தமிழ்நாடு - கர்நாடகா இடையே நீறு பூத்த நெருப்பு போல நிலவி வரும் 'மேகேதாட்டு அணை திட்டம்' தற்போது மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிரதமர் மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை ஒன்றிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியல்ல. கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித சட்டபூர்வ/நிர்வாக அனுமதியை வழங்கக்கூடாது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதற்குப் பதிலளித்துப் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், "மாநிலங்களுக்கு இடையிலான நீர் தொடர்பான மோதல்களுக்கான காலம் முடிந்துவிட்டது. மேகேதாட்டு விவகாரத்தில், ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயல்படுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்." என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டியது இல்லையென்றும் தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழுவை அனுப்புமாறு முதலமைச்சர் விஜயிடம் கோரியதாகவும் டி.கே.சிவக்குமார் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது.
இந்தத் திட்டம் தொடர்பாகத் தமிழ்நாட்டுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் இல்லை என்று கூறிவிட முடியாது என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உமாபதி.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை தொடர முடியுமா? தமிழ்நாட்டுக்கு உள்ள சட்டப்பூர்வமான வாய்ப்புகள் என்ன ஆகியவை இதையொட்டி எழுந்துள்ள முக்கியமான கேள்விகளாக உள்ளன.
அதற்கு முன்பாக காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான சில முக்கியமான விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.
காவிரி விவகாரம் முக்கிய காலவரிசை
2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதைத் தொடர்ந்து காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில், நீர் ஒதுக்கீட்டு அளவை உச்ச நீதிமன்றம் மாற்றியதாகவும், வேறு முக்கியத் திருத்தங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர் அ. வீரப்பன் கூறுகிறார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரிலிருந்து 419 டிஎம்சி ஒதுக்கப்பட்டது.
இதில் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 192 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீட்டில் இருந்து 14.75 டிஎம்சி நீரைக் குறைத்தது. இதன்மூலம் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 177.25 டிஎம்சியாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டை கர்நாடக அரசு முறையாக வழங்குவதில்லை என்பதே தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டாக உள்ளது.
மேகேதாட்டுவில் அணை கட்டினால் மழை நீரை சேமித்து வைத்து தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீர் வழங்க முடியும் என்றும் இந்தத் திட்டம் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காகத்தான், வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படாது என்றும் கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூறியது என்ன?
முதலமைச்சர் விஜய் பிரதமர் மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மேகேதாட்டு நீர்த்தேக்கத்தைக் கட்ட கர்நாடக அரசு உத்தேசித்துள்ள திட்டம், தமிழ்நாட்டுக்கு உரிய நீர்வரத்தைத் தடுப்பது மட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தபடி தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர வாரியாக நீர் கிடைப்பதையும் கடுமையாகப் பாதிக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில், "உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018-ஆம் நாளிட்ட தீர்ப்பைக் கருத்திற்கொண்டு, கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி மேகேதாட்டு திட்டத்திற்கு எவ்வித நேரடி தள ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் செய்வதையோ அல்லது சட்டப்பூர்வ / நிர்வாக அனுமதிகள் வழங்குவதையோ தவிர்க்குமாறு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் & ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்." என்றும் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடுத்து நிலுவையில் உள்ள வழக்கையும் தனது கடிதத்தில் விஜய் சுட்டிக்காட்டியிருந்தார்.
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய டி.கே.சிவக்குமார், மேகேதாட்டு திட்டம் தொடர்பாக, கர்நாடகாவின் உரிமைகள் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலைநாட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "தமிழ்நாட்டிற்கு 177 டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். தமிழ்நாட்டிற்குரிய நீர் உரிமைகளை நாங்கள் மறுக்கவில்லை." என்று தெரிவித்தார்.
மேகேதாட்டு திட்டத்துக்காக சுமார் 5,400 ஹெக்டேர் வனப்பகுதிக்கு பதில் மாற்று நிலத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் டி.கே.சிவக்குமார் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "இத்திட்டத்திற்கு அனுமதி கோரி, தேவையான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதோடு, பிரதமரையும் நேரில் சந்திப்போம். மத்திய ஜல் சக்தி அமைச்சருடன் ஏற்கெனவே பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்." என்றார்.
"நான் தமிழ்நாடு முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து ஒரு குழுவை அனுப்பி வையுங்கள். நாங்கள் இதைத் தவறாகப் பயன்படுத்த மாட்டோம். நாங்கள் கொடுத்த சொல்லில் உறுதியாக இருக்கிறோம். எனவே, தயவுசெய்து அந்தக் குழுவை அனுப்பி வையுங்கள்," என்றும் அவர் கூறினார்.
'பெங்களூருவை ஸ்பாஞ்ச் நகரமாக்க வேண்டும்'
இந்தச் சூழலில், காவிரி வனவிலங்கு சரணாலயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளரான நாகேஷ் ஹெக்டே.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கர்நாடகாவின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய பல பயனுள்ள மாற்றுத் திட்டங்கள் உள்ளன. ஆனால் அவற்றை முன்னெடுக்காமல் மேகேதாட்டு போன்ற பிரமாண்ட திட்டங்களைப் பரிசீலிப்பது முழுமையாகப் பயன்தராது." என்றார்.
பெங்களூரு ஏரிகள் நிறைந்த நகரம் என்று குறிப்பிடும் நாகேஷ் ஹெக்டே ஏரிகளை முழுமையாகப் புனரமைத்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
மேலும் அவர் "இதன் மூலம் நகரின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதோடு பெங்களூருவின் நீர் இருப்பு மற்றும் பசுமைப் பரப்பை அதிகரித்து அதன்மூலம் நகர்ப்புற வெப்பத்தையும் குறைத்து பெங்களூருவை உண்மையான' ஸ்பாஞ்ச் நகரமாக்க முடியும்," என்றும் தெரிவித்தார்.
அணை கட்டுவது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடும் அவர் சட்ட ரீதியாக இதில் என்ன சாத்தியங்கள் மற்றும் தடைகள் உள்ளன என்பது மெல்லத்தான் தெரியவரும் என்றும் கூறினார்.
'தமிழ்நாட்டின் ஒப்புதல் அவசியமாகிறது' - அ.வீரப்பன்
உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு 1991-ஆம் ஆண்டு வழங்கிய உத்தரவின்படி, தமிழ்நாடு உள்ளிட்ட காவிரி நீர்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரி நதியில் எந்தத் திட்டமும் செயல்படுத்த முடியாது என்கிறார் அ.வீரப்பன்.
பிபிசி தமிழிடம் விளக்கிப் பேசிய அவர், "5 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு தற்போதும் செல்லுபடியாகும். அதனை மாற்றி எந்தத் தீர்ப்பும் வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தீர்ப்புகளை முறையாக அமல்படுத்துவதில்லை அல்லது தீர்ப்புகள் மீறப்படுகிறது என கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். இதன் மூலம் மத்திய அரசு கர்நாடக அரசுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க தேவையான உத்தரவுகளை நீதிமன்றத்தில் பெறலாம்." என்றார்.
நடுவர் மன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றி குறிப்பிட்டாலும் அவை காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பிரிவு-XI
ஆற்றுப் படுகையின் மேல் பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு மாநிலமும், கீழ் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீர் ஒதுக்கீட்டைப் பாதிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது. இருப்பினும், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பரஸ்பர உடன்படிக்கையின் மூலமாகவும், ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்தாலோசித்தும், நீர் விநியோக முறையில் மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.
பிரிவு-XVIII
இந்தத் தீர்ப்பாயத்தின் உத்தரவில் உள்ள எதுவும், எந்தவொரு மாநிலமும் தனது எல்லைக்குள் நீரின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கோ அல்லது அந்த மாநிலத்திற்குள் உள்ள நீரின் பலன்களை அனுபவிப்பதற்கோ கொண்டுள்ள உரிமை, அதிகாரம் அல்லது தகுதியைப் பாதிக்காது. ஆனால், அவ்வாறு செயல்படும்போது அது இந்தத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இருக்கக்கூடாது.
'தமிழ்நாட்டின் நலன்களை தவெக அரசு பாதுகாக்கும்'
தமிழ்நாட்டின் உரிமைகளை எடுத்துரைக்கவே முதலமைச்சர் விஜய் பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியதாக தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் சத்யகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் நடுநிலையாக மத்தியஸ்தம் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகத் தோன்றக்கூடாது என்பதால்தான் முதலமைச்சர் விஜய் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் எழுதினார்," என்றார்.
மேலும் அவர், "தமிழ்நாடு அரசின் சட்டப்பூர்வ நிலையை முதலமைச்சர் விஜய் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டின் நலன்களை தவெக அரசு பாதுகாக்கும். சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தேவைப்பட்டால் முறையாக ஆலோசித்து மேற்கொள்ளப்படும்." என்றும் தெரிவித்தார்.
'தமிழ்நாடு அரசு வழக்கு தொடர உரிமை உள்ளது' - வழக்கறிஞர் உமாபதி
இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு உள்ள சட்டப்பூர்வமான வாய்ப்புகள் பற்றி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் உமாபதி பிபிசி தமிழிடம் விளக்கினார்.
"மேகேதாட்டு திட்டத்திற்கு எந்த ஒப்புதலும் தற்போது வரை வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வழக்கு தொடரலாம் என்றுதான் தெரிவித்துள்ளது. மத்திய நீர் ஆணையமோ அல்லது மத்திய ஜல்சக்தி அமைச்சகமோ இந்தத் திட்டத்திற்கு தற்போது வரை எந்த ஒப்புதலும் வழங்கவில்லை.
அவ்வாறு வழங்கினால் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உரிமை உள்ளது. அதற்கு எந்தத் தடையும் இல்லை, இன்னும் அந்தக் கட்டத்தை நாம் அடையவில்லை. மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் வழிகாட்டு அறிக்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
காவிரிப் படுகைக்கு மட்டுமே பொருந்தும் வகையில் நீர்ப்பாசனம் மற்றும் பல்நோக்குத் திட்ட முன்மொழிவுகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பாக டிசம்பர் 2025-இல் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் வழிகாட்டு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அந்த வழிகாட்டு அறிக்கையை திரும்பப்பெறக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
'ரத்தான முதலமைச்சர் விஜயின் கர்நாடகப் பயணம்'
மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு சமர்ப்பித்திருந்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் திருப்பி அனுப்பியிருந்தது. அந்த அறிக்கை காவிரி நடுவர் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின்படி இல்லை என்று தெரிவித்திருந்தது.
இந்தச் சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெங்களூரு செல்வதாக இருந்தது. காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகேதாட்டு அணை தொடர்பாக இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் கர்நாடக அரசு தரப்பில் விஜயின் வருகை உறுதி செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. விஜயின் பயணத்தை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக அப்போது கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசினார். நேர்மறையான தீர்வை அடைவதற்காக பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கலாம் என்கிற நோக்கத்தில் பெங்களூரு செல்லலாம் என யோசித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் தான் தற்போது தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழுவை அனுப்புமாறு டி.கே.சிவக்குமார் கோரி இருக்கிறார். இதற்கு தமிழ்நாடு அரசு தற்போது வரை அதிகாரப்பூர்வமாக பதில் அளிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு