திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி நாளை (24.11.2026) தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அங்கே 5 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் நாளையும் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவித்துள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்த அமைதிப் பேரணி காவல்துறை அனுமதி வழங்காததால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. விசிக சார்பில் மதுரையில் மாலை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. சீராய்வு மனு தாக்கல் செய்யும் முடிவை திருமாவளவன் வரவேற்றுள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை சரிவர கையாளவில்லை என்று தமிழக அரசை திமுக சாடியுள்ளது. விசிக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்ததற்காக தமிழக அரசை கண்டித்துள்ள தமிழக பாஜக, நாளை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
மதுரை மாநகர காவல்துறை அறிவிப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீப நாளை ஒட்டி நாளை (24.11.2026) ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்திற்கு நாளை விடுமுறையாகும்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால் திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. அந்த பகுதிகளில் 5,500 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து காவல் ஆணையர் உத்தரவிட்டிருப்பதாக மதுரை மாநகர காவல்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
"திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும், பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை முறைப்படுத்தவும் மதுரை மாநகர காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இன்றும் (23.11.2026) நாளையும் (24.11.2026) திருப்பரங்குன்றம் மலை உச்சி உட்பட்ட மலை முழுவதும், கிரிவலப் பாதைகள், திருப்பரங்குன்றம் நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரை செல்லும் சாலை, கிரிவலப் பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளில், டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன." என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் அனுமதி இன்றி டிரோன்கள் இயக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக டிரோன்களை இயக்க வேண்டியவர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும் என்றும் மதுரை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றத்தில் இன்று காலை அமைதிப் பேரணி ஒன்றை நடத்த விசிக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்க அக்கட்சித் தலைவர் திருமாவளவன் மதுரை சென்றிருந்த நிலையில், காவல்துறை அனுமதி வழங்கப்படாததால் அந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. பின்னர் மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பில் மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பேசிய திருமாவளவன், "உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதை நான் ஆதரிக்கிறேன். அரசு இந்துக்களுக்கோ, அவர்களின் உணர்வுகளுக்கோ எதிரானது அல்ல. சங்கப் பரிவாரங்கள்தான் பிரச்னைகளை உருவாக்குகின்றன" என்று தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் கூறியது என்ன?
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியதைக் கண்டித்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டணிக் கட்சிக்காக சட்டம்-ஒழுங்கை தவெக அரசு பணயம் வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தீர்ப்பை எதிர்த்து மதுரையில் விசிக தலைவர் திரு. திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தக் காவல்துறை அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காலையில் பேரணிக்கு அனுமதி மறுத்த மதுரை காவல்துறை, சில மணி நேரங்களிலேயே ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அவசரமாக அனுமதி வழங்கியது யாருடைய அழுத்தத்தால்? சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டிப் பேரணிக்குத் தடை விதித்த காவல்துறை, ஆளும் தவெக அரசின் கூட்டணிக் கட்சியான விசிகவுக்கு மட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்திருப்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும்.
கூட்டணி நெருக்கடிகளுக்கும் வாக்கு வங்கி அரசியலுக்கும் அடிபணியாமல், உச்சநீதிமன்ற ஆணைப்படி நாளை தீபத்தூணில் எவ்விதத் தடையுமின்றி தீபம் ஏற்றப்படுவதையும் முழுமையான பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக விமர்சனம்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை திமுக விமர்சித்துள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த அரசின் பிரச்னை என்னவென்றால், கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அது இடைக்கால உத்தரவு என்றும், குறிப்பாக இந்த ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறியிருந்தது. ஆனால், உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அவர்கள் தவறிவிட்டனர். ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இருந்த நிலையில், நேற்று முன்தினம்தான் மனுவைத் தாக்கல் செய்தனர். அவர்கள் ஏன் தயக்கம் காட்டினார்கள்? " என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் தொடர்ந்த அவர், "முக்கியமான பிரச்னை என்னவென்றால், 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இப்போது இந்து அமைப்பினர் அந்த இடத்தை மாற்ற விரும்புகின்றனர். திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் மக்களும், தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெரும்பான்மையான இந்துக்களும் இதற்கு ஒப்புக்கொண்டிருக்கும்போது, அவர்கள் இந்துக்கள் இல்லையா? அவர்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்லட்டும்.
இந்த அரசு உடனடியாக மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்யத் தவறிவிட்டது. இந்த தாமதத்தால் நாளை என்ன நடக்கப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் உள்ளிட்ட 6 கட்சிகள், அமைப்புகள் கூட்டறிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ (எம்எல்) மற்றும் மதுரை மாவட்ட அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
"திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி மதவெறி சக்திகள் பதற்றத்தை ஏற்படுத்த முயல்வதைப் புறக்கணித்து, மதுரை மாவட்ட மக்கள் தொடர்ந்து அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாத்து வந்துள்ளனர். இது வரவேற்கத்தக்கதாகும்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம்.
இந்நிலையில், நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று, காலம் காலமாக தீபம் ஏற்றப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் மலையில், உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழக்கம்போல் தீபம் ஏற்றப்பட வேண்டும்' என்று அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வரும் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து கடந்த 20ஆம் தேதி உத்தரவிட்டது.
அதேநேரத்தில், அங்கு தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக 'லைவ் லா ' செய்தி குறிப்பிடுகிறது. ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதிப்பதை, அங்கு தீபம் ஏற்றுவது பாரம்பரிய வழக்கம் என்ற கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட இறுதி அங்கீகாரமாகக் கருதக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் லைவ் லா தெரிவித்துள்ளது.
அச்செய்தியின்படி, நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அனுமதியை, எந்தவொரு தரப்பினரும் நிறுவப்பட்ட பழக்கவழக்கத்துக்கான ஆதாரமாகக் கருத முடியாது என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இதேபோன்ற வழிபாடுகளைக் கோருவதற்கு இதைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களும் அரசு அதிகாரிகளும் மட்டுமே தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சிக்குச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவை மற்றும் நடைமுறை சாத்தியத்தைப் பொறுத்து மத்திய ரிசர்வ் காவல் படையினரை பணியில் ஈடுபடுத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (23.11.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்திற்கு நாளை விடுமுறையாகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு