Skip to main content

Advertisement

தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் கூறியது ஏன்?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் கூறியது ஏன்?
Getty Images
கோப்புப் படம்

"ஒரு பிராமணர் மதம் மாறி சிஎஸ்ஐ பிரிவில் சேர்ந்தால், தற்போதைய சட்டக் கட்டமைப்பின்படி அவர் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) அந்தஸ்தை பெறலாம் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கூறியது எங்களைத் திகைக்க வைத்தது. இது உண்மையாக இருந்தால், ஒரு தீவிரமான மறுபரிசீலனை நிச்சயமாக அவசியமாகிறது."

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சமீபத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மனு தொடர்பாகப் பிறப்பித்த உத்தரவில் இவ்வாறு கூறியுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதத்தின் சில பிரிவினரும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய குறிப்பிட்ட சாதியினரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்தப் பிரிவினர் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான நியாயங்களை விளக்கும் தரவுகளை அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்கிறார் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும் (டிஎன்பிஎஸ்சி) நீதிமன்றம் தானாகவே வழக்கில் சேர்த்துள்ளது. அதோடு தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மனித வள மேலாண்மைத் துறை, டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் எட்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் கூறியது ஏன்?
BBC
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

வழக்கின் பின்னணி என்ன?

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகி வந்துள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுத் தொகுப்பில் கிறிஸ்தவத்தில் சில பிரிவினர் மற்றும் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் சேர்க்கப்பட்டதால் இட ஒதுக்கீட்டின் பயன் நீர்த்துப் போவதாகக் கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016இல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் கிறிஸ்தவத்தின் சில பிரிவினர் மற்றும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியவர்கள் சேர்க்கப்பட்டதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மனுதாரரின் வாதம் என்ன?

இந்த வழக்கில் மனுதாரர் கோடீஸ்வரன் சார்பாக வழக்கறிஞர் கே.சுரேஷ் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். கிறிஸ்தவ மதப் பிரிவினர் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்கப்பட்டதையே மனுதாரர் கேள்விக்கு உட்படுத்துவதாக நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

"சட்டநாதன் தலைமையிலான முதலாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையமும் அம்பாசங்கர் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையமும் இது தொடர்பாக எதுவும் பரிந்துரைக்கவில்லை," என மனுதாரரின் வழக்கறிஞர் வாதாடியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நிபுணர் குழுவின் முடிவுகளுக்கு மாறாக 1983 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் வெவ்வேறு அரசாணைகள் மூலம் இந்தப் பிரிவினர் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர் என மனுதாரர் தரப்பு கூறியதாக நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவையான தரவுகள் சேகரிக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பு வாதிட்டதாகவும் நீதிமன்ற உத்தரவு குறிப்பிடுகிறது.

"தமிழ்நாட்டில் உள்ள இந்தப் பிரிவினரின் சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலையை நிரூபிப்பதற்கான புறநிலையான, அளவிடக் கூடிய தரவுகள் எதுவும் எந்தச் சந்தர்ப்பத்திலும், சேகரிக்கப்படவில்லை." என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களில் கிறிஸ்தவ பிரிவினர் இடம்பெற்றுள்ள பதிவுகளும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் கூறியது ஏன்?
Getty Images
கோப்புப் படம்

முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஒருவர் சி.எஸ்.ஐ பிரிவில் இணைந்தால் ஓபிசி இட ஒதுக்கீடு பெற முடியுமா?

மனுதாரர் சில முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டியதாக நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

சி.எஸ்.ஐ என்று அழைக்கப்படக்கூடிய சர்ச் ஆஃப் சௌத் இந்தியா பிரிவினர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை தாலுகாவில்) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

"முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர் உள்பட எவர் வேண்டுமானாலும், திருமுழுக்கு பெறுவதன் மூலம் சி.எஸ்.ஐ அமைப்பில் உறுப்பினராகி, உடனடியாகத் தங்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று உரிமை கோர முடியும் என்று மனுதாரர் வாதிடுகிறார். இது, சட்டபூர்வ இட ஒதுக்கீடு அந்தஸ்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒரு தனியார் மத அமைப்பிடம் ஒப்படைப்பதற்குச் சமம்" என்று நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் வேறுபாடு உள்ளது'

மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் வேறுபாடு உள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டுவதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிசி) பிரிவில் சேர்கிறார். ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சிலர் மதம் மாறினால் அவர்கள் மதம் மாறிய பிறகும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலிலேயே தொடர்கின்றனர்," என்று மனுதாரர் தரப்பு கூறியதாக நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் கூறியது ஏன்?
Getty Images
கோப்புப் படம்

நீதிமன்றம் கூறியது என்ன?

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த நீதிமன்றம், "மனுதாரர் முன்வைத்துள்ள வாதங்களைக் கருத்தில் கொண்டால், ஆழ்ந்த அரசியலமைப்புச் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு முதற்கட்ட வழக்கை அவர் நிறுவியுள்ளார் என்பதில் நாங்கள் திருப்தியடைகிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

"தரவுகள் இல்லாமை, நிபுணர் குழுக்களின் பரிந்துரைகளை வெளிப்படையாகப் புறக்கணித்தமை மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் வகைப்பாடுகளில் உள்ள தன்னிச்சையான தன்மை ஆகியவை இதன் அரசியலமைப்புச் சட்ட செல்லுபடித்தன்மை குறித்து தீவிரமான சந்தேகங்களை எழுப்புகின்றன," என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சில பிரிவினர் சில தசாப்தங்களாக இட ஒதுக்கீடு சலுகையைப் பெற்று வந்தனர் என்பதாலேயே, அவர்கள் முதலில் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது அரசியலமைப்பு ரீதியாக நியாயமானது என்று அர்த்தமாகிவிடுமா? இதற்கு எங்கள் பதில் 'இல்லை' என்பதாகும்."

"இது விசாரணைக்கு உள்ளாக்கப்படும்போது, ​​சம்பந்தப்பட்ட பிரிவினரை இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பட்டியலில் சேர்த்தது அல்லது தொடர்ந்து வைத்திருப்பது அரசியலமைப்பு ரீதியாக அவசியமானது அல்லது நியாயமானது என்பதை, நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு." என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் கூறியது ஏன்?
K Chandru
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு

கிறிஸ்தவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோது என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் 2007ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் 3.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது கிறிஸ்தவர்களுக்கும் இதேபோல 3.5% உள் இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2008ஆம் ஆண்டு கிறிஸ்தவ சமூகத்திடம் இருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், அது திரும்பப் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. உள் இடஒதுக்கீடு வழங்குவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கும் என்றும் அப்போது கிறிஸ்தவ அமைப்புகள் தெரிவித்தன.

நிபுணர்கள் கூறுவது என்ன?

அரசியலமைப்பின்படி மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்கிறார் கே.சந்துரு. இது தொடர்பாக மேலும் விளக்கிப் பேசிய அவர், "சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத்தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டுப் பட்டியலைப் பொறுத்தவரை மாநிலப் பட்டியல், மத்திய பட்டியல் என இரண்டு இருக்கின்றன. மாநிலங்கள் தங்களின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை திருத்திக் கொள்ளலாம். ஆனால் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் மாநில அரசுகள் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது" என்றார்.

மேலும், "சாதியை அடிப்படையாக வைத்து மட்டுமே இடஒதுக்கீடு வழங்கிவிட முடியாது. ஒரு வகுப்பாக அவர்களின் பிற்படுத்தப்பட்ட நிலை நிறுவப்பட வேண்டும். நீதிமன்றம் ஒரு பிரிவை எப்போது வேண்டுமானாலும் கேள்விக்கு உட்படுத்தலாம். தமிழ்நாட்டில் பல்வேறு பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் இருந்துள்ளன. இந்த விவகாரம் முன்னர் ஆராயப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தனது தரப்பு வாதங்கள் மற்றும் தரவுகளை நீதிமன்றத்தில் முறையாகத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!