திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் இந்தாண்டும் கார்த்திகை தீப நாளான இன்று தீபம் ஏற்றப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வழக்கம்போல் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவிலில் உள்ள தீப மண்டபத்தில் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அரோகரா பக்தி முழக்கம் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் கூட, திருப்பரங்குன்றம் மலை உச்சி மீது உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், கோவில் முன்பாக கூடிய இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உச்சி பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில் தூணின் அருகே நின்று கொண்டிருந்த காவல்துறையினர் மலைப்பகுதியை நோக்கி சென்றனர்.
உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதும் கிரிவலப் பாதையில் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு செய்தனர்.
ஆனால், மலை உச்சியில் உள்ள தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.
கோயில் நிர்வாகம் கூறியது என்ன?
திருப்பரங்குன்றம் மலையில் இன்று தீபம் ஏற்றப்பட்டது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருவிழாக்கள், பூஜைகள், வழிபாட்டுச் சடங்குகள் மற்றம் கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சமய மரபுகள், பராம்பரியப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆகமவிதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திருக்கோயிலில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தின்படி மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இவ்விடமான மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகின்றது.
இத்தகைய நீண்ட காலத்தொடர்ச்சியான வழிபாட்டு நடைமுறைகள் சமய மரபுகள் மற்றும் சடங்குகள், ஆகம விதிகள் ஆகியவை கோயிலின் தனித்துவமான சமய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன." என்று கூறியுள்ளது.
"நமது கோயிலில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள். ஆகம விதிமுறைகள் மற்றும் நிலைபெற்ற வழிபாட்டு நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் சமய முக்கியத்துவம் கொண்ட ஆவணங்கள், ஆகமச்சான்றுகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்கும் அதைத்தொடர்ந்து திருக்கோயில் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் இத்திருக்கோயில் அறங்காவலர் குழு ஏகமனதாக தீர்மானித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேற்கண்ட அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி கார்த்திகை மகாதீபமானது கோயில் மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இடமான மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் இன்று 24.112026 மாலை 06.00 மணியளவில் ஏற்றப்பட்டது" என்றும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்தது?
முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அப்பகுதியில் 5,000-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் சன்னதி தெரு பகுதியில், மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் நகர், மலைப்பகுதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட பகுதிகள் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
திருப்பரங்குன்றத்திற்குள் நுழையும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். தீவிர சோதனைக்குப் பிறகே பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டதாக களத்தில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் சிராஜ் தெரிவிக்கிறார்.
வழக்கமாகத் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு முன்புள்ள கல் மண்டபம் வரை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆனால், இந்த முறை வாகனங்கள் அந்தப் பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. கல் மண்டபத்திலிருந்து வெகு தொலைவிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. கோயிலுக்கு வழிபாடு நடத்த வரும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்ட சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவுக்குச் செல்லும் வழி முழுவதும் காவல்துறையினரால் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரத வீதியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா மசூதியைச் சுற்றியும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த தடை உத்தரவு என்ன?
மதுரையில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்று தடை உத்தரவு பிறப்பித்தார். நவம்பர் 23-ம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை அனுமதியற்ற கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும், மலை ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான வழிபாடுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவித்துள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது
நெல்லையிலிருந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திருப்பரங்குன்றம் நோக்கி வாகனத்தில் புறப்பட்டனர். வாகனம் மதுரை ரோடு கணபதி மில் சோதனைச் சாவடி அருகே சென்ற போது காவல்துறையினர் வாகனத்தை இடைமறித்தனர். "திருப்பரங்குன்றத்திற்குள் நுழையக் கூடாது என்று தடை உத்தரவு உள்ளது. எனவே நீங்கள் செல்ல முடியாது, உங்களை அனுமதிக்க மாட்டோம்" என காவல்துறையினர் கூறினர்.
அதனை அவர்கள் ஏற்காததால், நயினார் நாகேந்திரனுடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து திருமண மண்டபத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "எந்தவித சட்டப்பூர்வ தடையுத்தரவும் இல்லாத நிலையில், என்னை வழிபாட்டிற்குச் செல்ல விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். கைது செய்வதாகக் கூறி எங்களை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுப்பது ஒரு தனிமனிதனின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25 மற்றும் 26-ன் படி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது விருப்பப்படி இறைவனை வழிபடவும், ஆன்மீக வழிபாடுகளைச் சுதந்திரமாக நடத்தவும் உரிமை உண்டு. ஆனால், தமிழகத்தில் இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், திருப்பரங்குன்றம் போன்ற திருத்தலங்களில் தீபம் ஏற்றுவதற்கும் வழிபாடுகளுக்கும் தடை விதிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்." என்றார்.
பாஜக மூத்த தலைவர்களை தடுத்த காவல்துறை
சென்னை விமான நிலையத்திலிருந்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்படும்போதே, திருப்பரங்குன்றம் செல்ல வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதனை மறுத்து மதுரைக்கு வந்துள்ளேன். நேராகத் திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் செல்கிறேன். அங்கு என்னைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான சாத்தியங்கள் இருப்பது தெரிந்துதான் செல்கிறேன்" என்று கூறினார்.
இதேபோல், கோயம்புத்தூரில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட பாஜக மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எல்.முருகனை அன்னூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினருடன் அவர் வாக்குவாதம் செய்த காட்சிகளை ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து கடந்த 20ஆம் தேதி உத்தரவிட்டது. நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அதேநேரத்தில், அங்கு தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக 'லைவ் லா ' செய்தி குறிப்பிட்டது.
ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதிப்பதை, அங்கு தீபம் ஏற்றுவது பாரம்பரிய வழக்கம் என்ற கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட இறுதி அங்கீகாரமாகக் கருதக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் லைவ் லா தெரிவித்துள்ளது.
அச்செய்தியின்படி, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அனுமதியை, எந்தவொரு தரப்பினரும் நிறுவப்பட்ட பழக்கவழக்கத்துக்கான ஆதாரமாகக் கருத முடியாது என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இதேபோன்ற வழிபாடுகளைக் கோருவதற்கு இதைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களும் அரசு அதிகாரிகளும் மட்டுமே தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சிக்குச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவை மற்றும் நடைமுறை சாத்தியத்தைப் பொறுத்து மத்திய ரிசர்வ் காவல் படையினரை பணியில் ஈடுபடுத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
தீபம் ஏற்றுவதற்கான நேரம், செல்லும் பாதை உள்ளிட்ட ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமே முடிவு செய்ய வேண்டும். தீபம் ஏற்றியதும் அந்தக் குழுவினர் உடனடியாக அங்கிருந்து திரும்ப வேண்டும் என்றும், அங்கு எந்தவிதமான கட்டுமானப் பணிகளோ, கட்டமைப்பு மாற்றங்களோ மேற்கொள்ளக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரத்தில், மலைப்பகுதியில் உள்ள வழக்கமான வழிபாட்டுத் தலங்களிலும், சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் மசூதியிலும் வழிபாடுகள் தடையின்றி நடைபெறுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தீபம் ஏற்றப்பட்ட மூன்று நாட்களுக்குள் அது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறையாகும்.
கூடுதல் தகவல்: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு