Skip to main content

Advertisement

திருப்பரங்குன்றம்: விஜய் அரசின் நடவடிக்கை அரசியல்ரீதியாக என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், இந்த ஆண்டு மட்டும் ஒருமுறை அந்த தூணில் தீபம் ஏற்றலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
BBC

திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், இந்த ஆண்டு மட்டும் ஒருமுறை அந்த தூணில் தீபம் ஏற்றலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.

இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எந்தவொரு அரசாக இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது கடமை என்று கூறியுள்ளார்.

திமுக செய்ததையே தவெக பின்பற்றியுள்ளது என்பதால், இதுதான் தமிழ்நாடு என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்று பிபிசியிடம் கூறினார் திமுக செய்தித்தொடர்பாளரும், எம்.பி.யுமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

இந்த நடவடிக்கையை தவெக கூட்டணிக் கட்சிகள் வரவேற்றுள்ளன.

மதநல்லிணக்கத்தில் தவெக அரசு உறுதியாக இருப்பது இந்த நடவடிக்கையால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பிபிசியிடம் கூறினார் விசிக பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார்.

தவெக அரசின் நடவடிக்கை: தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகள்!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்ததன் மூலமாக, தமிழக முதல்வர் விஜய் தெரிந்தே மாபெரும் வரலாற்று பிழையைச் செய்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.
BBC

கார்த்திகை தீபத்திருவிழா நாளில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையுச்சியிலுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்று இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. ஆனால் அது நிலஅளவைக்குரிய தூண் என்று தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டு அதற்கு மறுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளன.

இந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதியன்று, கார்த்திகை தீபநாளன்று மலையுச்சியிலுள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைக் கட்டாயம் செயல்படுத்த வேண்டுமென்று பாஜக, இந்து அமைப்புகள் வலியுறுத்திப் போராடி வந்த நிலையில், அதைச் செயல்படுத்தக்கூடாது என்று தவெக கூட்டணிக்கட்சிகள் வலியுறுத்தின. இறுதியில் உச்சநீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. மாறாக திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

அங்கு தீபம் ஏற்றப்படாததற்கான காரணத்தை உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக மதுரை மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட நீதிமன்றங்களில் நடக்கவுள்ள சட்டப்பூர்வமான சவால்கள் ஒரு புறமிருக்க, இந்த நடவடிக்கையை எடுத்ததன் காரணமாக தவெகக்கு அரசியல்ரீதியாக ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்ததன் மூலமாக, தமிழக முதல்வர் விஜய் தெரிந்தே மாபெரும் வரலாற்று பிழையைச் செய்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்ததற்காக அரசு விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார் பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன் ஆகியோரும் இதனைக் கண்டித்து கடுமையாக பேட்டியளித்து, அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்திலேயே நேற்று(24-11-2026)  தீபம் ஏற்றப்பட்டது
@VanniTamizhVCK/X
திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்திலேயே நேற்று(24-11-2026) தீபம் ஏற்றப்பட்டது

நீதிமன்றத் தீர்ப்புகளை அரசு தனது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அணுகக்கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ள 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு நீதிமன்றத் தீர்ப்புகளைப் புறக்கணித்து தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை என்று செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தாமல் அரசு செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல என்று விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், இதனால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் மாணிக்கம் தாகூர், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதை வரவேற்றுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைக் காரணம் காட்டி பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பின்புலத்தோடு தேவையற்ற பதற்றத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும், வகுப்புவாத சக்திகளின் சதிகளையும் தமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசும் இணைந்து முறியடித்துள்ளதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில அரசுகள் கடைப்பிடிக்காததற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, ''தமிழகத்தில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிற்கு உள்ளது . என்ன விளைவு வந்தாலும் எதிர்கொள்வோம் என்று கடந்த காலத்தில் திமுக அரசும், அன்றைய முதல்வர் ஸ்டாலினும் உறுதியோடு நின்றதைப் போல இப்போதும் மாநில அரசு இந்த உத்தரவுகளுக்கு எதிராகத் தயங்காமல் சட்டப்பூர்வமான வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.'' என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் இந்து வாக்குவங்கியை உருவாக்க இந்த நடவடிக்கை காரணமாகுமா?

ஆனால் தவெக அரசின் இந்த நடவடிக்கை, திமுகவின் இடத்தை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சிகளில் ஒன்று என்கிறார் பாஜக விவசாய அணி மாநிலச்செயலாளர் ஜி.கே.நாகராஜ்.

சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் வாக்குவங்கியைக் குறிவைத்தே இந்த நடவடிக்கையை தவெக அரசு செய்துள்ளது என்று அவர் கூறுகிறார்,

பிபிசியிடம் பேசிய ஜி.கே.நாகராஜ், ''கடந்த ஆண்டில் உயர்நீதிமன்ற உத்தரவை திமுக மதிக்கவில்லை. இந்த ஆண்டில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டே அதை நாங்கள் செயல்படுத்தவில்லை என்று கூறுவதற்காக இப்படி ஒரு காரியத்தை தவெக அரசு செய்துள்ளது. இதன் காரணமாக தவெகவுடன் கூட்டணி வைத்துள்ள விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் தவெகவுடன் உறுதியாக இருக்கின்ற ஒரு நிலையை விஜய் ஏற்படுத்தியுள்ளார்.'' என்றார்.

''விஜய், தேசத்தில் உயர்ந்தபட்ச நீதி அமைப்பையே மதிக்காதது அவருடைய அரசியல் நிர்வாகப் புரிதலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் இந்து வாக்கு வங்கி உருவாகவும் விஜய் அடித்தளமிட்டுள்ளார்.'' என்றார் ஜி.கே.நாகராஜ்.

தவெக அரசின் இந்த நடவடிக்கையால் இந்து வாக்கு வங்கி உருவாகும் என்ற கருத்தை, கனவு காணும் உரிமை எல்லோருக்கும் இருப்பது போல இது பாஜகவின் ஆகாயக்கோட்டை என்று விமர்சிக்கிறார், திமுக செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

தமிழகத்தில் பாஜக வாக்குவங்கி 5 சதவீதத்தைத் தாண்டியதில்லை, இனியும் தாண்டாது என்கிறார் அவர்.

பிபிசியிடம் பேசிய எம்.பி. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ''கடந்த 2025 ஆம் ஆண்டில் திமுக செய்ததைத்தான் இப்போது தவெக அரசு செய்திருக்கிறது. நீதிமன்றம்தான் மாறியிருக்கிறது. திமுக அரசு கடந்த ஆண்டில் அதைச் செய்யாமல் இருந்திருந்தால் விஜய்க்கு பயம் வந்திருக்கலாம். ஆனால் ஒரு முன்னுதாரணத்தை திமுக ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் இந்த அரசு அதையே பின்பற்றியுள்ளது.'' என்றார்.

''இதுவரை திமுக இதைச் செய்தபோது இந்து விரோதம் என்று முத்திரை குத்தினார்கள். ஆனால் தவெக அரசும் இப்போது அதைத்தான் செய்திருக்கிறது. ஆகமொத்தத்தில், தமிழகம் என்றால் இதுதான் என்பது இந்துத்துவ சக்திகளுக்கு இதன் மூலமாக விளங்கியிருக்கும். இதிலிருந்து யாரும் விலகிச்செல்ல முடியாது.'' என்றார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

ஏறத்தாழ இதே கருத்தைத் தெரிவிக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார், தமிழ்நாட்டில் இதனால் இந்து வாக்குவங்கி உருவாக வாய்ப்பேயில்லை என்கிறார்.

தமிழக மக்கள் ஆன்மிக நம்பிக்கையில் இருப்பார்கள் என்று கூறும் அவர், திருவண்ணாமலையிலும், உச்சிப்பிள்ளையார் கோவிலிலும் தீபம் ஏற்றியதை வணங்கியவர்களும் இந்துக்கள்தான் என்கிறார்.

பிபிசியிடம் பேசிய எம்.பி. ரவிக்குமார், ''தமிழ்நாட்டிலுள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் யாராக இருந்தாலும் மத நல்லிணக்கத்துடன் இருக்க வேண்டுமென்று ஒருமித்த மனநிலையில்தான் நினைப்பார்கள். வடமாநிலங்களில்தான் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்று வேறுபாட்டை உருவாக்கி, அதில் அரசியல் வெற்றி கண்டிருக்கிறார்கள். அது இங்கே எப்போதுமே எடுபடாது.'' என்றார்.

மதத்தின் பெயரை வைத்து விஜயின் வாக்கு வங்கியைப் பிரிப்பது என்பது சாத்தியமேயில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

பிபிசியிடம் பேசிய ப்ரியன், ''இந்த நடவடிக்கையால் இந்து வாக்கு வங்கி உருவாகும் என்பது தவறான கணிப்பு. விஜய்க்கு இருக்கும் வாக்கு வங்கி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது. அவர் சினிமாவிலிருந்து வந்தவர் என்பதால் அவருடைய ரசிகர்கள்தான் இப்போது தொண்டர்களாகியிருக்கிறார்கள். இந்து மதத்தின் பெயரை வைத்து அவரிடமிருந்து அந்த வாக்குகளைப் பிரிப்பது என்பது சாத்தியமில்லை. அதேபோன்று அவரை ஆதரிக்கும் சிறுபான்மையினரும் அவர் சிறுபான்மையினர் என்பதற்காக ஆதரிப்பவர்களில்லை.'' என்றார்.

''இந்த நடவடிக்கையால் திமுக அரசியல் செய்வதையே விஜய் கஷ்டமாக்கியிருக்கிறார். இத்தகைய விவகாரங்களை திமுகவால் இனி பேச முடியாது. மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டு தவெகவுக்கு தோல்வி கிடைக்கலாமே தவிர, இந்து வாக்கு வங்கி உருவாகி விஜய்க்கு தோல்வி ஏற்பட வாய்ப்பில்லை.'' என்றார் ப்ரியன்.

தவெக அரசின் இந்த நடவடிக்கையால் இந்து வாக்கு வங்கி உருவாகும் என்ற கருத்தை, கனவு காணும் உரிமை எல்லோருக்கும் இருப்பது போல இது பாஜகவின் ஆகாயக்கோட்டை என்று விமர்சிக்கிறார், திமுக செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
BBC
திமுக தலைவர் ஸ்டாலினுடன் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

சிறுபான்மையினரின் வாக்குகள் தவெகவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதா?

கடந்த ஆண்டில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அப்போதிருந்த திமுக அரசு அதைச் செயல்படுத்தவில்லை என்பது தற்போது நினைவுகூரப்படும் நிலையில், இந்த ஆண்டில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதைச் செயல்படுத்தாதது இரு விதமான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

இதற்காக திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான சிடிஆர் நிர்மல்குமார் பதவி விலக வேண்டுமென்றும் பாஜக தலைவர்களும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் இந்த நடவடிக்கையால் தமிழக மக்களிடம் தவெகவுக்கான ஆதரவு இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார் விசிக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ரவிக்குமார்.

பிபிசியிடம் பேசிய ரவிக்குமார், ''தமிழகத்தைப் பொருத்தவரை மதச்சார்பற்ற அரசியலுக்கே மக்கள் ஆதரவு தருவார்கள். சங்பரிவார் மற்றும் அதன் கொள்கைகளுக்கு இங்கே ஆதரவு இல்லை. மதச்சார்பின்மையில் தவெக அரசு உறுதியாக இருக்குமா என்ற கேள்வி இருந்தது. இந்த நடவடிக்கையால் அதில் உறுதியாக இருப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் ஆதரவு அதிகரிக்கவே செய்யும்.'' என்றார்.

''திமுக ஆட்சியில் கூட, இந்த விவகாரத்தில் கொஞ்சம் சொதப்பினார்கள். ஆனால் இந்த முறை எவ்வளவோ கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தும் தவெக அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளது. இதனால்தான் இப்போது எதிர்க்கட்சிகளே இதைப் பற்றி பேசமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது திமுக ஆட்சியில் இருந்திருந்தாலும், அதிமுக ஆட்சியில் இருந்திருந்தாலும் இதை நடைமுறைப்படுத்தியிருக்க மாட்டார்கள்.'' என்றார் எம்.பி.ரவிக்குமார்.

இந்த நடவடிக்கையால் தமிழக மக்களிடம் தவெகவுக்கான ஆதரவு இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார் விசிக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ரவிக்குமார்.
BBC
விசிக எம்.பி. ரவிக்குமார்

"இந்த ரவுண்டில் விஜய் வெற்றி பெற்றிருக்கிறார்"

ஆனால் இந்த ஒரு நடவடிக்கையை வைத்து, தவெகவுக்கு சிறுபான்மையினரின் ஆதரவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்கிறார் திமுக செய்தித்தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

''திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் மிகக்குறைவான இந்துக்கள் மட்டுமே, ஆர்வம் காண்பிக்கின்றனர். இஸ்லாமியர்கள இதை ஒரு பிரச்னையாகவே கருதவில்லை. ஆனால் திமுக, தவெக ஆகிய 2 ஆட்சிகளிலும் ஒரே மாதிரியாக இந்த விவகாரம் கையாளப்பட்டிருப்பதை வைத்து, இதுதான் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை என்பது உணர்த்தப்பட்டுள்ளது'' என்றார் கான்ஸ்டன்டைன்.

உச்சநீதிமன்றம் உத்தரவு என்பதற்காக தூணில் தீபம் ஏற்றியிருந்தால் கூட்டணிக்கட்சிகள் ஆதரவு பற்றி மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது என்று கூறும் ப்ரியன், அதனால் ஆட்சிக்கே ஆபத்து வந்திருக்கலாம் என்றும், இந்த நடவடிக்கை மூலமாக அரசியல்ரீதியாக தவெக அரசு தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டுள்ளது என்றும் கூறுகிறார்.

அதேசமயம், ஆட்சி மீதான அதிருப்தியை அறுவடை செய்யும் சக்தியாக பாஜக என்றைக்கும் மாறாது என்று ப்ரியன் தெரிவித்துள்ளார்.
BBC
பத்திரிகையாளர் ப்ரியன்

பிபிசியிடம் பேசிய பத்திரிகையாளர் ப்ரியன், ''இதே விவகாரத்தில் திமுக எடுத்த நிலைப்பாட்டுக்கு அப்போதும் இதே கட்சிகள் உறுதியாக ஆதரவு தெரிவித்தன. அதேபோன்று இப்போது தவெக அரசு, உச்சநீதிமன்றமே கூறிய பின்னும் உறுதியாக இருந்து பாரம்பரியமான இடத்தில் தீபத்தை ஏற்றியதன் மூலமாக, நிச்சயமாக எந்தச் சூழலிலும் கூட்டணிக்கட்சிகள் தவெகவை விட்டு வெளியே செல்வதற்கு வாய்ப்பில்லை.'' என்றார்.

''பாஜக தங்களின் கொள்கை எதிரி என்பதை வெறும் வாயால் மட்டும் சொல்லவில்லை, செயலிலும் அப்படித்தான் இருக்கிறோம் என்பதையும் விஜய் இந்த நடவடிக்கையால் உறுதிப்படுத்தியிருக்கிறார்.'' என்றார் அவர்.

இதனால் விஜய்க்குக் கிடைக்கும் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக ப்ரியன் கூறுகிறார்.

அதேசமயம், ஆட்சி மீதான அதிருப்தியை அறுவடை செய்யும் சக்தியாக பாஜக மாறாது என்றும் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

''கட்சியினரின் நடவடிக்கைகள், அரசின் நிர்வாகக்குளறுபடிகள் போன்றவற்றால் அதிருப்தி அதிகரித்தாலும் அதை அரசியல்ரீதியாக அறுவடை செய்கிற சக்தியாக திமுக மட்டுமே இருக்கும். அது பாஜகவுக்குப் போகாது. விஜய் ஆட்சியை நடத்தும் விதத்தை வைத்தே அவருக்கான செல்வாக்கு, வாக்குவங்கியில் மாற்றம் ஏற்படும்.'' என்றார் ப்ரியன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!