
இந்தியா மீது அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் ஐந்து முக்கியக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
- முதலாவது, உற்பத்தித் துறையை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள்.
- இரண்டாவது, தொழிலாளர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவது.
- மூன்றாவது, நிதித் துறையில் அரசின் தலையீடு.
- நான்காவது, சந்தை அணுகலுக்கான தடைகள்.
- ஐந்தாவது, உலகளாவிய அளவில் நிலவும் அதிகப்படியான உற்பத்தியைக் கட்டுப்படுத்தத் தவறியது.
இந்தியத் தொழில்துறைகளில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?
அமெரிக்கா புதிய வரிகளை அறிவித்துள்ள நிலையில், இது இந்தியத் தொழில்துறைக்கு கவலையளிக்கும் விஷயம் என்று FICCI-CMSME (இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு) தலைவர் ஹர்ஜிந்தர் கவுர் தல்வார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யிடம் ஹர்ஜிந்தர் கௌர் கூறுகையில், "இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியமான உத்திசார் மற்றும் வர்த்தகக் கூட்டாளிகளாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே பெரிய அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புகிறது. ஆனால், எந்த விலை கொடுத்தும் அதை செய்ய விரும்பவில்லை. நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தையே நாங்கள் விரும்புகிறோம்.
25 சதவிகித வரி என்பது இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) மிகவும் கடினமானதாக இருக்கும். ஏற்கெனவே அவை மிகக் குறைந்த லாபத்தில்தான் செயல்பட்டு வருகின்றன.
நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகளின் அடிப்படையில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் அதை நிச்சயமாக வரவேற்போம்.
FICCI-CMSME தலைவராக, நமது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாக உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அவற்றைத் தயார்படுத்தவும் முயற்சிப்பேன். இதன் மூலம் அவை மற்ற நாடுகளுடனும் வர்த்தகம் செய்ய முடியும்" என்றார்.
இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை வரவேற்கிறது. ஆனால், "நியாயமான நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே. நிச்சயமாக 25 சதவிகித வரியுடன் அல்ல. இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. நமது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் இதைத் தாங்கிக்கொள்ள முடியாது" என்றும் அவர் தெரிவித்தார்.
எகனாமிக் டைம்ஸ் செய்தியின்படி, வரி மாற்றங்களுக்கு ஈடாக இந்தியா ஒருதலைபட்சமான சலுகைகளை வழங்குவதைத் தவிர்த்து, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (GTRI) இந்தியாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜி.டி.ஆர்.ஐ-யை மேற்கோள் காட்டி அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "பிற நாடுகளின் தொழில்துறைகளில் அதிகப்படியான உற்பத்தித் திறனை மதிப்பிடுவதற்கு அமெரிக்கா பயன்படுத்தும் சில அளவுகோல்களை, அமெரிக்காவின் விவசாயத் துறைக்கும் பயன்படுத்தினால், பல விவசாயப் பொருட்களில் அமெரிக்காவும் அதிகப்படியான உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின்படி, முன்மொழியப்பட்ட வரி விகிதங்கள் அமெரிக்காவின் வர்த்தகப் பங்குதாரர் நாடுகளிடமிருந்து ஒருதலைபட்சமான சலுகைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், குறைந்த வரி விகிதங்களைப் பெறுவதற்காக மட்டும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்க வேண்டாம் என்று ஜி.டி.ஆர்.ஐ இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வர்த்தக ஒப்பந்தம் குறித்து நிபுணர்கள் என்ன கூறினார்கள்?
இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (EEPC) தலைவர் பங்கஜ் சத்தாவும், முன்மொழியப்பட்டுள்ள குறைந்த வரி விகிதம் இந்தியாவுக்குப் பயனளிக்கும் ஒப்பந்தமாக இருக்குமா என்பது தொடர்பாக சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி முகமையிடம் அவர் கூறுகையில், "எனது பார்வையில், நமது அண்டை நாடுகளான வங்கதேசம், இந்தோனீசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் சுமார் 18 சதவிகித வரியை எதிர்கொள்கின்றன. அந்த நாடுகளுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்படும் நிலையில், வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் நமக்கு 17 சதவிகித வரி விதிக்கப்பட்டால், அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் அளவுக்கு அது நமக்கு சாதகமாக இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை.
இப்போதே இது குறித்து எந்த முடிவையும் எடுப்பது அவசரமான செயலாக இருக்கும். முதலாவதாக, இந்த வரிகள் ஜனவரி மாதத்தில்தான் நடைமுறைக்கு வரும். இரண்டாவதாக, இந்தியாவுடன் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுடனும் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்" என்றார்.
புதிய வரி உடனடியாக நடைமுறைக்கு வரப்போவதில்லை என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (PHD Chamber of Commerce and Industry) தலைமை செயல் அதிகாரியும் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மேத்தாவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முடியாவிட்டால் மட்டுமே 25 சதவிகித வரியை அமெரிக்கா விதிக்கும். நாம் வெற்றிகரமாக ஓர் ஒப்பந்தத்தை எட்டினால், இந்தியாவுக்கு 17 சதவிகித வரி விதிக்கப்படும்.
வியட்நாம், சீனா மற்றும் வங்கதேசம் போன்ற போட்டி நாடுகளின் பொருளாதாரங்களைப் பார்த்தால், அவற்றுக்கு நம்மைவிட அதிக வரி விதிக்கப்படுவதாக நான் கருதுகிறேன். இது பேச்சுவார்த்தைக்குப் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி என்றே நினைக்கிறேன்" என்றார்.
மேலும் ரஞ்சித் மேத்தா கூறுகையில், "தற்போது இந்தியா வலுவான நிலையில் இருந்து நிச்சயமாக வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தும்.
அமெரிக்கா இந்தியாவின் மிக முக்கியமான உத்திசார் கூட்டாளியாகும். எனவே, 17 சதவிகித வரியின் பலனைப் பெறும் வகையில், இந்த வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் பேசி முடிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்நேரத்தில் இந்த வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி, உண்மையிலேயே அதை இறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும்" என்றார்.
வெளியுறவுத்துறை நிபுணர் ராபிந்தர் சச்தேவ் கூறுகையில், "நிச்சயமாக வரி விதிப்பு அச்சுறுத்தல் இன்னும் நீடிக்கிறது. உண்மையில், பிரிவு 301-ன் கீழ் மேலும் ஐந்து அல்லது ஆறு அச்சுறுத்தல்கள் விசாரணையில் உள்ளன அல்லது விசாரணை தொடங்கப்படவுள்ளன.
முதல் விசாரணை கட்டாய உழைப்பு தொடர்பானதாக இருந்தது. இதன் விளைவாக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது 10 சதவிகிதம் முதல் 12.5 சதவிகிதம் வரையிலான வரிகள் விதிக்கப்பட்டன.
தற்போது விவாதிக்கப்படும் இரண்டாவது விசாரணையானது, அரசாங்கங்கள் தங்களது உள்ளூர் தொழில்களுக்கு வழங்கும் அதிகப்படியான உற்பத்தித் திறன் அல்லது மானியங்கள் தொடர்பானது. இந்த மானியங்கள், அத்தொழில்களை அமெரிக்க பொருட்களுக்கு எதிராக மேலும் போட்டித்தன்மை வாய்ந்தவையாக மாற்றுகின்றன.
இந்த அதிகப்படியான உற்பத்தித் திறன் தொடர்பான வரிகள் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பொருந்தக்கூடும். மேலும், டிஜிட்டல் வரிகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் அரிசி பொருட்கள் மீதான வரிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எனவே, குறைந்தபட்சம் மேலும் மூன்று முதல் நான்கு விவகாரங்கள் விசாரணையில் உள்ளன" என்றார்.
மேலும் தனது கவலையை வெளிப்படுத்தும் அவர், "அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் 99 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சம் குறித்து அமெரிக்க தரப்பிலிருந்து எந்த தெளிவும் இல்லாதது எனக்குப் புரியவில்லை. மேலும் மூன்று முதல் நான்கு விவகாரங்களில் கூடுதல் வரிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த வரிகள் விதிக்கப்படும் வரை அல்லது இந்த விவகாரங்கள் தொடர்பான விசாரணைகள் தொடரும் வரை, நமக்கு முழுமையான தெளிவு கிடைக்காது.
வடிவியல் தொடர்பான கேள்விக்கு இயற்கணித முறையில் தீர்வு காண முயற்சிப்பதைப் போன்றதுதான் இது" என்றார்.
இருப்பினும், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் பிபின் மேனன் கூறுகையில், "தற்போது ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
இந்தியா மீது அழுத்தம் கொடுக்கும் கொள்கை
இந்தியாவுக்கு எதிராகப் பொருளாதார அழுத்தத்தை உருவாக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கை குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்த அமெரிக்கா, தற்போது வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காகக் குறைந்த வரி விகிதத்தை முன்மொழிந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா மீதுதான் அமெரிக்க அதிபர் மிக அதிகபட்ச வரியை விதித்திருந்தார்.
மூத்த பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர் தனது எக்ஸ் (X) பக்கத்தில், "முதலில் 50 சதவிகிதம் என்ற மிக அதிகபட்ச வரியை விதித்து இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. தற்போது, இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் ஏற்றுமதிப் போட்டியாளர்களைவிட 1 சதவிகிதம் குறைவான வரியை அமெரிக்கா முன்மொழிகிறது. இதற்காக இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலும் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்தியா தற்போது இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் மூத்த தூதரக அதிகாரி அசோக் சஜ்ஜன்ஹார் கூறுகையில், "நிச்சயமற்ற தன்மையும் கணிக்க முடியாத சூழலும் அமெரிக்காவின் அடையாளமாக மாறிவிட்டன.
இந்தச் சூழலில், வர்த்தக ஒப்பந்தம் இருப்பதோ இல்லையோ அதற்கு அதிக முக்கியத்துவம் இல்லை. தற்போது விவாதிக்கப்படும் 16 நாடுகளில் ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
இவை ஏற்கெனவே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள நாடுகள்.
அமெரிக்க நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
அதனால்தான் நமது வாய்ப்புகளைப் பன்முகப்படுத்தி, ஆபத்துகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்தப் போக்கு தற்போது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.
இருப்பினும், வரிகள் விதிக்கப்படலாம் என்று முன்மொழியப்பட்டுள்ள நாடுகளில் மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்த அதிருப்தி நிலவுகிறது.
சமீபத்திய இடைக்காலத் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்த ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினர் சக் ஷுமர், அதிபர் டொனால்ட் டிரம்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர், "டொனால்ட் டிரம்ப் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்வதில்லை.
இங்கு உண்மையான பிரச்னை சீனாதான். ஆனால், அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, சீனாவே நிபந்தனைகளை நிர்ணயிக்க டிரம்ப் அனுமதிக்கிறார்.
அதேசமயம், நமது நட்பு நாடுகளையும் அவர் பகைத்துக் கொள்கிறார். இதற்கான செலவுகளை அமெரிக்கக் குடும்பங்கள் மீது சுமத்துகிறார். இதனால் அமெரிக்க தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் பலன் மிகவும் குறைவாகவே உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், "ஜனவரி மாதத்தில் மாற்றம் ஏற்படப் போகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், இடைக்காலத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் ஏற்பட்டுள்ள அரசியல் கணக்கீடுகளையே அவர் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் ஜனநாயகக் கட்சி, இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் பெரும்பான்மையைப் பெறவுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு