Skip to main content

Advertisement

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளின் பயன்கள்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இஸ்ரோ
X/ISRO
இந்தத் திட்டம் வெறும் 47 நாட்களில் முழுமையடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று விண்ணில் செலுத்திய ஜி.எஸ்.எல்.வி-எஃப் 18 ஏவுகலன் செயற்கைக்கோளை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து இந்த ஏவுகலன் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜி.எஸ்.எல்.வி-எஃப் 18 என்பது இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி திட்டத்தின் 20வது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பான நேவிக் தொடரின் மூன்றாவது செயற்கைக்கோளாக என்.வி.எஸ்-03 உள்ளது.

இந்த செயற்கைக்கோளில், கொள்முதல் செய்யப்பட்ட அணுக் கடிகாரங்களுடன் (Atomic clocks), உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுக் கடிகாரமும் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் இதன் சேவை வரம்பு, இந்திய நிலப்பரப்பையும், இந்தியாவின் புவிசார் அரசியல் எல்லைகளைச் சுற்றியுள்ள 1500 கி.மீ வரையிலான பகுதியையும் உள்ளடக்கியது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பிரதமர் மோதி பாராட்டு

இஸ்ரோ
X/Narendra Modi
பிரதமர் நரேந்திர மோதி (கோப்புப் படம்)

இதைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோதி இன்ஸ்டாகிராம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"இந்த விண்வெளிப் பயணம், நமது உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான 'நேவிக்' (NavIC)-ஐ வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல். மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட என்விஎஸ்-03 செயற்கைக்கோள், முக்கியமான தொழில்நுட்பங்களில் நாம் தற்சார்பு அடைவதற்கான முயற்சியை முன்னெடுத்துச் செல்வதுடன், நமது மக்களுக்குப் பயனளிக்கும் வழிகாட்டுதல் சேவைகளுக்கும் உறுதுணையாக இருக்கும். நமது விண்வெளி விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும், அவர்களின் அறிவுத் திறனும் தொடர்ந்து நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றன," என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரோ
X/ISRO
ஜி.எஸ்.எல்.வி-எஃப் 18 ஏவுகலன் செயற்கைக்கோளை வெற்றிகரமாக அதன் சுற்றுப் பாதையில் நிறுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் வெறும் 47 நாட்களில் முழுமையடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதன் துல்லியம் உலகின் எந்தவொரு ஏவுகலனுக்கும் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த வெற்றியுடன், நேவிக் செயற்கைக்கோள் தொகுதியானது 4 செயற்கைக்கோள்களைக் கொண்ட அதன் குறைந்தபட்ச செயல்பாட்டு நிலைக்குத் திரும்பியுள்ளது. நேவிக் தொகுதியானது ஒரு முக்கியமான தேசிய சொத்தாகும்" என்று தெரிவித்தார்.

மேலும், "இது நாட்டிற்குத் தேவையான இருப்பிடம், வழிகாட்டுதல் மற்றும் நேரத்தைக் கண்டறியும் சேவைகளைச் சுதந்திரமாக வழங்குகிறது. நேவிக் செயற்கைக்கோள்கள் பொதுமக்களுக்கான பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ககன் உடன் இணைந்து, நேவிக் அமைப்பானது, உலகளாவிய வழிகாட்டுதல் சூழல் அமைப்பிற்கு இந்தியா வழங்கும் பங்களிப்பாகத் திகழ்கிறது" என்றார்.

'நேவிக்' செயற்கைக்கோள் தொகுப்பை வலுப்படுத்துவதும் நமக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று திட்ட இயக்குநர் தாமஸ் குரியன் தெரிவித்துள்ளார்.
X/ISRO
'நேவிக்' செயற்கைக்கோள் தொகுப்பை வலுப்படுத்துவதும் நமக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று திட்ட இயக்குநர் தாமஸ் குரியன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தைப் பற்றி ஏ.என்.ஐ செய்தி முகமைக்குப் பேசிய அதன் இயக்குநர் தாமஸ் குரியன், இது மிகவும் திட்டமிடப்பட்ட ஒரு பணி என்று கூறியுள்ளார்,

மேலும் அவர், "என்விஎஸ்-03 செயற்கைக்கோளை மிக விரைவில் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த நாங்கள் விரும்பினோம். அன்றாட பொதுப் பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி, தேசியப் பாதுகாப்பு நோக்கிலும் மிக முக்கியமான, மூலோபாயத் தேவைகளுக்கும் போதுமான அளவிலான நிலைப்படுத்தல் மற்றும் கால அளவீடு சேவைகள் இந்தியாவில் இல்லை என்பதை இஸ்ரோ தலைவர் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வகையில், இன்றைய செயற்கைக்கோள் ஏவுதலும், 'நேவிக்' செயற்கைக்கோள் தொகுப்பை வலுப்படுத்துவதும் நமக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!