Skip to main content

Advertisement

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முடங்கும் அபாயமா? பிரதமருக்கு விஜய் கடிதம் எழுதியதன் பின்னணி

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கான தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட நிதி தீர்ந்துவிட்டதால் 350 கோடி ரூபாய் நிதியை  ஒதுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
Handout
தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கான தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட நிதி தீர்ந்துவிட்டதால் 350 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கான தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட நிதி தீர்ந்துவிட்டதால் 350 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குமாறு, கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோதிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

'நகர்ப்புறங்களில் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கு இந்த நிதி அவசியம்' எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசிடம் இருந்து போதிய உதவிகள் கிடைக்காததால் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார், சென்னை தரமணியைச் சேர்ந்த பாரதி.

கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தங்கள் பகுதியில் பதினைந்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்கள் கலைக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறுகிறார்.

"சுயஉதவிக் குழுக்கள் தொடர்ந்து இயங்குவதற்கு மாநில அரசு போதிய ஆதரவை அளித்து வருகிறது" என, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு புதிய திட்டம் தொடக்கம்

இந்தியாவில் நகர்ப்புற ஏழை மக்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் என்ற திட்டத்தை மன்மோகன் சிங் தலைமையிலான ஐமு கூட்டணி அரசு தொடங்கியது. அடுத்து வந்த மோதி அரசு இந்த திட்டத்தை மறுவடிவமைப்பு செய்து 'தீன்தயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்' (DAY-NULM) என்று பெயர் மாற்றம் செய்தது.

நகர்ப்புற ஏழைகளுக்கு திறன் பயிற்சி, மானிய வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குவது, சுயவேலைவாய்ப்புக்கான வழிகளை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. சிறு தொழில்களைத் தொடங்கவும் வங்கிகளில் பெண்கள் கடன் பெறவும் வருமானம் ஈட்டுவதற்கும் இத்திட்டத்தின் மூலமாக உதவிகள் வழங்கப்பட்டன.

முதலமைச்சரின் கடிதம் கூறுவது என்ன?

பிரதமருடன் முதலமைச்சர் ஜோசப் விஜய்
DIPR
பிரதமருடன் முதலமைச்சர் ஜோசப் விஜய்

"தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தின்கீழ் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 18 லட்சம் பெண்கள் உறுப்பினராக உள்ளனர்" என்கிறார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.

மத்திய அரசின் நிதி 60 சதவீதம், மாநில அரசின் நிதி 40 சதவீதம் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்ததாக, அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஆனால், கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவாகிவிட்டதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு சென்னை மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் தீன்தயாள் ஜன் ஆஜீவிகா யோஜனா - ஷேகரி (DJAY-S) என்கிற முன்னோடித் திட்டம் (Pilot Project)செயல்படுத்தப்பட்டபோது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்த சுமார் 1.26 லட்சம் குடும்பங்கள் கண்டறியப்பட்டதாக, முதலமைச்சரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

'ஆதரவுச் சூழல் சிதையக் கூடாது' - முதலமைச்சர்

'நகர்ப்புற ஏழைகளுக்கு நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அவர்களுக்கு நிதி உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள சுயஉதவிக் குழுக்களை வலுப்படுத்துவதற்கு நிதி அவசியம்' என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள கட்டமைப்புகளையும் பணியாளர்களையும் தக்கவைத்துக் கொள்ளுமாறு மத்திய அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ள அவர், 'புதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் திட்டம் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது' எனக் கூறியுள்ளார்.

'நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் முக்கிய நோக்கங்களை அடைவதற்கு நகர்ப்புறங்களில் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பது அவசியம். கடந்த 10 ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட ஆதரவுச் சூழல் சிதைந்துவிடாமல் தடுப்பதற்கு தொடர்ந்து நிதி கிடைப்பது அவசியம்' எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், பிரதமர் தலையிட்டு தமிழ்நாட்டுக்கு 2026-27 ஆம் நிதியாண்டுக்கு 350 கோடி ரூபாயை வழங்குமாறு முதல்வர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

'சுயஉதவிக் குழுக்கள் முடங்கும் அபாயம்'

ஒரு சுயஉதவிக் குழு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.
TNCDW
ஒரு சுயஉதவிக் குழு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.

நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் நிதி வராததால் சுயஉதவிக் குழுக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறுகிறார், சென்னை தரமணியில் வசிக்கும் பாரதி.

இவர் தரமணி பகுதியில் தந்தை பெரியார் நகரில் இயங்கும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்களுக்கு சமூக வள நபராக (Community Resource Person) பணியாற்றி வருகிறார்.

"சுயஉதவிக் குழுக்களைத் தொடங்குவது, குழுக்களுக்கு வங்கிக் கடன் பெற்றுத் தருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். சமீபகாலமாக வங்கிகளில் வட்டி மானியம் வழங்குவதை நிறுத்திவிட்டனர். இதனால் பலருக்கும் குழுவின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது" என்கிறார் அவர்.

இவரது கட்டுப்பாட்டில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர், பூக்கடை, தையல் தொழில், தண்ணீர் கேன் போடுவது, மாவு வியாபாரம் உள்பட பல்வேறு சிறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

"வட்டி மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதால், சுயஉதவிக் குழுக்களின் கணக்குகளில் உள்ள பணமே உள்கடனாக வழங்கப்படுகிறது. வெளியில் வட்டித் தொழில் செய்கிறவர்களிடம் குழுக்கள் சிக்கிவிடக் கூடாது என்ற அச்சம் தான் காரணம்" எனக் கூறுகிறார் பாரதி.

வங்கிகளில் வட்டி மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதால், தனது கண்காணிப்பில் இருந்த 50 சுயஉதவிக்குழுக்களில் 15 குழுக்கள் கலைக்கப்பட்டுவிட்டதாகக் கூறும் அவர், "குழுவில் இருந்து என்ன லாபம் என்ற மனநிலைக்கு பலரும் வந்துவிட்டனர். இது தொடர்ந்தால் சுயஉதவிக் குழுக்கள் முடங்கும் அபாயம் ஏற்படும்" எனத் தெரிவித்தார்.

சுயஉதவிக் குழுவைத் தொடங்கும்போது ஒரே ஒருமுறை சுழல் நிதியாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. "இந்தத் தொகை குழுவின் வங்கிக் கணக்கிலேயே இருக்கும். குழுவைப் பிரிக்கும்போது மட்டுமே எடுக்க முடியும். தற்போது சுழல் நிதியும் வருவதில்லை" என்கிறார் பாரதி.

ஒரு சுயஉதவிக் குழு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.

இதைப் பற்றிப் பேசும் பாரதி, "குழுவில் உள்ளவர்களுக்கு 2 லட்ச ரூபாய்க்கு மேல் வெளியில் கடன் இருக்கக் கூடாது. அவ்வாறு கடன் இல்லாவிட்டால் நபருக்கு 2 லட்ச ரூபாய் கிடைக்கும். அதிலும் சிபில் ஸ்கோர் என கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன" என்கிறார்.

இதே கூற்றை முன்வைத்துப் பேசும் பெரம்பூரில் 'வசந்தம் மகளிர் சுயஉதவிக் குழு'வை நடத்தும் சங்கரி, "சுயஉதவிக் குழுவுக்கு வங்கிக் கடன் பெறுவது தொடர்பான கூட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினர். அதனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை" எனக் கூறுகிறார்.

பிற மாநிலங்களில் என்ன நிலவரம்?

சுய உதவிக்குழுக்கள் மூலம் பொருட்கள் தயாரிக்கும் பெண்கள்.
TNCDW
சுய உதவிக்குழுக்கள் மூலம் பொருட்கள் தயாரிக்கும் பெண்கள்.

இதே பிரச்னையை முன்னிறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசுக்கு மத்தியப் பிரதேச அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், 'வட்டிச் சலுகையை நம்பியே கடன் வாங்குகின்றனர். ஆனால், திட்டம் முடிவடைந்துவிட்டதால் வட்டிச் சலுகை வழங்குவது பாதிக்கப்படலாம்' எனக் கூறியுள்ளதாக, ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், 101 கோடி ரூபாய் நிதியை வழங்குமாறு மத்தியப் பிரதேச அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதில் சுயதொழில் திட்டத்தின்கீழ் வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வட்டிச் சலுகையும் அடங்கியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் 6,796 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை மதிய உணவு வழங்குவது, உணவகங்களை நடத்துதல், பள்ளி சீருடைகளைத் தைத்தல் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக, மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சருக்கு அம்மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதி கிடைக்காததால் குழுக்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கூறுவது என்ன?

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி சில தகவல்களை மக்களவையில் தெரிவித்துள்ளார்.

'திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக 92.30 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் மூலம் 10.08 கோடிப் பெண்கள் திரட்டப்பட்டுள்ளனர். அவர்களின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது' எனக் கூறியுள்ளார்.

இதன்மூலம் சராசரி குடும்ப வருமானம் 49 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ள அவர், " இது பெண்களின் பொருளாதார மற்றும் சமூக அதிகாரமளித்தலுக்கு பங்களித்துள்ளது" என்றார்.

இத்திட்டத்தின் செயல்பாடு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்துவிட்டதாக, கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசின் தகவல் பணியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தீன்தயாள் ஜன் ஆஜீவிகா யோஜனா - ஷேகரி (DJAY-S) என்ற மத்திய அரசின் முன்னோடித் திட்டம் 2025 டிசம்பர் வரை செயல்பாட்டில் இருந்தது.

மத்திய அரசின் பதில் என்ன? - தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் விளக்கம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆர்த்தி
Handout
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆர்த்தி

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆர்த்தியிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.

"நகர்ப்புறங்களில் சுயஉதவிக் குழுக்களைத் தொடங்குவது, புதிதாக தொழில் தொடங்குவது போன்றவற்றுக்கு உதவி கிடைக்க வேண்டும். ஆனால், மத்திய அரசிடம் இருந்து நிதி வராததால் செயல்படுத்துவதில் சிரமம் உள்ளது" என அவர் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் இயங்கும் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகக் கூறிய அவர், "நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களுக்கும் அதேபோன்ற வாழ்வாதார திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஏனென்றால் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்கள் இந்த நிதியை நம்பியுள்ளன" என்கிறார்.

"மாநில அரசின் நிதியில் இருந்து சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியைக் கொடுத்து வருகிறோம். ஆனால், அவர்களுக்கு முறையான பயிற்சி, தொழில் தொடங்குவதற்கான ஆதரவு ஆகியவற்றைக் கொடுப்பதற்கு நிதி இல்லை" எனக் கூறுகிறார் ஆர்த்தி.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மத்திய அரசின் நிதி வரவில்லை எனக் கூறும் அவர், "நிதி இல்லாமல் தொடர்ச்சியாக திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்கள் உள்ளன. இது மாநிலத்துக்கு புதிய சுமையாக மாறியுள்ளது" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "திட்டத்தின்படி, 60:40 என மத்திய, மாநில அரசுகள் பங்களிப்பை செலுத்த வேண்டும். மத்திய அரசின் நிதி வராததால் 100 சதவீதத்தையும் மாநில அரசே கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றால் கொள்கை அளவிலான முடிவை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

நகர்ப்புறங்களில் சுயஉதவிக் குழுக்கள் முடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "மாநில அரசு போதிய ஆதரவைக் கொடுத்து வருகிறது. அதனால் முடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை" என்கிறார்.

தமிழ்நாடு அரசின் 2026 - 27ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களை குறுந்தொழில் முனைவோர்களாக உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாக அரசு அறிவித்துள்ளது.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய ஆர்த்தி, " ஐந்தாயிரம் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் நகர்ப்புறங்களில் உள்ள மூன்றாயிரம் நிறுவனங்களுக்கு மானியம் செல்ல உள்ளது" என்றார்.

"மத்திய அரசிடம் நிதி தொடர்பான ஏதேனும் விளக்கம் வந்ததா?" எனக் கேட்டபோது, "வழிகாட்டு நெறிமுறைகள் தயாரித்து வருவதாக எங்களுக்குப் பதில் கிடைத்துள்ளது. நகர்ப்புற வாழ்வாதார திட்டம் 2.0 நடைமுறைக்கு வரும்வரை மாநில அரசு இதனை முன்னெடுத்துச் செல்கிறது" என அவர் தெரிவித்தார்.

நகர்ப்புற வாழ்வாதார திட்டம் 2.0 குறித்து தமிழக அரசுக்கு அளித்த பதிலில் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தாலும், அத்திட்டம் எப்போது தொடங்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனால், சுயஉதவிக் குழுக்களை தொடர்ந்து இயங்கச் செய்யத் தேவையான நிதியாதாரத்தை கண்டறியும் பொறுப்பும் மாநில அரசுகள் மீது விழுந்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!