Skip to main content

Advertisement

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: பட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதா? 2 கடிதங்களால் எழுந்த சர்ச்சையின் பின்னணி

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
'உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எந்தக் கருத்தையும் நாங்கள் கூறவில்லை. எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் எங்கள் பெயர்களை சேர்த்து வெளியிட்டது மனவேதனையைத் தருகிறது' - இந்து சமய அறநிலையத் துறைக்கு நவம்பர் 25 ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலின் பட்டர்கள் எழுதிய கடிதம் இது.
BBC

'உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எந்தக் கருத்தையும் நாங்கள் கூறவில்லை. எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் எங்கள் பெயர்களை சேர்த்து வெளியிட்டது மனவேதனையைத் தருகிறது' - இந்து சமய அறநிலையத் துறைக்கு நவம்பர் 25-ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோவிலின் பட்டர்கள் எழுதிய கடிதம் இது.

மறுநாளே, பட்டர்கள் தரப்பில் வெளியான மற்றொரு கடிதத்தில் 'சைவ சமய நெறிமுறைகளின்படி உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றியது சரியானது' எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவில் பட்டர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்து மறுப்பு கடிதம் பெறப்பட்டதாக, இந்து அமைப்புகள் விமர்சித்துள்ளன. ஆனால், "எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை" என பிபிசி தமிழிடம் பேசிய கோவிலின் தலைமைப் பட்டர் ராஜா தெரிவித்தார்.

திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் அமைந்துள்ள மலையின் மேலே இடதுபுறம் காசி விஸ்வநாதர் கோவிலும் வலதுபுறத்தில் உள்ள மலையில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளன.

'மலையின் உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபநாளான நவம்பர் 24-ஆம் தேதி ஒருமுறை தீபம் ஏற்றலாம்' என, உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியை வழங்கியது.

ஆனால், கார்த்திகை தீப நாளில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை. ஆண்டுதோறும் தீபம் ஏற்றப்படும் இடமான உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

'அறங்காவலர் குழு தீர்மானம்' - துணை ஆணையர்

தீபம் ஏற்றியது தொடர்பாக, நவம்பர் 24 ஆம் தேதி சுப்ரமணிய சுவாமி கோவிலின் துணை ஆணையர் செல்வி செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், 'கோவிலில் நடைபெற்று வரும் திருவிழாக்கள், பூஜைகள், வழிபாட்டு சடங்குகள் மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா ஆகியவை தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சமய மரபுகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் ஆகம விதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன' எனக் கூறியுள்ளார்.

'கோவிலில் காலம்காலமாக கடைபிடிக்கப்படும் வழக்கத்தின்படி மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது' என அவர் தெரிவித்துள்ளார்.

' இத்தகைய நீண்டகால தொடர்ச்சியான வழிபாட்டு நடைமுறைகள், மரபுகள் மற்றும் சடங்குகள், ஆகம விதிகள் ஆகியவை கோவிலின் தனித்துவமான சமய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன' என துணை ஆணையர் செல்வி குறிப்பிட்டுள்ளார்.

'கோவிலில் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், ஆகம விதிகள் மற்றும் நிலைபெற்ற வழிபாட்டு நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை' என்கிறார் அவர்.

'அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் சமய முக்கியத்துவம் கொண்ட ஆவணங்கள், ஆகம சான்றுகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டு தீபம் ஏற்றுவது என அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது' என துணை ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, தீபம் ஏற்றப்படாதது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையிலும், 'கோவில் நிர்வாகத்தின் முடிவு காரணமாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை' எனக் கூறியிருந்தார்.

'மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான நபர்களின் பெயர்களை கோவில் நிர்வாகம் வழங்கவில்லை' எனவும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தங்களிடம் ஆலோசிக்காமல் கோவில் நிர்வாகம் முடிவெடுத்ததாக ஸ்தானிக பட்டர்கள் தரப்பில் கடிதம் ஒன்று வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

'மனவேதனையைத் தருகிறது' - பட்டர்கள் கடிதம்

உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த ஆண்டு மனு அளித்துள்ளோம்' எனக் கூறியுள்ள ஸ்தானிக பட்டர்கள், 'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மலைமேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எந்தக் கருத்தையும் நாங்கள் கூறவில்லை' எனத் தெரிவித்துள்ளனர்.
BBC

கோவிலின் துணை ஆணையர், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்களைக் குறிப்பிட்டு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில், 'கார்த்திகை தீப நாளன்று கோவில் அறங்காவலர் குழு ஒரு கடிதத்தை வெளியிட்டது. கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நாங்கள் எந்தக் கடிதத்தையும் கோவிலுக்கு வழங்கவில்லை' எனக் கூறப்பட்டுள்ளது.

'உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த ஆண்டு மனு அளித்துள்ளோம்' எனக் கூறியுள்ள ஸ்தானிக பட்டர்கள், 'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மலைமேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எந்தக் கருத்தையும் நாங்கள் கூறவில்லை' எனத் தெரிவித்துள்ளனர்.

'கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் எங்களின் பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது மிகவும் மனவேதனையைத் தருகிறது' எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். கடிதத்தின்கீழ் நான்கு பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

'கோவிலில் பரம்பரை அர்ச்சகர்களாக வருகிறவர்களை 'ஸ்தானிக பட்டர்' என்கின்றனர்.

'எந்தப் பூஜையை யார் நடத்த வேண்டும்?' என்பதைத் தீர்மானிக்க கூடியவர்களாக இவர்கள் உள்ளனர்” என்கிறார் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ்.

இதன் தொடர்ச்சியாக, பட்டர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவர் பேசும் காணொளி இணையத்தில் பரவியது. அதில், 'ஆகம விதி என்பது இடையில் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றி வருகிறோம். அதற்கு முன்னதாக அங்கு தீபம் ஏற்றப்பட்டதே இல்லை' என்கிறார்.

''தீபத்தூண் (மலை உச்சியில்) செல்லும் வழியில் முறையாக படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்து மின்வசதிகள் செய்து கொடுத்தால் நிச்சயம் தீபம் ஏற்றலாம்’' என சுவாமிநாதன் பட்டர் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பட்டர்களுக்கு நெருக்கடியா?

பட்டர்கள் தரப்பில் இருந்து இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
BBC
ராஜா பட்டர்

இந்தநிலையில், பட்டர்கள் தரப்பில் இருந்து இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், '24.11.2026 அன்று நடைபெற்ற கார்த்திகை தீபத் திருநாள் குறித்து ஸ்தானிக பட்டர்கள் ஆகிய நாங்கள், கோவில் நிர்வாகம் கடிதம் மூலம் கேட்டதற்கு இணங்க இக்கடிதத்தை அளிக்கிறோம்' எனக் கூறப்பட்டுள்ளது.

'காலம்காலமாக கோவில் நிர்வாகத்துடன் ஒத்துழைத்தே எல்லாவிதமான திருவிழாக்களையும் செய்து வருகிறோம். இந்த கார்த்திகை தீப திருவிழாவும் 1996-ஆம் ஆண்டு முதல் உச்சிப் பிள்ளையார் கோவிலில் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறோம்' எனக் கூறியுள்ளனர்.

'கார்த்திகை தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோவில், ராஜகோபுரம், 16 கால் மண்டபம் அருகில் சொக்கப்பனை ஏற்றும் இடம் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது' என பட்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

'மேற்படி உச்சிப் பிள்ளையார் மண்டபம் சுப்ரமணிய சுவாமி கோவிலின் மூலஸ்தான கருவறைக்கு நேர்மேலே உள்ளது. சுவாமியின் சிரசின் மேல் உள்ளதற்கு சமமாகும்' எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கோவிலின் வழிகாட்டுதல்படியும் சைவ சமய நெறிமுறைகளின்படியும் இந்த தீப மண்டபத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றி வருவதாகக் கூறியுள்ள பட்டர்கள், '’உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் 24.11.26 அன்று கார்த்திகை தீபம் ஏற்றலாம் எனவும் 7.11.2013 மற்றும் 4.12.2025 ஆகிய ஆண்டுகளில் இதேபோன்று எழுத்துப்பூர்வமான கருத்துரையை வழங்கியுள்ளோம்’' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

"ஒவ்வொரு வருடமும் எங்களின் கருத்துகளை வாய்மொழியாகவோ, தேவைப்பட்டால் எழுத்து மூலமாகவோ பெற்றுக் கொண்டு உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது" என பட்டர்களின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

'அவ்வாறு ஏற்றுவது வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படியும் சைவ சமயம் சார்ந்த நெறிமுறைகளின்படியும் சரியானது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்துக்கு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

"பட்டர்களை அச்சுறுத்தி மறுப்புக் கடிதம் பெறப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன்.

"நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றாமல் அதற்கான காரணங்களைக் கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகவே பார்க்கப்படும். இந்த விவகாரத்தில் ஒவ்வொரு தரப்பினரும் பல்வேறு காரணங்களைக் கூறி தப்பிக்கப் பார்க்கின்றனர்" என அவர் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலின் துணை ஆணையர் செல்வியிடம் பிபிசி தமிழ் இதுகுறித்துக் கேட்டபோது, "உடல்நலமில்லாததால் விடுப்பில் இருக்கிறேன். இதுகுறித்து தற்போது பேச இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார்.

பட்டர்களுக்கு நெருக்கடி தந்ததாக இந்து அமைப்பினர் கூறுவது குறித்து, சுப்ரமணிய சுவாமி கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் சண்முக சுந்தரத்திடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "இதைப் பற்றி இப்போது பேசுவது சிரமம்" எனக் கூறினார்.

'எந்த அழுத்தமும் தரப்படவில்லை' - தலைமை பட்டர்

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் பட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக, இந்து அமைப்பினர் கூறுவது குறித்துக் கேட்டபோது,
BBC

இதையடுத்து, கோவிலின் தலைமை பட்டர் ராஜாவிடம் பிபிசி தமிழ் பேசியது.

"கோவிலின் மரபுப்படியும் சம்பிரதாயப்படியும் கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றியிருக்கிறோம். தீபம் ஏற்றுவது தொடர்பாக ஆண்டுதோறும் அமைதிக் குழு போட்டு தீபம் ஏற்றுவது தொடர்பாக எங்களிடம் கருத்து கேட்பார்கள்" என்கிறார்.

கோவிலின் மரபுப்படி சுவாமியின் சிரசுக்கு மேல் தீபம் ஏற்றுவது சம்பிரதாயம் எனவும் கோவிலின் சமய நடைமுறையாக இது உள்ளதாக தாங்கள் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

'தீபம் ஏற்றுவது தொடர்பாக பட்டர்களிடம் ஆலோசிக்கவில்லை' எனக் கூறும் கடிதம் வெளியானது குறித்துக் கேட்டபோது, "தீபம் ஏற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் மரபுப்படி செயல்படுத்த வேண்டும். அதனை செயல்படுத்தியுள்ளோம்" எனக் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் பட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக, இந்து அமைப்பினர் கூறுவது குறித்துக் கேட்டபோது, "எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை" என்று ராஜா பட்டர் விளக்கம் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!