'குள்ளநரிகள்' என்பவை நம் சமூகத்தில் பெரும்பாலும் எதிர்மறையான, சூழ்ச்சியைக் குறிக்கும் குணாதிசயங்களோடு தொடர்புப்படுத்தப்படுகின்றன.
'நரித் தந்திரம்', 'குள்ளநரி போலத் திட்டமிடுகிறான்' போன்ற வாக்கியங்களை திரைப்படங்களில் கேட்டிருப்போம். அன்றாட வாழ்க்கையில்கூட சிலமுறை நீங்கள் கேட்டிருக்க அல்லது பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டு.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய நரிகள் அல்லது குள்ளநரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக விலங்கு நல ஆர்வலர்களும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
"குள்ளநரிகள் குறைவதால் யாருக்கு என்ன பாதிப்பு என நினைக்கலாம். ஆனால், அது சூழலியல் அமைப்பில் பல விளைவுகளை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, குள்ளநரிகளின் எண்ணிக்கை குறைவதால் மயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதற்கு சில தரவுகள் உள்ளன" எனக் கூறுகிறார் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞரும், காட்டுயிர்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்பவருமான வினோத் குமார்.
இந்திய நரிகள் அல்லது குள்ளநரிகள்
வங்காள நரி என்றும் அழைக்கப்படும் இந்திய நரி குறித்து மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளின்படி, இது இந்திய துணைக்கண்டம் முழுவதும் காணப்படும் நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய விலங்கு. இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இவை பரவலாகக் காணப்படுகின்றன.
இந்திய நரிகள் வறண்ட பகுதிகள், புதர்க்காடுகள், வறண்ட புல்வெளிகள் மற்றும் முள் தாவரங்கள் நிறைந்த பகுதிகளோடு நெருங்கிய தொடர்புடையவை. அனைத்துண்ணி மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு இரையைத் தேடும் விலங்கு என இந்திய நரி விவரிக்கப்படுகிறது.
பூச்சிகள், கொறித்துண்ணிகள், சிறிய பாலூட்டிகள், ஊர்வன, சிறிய பறவைகள், முட்டைகள், பழங்கள் ஆகியவை இதன் உணவில் அடங்கும். இது, வறண்ட நிலத்தைக் கொண்ட சூழலியல் அமைப்புகளில் குள்ளநரியை ஒரு முக்கியமான வேட்டையாடும் விலங்காக ஆக்குகிறது. கொறித்துண்ணிகள், பூச்சிகள் மற்றும் பிற சிறிய விலங்குகளை உண்பதன் மூலம், இது உணவுச் சங்கிலியின் முக்கிய அங்கமாக விளங்குகிறது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த 'ஜுவ் அவுட்ரீச் அமைப்பின்' ஒரு அறிக்கையின்படி, "குள்ளநரிகள் பெரும்பாலும் வயல்வெளிகளிலும் மனித குடியிருப்புகளுக்கு அருகிலும் காணப்படுகின்றன, இது மனிதர்களின் இருப்பிற்கு ஏற்ப தங்களை அதிகம் தகவமைத்துக் கொள்ளும் அவற்றின் திறனைக் குறிக்கிறது".
அவற்றின் இனப்பெருக்க காலம் டிசம்பர் முதல் ஜனவரி வரை நீடிக்கும், மேலும் 50-53 நாட்கள் கர்ப்ப காலத்திற்குப் பிறகு 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும்.
"குள்ளநரிகள் நிலத்தில் குகைகள் அமைத்து வாழக்கூடியவை, தரிசு நிலங்களும் புல்வெளிகளும் விவசாய நிலங்களாக மாற்றப்படுவதால், இந்திய நரிகளின் வாழ்விடங்கள் பறிபோகின்றன" என 'தி ஜர்னல் ஆப் தெரட்டன்ட் டேக்ஸா' குறிப்பிடுகிறது.
அதன்படி, "இது அவற்றின் எண்ணிக்கையிலும் பரவலிலும் குறிப்பிடத்தக்க சரிவுக்கு வழிவகுத்துள்ளது. இந்திய நரிகளுக்கு முதன்மையான அச்சுறுத்தல்கள் மனிதர்களால் ஏற்படுபவை. மனிதர்களால் வேட்டையாடப்படுதல், வாழ்விட அழிப்பு, மற்றும் காட்டு நாய்களிடமிருந்து நோய் பரவுதல் போன்றவை ஆகும்".
"இந்திய நரி இனம் குறித்து மிகக் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் கூட இதன் பரவல் குறித்து முறையான புரிதல் இல்லை. இவற்றின் எண்ணிக்கை குறித்த தரவுகளும் முறையாக இல்லை" என்கிறார் வனவிலங்கு ஆராய்ச்சியாளர் மொய்னுதீன்.
"தமிழ்நாட்டில் குள்ளநரிகள் குறித்த முறையான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் எண்ணிக்கை குறித்து ஆவணப்படுத்தப்பட வேண்டும்" என்கிறார் அவர்.
"தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த பத்தாண்டு காலத்தில், இந்திய நரிகளைப் பார்த்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் வெறும் மூன்று மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இவை காணப்பட்டன" என்கிறார் வனவிலங்கு புகைப்படக் கலைஞரும், வனவிலங்குகள் குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொள்பவரான வினோத்.
மூடநம்பிக்கைகளும் பாரம்பரிய நடைமுறைகளும்
சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் பொங்கல் பண்டிகையின்போது 'வங்க நரி ஜல்லிக்கட்டு' என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்ததாகவும், வனத்துறையின் கடுமையான விதிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் அவை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு வனத்துறை தெரிவிக்கிறது.
இந்த நிகழ்வின்போது, "காட்டில் இருந்து ஒரு வங்க நரி பிடிக்கப்பட்டு, ஊர்வலமாக உள்ளூர் கோவிலுக்குக் கொண்டுவரப்படுகிறது. அங்கு அதன் காலில் கயிறு கட்டப்பட்டு கிராம வீதிகளில் ஓட வைக்கப்படுகிறது. பின்னர் அந்த நரி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லப்பட்டு, சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, அதன் பிறகு மீண்டும் காட்டில் விடுவிக்கப்படுகிறது" என 'தி இந்து' ஆங்கில நாளிதழின் செய்தி குறிப்பிடுகிறது.
இது குறித்து பேசும் வினோத், "இத்தகைய நடைமுறைகளுக்குப் பண்பாட்டு வரலாறு இருக்கலாம். இருப்பினும், காட்டு விலங்குகளைப் பிடிப்பதும் கொல்வதும் ஏற்கெனவே குறைவாக காணப்படும் அவற்றின் எண்ணிக்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி இத்தகைய செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன" என்கிறார்.
'இந்திய நரிகள் முன்னதாக 1972ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை II-இன் கீழ் பட்டியலிடப்பட்டிருந்தன. 2022ஆம் ஆண்டின் சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, தற்போது இது அட்டவணை I-இல் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புலிகளுக்கு இணையான உயர்ந்த சட்டப் பாதுகாப்பு இந்திய நரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிடுகிறார் வினோத்.
குள்ளநரியின் கடிக்குப் பயந்து மக்கள் அதை கடவுளாக வணங்கிய ஒரு சடங்கு குறித்தும் சில பதிவுகள் உள்ளன.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், (தற்போதைய வங்கதேசத்தில் உள்ள) ரங்க்பூரில் 'பக்லா பூஜை' என்ற சடங்கு பின்பற்றப்பட்டது என ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.
"இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய இரு மதங்களையும் சேர்ந்த ஏராளமான உள்ளூர் மக்கள், 'பக்லா பாபா' என்ற தெய்வத்தையும் அவரது வாகனமான குள்ளநரியையும் வழிபட்டனர். இந்த தெய்வீக சக்திகளிடம் தங்களை ஒப்படைத்தால், குள்ளநரியின் கடியிலிருந்து காப்பாற்றப்படுவோம் என்று பரவலாக நம்பப்பட்டது."
"வங்கத்தில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், புறநகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் நாய்கள் மற்றும் குள்ளநரிகள் அதிகம் காணப்பட்டன. அக்காலத்தில், நாய்களோ குள்ளநரிகளோ கடித்தால் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகள் அப்பகுதியில் இல்லாததால் மக்களிடையே பெரும் அச்சம் இருந்தது. எனவே இந்தச் சடங்கு நடத்தப்பட்டது".
மேலும், "குள்ளநரியை வழிபடுவது அந்த விலங்கிடமிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, அதன் சில சக்திகளையும் தங்களுக்கு அருளக்கூடும்" என மக்கள் நம்பினார்கள் என அக்கட்டுரை குறிப்பிடுகிறது.
மயில்களின் எண்ணிக்கைக்கும் குள்ளநரிகளுக்கும் உள்ள தொடர்பு
இந்தியா முழுவதும் 942 வகையான பறவை இனங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை (The State of India's Birds 2023) மூலம், தமிழ்நாட்டில் மட்டும் மயில்களின் எண்ணிக்கை 6 மடங்கு அதிகமாகியிருப்பது கண்டறியப்பட்டது என அந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற விஞ்ஞானி சுஹைல் காதர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
கோவை ஆனைகட்டி சலீம்அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON) நடத்திய மயில்கள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் சராசரியாக சுமார் 60,85,073 மயில்களும், குறைந்தபட்சம் சுமார் 37,76,698 மயில்களும் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது.
அந்த அமைப்பு நடத்திய மயில்கள் கணக்கெடுப்பின் கள ஆய்வில் பங்கேற்ற விவசாயிகளில் 78.70 சதவீதம் பேர், மயில்களால் பயிர் சேதம் ஏற்படுவதாகக் கூறினர்.
மயில்கள் பெருகுவதற்கு, இவற்றை வேட்டையாடும் காட்டுப்பூனை, குள்ளநரி, நரி, புனுகுப்பூனை, கீரி போன்ற உயிரினங்கள் குறைந்தது முக்கியக் காரணம் என்று அதன் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது.
"இந்திய நரிகள் பறவைகள், முட்டைகள் மற்றும் குஞ்சுகளை வேட்டையாடக் கூடியவை. குள்ளநரிகள் மற்றும் நரிகள் போன்ற வேட்டையாடும் விலங்குகளின் வீழ்ச்சி மயில்கள் மற்றும் பிற விலங்குகளின் பெருக்கத்திற்கு ஒருவகையில் காரணம்."
"சிறிய விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் இயற்கையான அமைப்பின் ஒரு பகுதியாக குள்ளநரிகள் போன்ற விலங்குகள் விளங்குகின்றன. வேட்டையாடும் விலங்குகளை அகற்றுவது இந்த இயற்கைச் சமநிலையை மாற்றி, இறுதியில் விவசாயத்தையும் மக்களையும் பாதிக்கும் விளைவுகளை ஏற்படுத்தலாம்" என்கிறார் வினோத்.
'கொறித்துண்ணிகள் அதன் உணவின் பெரும்பகுதியாக இருப்பதால், கொறித்துண்ணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் இந்திய நரி முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும், வெவ்வேறு பிராந்தியங்களில் பூரான்கள், நில நண்டுகள் மற்றும் பறவை முட்டைகளும் நரிகளின் உணவுப் பொருட்களாகப் பதிவாகியுள்ளன' என்றும் ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
'குள்ளநரியைப் பார்த்து 6 வருடங்கள் ஆகிவிட்டன'
"இரை இல்லாமல் வேட்டையாடும் ஒரு விலங்கால் உயிர்வாழ முடியாது. உதாரணமாக, முள்ளெலி தென் தமிழகத்தில் உள்ள இந்திய நரிகளின் உணவில் இடம்பெறும் ஓர் இரையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் முள்ளெலிகளின் எண்ணிக்கையே குறைந்துவிட்டது" என்கிறார் வினோத்.
விலங்குகள் என்றால் பாதுகாக்கப்பட்ட வனங்கள் தான் அதன் வாழ்விடங்கள் என்ற எண்ணம், குள்ளநரிகளைப் பொறுத்தவரை தவறாகும் என்கிறார் அவர்.
"தென் தமிழகத்தில் எஞ்சியிருக்கும் புல்வெளிகள் மற்றும் புதர்க்காடுகளை வெறுமனே பயன்படுத்தப்படாத நிலமாகப் பார்க்காமல், மதிப்புமிக்க சூழலியல் அமைப்புகளாக அங்கீகரிக்க வேண்டும். வாழிடங்களின் தொடர்ச்சியைப் பராமரிப்பது, தேவையற்ற வாழிட மாற்றங்களைக் குறைப்பது மற்றும் வேட்டையாடுவதைத் தடுப்பது ஆகிய அனைத்தும் இந்த இனம் தப்பிப் பிழைக்கப் பங்களிக்கும்" என்கிறார்.
"வனப்பகுதியில் நான் கடைசியாக ஒரு இந்திய நரியைப் பார்த்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. மீண்டும் ஒன்றைப் பார்க்க இன்னும் ஆறு ஆண்டுகள் ஆகாது என்று நம்புகிறேன்" என்கிறார் வினோத்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு