ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
தோஹாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்கிய அவர், 7 பவுண்டரிகள் 28 சிக்ஸர்களுடன் 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்தார். இதன்மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் மற்றும் இரட்டை சதம் உள்ளிட்ட முந்தையை சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.
28 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்த 15 வயதான சூர்யவன்ஷி, 29 பந்துகளில் அதிவேக சதமடித்த ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கின் சாதனையை தகர்த்தார்.
சதமடித்தும் அதிரடியை நிறுத்தாத சூர்யவன்ஷி, அடுத்த 100 ரன்களை வெறும் 24 பந்துகளில் அடித்து ஐக்கிய அரபு அமீரக பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார்.
52 பந்துகளில் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்த சூர்யவன்ஷி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 103 பந்துகளில் அதிவேக இரட்டை சதமடித்த நியூசிலாந்தின் சாட் போவ்ஸின் சாதனையை முறியடித்தார்.
ரோஹித் சர்மா சாதனை முறியடிப்பு
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடியுள்ள சூர்யவன்ஷி, இந்த ஃபார்மட்டில் 4 புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக 11 பந்துகளில் அரைசதமடித்து அசரடித்தார்.
- இன்றைய போட்டியில், அதிவேக சதம் (28 பந்துகள்), அதிவேக இரட்டை சதம் (52 பந்துகள்) ஆகிய சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
- 40 பந்துகளில் 150 ரன்கள் குவித்து, தனது முந்தையை சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 59 பந்துகளில் அவர் 150 ரன்களை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
28 சிக்ஸர்களை விளாசிய சூர்யவன்ஷி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக, 2018-ல் குயின்ஸ்லாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் டார்சி ஷார்ட் 23 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார். முன்னதாக ரோஹித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் 16 சிக்ஸர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்தினார். 2022 விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரப் பிரதேசத்திற்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் இந்த சாதனையைப் படைத்தார்.
13 ஆவது ஓவரில் சூர்யவன்ஷி இரட்டை சதம்
13 ஆவது ஓவரில் இரட்டைச் சதத்தை எட்டிய சூர்யவன்ஷி, 53 பந்துகளில் 384.90 ஸ்ட்ரைக் ரேட்டில் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசிக்கட்டத்தில் வெற்றிக்கு மேலும் 5 ரன்களே தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடிக்க முயன்று லாங் ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் ஹர்பிரீத் சிங் சதமடிக்க, 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது.
இந்திய அணித் தரப்பில் அர்ஷத் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து, இந்தியா ஏ அணி 14.2 ஓவர்களில் 250 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்தது.
76 ரன்களில் இருந்தபோது ஸ்டம்பிங் வாய்ப்பிலிருந்து தப்பிய சூர்யவன்ஷி, அடுத்த பந்தையே மைதானத்திற்கு வெளியே விரட்டி இந்தியா ஏ அணி 5 ஓவர்களில் 100 ரன்களைக் கடக்கச் செய்தார்.
சூர்யவன்ஷி ஆட்டமிழந்த போது இந்தியா ஏ அணி எடுத்திருந்த 245 ரன்களில் 204 ரன்களை அவரே எடுத்திருந்தார். அவர் அடித்த 28 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் மூலம் மட்டும் 196 ரன்கள் கிடைத்தன.
தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளில் ரன் எடுக்காத சூர்யவன்ஷி. மூன்றாவது ஓவரின் முடிவில் 16 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அப்போது மறுமுனையில் இருந்த அபிஷேக் சர்மா இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
அபிஷேக் சர்மா 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பிரப்சிம்ரன் சிங்கும் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
’மிகச்சிறந்த இன்னிங்ஸ்' என வர்ணித்த திலக் வர்மா
சூர்யவன்ஷியின் இன்னிங்ஸ் பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்று இந்திய ஏ அணியின் கேப்டன் திலக் வர்மா கூறினார்.
"சூர்யவன்ஷியின் இன்னிங்ஸை ருத்ர தாண்டவம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. முதல் ஐந்து ஓவர்களிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது என்று சொல்லலாம். ஐந்து ஓவர்களிலேயே நாங்கள் 100 ரன்கள் எடுத்துவிட்டோம். அதன்பிறகும் அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதைப் பார்த்தது வியப்பாக இருந்தது." என்று போட்டிக்குப் பின்பு அவர் பேசினார்.
தான் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்றும் திலக் வர்மா புகழாரம் சூட்டினார்.
"சூர்யவன்ஷி எப்படி சிக்ஸர்களை விளாசுவார் என்று அனைவருக்கும் தெரியும். அவர் தொடர்ந்து சிக்ஸர்களை விளாசிய போது, நாங்கள் அனைவரும் 'இன்னும் அடி, இன்னும் அடி' என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தோம். அவர் அடித்த பவுண்டரிகளைக் கூட பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அனைவரும் 'சிக்ஸர் அடி' என்றுதான் கேட்டுக் கொண்டிருந்தோம்." என்றார் அவர்.
அரையிறுதியிலும் இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா ஏ அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல விரும்புவதாக ஆட்ட நாயகன் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
"கடந்த இரண்டு போட்டிகளிலும் நன்றாக விளையாடியும் விரைவாக ஆட்டமிழந்துவிட்டேன். இன்று பேட்டிங் செய்யச் சென்றபோது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதை உணர்ந்தேன். அதனால், என் திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடினேன். எனது ஆட்ட உத்தி நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவதுதான். இன்று அது சிறப்பாகக் கைகொடுத்தது." என்றார் அவர்.
”வைபவ் சூர்யவன்ஷிக்கு நிகரானவர் யாருமில்லை”
வைபவ் சூர்யவன்ஷியின் இன்னிங்ஸ் குறித்து முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
வைபவ் சூர்யவன்ஷி விரைவில் கிரிக்கெட் உலகை ஆளப் போகிறார் என்று இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
"எனக்குப் பிடித்த வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஏதோ வீடியோ கேம் விளையாடுவது போல இந்த இன்னிங்ஸை விளையாடியுள்ளார். ஒரு இன்னிங்ஸில் 28 சிக்ஸர்கள் அடிப்பதெல்லாம் நம்ப முடியாத விஷயம். இது எனக்கு ஒரு கனவுபோல இருக்கிறது. இந்தச் சிறுவனுக்கு ஏதோ அமானுஷ்ய சக்தி இருக்க வேண்டும்!" என்றார் அவர்.
வைபவ் சூர்யவன்ஷி போன்ற ஒரு வீரர் வாழ்நாளில் ஒருமுறைதான் கிடைப்பார் என இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு நிகரானவர் யாருமில்லை என்று இந்திய முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
"ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 52 பந்துகளில் 200 ரன்கள் குவிப்பது என்பது நம்பவே முடியாத விஷயம். இது உண்மையிலேயே அசாதாரணமான சாதனை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அனைவரையும் விஞ்சி, உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் திறன் அவருக்கு இருக்கிறது." என்றார் அவர்.
தன் திறமை மீது சந்தேகம் எழுப்பியவர்களுக்கும் சூர்யவன்ஷி தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் என்று இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
"வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் செய்யும்போது நம்ப முடியாத காரியங்களைச் செய்கிறார். இப்படியெல்லாம் செய்ய முடியுமா? இது பேட்டிங்கே கிடையாது" என்றார் அவர்.
"வெறும் 53 பந்துகளில் 28 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள். இது முற்றிலும் நம்ப முடியாத சாதனை." என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு