ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு பகுதியில் பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவரை ரம்பத்தால் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் மீது காவல்துறையினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக அனந்தபூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஷ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
"குற்றம்சாட்டப்பட்ட ஹேமந்த், ஆத்மகூர் வனப்பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இரண்டு போலீஸ் குழுக்கள் அங்கு சென்றன" என்று அவர் தெரிவித்தார்.
"ஹேமந்தைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது, அவர் கத்தியால் காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரைத் தாக்கினார். இதையடுத்து, தவிர்க்க முடியாத சூழலில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்" என்று அவர் கூறினார்.
"போலீஸார் முதலில் வானத்தை நோக்கிச் சுட்டும், அவர் பின்வாங்கவில்லை. ஹேமந்த் போலீஸாரை கத்தியால் தாக்க முயன்றார். இதன் காரணமாகவே, தற்காப்புக்காக அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது," என்று ஜெகதீஷ் தெரிவித்தார்.
எத்தனை முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பதை காவல் கண்காணிப்பாளர் தெளிவுபடுத்தவில்லை. காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரலு, குற்றம்சாட்டப்பட்ட ஹேமந்த் இருவரும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
என்ன நடந்தது?
எச்சரிக்கை: கீழே மனதை வருத்தும் விவரங்கள் சில உள்ளன.
அனந்தபுரம் மாவட்டம், ரப்தாடுவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி மீது மின்சார ரம்பத்தால் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை சுமார் 10.30 மணியளவில், பத்தாம் வகுப்பு வகுப்பறைக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த நபர் ஒருவர், அந்த மாணவியைத் தாக்கியுள்ளார் என்று காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஷ் கூறினார்.
இந்தத் தாக்குதலில் மாணவியின் முகம், கழுத்து, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், அவரது வலது கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மாணவியைக் காப்பாற்ற முயன்ற மற்றொரு மாணவரும் காயமடைந்தார்.
மாணவி சிகிச்சை பெற்று வரும் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்ற அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் ஓ. ஆனந்த், அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
மாணவிக்குச் சிறப்பான சிகிச்சை அளிப்பதற்காக, சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்புடன் அரசு பொது மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் மல்லேஸ்வரி பிபிசியிடம் தெரிவித்தார்.
தற்போது பெங்களூருவில், ஓல்ட் ஹால் விமான நிலையம் செல்லும் வழியில் அமைந்துள்ள மணிப்பால் மருத்துவமனையில் மாணவிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்துக்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆந்திரப் பிரதேச கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சென்று, மாணவியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மாணவிக்குத் தேவையான அறுவைச் சிகிச்சைகள் ஏற்கெனவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக லோகேஷ் தெரிவித்தார்.
மாணவியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் லோகேஷ் ஊடகங்களிடம் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு