கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்தில் தரமற்ற அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நூல்கள் இடம்பிடித்ததாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, ஒரு நூல் எப்படி அரசின் பொது நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்ற கேள்வி பரவலாக விவாதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின்"வெளிப்படைத்தன்மையான நூல்கள் கொள்முதல் கொள்கை 2024" ஆவணத்தின்படி, ஒரு நூல் நூலக அலமாரியில் இடம் பெறுவதற்கு முன் பல கட்ட பரிசீலனைகள், விலை ஆய்வுகள், தேர்வுக் குழு ஒப்புதல்கள் மற்றும் தரச் சோதனைகளைக் கடந்தே செல்ல வேண்டும்.
முதல் கட்டம்: பதிப்பகங்கள் நூல்களைப் பதிவு செய்தல்
ஒரு நூலை அரசு நூலகங்களுக்குப் பரிந்துரைக்க, பதிப்பகம் அதை நூல்கள் கொள்முதல் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்காக:
- நூலுக்கு முறையான ஐஎஸ்பிஎன் (ISBN) எண் இருக்க வேண்டும்.
- நூலின் அடிப்படை விவரங்கள் பதிவேற்றப்பட வேண்டும்.
- 20 முதல் 25 பக்கங்கள் வரை மாதிரி PDF அல்லது EPUB வடிவில் பதிவேற்றப்பட வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
இதன் மூலம் நூல் குறித்த அனைத்து தகவல்களும் அரசின் பரிசீலனை அமைப்புக்குள் கொண்டு வரப்படுகின்றன.
இரண்டாம் கட்டம்: வல்லுநர் குழுவின் மதிப்பீடு
நூலகங்களுக்கு புத்தகங்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவதில்லை.
அவற்றை மதிப்பிடுவதற்காக:
- பேராசிரியர்கள்
- ஆய்வாளர்கள்
- நூலகர்கள்
- எழுத்தாளர்கள்
- வாசகர் பிரதிநிதிகள்
ஆகியோர் இடம்பெறும் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு நூலும் தரம், உள்ளடக்கம், பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல், புள்ளி மதிப்பெண் முறை அடிப்படையிலான தேர்வு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று கொள்கை கூறுகிறது.
மூன்றாம் கட்டம்: வாசகர்களின் கருத்து
2024 கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்று வாசகர்களைப் தேர்வு செயல்முறைக்குள் கொண்டு வருவதாகும்.
வாசகர் வட்டங்கள், மாதிரி நூலகங்கள் மற்றும் நூலகப் பயனாளர்களிடம் இருந்து...
- எந்த நூல்களுக்கு தேவை உள்ளது?
- எந்த துறைகளில் புதிய நூல்கள் தேவைப்படுகின்றன?
என்பது குறித்து கருத்துகள் சேகரிக்கப்படுகின்றன.
நான்காம் கட்டம்: தேர்வுப் பட்டியல் தயாரித்தல்
வல்லுநர் மதிப்பீடும் வாசகர் கருத்துகளும் இணைக்கப்பட்ட பிறகு, தேர்வுக்குரிய நூல்களின் பட்டியல் உருவாக்கப்படுகிறது.
இந்தப் பட்டியலில் இடம்பெறும் நூல்கள் மட்டுமே அடுத்தக்கட்டத்துக்குச் செல்கின்றன.
தேர்வு செய்யப்படாத நூல்களும் எதிர்காலப் பரிசீலனைக்காக தனியாக ஆவணப்படுத்தப்படலாம்.
ஐந்தாம் கட்டம்: தரச் சோதனை
நூல்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகும், அவை உடனடியாக வாங்கப்படுவதில்லை.
அதற்குப் பிறகு:
- ஐஎஸ்பிஎன் எண் சரிபார்ப்பு
- அச்சுத் தரம்
- காகிதத் தரம்
- இணையத்தில் பதிவேற்றப்பட்ட மாதிரி மற்றும் அச்சு நூலின் ஒற்றுமை
போன்ற அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
பதிவேற்றப்பட்ட தகவல்களுக்கும் அச்சு நூலுக்கும் இடையே முரண்பாடு இருந்தால், நூல் நிராகரிக்கப்படலாம்.
ஆறாம் கட்டம்: விலை நிர்ணயம்
ஒரு நூல் நல்லதாக இருந்தாலே போதாது; அதன் விலையும் நியாயமானதாக இருக்க வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு வகை நூல்களுக்கும்
- புனைவு
- புனைவு அல்லாதவை
- போட்டித் தேர்வு நூல்கள்
- குழந்தைகள் நூல்கள்
- பாடநூல்கள்
- மொழிபெயர்ப்பு நூல்கள்
என தனித்தனி விலை குறியீட்டு முறை தயாரிக்கப்பட வேண்டும் என்று கொள்கை குறிப்பிடுகிறது.
பக்க எண்ணிக்கை மட்டுமன்றி
- காகிதத் தரம்
- அச்சுத் தரம்
- பைண்டிங்
- எழுத்தாளர் ராயல்டி
- மொழிபெயர்ப்பு செலவு
போன்ற காரணிகளும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.
ஏழாம் கட்டம்: பதிப்பகங்களுடன் விலைப் பேச்சுவார்த்தை
விலையை நிர்ணயிக்க பதிப்பகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
அனைத்து பேச்சுவார்த்தைகளும் இணையதளம் வாயிலாக நடைபெற வேண்டும் என்றும், நேரடி பேச்சுவார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கொள்கை வலியுறுத்துகிறது.
அரசு மதிப்பிடும் விலையை பதிப்பாளர் ஏற்றுக் கொள்ளலாம், நிராகரிக்கலாம், அல்லது வேறு விலை பேசலாம்.
எட்டாம் கட்டம்: நூலகங்களுக்கு நிதி ஒதுக்கீடு
பின்னர்
- மாவட்ட மைய நூலகங்கள்
- ஊரக நூலகங்கள்
- கிளை நூலகங்கள்
- நடமாடும் நூலகங்கள்
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- கன்னிமாரா நூலகம்
போன்ற பல்வேறு நூலகங்களுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது.
ஒன்பதாம் கட்டம்: நூலகங்கள் தங்கள் தேவையைத் தெரிவிக்கின்றன
ஒவ்வொரு நூலகமும்
- வாசகர்களின் தேவை
- உள்ளூர் தேவைகள்
- மாணவர்களின் தேவைகள்
- போட்டித்தேர்வு தயாரிப்பு தேவைகள்
ஆகியவற்றின் அடிப்படையில் தங்களுக்கு தேவையான நூல்களின் பட்டியலைத் தயாரிக்கின்றன.
பத்தாம் கட்டம்: கொள்முதல் ஆணை
தேவைகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தேர்வு செய்யப்பட்ட பதிப்பகங்களுக்கு அதிகாரப்பூர்வ கொள்முதல் ஆணை வழங்கப்படுகிறது.
அதன்படி பதிப்பகங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நூல்களை வழங்க வேண்டும்.
பதினொன்றாம் கட்டம்: நூல்கள் நூலகங்களை அடைகின்றன
நூல்கள் நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போதைய கொள்கை, இடைத்தரகர்களை குறைத்து, நூல்கள் நேரடியாக நூலகங்களுக்கே செல்வதை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் காலதாமதம் குறைக்கப்படும் என அரசு கருதுகிறது.
பன்னிரண்டாம் கட்டம்: இறுதித் தர ஆய்வு
நூல்கள் வந்தடைந்த பிறகு...
- நூல்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்படுகிறது.
- அச்சுத் தரம் பரிசோதிக்கப்படுகிறது.
- தவறான அச்சிடல்கள் இருக்கிறதா என பார்க்கப்படுகிறது.
- ஆர்டர் செய்யப்பட்ட நூல்களே வந்துள்ளனவா என சரிபார்க்கப்படுகிறது.
இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகே பதிப்பகங்களுக்கு பணம் வழங்கப்பட வேண்டும் என்று கொள்கை கூறுகிறது.
13ஆம் கட்டம்: நூலக அலமாரியில் இடம் பெறும் நூல்
இந்த அனைத்து செயல்முறைகளையும் கடந்து வந்த பிறகே ஒரு நூலுக்கு...
- Accession Number வழங்கப்படுகிறது.
- வகைப்பாடு செய்யப்படுகிறது.
- பட்டியலிடப்படுகிறது.
- அலமாரியில் வைக்கப்படுகிறது.
அதன் பின்னரே அந்த நூல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
கவனிக்கவும்: இந்தச் செயலி பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் கிடைக்காது. இதில் ஆங்கில மொழிப் பதிப்பு இல்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு