திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வரும் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி அனுமதி அளித்துள்ளது. அதேநேரத்தில், அங்கு தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு தொடர்பாக, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் 20ஆம் தேதி உத்தரவின் சில பத்திகளில் உள்ள அம்சங்களை சீராய்வு செய்ய வேண்டும் என கோரியுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டால், நீண்டகாலமாக நிலவி வரும் நடைமுறை மாற்றியமைக்கப்படும் என்றும் அதுவும் தர்காவுக்கு மிக அருகிலுள்ள ஓர் இடத்தில், இதுவரை நிரூபிக்கப்படாத உரிமை கோரிக்கையின் அடிப்படையில் இந்த மாற்றம் நிகழும் என்றும் தமிழ்நாடு அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என, அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசு தனது சீராய்வு மனுவில் என்ன கூறியுள்ளது?
சீராய்வு மனுவில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில், "உச்ச நீதிமன்றம் 20 ஆம் தேதி அளித்த உத்தரவின் 12-வது பத்தியில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவின் விளைவு, தடை செய்யப்பட்ட தீர்ப்புக்கு முன்னர் நிலவிய நிலையைத் தொடர்ந்து பாதுகாப்பதாகும். அதன்படி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின் கார்த்திகை தீபம், நீண்ட காலமாகவும் தடையின்றியும் பின்பற்றப்பட்டு வரும் வழக்கத்தின்படி, உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள பாரம்பரிய இடமான தீப மண்டபத்திலேயே ஏற்றப்பட்டிருக்கும். ஆனால், 13 முதல் 20 வரையிலான பத்திகள் இந்த நிலையை மாற்றியமைக்கின்றன. ரிட் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திலிருந்து பெற்றிருந்த, தற்போது சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதே நிவாரணத்தை அவர்களுக்கு இந்த ஆண்டில் வழங்குகின்றன. இதனால், உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டிருந்தாலும், அதன் சாராம்சம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நீதிமன்றம் எந்தவொரு உரிமை குறித்தும் முதற்கட்டக் கருத்தையே பதிவு செய்யாத நிலையிலேயே இது நிகழ்ந்துள்ளது. 15-வது பத்தியில், அந்தக் கல் தூண் வழக்கமான மத வழிபாடு நடைபெறும் இடமாக இருக்கிறதா அல்லது வரலாற்று ரீதியாக அவ்வாறு இருந்து வந்துள்ளதா என்பது குறித்து எந்த முடிவுக்கும் வர நீதிமன்றம் மறுத்துள்ளது. 13-வது பத்தியில், இந்த அனுமதி, கோரப்படும் எந்தவொரு வழக்கமான, மதம் சார்ந்த அல்லது சொத்துரிமை சார்ந்த உரிமையையும் அங்கீகரிப்பதற்காகவோ அல்லது நடைமுறைப்படுத்துவதற்காகவோ வழங்கப்படவில்லை என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு உரிமையும் முதற்கட்ட அளவில்கூட அங்கீகரிக்கப்படாத நிலையில், ஏற்கெனவே களத்தில் நிலவும் சூழலை மாற்றியமைக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பதற்கு சட்டரீதியான அடிப்படை இல்லை" எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கப்பட்டால், தற்காலிகமாகவோ அல்லது ஒருமுறை மட்டுமோ அல்லாமல், நீண்டகாலமாக நிலவி வரும் நடைமுறை மாற்றியமைக்கப்படும் என்றும் அதுவும் தர்காவுக்கு மிக அருகிலுள்ள ஓர் இடத்தில், இதுவரை நிரூபிக்கப்படாத உரிமை கோரிக்கையின் அடிப்படையில் இந்த மாற்றம் நிகழும் என்றும் தமிழக அரசு அதில் தெரிவித்துள்ளது.
"ஒரு வழிமுறை அனைத்து தரப்பினரின் உரிமைகளையும் பாதுகாக்கிறது. மற்றொரு வழிமுறை, விசாரணை நடைபெறுவதற்கு முன்பே ஒரு தரப்பினரின் உரிமைகளைப் பறிப்பதற்கு வழிவகுக்கிறது." என சீராய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டம், 1959-இன் பிரிவு 28(1)-ன்படி அறங்காவலர், அறக்கட்டளையின் நிபந்தனைகள் மற்றும் அந்த மத நிறுவனத்தின் வழக்கமான நடைமுறைகளுக்கு இணங்க அந்நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும் என்று கூறுகிறது. உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவதே தற்போதைய வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது என்பது மறுக்கப்படாததாகும். இந்நிலையில், வேறொரு இடத்தில் தீபம் ஏற்றுமாறு உத்தரவிடுவது, நடைமுறையில் உள்ள வழக்கத்துக்கு முரணானதாகும்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தச் சட்டத்தின் பிரிவு 63(e)-இன் கீழ், ஒரு மத நிறுவனத்தின் நிறுவப்பட்ட வழக்கமான நடைமுறை என்ன என்பதை விசாரித்து முடிவெடுக்கும் அதிகாரம் இணை ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கும், அதன்பிறகு உரிமையியல் வழக்குத் தொடர்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வரும் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து கடந்த 20ஆம் தேதி உத்தரவிட்டது.
அதேநேரத்தில், அங்கு தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக 'லைவ் லா ' செய்தி குறிப்பிடுகிறது. ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதிப்பதை, அங்கு தீபம் ஏற்றுவது பாரம்பரிய வழக்கம் என்ற கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட இறுதி அங்கீகாரமாகக் கருதக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் லைவ் லா தெரிவித்துள்ளது.
அச்செய்தியின்படி, நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அனுமதியை, எந்தவொரு தரப்பினரும் நிறுவப்பட்ட பழக்கவழக்கத்துக்கான ஆதாரமாகக் கருத முடியாது என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இதேபோன்ற வழிபாடுகளைக் கோருவதற்கு இதைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களும் அரசு அதிகாரிகளும் மட்டுமே தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சிக்குச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவை மற்றும் நடைமுறை சாத்தியத்தைப் பொறுத்து மத்திய ரிசர்வ் காவல் படையினரை (CRPF) பணியில் ஈடுபடுத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு