Skip to main content

Advertisement

தோனி ஓய்வுக்குப் பிந்தைய சிஎஸ்கே எப்படி இருக்கும்? – கேப்டன்சி முதல் ஏல உத்தி வரை நிபுணர்கள் விளக்கம்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
சிஎஸ்கே, தோனி, ஜாஹீர்கான், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஓய்வு, ஆலோசகர், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி ஓய்வு
Getty Images
சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தோனி பொறுப்பேற்றுள்ளார்

ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு (Retention) மற்றும் பரிமாற்ற (Trade) நடவடிக்கைகளில் சிஎஸ்கே அணியில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் அடையாளமாகத் திகழும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இனி வீரராக இல்லாமல் ஆலோசகராகத் தொடர்வார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த சீசனில் ரூ.14.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீரை சிஎஸ்கே விடுவித்துள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு நீண்டகால மாற்றாக உருவாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட அவர், கடந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை.

ஒட்டுமொத்தமாக, தோனி, பிரசாந்த் வீர், மேட் ஹென்றி, மேட் ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சன், ஆகாஷ் மத்வால் உள்ளிட்ட 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான வீரர்கள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, வேகப்பந்துவீச்சாளர்கள் கலீல் அகமது, நேதன் எல்லிஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டு, இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள் லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் இருவரும் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏலத்தில் ரூ.13 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்ட லிவிங்ஸ்டன், தற்போது ரூ.6 கோடிக்கு அணி மாறியுள்ளார். ஜாக் எட்வர்ட்ஸும் தனது முந்தைய ஒப்பந்தத் தொகையான ரூ.3 கோடிக்கே சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார்.

அதேநேரம், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களை சிஎஸ்கே தக்கவைத்துள்ளது. சிஎஸ்கே அணி, ரூ. 28.05 கோடி கையிருப்புடனும், இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள் உள்பட ஆறு இடங்களுடனும் ஏலத்தில் நுழைகிறது.

சிஎஸ்கே 3.0: தோனியின் புதிய அத்தியாயம்

சிஎஸ்கே, தோனி, ஜாஹீர்கான், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஓய்வு, ஆலோசகர், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி ஓய்வு
Getty Images
கேப்டன் ருதுராஜுடன் மகேந்திர சிங் தோனி

தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் 3.0 தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார் கிரிக்கெட் அனலிஸ்ட் ஷ்யாம்.

"கடந்த 2008 முதல் 2015 வரையிலான காலகட்டத்தை சிஎஸ்கே 1.0 என்றும், 2018 முதல் 2025 வரையிலான காலகட்டத்தை சிஎஸ்கே 2.0 என்றும் குறிப்பிடலாம். தற்போது தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்கே 3.0 தொடங்கியுள்ளது. சிஎஸ்கே என்ற பிராண்டை கட்டமைத்ததில் தோனிக்கு அளப்பரிய பங்குண்டு" என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

"ஒரு கேப்டனாக தோனியின் சாதனைகளுக்கு அருகில் வருபவர் என்று ரோஹித் சர்மாவை மட்டுமே சொல்ல முடியும். லட்சுமிபதி பாலாஜி, பத்ரிநாத் போன்ற உள்ளூர் வீரர்களை வைத்தே 2008இல் சிஎஸ்கே அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றவர் அவர். 2023 ஐபிஎல் வெற்றிக்குப் பிறகு அவர் ஓய்வை அறிவித்திருந்தால் அது சிறப்பான முடிவாக இருந்திருக்கும்" என்கிறார் ஷ்யாம்.

தோனி ஓய்வுபெற்றுவிட்டாலும் ஆலோசகராகத் தொடர்வதால் அணியின் பிராண்ட் மதிப்புக்கு சேதாரம் ஏற்படாது என்று ஷ்யாம் நம்பிக்கை தெரிவிக்கிறார். அவரது கூற்றுப்படி, "மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சச்சின் ஆலோசகராகத் தொடர்ந்ததால் அந்த அணியின் பிராண்ட் மதிப்பு தக்கவைக்கப்பட்டது. அதேபோல தோனி ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே உடனான அவருடைய இருப்பு அணியின் பிராண்டை தாங்கிப் பிடிக்கும்" என்று கூறுகிறார்.

டி20 கிரிக்கெட்டின் மாறி வரும் தன்மைக்கு ஏற்ப பயிற்சியாளர் குழுவிலும் மாற்றங்களைச் செய்ய சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்ததற்குப் பின்னணியில் தோனியின் பரிந்துரைகள் இருப்பதாகக் கூறுகிறார் ஷ்யாம்.

"கடந்த காலங்களில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் இதுவரை இருந்தவர்கள் பலரும் தோனியுடன் இணைந்து விளையாடியவர்களே. ஆனால், தற்போது டி20 கிரிக்கெட்டின் மாறி வரும் போக்கிற்கு ஏற்ப புதிய அணுகுமுறை தேவைப்படுவதால், அதற்கேற்ப தோனியின் ஆலோசனையின் பேரில் பயிற்சியாளர் குழுவை சிஎஸ்கே நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது" என்கிறார் அவர்.

ஏலத்தில் டிரென்ட் போல்ட்டை எடுக்குமா சிஎஸ்கே?

சிஎஸ்கே, தோனி, ஜாஹீர்கான், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஓய்வு, ஆலோசகர், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி ஓய்வு
Getty Images

சிஎஸ்கே அணியின் ஏல உத்தி குறித்துப் பேசிய ஷ்யாம், வெளிநாட்டு இடக்கை வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை ஏலத்தில் எடுக்க அந்த அணி முயற்சி செய்யலாம் என்கிறார்.

"கடந்த காலங்களில் இடக்கை வேகப்பந்துவீச்சாளர்கள் சிஎஸ்கே அணிக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு அனுபவ வீரர் டிரென்ட் போல்ட்டை ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளது. பிரசாந்த் வீரை விடுவித்திருப்பதால் கிடைத்துள்ள தொகையைப் பயன்படுத்தி போல்ட் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்" என்கிறார் அவர்.

மேலும், சிஎஸ்கே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஜேஎஸ்கே, டிஎஸ்கே உள்ளிட்ட பிற அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் இனி வரும் காலங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனக் கணிக்கிறார் ஷ்யாம்.

"ஒரே நிர்வாகத்தின் கீழ் விளையாடும் அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் பல்வேறு சாதகங்கள் உள்ளன. வீரர்களின் பணிச்சுமை, காயம் போன்றவற்றை அணி நிர்வாகத்தால் எளிதாகக் கண்காணித்து மேலாண்மை செய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட ரோலில் வீரர்களைத் தொடர்ந்து விளையாட வைத்து வளர்த்தெடுக்கவும் முடியும்" என்கிறார்.

தோனியை ஆலோசகர் பொறுப்பில் பார்ப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கே ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்கிறார் அமெரிக்க அணியின் முன்னாள் வீராங்கனையும் வர்ணனையாளருமான செபானி பாஸ்கர்.

"மஞ்சள் நிற உடையில் தோனி மைதானத்துக்குள் நடந்து வருவதைப் பார்ப்பதற்காகவே சிஎஸ்கே ரசிகர்கள் தவம் கிடந்தார்கள். தற்போது களத்தில் காலடி எடுத்து வைக்காமல், பின்னணியில் இருந்து அணியை வழிநடத்தும் ஆலோசகராக தோனி மாறியிருப்பது அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்குமே புதிய அனுபவமாக இருக்கும்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஆலோசகராகத் தொடர்ந்தாலும், சிஎஸ்கே அணியின் செயல்பாடுகளில் தோனியால் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார் செபானி பாஸ்கர். "எதிர்காலத்தில் அணியை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்ற தனது திட்டங்களை அவர் நிர்வாகத்திடம் முன்வைத்திருப்பார். விளையாட்டைப் பற்றிய ஆழமான புரிதலும், நுணுக்கமாகச் சிந்திக்கும் திறனும் தோனிக்கு உண்டு" என்றார்.

அதேநேரத்தில், ஆலோசகர் பொறுப்பில் இருப்பதால் களத்தில் உடனுக்குடன் எடுக்க வேண்டிய முடிவுகளில் தோனியின் நேரடிப் பங்களிப்பு இருக்காது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"களத்தில் கேப்டனும் மற்ற வீரர்களும் நொடிப்பொழுதில் முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல்கள் ஏற்படும். அத்தகைய தருணங்களில் ஆலோசகராக இருக்கும் தோனியால் நேரடியாக உதவ முடியாது" என்கிறார் செபானி பாஸ்கர்.

தோனி ஆலோசகராக பொறுப்பேற்றிருப்பது சிஎஸ்கே அணியின் ஏல உத்தியிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனச் செபானி பாஸ்கர் கருதுகிறார்.

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு

சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருப்பது சரியான முடிவு என்கிறார் அரை நூற்றாண்டு கால அனுபவமுள்ள கிரிக்கெட் இதழியலாளர் ஆர். மோகன்.

"தோனி என்றாவது ஒருநாள் ஓய்வு பெற்றுத்தான் ஆக வேண்டும். ஆனால், அந்த நாள் வரக்கூடாது என்றுதான் சிஎஸ்கே ரசிகர்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்கள். தொழில்முறை கிரிக்கெட்டின் கடுமையான சவால்களுக்கு இனியும் தனது உடல்நிலை ஒத்துழைக்காது என்பதை தோனி உணர்ந்துவிட்டதையே இந்த முடிவு காட்டுகிறது" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கடந்த சில சீசன்களாகவே தோனி முழு உடற்தகுதியுடன் விளையாடுவதற்குப் போராடியதாகக் கூறுகிறார் ஆர். மோகன்.

"கடைசி சில ஓவர்களில் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டுவார். ஆனால், அணிக்காக அவரால் பெரிய அளவில் பங்களிக்க முடியவில்லை. அவருடைய ஃபார்ம் மற்றும் உடற்தகுதிதான் இந்த முடிவை நோக்கி அவரைத் தள்ளியுள்ளன" என்கிறார்.

தோனி தற்போது ஓய்வை அறிவித்திருப்பதன் மூலம் சிஎஸ்கே அணியைச் சுற்றியிருந்த நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வந்துள்ளதாகவும் கருதுகிறார் அவர். "கடந்த சில சீசன்களாக கிரிக்கெட் சார்ந்த திட்டங்களைத் தாண்டி, தோனி விளையாடுவாரா, மாட்டாரா என்பதுதான் சிஎஸ்கே நிர்வாகம் எதிர்கொண்ட முக்கியக் கேள்வியாக இருந்தது. தற்போது அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதால், அணியின் வீரர்கள் தேர்வு மற்றும் ஆடும் லெவன் குறித்த குழப்பங்கள் குறைந்துள்ளன" என்கிறார் ஆர். மோகன்.

இனிவரும் காலங்களில் அனுபவம் வாய்ந்த வீரர்களை மட்டுமே சார்ந்திருக்கும் அணியாக சிஎஸ்கே தொடராது என்கிறார் ஆர். மோகன்.

"கடந்த சில ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணி தனது வழக்கமான செயல்திட்டத்திலிருந்து விலகி, இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியதைப் பார்க்க முடிந்தது. இனிவரும் காலங்களில் அந்த அணுகுமுறையை இன்னும் உறுதியாகப் பின்பற்றுவார்கள்" என்கிறார்.

பயிற்சியாளர் ஜாஹீர்கானுடன் தோனியின் உறவு எப்படியிருக்கும்?

சிஎஸ்கே, தோனி, ஜாஹீர்கான், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஓய்வு, ஆலோசகர், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி ஓய்வு
Getty Images
தோனியுடன் ஜாஹீர்கான்

ஜாஹீர் கான், கெரத் பேட்டி உள்ளிட்ட புதிய பயிற்சியாளர் குழுவுடன் ஆலோசகராக தோனி எப்படி இணைந்து செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்குப் பதிலளித்த ஆர். மோகன், தோனிக்கும் ஜாஹீர் கானுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதையைச் சுட்டிக்காட்டுகிறார்.

"தோனி தலைமையின் கீழ் ஜாஹீர் கான் விளையாடியுள்ளார். இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதை உண்டு. பொதுவாக, தோனி தன்னை முன்னிறுத்திக்கொண்டு செயல்படுபவர் அல்ல. கேகேஆர் அணியின் ஆலோசகராக இருந்தபோது கம்பீர் செயல்பட்டதைப் போல அவர் செயல்படமாட்டார். பின்னணியில் இருந்து அணியை இயக்குவதுதான் தோனியின் பாணி. அந்த வகையில், முன்னின்று அணியை வழிநடத்துபவராக ஜாஹீர் கான் இருப்பார்" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!