Skip to main content

Advertisement

தலைமைச் செயலக உதவியாளராக இருந்த விவேக் 'சின்னக் கலைவாணர்' ஆனது எப்படி? திரையுலகினர் பகிரும் நினைவுகள்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
நடிகர் விவேக்கின் பிறந்த நாள் இன்று
ActorVivek/X
நடிகர் விவேக்கின் பிறந்த நாள் இன்று

நகைச்சுவை மூலம் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்ற நடிகர் விவேக்கின் பிறந்த நாள் இன்று (நவம்பர் 19).

'சின்னக் கலைவாணர்' என்று அழைக்கப்பட்ட விவேக், திரைப்படங்களில் நகைச்சுவையுடன் மூடநம்பிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளையும் பேசினார்.

திரையுலகில் அவருடன் பணியாற்றியவர்கள் விவேக் குறித்த தங்கள் நினைவுகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.

விவேக்கிற்கு 'சின்னக் கலைவாணர்' பட்டம் கிடைத்தது எப்படி? நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கும்போது அவர் எவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தார்?

கே.பாலசந்தர் விவேக்கை அறிமுகப்படுத்தியது எப்படி?

கே.பாலசந்தரின் மகளும் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி
PushpaKandasamy
கே.பாலசந்தரின் மகளும் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி

1961-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் விவேக் பிறந்தார். அவரது இயற்பெயர் விவேகானந்தன்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் வெற்றிபெற்று, சென்னை தலைமைச் செயலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றினார் விவேக்.

பின்னர் 1987-ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 'புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படத்தில் அவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் பிரபலமானது.

அதன்பிறகு 'ரன்', 'சாமி', 'பேரழகன்', 'அந்நியன்', 'சிவாஜி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தார். 'சொல்லி அடிப்பேன்', 'நான்தான் பாலா', 'பாலக்காட்டு மாதவன்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.

விவேக்கைத் திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.பாலசந்தரின் மகளும் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி, அவரைப் பற்றிய நினைவுகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

"என் தந்தையின் பெருமைக்குரிய படைப்புகளில் விவேக்கும் ஒருவர். ஆரம்பத்தில் ஹியூமர் கிளப்பில் மிமிக்ரி செய்து வந்த அவரை, கலாகேந்திரா கோவிந்தராஜ் என் தந்தையிடம் அறிமுகப்படுத்தினார்.

முதலில் அவருக்கு எழுத்துப் பணிகளை வழங்கிய அப்பா, பின்னர் 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படத்தில் சுகாசினியின் தம்பியாக நடிக்க வைத்தார். அதே படத்தில் ரமேஷ் அரவிந்தும் அறிமுகமானார். பின்னர் 'ஒரு வீடு இரு வாசல்', 'புதுப்புது அர்த்தங்கள்' ஆகிய படங்களில் விவேக்கைப் பயன்படுத்தினார்" என்கிறார் புஷ்பா கந்தசாமி.

விவேக்கின் நகைச்சுவைத் திறனைப் பார்த்த பாலசந்தர், மிமிக்ரியைத் தொடர்ந்து செய்வதற்குப் பதிலாகத் திரைப்படங்களில் தனக்கென ஒரு நகைச்சுவைப் பாணியை உருவாக்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக அவர் கூறுகிறார்.

"எங்கள் கவிதாலயா நிறுவனம் தயாரித்த 'சாமி', 'திருமலை' ஆகிய படங்களில் விவேக்கின் நகைச்சுவை பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக, சமூகக் கருத்துகளை நகைச்சுவையுடன் இணைத்துச் சொல்வது அவரது தனித்துவமாக இருந்தது. கடைசிவரை என் தந்தையைத் தனது குருநாதராக நினைத்து, நேர்காணல்களிலும் மேடைகளிலும் அவரை நினைவுகூர்ந்தார். பின்னாளில் மரக்கன்றுகள் நடுவதிலும் தீவிரமாக ஈடுபட்டார். அவரது திடீர் மறைவு திரையுலகுக்குப் பேரிழப்பு" என்கிறார் புஷ்பா கந்தசாமி.

இயக்குனர் பாரதி கண்ணன்
Handout
இயக்குனர் பாரதி கண்ணன்

விவேக்கிற்கு 'சின்னக் கலைவாணர்' பட்டம் கிடைத்தது எப்படி?

விவேக்கின் நகைச்சுவையில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் முக்கிய இடம்பிடிக்கத் தொடங்கிய திரைப்படங்களில் ஒன்று 'திருநெல்வேலி'.

அந்தப் படத்தை இயக்கிய பாரதிகண்ணன், விவேக்குடன் பணியாற்றிய அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

"எனக்கு எம்.ஆர்.ராதாவின் நகைச்சுவைப் பாணி மிகவும் பிடிக்கும். குறிப்பாக, 'ரத்தக்கண்ணீர்' திரைப்படத்தை 18 முறை பார்த்திருக்கிறேன். அந்தப் பாணியில் 'திருநெல்வேலி' படத்தில் நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்க விரும்பினேன். நான் மூன்று நகைச்சுவைக் காட்சிகளை எழுதினேன். எழுதுவதில் ஆர்வம் கொண்ட விவேக் மேலும் ஏழு காட்சிகளை எழுதினார். ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் 'ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாது' என்ற வசனத்தை வைத்தோம்" என்கிறார் பாரதிகண்ணன்.

லாரிக்கு முன்னால் எலுமிச்சைப் பழம் கட்டுவது, கண் திருஷ்டி, மைல்கல் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்ட நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதாக அவர் கூறுகிறார்.

"நாங்கள் இருவருமே கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்பதற்காகப் பெரியாரின் பெயரைப் பயன்படுத்தினோம். அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்காகத் திரைப்படத்தை திரையிட்டோம். படத்தை ரசித்த அவர், திராவிடர் கழகத் தலைவர் வீரமணியிடம் தொலைபேசியில் பேசினார். விவேக்கிற்கு 'சின்னக் கலைவாணர்' பட்டம் வழங்குவதற்கும் கருணாநிதி பரிந்துரைத்தார். அந்தப் பட்டம் பின்னர் நிலைத்துவிட்டது" என்கிறார் பாரதிகண்ணன்.

'சக நடிகர்களை மதிப்பார், வாய்ப்புகளையும் பெற்றுத் தருவார்'

லொள்ளுசபா சுவாமிநாதன்
Handout
லொள்ளுசபா சுவாமிநாதன்

விவேக்குடன் பல திரைப்படங்களில் நடித்த லொள்ளு சபா சுவாமிநாதன், அவரது உதவும் மனப்பான்மையை நினைவுகூர்கிறார்.

"விவேக்குடன் முதன்முதலில் 'வனஜா கிரிஜா' திரைப்படத்தில் நடித்தேன். தனது நகைச்சுவைக் குழுவில் யார் சேர்ந்தாலும் பாகுபாடு காட்ட மாட்டார். படப்பிடிப்பில் மற்ற நடிகர்களை ஊக்குவிப்பார். பிற படங்களில் நடிக்கவும் எனக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். 'மனிதன்' படத்தின் நீதிமன்றக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பும் அவர் மூலமாகக் கிடைத்ததுதான். 'பாலக்காட்டு மாதவன்' படத்திலும் நல்ல கதாபாத்திரம் கொடுத்தார்" என்கிறார் சுவாமிநாதன்.

மற்றவர்களின் நகைச்சுவையை மனம்விட்டுப் பாராட்டும் குணம் கொண்டவர் விவேக் என்கிறார் அவர்.

விவேக்குடன் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததாகக் கூறும் நடிகர் கிளி ராமச்சந்திரன், "சினிமா நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று விவேக் அடிக்கடி சொல்வார். 'பேரழகன்', 'ரன்', 'ஆயுதம் செய்வோம்', 'தேவதையைக் கண்டேன்' உள்ளிட்ட படங்களில் அவருடன் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்களைக்கூட மதிப்பார். நடிகர் வடிவேலுவுடனும் நல்ல நட்பில் இருந்தார். இருவரும் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்வார்கள். வடிவேலுவின் குழுவில் இருந்தவர்களுக்கும் விவேக் வாய்ப்பளித்தார்" என்கிறார்.

'இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெறக் கூடாது என்பார்'

மறைந்த நடிகர் விவேக் உடன் கிளி ராமசந்திரன்
Handout
மறைந்த நடிகர் விவேக் உடன் கிளி ராமசந்திரன்

விவேக்குடன் பல படங்களில் நடித்த நடிகர் விவேக் சின்னராசு, '''செல்லமே' திரைப்படத்தில் அவரது குழுவில் இணைந்தேன். 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி', 'ஐஸ்' உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவைக் காட்சிகள் பிரபலமானவை. விவேக்கின் நகைச்சுவைக் காட்சிகளைப் பிரசன்னகுமார், ராஜகோபால் உள்ளிட்ட பலர் எழுதியுள்ளனர். நகைச்சுவை எழுதும்போதே அதில் நல்ல கருத்துகள் இருக்க வேண்டும் என்று விரும்புவார். இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசமான கருத்துகளோ இடம்பெறக் கூடாது என்பார்" என்கிறார்.

திரைப்படங்களில் கூறும் கருத்துகளைத் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும் என்பதில் விவேக் உறுதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

நகைச்சுவை நடிகரும் திரைக்கதை எழுத்தாளருமான மாறனும் விவேக்கின் அணுகுமுறையை நினைவுகூர்கிறார்.

"'சக்க போடு போடு ராஜா' திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகளை நான் எழுதினேன். அந்தப் படத்தின் விழாவில் என்னைப் போன்ற படைப்பாளிகளை அழைத்து, அனைவரின் முன்னிலையிலும் எங்கள் திறமைகளைப் பாராட்டினார். சக நடிகர்களையும் படைப்பாளிகளையும் மதிப்பது விவேக்கின் தனித்துவமான குணம். அவரது நகைச்சுவையில் சிரிப்பு மட்டுமல்ல, சிந்தனையும் இருக்கும்" என்கிறார் மாறன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!